சென்னைப் புத்தகச் சந்தையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா - குறிப்பிடத்தகுந்த - திருப்பம் வாய்ந்த நிகழ்ச்சியே!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்படியும், வேண்டுகோள்படியும் தோழர் ஜி.பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட நூல்"Periyar Ev. Ramasamy Ahead of His Time என்பது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் காலம் பெரியாரின் காலடியிலேயே தவிர, காலத்தின் காலடியில் பெரியாரல்ல என்று கூறினார்.
தொலைநோக்காளர் பெரியார் என்பதை நாட்டில் நாளும் நடைபெறும் நிகழ்வுகளும் விளைவுகளும், புதிய புதிய கண்டுபிடிப்புகளும் நிரூபித்து வருகின்றன.
நாட்டின் சமூக அரசியல் நிலை என்ன? ஆட்சி அதிகாரப் பீடத்தில் பா.ஜ.க., சங்பரிவார் - மத்திய ஆட்சிப் பீடத்தில் மட்டுமல்ல - பல மாநிலங்களிலும் அமர்ந்துவிட்டன.
அதன் தீய விளைவை வெகு மக்கள் நாளும் அனுபவித்து வருகின்றனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உறுதி செய்யப்பட்டுள்ள மதச் சார்பின்மை, சமூகநீதி, சோசலிசக் கொள்கைகள் கண்மூடித்தனமாக வெட்டி வீழ்த்தப்பட்டு வருகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், ஆரிய சனாதன, வல்லாண்மைக்கான சட்டங்களும், திட்டங்களும், பிரச்சாரங்களும் திட்டமிட்ட வகையில் நாட்டு மக்கள் மத்தியில் திணிக்கப்படுகின்றன.
450 ஆண்டு கால சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலத்தை ஒரு பட்டப் பகலில் கொஞ்சம்கூட கூச்ச நாச்சமின்றி, வெட்கமின்றி இடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியவர்கள் மத்திய ஆட்சியில் மிகப் பெரிய பொறுப்பு அமைச்சர்களாகி விட்டார்களே! யாரும் குற்றவாளி அல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியும் விட்டதே!
இத்தகைய ஒரு மோசமான இருண்ட கால கட்டத்தில் நாடு நடைபோடும் ஒருகால கட்டத்தில், தந்தை பெரியார் என்ற பே(£)ராயுதம் இந்தியாவுக்கே தேவை என்பதை புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது.
இந்தச் சூழலில் தந்தை பெரியார் கருத்துக்கள் இந்தியா முழுவதும் பரவினால், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.
பிற மொழிகளில் தந்தை பெரியார் பற்றிய நூல்கள் வெளிவரும் பொழுதுதான் அந்த நிலையை எட்ட முடியும். அந்த வகையில் ஜி.பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கில நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் அய்யமில்லை.
பிரெஞ்சு, ஸ்பானிஸ் மொழிகளில் தந்தை பெரியார் பற்றிய நூல்கள் வெளிவர வேண்டும் என்று ஜெர்மானிய பேராசிரியர் முனைவர் சுபாஷினி கூறியதும் முக்கியமானது.
இந்தியாவைப் பொறுத்தவரை - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட சமூகநீதி, மதச் சார்பின்மை, சோசலிசம் இவை அனைத்திலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு கை வைத்து, அவற்றின் ஆணி வேரை வீழ்த்தி வருகிறது.
மத்திய அரசின் அதிகாரப் பூர்வமான குடியரசு தின விளம்பரத்திலேயே திட்டமிட்டு - அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற மிக முக்கியமான வாசகமான "மதச்சார்பின்மை" (Secular) என்ற சொல்லையே நீக்கினர் என்றால் இந்த ஆட்சி என்பது மதச் சார்புள்ள இந்துத்துவா ஆட்சிதான் என்று ஆகிவிடவில்லையா?
எப்படிப் பார்த்தாலும் எங்குச் சுற்றி வந்தாலும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் சந்திக்க வேண்டிய மிக முக்கியமான புள்ளி தந்தை பெரியார்தான்.
சுயமரியாதை, சமதர்மம், சமத்துவம், சமூகநீதி, பாலியல் நீதி, மதச் சார்பின்மை என்பவை தான் மானுடத்தின் உயர்ந்த சீலமாகும். இவற்றைத் தன் வாழ்நாள் எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துக் கூறிக் கூறி விழிப்புணர்வு - ஏற்படுத்தியவர் தந்தை பெரியார்.
தமிழ்நாட்டில் இந்த அடிப்படை சித்தாந்தம் தந்தை பெரியார் அவர்களால் வேர் பிடிக்கச் செய்யப்பட்டதால் தான், காவிக் கூட்டம் கஜக் குட்டிக் கரணம் அடித்து, குறளி வித்தை போட்டுக் காட்டினாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்பத் தயாராக இல்லை. நிராகரித்தே வருகின்றனர்.
அதிகார பலம், ஊடக பலம், பண பலம் மக்களிடத்தில் இருக்கும் மத மூடநம்பிக்கை, மாநிலத்தில் உள்ள ஓர் ஆட்சியின் பலகீனம் - இவற்றைப் பயன்படுத்தி - குதிரை சவாரி செய்து நேரடியாக முடியாவிட்டாலும் நிழல் ஆட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் சக்திகளை வீழ்த்திட தந்தை பெரியார் எனும் சித்தாந்த போர் வாளை நெஞ்சில் ஏந்தி களம் காண்போம் வாரீர்! வாரீர்! என்று அழைப்பதுதான் நூல் வெளியீட்டு விழாவின் பிரகடனமாக இருந்தது. வெல்லும் திராவிடம் என்பதை வீட்டுக்கு வீடு கொண்டு போய்ச் சேர்ப்போம்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
No comments:
Post a Comment