சமூகநீதியில் கை வைத்தால், தமிழ்நாட்டில் அவர்கள் கால் வைக்க முடியாது; காலூன்ற முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

சமூகநீதியில் கை வைத்தால், தமிழ்நாட்டில் அவர்கள் கால் வைக்க முடியாது; காலூன்ற முடியாது!

சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சியை விரட்டுவோம் - அதன்மூலமாக  வெற்றி பெறுவோம்!

திருநெல்வேலி: சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டினை காணொலி மூலமாக தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

திருநெல்வேலி, டிச. 31   சமூகநீதிக்கு எதிரான சூழ்ச்சியை நாம் விரட்டுவோம் - அதன்மூலமாக  வெற்றி பெறுவோம்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திருநெல்வேலியில் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு

27.12.2020 அன்று காலை  நெல்லையில் நடை பெற்ற சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டினை காணொலி மூலமாக தொடங்கி வைத்து திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற் றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

திராவிடம் வெல்லும்; இது ஒரு விஞ்ஞான தத்துவம்; ஒரு சமூக விஞ்ஞானம்!

திராவிடம் வெல்லும் என்று நாம் சொல்கிறோம் என்றால், அது வெறும் ஆசையல்ல. இது ஒரு விஞ்ஞான தத்துவம்; ஒரு சமூக விஞ்ஞானம்.

இதற்கு வரலாறு நிறைய உண்டு. அதனைத் தெரிந்துகொள்ள நீங்கள் நிறைய படியுங்கள் - நிறைய தோழர்கள், முப்பால் தோழர்கள் இங்கே கூடியிருக் கிறீர்கள். எல்லோருக்கும் வாழ்த்துகள்; இம்மாநாட் டினை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நீங்கள் மிகத் தெளிவாகக் கொண்டு போக வேண்டும்.

இன்றைக்கு இதனை அழிப்பதுதான்  ஆர்.எஸ்.எசினுடைய திட்டம்; இதனை ஒழிப்பதுதான் பா... வினுடைய திட்டம். அதற்கு முதலில் தந்திரம் என்ன வென்றால், அவர்கள் நேரடியாக வராமல், பொருளா தார முகமூடியைப் போடுகிறார்கள்.

நம்மாட்களும் அதைப் பார்த்து, ஏங்க ஏழை களுக்கு நல்லதுதானே என்பார்கள்.

ஏழ்மை என்பது வேறு; இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல.

1928 ஆம் ஆண்டு நீதிக்கட்சி, பெரியாருடைய ஆதரவோடு,    முத்தையா முதலியார், டாக்டர் சுப்பரா யலு ஆகியோரின் ஆதரவோடு முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டத்தை முதன்முதலாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.

பார்ப்பனர்களுக்கு இட ஒதுக்கீடு அறவே  கூடாது என்று சொல்பவர்கள் நாம் கிடையாது. மக்கள் தொகையில் அவர்கள் இரண்டரை சதவிகிதம்தான்; மூன்று சதவிகிதம் என்று நிறைவாக்கினோம் நாம்.

சண்முகம் துரைராஜன் வழக்கு!

அந்த மூன்று சதவிகிதத்தினருக்கு 14 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்.  அதை எதிர்த்தே அவர்கள் வழக்குப் போட்டார்கள். அந்த வழக்கில் பொய்யான அபிடவிட் கொடுத்தார்கள். சண்முகம் துரைராஜன் என்பவர் மருத்துவக் கல்லூரிக்கே மனு போடவில்லை. மனு போட்டோம் என்று பொய்யான தகவலை கொடுத்தார்கள். மனு போடவில்லை என்றால், வழக்கே நடத்த முடியாது. அன்றைக்கு அதை காங் கிரஸ் அரசாங்கம் கண்டுபிடிக்கவில்லை. உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நடைபெறும் பொழுது, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று சொன்னார்கள்.

வழக்கு நடைபெறும்பொழுதே இதனை சொல்லியிருக்க வேண்டும் அல்லவா - இப்பொழுது நாங்கள் மேல்முறையீட்டு வழக்கை அல்லவா விசாரிக்கிறோம் என்று நீதிபதிகள் சொன்னார்கள்.

ஆகவே, மூன்று சதவிகிதம் இருக்கின்றவர்களுக்கு 14 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள்.  அப்பொழுதும் அவர்கள் திருப்தியடையவில்லை. ஏனென்றால், நூற்றுக்கு நூறு அவர்கள் அனுபவித் தவர்கள், அதனால்தான்.

எதைக் கொடுத்தாலும், சூத்திரனுக்குக் கல்வி கொடுக்கக் கூடாது; கீழ்ஜாதிக்காரனுக்குக் கல்வி கொடுக்கக் கூடாது; பெண்களுக்குக் கல்வி கொடுக்கக் கூடாது.

Graded inequality என்று அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார். படிக்கட்டு ஜாதிமுறை.

பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்று மனு தர்மத்தில் உருவாக்கியதில், அய்ந்தாவது பஞ்சமன், ஆறாவது அவர்ணஸ்தர்கள். அதற்கும் கீழே எல்லா ஜாதியும் சார்ந்த, பார்ப்பனப் பெண்கள் உள்பட யாரும் படிக்கக் கூடாது.

திராவிடம் இயக்கம் கொடுத்த அருட்கொடை; பெரியார் செய்த மிகப்பெரிய தொண்டின் விளைவு

பார்ப்பனப் பெண்கள் இன்றைக்குப் படித்து பல உத்தியோகங்களுக்குச் சென்றிருக்கிறார்கள் என்றால், திராவிடம் இயக்கம் கொடுத்த அருட்கொடை. பெரியார் செய்த மிகப்பெரிய தொண்டின் விளைவு தான் அதற்குக் காரணம்.

9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பினை முதல மைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டு வந்த பொழுது, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசில் சில நண்பர்கள் தொடர்ந்து ஓராண்டாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்தோம்.

சமூகநீதியில் கை வைத்ததால்

தேர்தலில் தோல்வி கண்ட எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆர். என்று இன்றைக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்த எம்.ஜி.ஆர். அவர்கள் வாழ்நாளில் மிகப்பெரிய தோல்வியை, தனி கட்சியைக் கண்ட பிறகு, பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு, பெற்ற தோல்வி என்பது இருக்கிறதே, எதற்காக தெரியுமா? அவர் எதில் கை வைத்தார் தெரியுமா? சமூகநீதியில் கை வைத்து, பொருளாதார அடிப்படை என்று 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு  வந்ததினால்தான்.

அப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்று, இரண்டே இரண்டு இடங்களில் மட்டும்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. மீதியுள்ள அத்தனை இடங்களிலும் தோல்வி அடைந்தது .தி.மு.. அந்தத் தோல்விக்குப் பிறகு, முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர் கள் அனைத்துக் கட்சியைக் கூட்டினார் - அக்கூட்டத் தில் நாங்கள் எடுத்து வைத்த விளக்கமான கருத்து களை உள்வாங்கிக் கொண்ட முதலமைச்சர்  எம்.ஜி. ஆர். அவர்கள், 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம் பைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

சமூகநீதியில் கை வைத்தால்,

தமிழ்நாட்டில் அவர்கள் கால் வைக்க முடியாது; காலூன்ற முடியாது!

இப்பொழுது கருப்பு எம்.ஜி.ஆர்., வெள்ளை எம்.ஜி.ஆர். என்று சொல்லிக் கொள்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சமூகநீதியில் கை வைத்தால், தமிழ்நாட்டில் அவர்கள் கால் வைக்க முடியாது; காலூன்ற முடியாது. காரணம், இதற்கு அடித்தளம் எங்கே இருக்கிறது? 1919 ஆம் ஆண்டி லிருந்து இருக்கிறது.

இந்த ஆலமரத்திலிருந்து சில பழுதான இலைகள் விழுகின்றன; அல்லது சருகுகள் விழுகின்றன. அப்படி விழுகின்ற சருகுகளை சேர்த்து வைத்துக் கொண்டு, ''பாருங்கள் நாங்கள் எவ்வளவு உயரத்தில் அமர்ந்திருக்கிறோம் பாருங்கள்'' என்று சிலர் சொல்லி, வாக்குகளை வாங்கி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை,  தளபதி மு..ஸ்டாலின் தளபதி ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமையவுள்ள ஆட் சியைத் தடுத்துவிடலாம் என்று கனவு காணுகிறார் களே, அந்தக் கனவு ஒருபோதும் பலிக்காது. காரணம், இது வரலாற்று உண்மை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, இந்த நூற்றாண்டுவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளவேண்டிய மிகப்பெரிய உறுதி என்ன வென்றால், சமூகநீதி. அந்த சமூகநீதிதான் நம்முடைய அடித்தளம்.

தந்தை பெரியாரின் நோக்கம்தான் - சமூகநீதி!

பெரியார் ஒரே வரியில் சொன்னார்,

நான் எந்தக் கட்சியில் சேர்ந்திருந்தாலும், எந்தக் கட்சியை விட்டு விலகியிருந்தாலும், எந்த ஆட்சியை நான் ஆதரித்திருந்தாலும், எந்த ஆட்சியை நான் எதிர்த்து இருந்தாலும், யாரை அணைத்திருந்தாலும், யாரை எதிர்த்திருந்தாலும் ஒரே ஒரு நோக்கம்தான் - சமூகநீதி.

சமூகநீதி என்றால் என்ன?

அனைவருக்கும் அனைத்தும் -

எல்லோருக்கும் எல்லாம்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்பது திராவிடம்.

எனவேதான், திராவிடம் பகுத்துக் கொடுப்பது - எல்லோருக்கும் எல்லாம் கொடுப்பது. நாம் மட்டுமே என்று சொல்வதல்ல.

நாம் என்ன சொல்கிறோம், பசியேப்பக்காரனுக்கு பந்தியில் முதலில் இடம் கொடு. புளியேப்பக்காரனை பந்தியில் கொஞ்சம் பின்னாடி உட்கார வை. காலங் காலமாக அவன் சாப்பிட்டுவிட்டு, அஜீரணத்தில் கிடக்கிறான். பசியேப்பக்காரன் பட்டினி கிடக்கிறான். அவனுக்கு வாய்ப்புக் கொடு. அப்படி பட்டினி கிடப்ப வன் யார்? இந்த மண்ணுக்குரியவன், உழைப்பவன்.

ஆகவேதான், வகுப்புரிமை என்பது -, சமூகநீதி, இட ஒதுக்கீடு என்று சொல்லுகிறோம்.

தனியார்த் துறையிலும்

இட ஒதுக்கீடு வேண்டும்

இதுமட்டுமல்ல நண்பர்களே, தனியார்த் துறை யிலும் இட ஒதுக்கீடு தேவை என்று கேட்கிறோம். ஏனென்றால், பொதுத் துறையையெல்லாம் இப் பொழுது தனியார் துறையாக மாற்றிக் கொண்டி ருக்கிறார்கள். இது ஒரு சூழ்ச்சித் திட்டம்.   தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொடுக்கமுடியுமா? என்று கேட்கிறார்கள். அமெரிக்காவே முதலாளித்துவ நாடு; அங்கே தனியார் துறைகள்தான் எல்லாமே! அங்கே யும்  இட ஒதுக்கீடு - அபர்மேட்டிவ் ஆக்ஷன் என்ற பெயராலே இருக்கிறது.ஆகவேதான், தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாம் கேட்கிறோம்.

தென்னாப்பிரிக்காவில், கிரிக்கெட்டிற்குக்கூட இட ஒதுக்கீடு இருக்கிறது. ஏனென்றால், அங்கே கருப்பின மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வெள்ளை நிறத்த வர்கள் அங்கே ஆதிக்கம் செய்கிறார்கள் என்றவுடன், கிரிக்கெட்டில்கூட இட ஒதுக்கீடு அங்கே இருக்கிறது.

இப்பொழுதுதான் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன்கள் இந்திய கிரிக்கெட் அணியில் விளை யாடுவதற்கு வாய்ப்பு வந்திருக்கிறது என்றால்,  கருப்பு கூட உள்ளே வருவதற்கு வாய்ப்பு வந்திருப்பதற்குக் காரணம், சமூகநீதி என்பதுதான்.

சமூகநீதிதான் ஒரே விடை!

எனவே, பெரியாருடைய சமூகநீதிக் களம் என்பது அது பரந்து விரியும். அந்த அறிவுக்கதிர்கள் எல் லோரையும் அணைக்கும்.

எங்கெல்லாம் இருட்டு இருக்கிறதோ,

எங்கெல்லாம் அறியாமை இருட்டு இருக்கிறதோ,

எங்கெல்லாம் கல்லாமை இருக்கிறதோ,

எங்கெல்லாம் போதாமை இருக்கிறதோ,

அங்கெல்லாம் சமூகநீதிதான் ஒரே விடை.

தளபதி மு..ஸ்டாலின் தலைமையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை நாம் அமைப்போம்!

எனவே, அந்த சமூகநீதியைக் காப்பாற்றுகின்ற  நூறாண்டில், நாம் உறுதியெடுப்போம். அதனை மீண்டும் காப்பாற்றவேண்டுமானால், ஒரே வழி திராவிடம் வெல்லும் என்று, வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில், தளபதி மு..ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை நாம் அமைப்போம்!

திராவிடம் வெல்லும்,  திராவிடம் வெல்லும்

சூழ்ச்சியைக் கொல்லும் -

ஆரிய சூழ்ச்சியைக் கொல்லும் -

பார்ப்பனச் சூழ்ச்சியைக் கொல்லும் -

சமூகநீதிக்கு எதிராக இருக்கக்கூடிய சூழ்ச்சியை நாம் விரட்டுவோம் - அதன்மூலமாக  வெற்றி பெறுவோம் என்று உறுதி எடுங்கள்!

அதுதான் இந்த மாநாட்டினுடைய முக்கியமான அடிநாதமாக இருக்கும் என்று கூறி, எனக்கு வாய்ப் பளித்த உங்களுக்கு நன்றி கூறி, இம்மாநாட்டினைத் தொடங்கி வைக்கிறேன்.

வாழ்க பெரியார்! வாழ்க திராவிடம்!

திராவிடம் வெல்லும்

நன்றி வணக்கம்! 

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment