பெண்களெல்லாம் பாவயோனிப் பிறப்பே என்றும்
பெண்கட்குக் கல்விகேள்வி கூடா தென்றும்
வன்னெஞ்சன் மனுசெய்த சாத்தி ரத்தை
வளர்தீயில் போட்டெரித்து நீற்று கென்றார்
தன்கொண்டான் தனையிழந்த பெண்கள் எல்லாம்
களர்நிலமே என்றுரைத்த காஞ்சி பீடம்
முன்னின்று போராட்டம் செய்த ஆற்றல்
முழுவதுமே பெரியார்தம் விளைச்ச லாமே!
பெண்ணியத்தைப் பெரியார்போல் இந்த நாட்டில்
பேசியவர் பேசுபவர் எவரு மில்லை!
கண்ணியத்தைக் கண்ணெனவே காத்து நின்று
கருமமதை ஆற்றியவர் எவரு மில்லை!
பெண்ணுரிமைப் போர்க்களங்கள் பலவுங் கண்டு
பெருமையுறச் செய்தாரிங் கெவரு மில்லை!
மண்ணகத்தில் இவருக்கோர் உவமை கூற
மானுடத்தில் யாருமினிப் பிறப்பா ரில்லை!
அடுப்பங்கரை வாழ்வினின்றும் அகன்று விட்டால்
அடிமைத்தனம் ஒழியுமெனப் பெரியார் சொன்னார்!
மிடுக்கிடவே அலங்காரம் செய்யச் சொல்லிப்
பதுமைகளாய் ஆக்கியுமை அடைத்து வைத்த
கொடுமைதனைச் செய்திட்ட ஆணா திக்கம்
குலைவுறற்குத் துறைதோறும் பணிகள் ஏற்று
கிடுக்கிப்பிடி நும்கையில் வைத்துக் கொண்டால்
கீழறுக்கும் சாத்திரங்கள் பொய்யாய்ப் போகும்!
பெண்களுக்குப் படிப்புரிமை கிடைத்து விட்டால்
பெண்ணடிமைத் தனமிங்கே குறைந்து போகும்
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிவிட்டால்
பேதமெல்லாம் படிப்படியாய் மறைந்து போகும்
பெண்களுக்குப் பணிவாய்ப்பைப் பெருக்கி விட்டால்
தன்னம்பிக் கையுடனே தழைத்து வாழ்வர்
என்றுரைத்த பெரியார்தம் கொள்கை ஏற்றே
ஏற்றமுறப் பெண்ணுலகே வருக, வெல்க!
பெண்ணினமே இல்லாமல் இந்த மண்ணில்
பிறக்குமுயிர் ஏதுமுண்டோ சொன்மின்! சொன்மின்!
பெண்ணினமே இல்லாமல் குடும்பம் தனனைப்
பெற்றவர்கள் யாருமுண்டோ சொன்மின்! சொன்மின்!
பெண்ணினமே இல்லாமல் பிள்ளை குட்டி
பேணுபவர் எவருமுண்டோ சொன்மின்! சொன்மின்!
பெண்ணினமே இல்லாத இடந்தான் ஒன்றை
பேருலகில் காட்டிடுவீர்¢ ஏற்றுக் கொள்வோம்!
- ஓவியக் கவிஞர் பெரு.இளங்கோவன்
No comments:
Post a Comment