அதிகாரிகள் பங்கேற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களை நோக்கி பா.ஜ.க. பிரமுகர் துப்பாக்கி சூடு; இளைஞர் உயிரிழப்பு
லக்னோ, அக்.17 உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேசன் கடையை எங்கு ஒதுக்குவது? என்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. மாவட்ட துணை ஆட்சியர் சுரேஷ்பால், வட்டாட்சியர் சந்திரகேஷ் சிங், வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திர பிரதாப்சிங் மற்றும் ரேவதி காவல்நிலைய அதிகாரிகள் முன்னின்று கூட்டத்தை நடத்தியுள்ளனர். அப்போது, கடையை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இருதரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். அப்போது உள்ளூர் பாஜக பிரமுகர் தீரேந்திர பிரதாப் சிங்என்பவர், திடீரென தனது துப்பாக்கியை எடுத்து பொதுமக்கள்கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதனை கொஞ்சமும் எதிர்பாராத பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். ஆனால், ஜெய்பிரகாஷ் பால் (வயது 46) என்ற இளைஞர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பலியானார். பாஜக பிரமுகர் தீரேந்திர சிங்-கை கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நடந்தது ஒரு விபத்து என்றும், தற்காப்புக்காகவே தீரேந்திர சிங் சுட்டார் என்றும் பைரியா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திரா சிங் அலட்சியமாக கூறியுள்ளார்.
No comments:
Post a Comment