நம்புங்கள் - பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை ‘துக்ளக்’ சாட்சியமோ - சாட்சியம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

நம்புங்கள் - பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை ‘துக்ளக்’ சாட்சியமோ - சாட்சியம்!


பாபர் மசூதி வழக்குத் தீர்ப்பு- சதியில்லை - திட்டமிட்டு நடைபெற வில்லை என்று வழக்கம் போல காவிகள் பக்கம் நின்று ‘துக்ளக்‘ ஏடு (21.10.2020)  வித்தாரம் காட்டி எழுதுகிறது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. யாதவ் சமாஜ் வாடி ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட வர்தான், காங்கிரஸ் அறிக்கை கூறியது என்ன என்று எல்லாம் சுற்றி வளைத்து, பாபர் மசூதி இடிப்புக்குப் பச்சைக் கொடி காட்டி - பச்சைப் பார்ப்பனத்தனமாக பசப்புக் கட்டுரையைத் தீட்டியுள்ளது.


உண்மையிலேயே பாபர் மசூதி இடிப்புக்கு முன் கூட்டியே திட்டமிடப்பட வில்லையா?


லிபரான் ஆணையம் என்ன கூறியது? - பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் என்னென்னவெல்லாம் நடந்தது? கொஞ்சம் பார்க்கலாமே!


‘கல்கி’ கூறுவதையும் கணக்கில்


எடுத்துக் கொள்ள வேண்டாமா?


பாபர் மசூதி இடிப்புக்கு பல மாதங் களுக்கு முன் விசுவஹிந்து பரிஷத், சிவசேனாவின் தொண்டர்களுக்கு குஜராத் தின் ஒரு கிராமத்தில் முன்னாள் இராணுவ அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்பட்டது.


கடின மலையேற்றம், கயிற்றில் தொங்கி சுவரை உடைப்பது போன்ற பயிற்சிகள் தரப்பட்டன. இந்தப்  படைக்கு ‘லக்ஷ்மண சேனை’ என்று பெயர்.


“மசூதியை இடிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக அயோத்தியில் வி.எச்.பி. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நடத்திய கூட்டத்தில் அசோக் சிங்கால், வினய்கட்டியார், வி.ஹெச். டால்மியா மற்றும் மஹந்த் அவைத் தியநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹனுமான் பாக்கில் நடந்த ரகசியக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.சார்பில் ஹெச்.வி. சேஷாத்ரி மற்றும் பாரதிய ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்” என்று சோப்ரா போஸ்ட் தெரிவிக்கிறது.


- ‘கல்கி’ 20.4.2014


ஆதிகால சுபாஷ் கோமாவில் இருந்தார் என்பது போல, 'கல்கி' அந்த நேரத்தில் கோமாவில் இருந்தது என்று சொல்லுவார்களோ!


ஒத்திகை நடத்தப்பட்டதா இல்லையா?


1992 டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது; அதற்கு முதல் நாள் 5ஆம் தேதி காலை பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை பார்க்கப்பட்டது. பிபிசி (ஆங்கிலம்) படப்பிடிப்பாளர் கூறுகிறார்: 


‘இந்து’ ஏடு தரும் தகவல் என்ன?


2001ஆம் ஆண்டு ஜனவரியில் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் சாதுக்களின் மாநாடு நடைபெற்றது. அதில் மூன்று அம்ச திட்டங்கள் அறிவிக்கப் பட்டன.


1) கிராமங்களில் அனைவரும் ராம நாமத்தை ஜெபிக்க வேண்டும்.


2) நாட்டில் இருக்கும் கோயில்களில் ஜலாபிஷேகம் செய்ய வேண்டும்.


3) பிப்ரவரி 2002இல் முடியும் அளவில் டில்லியிலிருந்து அயோத்தி யாத்திரை.


 அப்போது தலைவர்கள் அளித்த பேட்டி “எதிர்வரும் சில மாதங்களுக்குள் 30 லட்சம் இளைஞர்கள் திரட்டப்படு வார்கள். அதில் 10 லட்சம் பேர்களுக்கு இராணுவப் பயிற்சிஅளிக்கப்படும். 3 லட்சம் பேர்களுக்கு திரிசூலம் அளிக்கப் படும். இவை எல்லாம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த!” இப்படி வெளிப்படையாக தீவிரவாத செயல்களை முன்னெடுத்தன இந்துத்துவா சக்திகள் (‘தி ஹிந்து’ 26.1.2001).  நம்புங்கள் இவை எல்லாம் திட்டமிட்டு நடைபெற்றவை அல்ல.


கரசேவர்கள் மத்தியில்


அத்வானி பேசவேயில்லையா?


பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, கரசேவர்களிடம் எல்.கே. அத்வானி என்ன பேசினார்? (வீடியோ ஆதாரம் லிபரான் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது).


“பாபர் மசூதியை இடிக்க டிராக்டர்களோ, புல்டோசர்களோ தேவையில்லை ஆளுக்கொரு தடியை எடுத்தால் காரியம் முடிந்துவிடும்; மத்தியப் படை நுழைய இடம் விடாமல் மசூதி வாசல்களை இழுத்து மூடுங்கள். ரிசர்வ் படையை மசூதி அருகே வரவிடாமல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள். பெஞ்சுகளைக் குறுக்கே போட்டு மறியுங்கள். அப்படியே உட்காருங்கள்” - கரசேவகர்களிடம் இவ்வாறு அத்வானி பேசியதை “பிசினஸ் இந்தியா” ஏட்டின் செய்தியாளர் ருச்சிராகுப்தா லிபரான் ஆணையத்தின் முன் சாட்சியமாகக் கூறி இருக்கிறாரே! பத்திரிகையாளர்கள் தாக்கப் படுவதிலிருந்து அவர்களைக் காப்பாற் றுங்கள் என்ற கோரிக்கையையும் அந்தப் பெண்மணி அத்வானி முன் வைத்தார். அவரோ அசைந்து கொடுக்கவில்லை. மாறாக எனக்கு இனிப்பு கொடுத்தார் என்று அந்த செய்தியாளர் லிபரான் ஆணையத் தின் முன் சாட்சியமாக வைத்தார்.


அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த அஞ்சுகுப்தா ரேபரலி சி.பி.அய். நீதிமன்றத்தில் (26.3.2010) சாட்சியம் கூறினார்.  "பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் திரும்பத் திரும்பப் பேசினர். கரசேவர் களைத் தூண்டிவிடும் பேச்சாக இது இருந்தது" என்று கூறினார் நம்புங்கள் இவை எல்லாம் திட்டமிட்டு நடை பெற்றவை அல்ல.


ஏ.பி. வாஜ்பேயியின் கடிதம் என்ன கூறுகிறது?


மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல நாடாளுமன்ற வாதியும், பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி வாஜ்பேயி அவர்களுக்கு எழுதிய கடிதத்திற்கு வாஜ்பேயி என்ன பதில் எழுதினார்? 


In his Reply to Prof. Hiren Mukherji’s letter of June 1989 Atelbehari Vajpayee wrote’ ‘ it is not possible to pin point the exact spot where ram was born.”


நம்புங்கள் - பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை ‘துக்ளக்’ சாட்சியமோ - சாட்சியம்!


- ஜனசங்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடு ஆர்கனைசர்’ (24.9.1989)


(சர்வபல்லி டாக்டர் கோபா நூல் பக்கம் 161)


பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி எழுதிய கடிதத்துக்கு வாஜ்பேயி எழுதிய பதிலாவது: ராமன் இந்த இடத்தில்தான் பிறந்தான் என்பதைக் குறிப்பிட்டு ஒரு இடத்தைச் சொல்ல முடியாது என்று எழுதிட வில்லையா?


ஏதோ  அப்பொழுது எழுதினார் - இதையெல்லாம் பெரிதுபடுத்தக் கூடாது - அப்படித்தானே?


சுபாஷ் என்ற அதிகாரி கொல்லப்பட்டது ஏன்?


30.4.2000 அன்று சுபாஷ் என்ற முக்கிய அரசு அதிகாரி காசி வெங்டேஸ்வரா என்று பெயருடைய இரயிலில் பாபர் மசூதி வழக்குத் தொடர்பான ஆவணங்களுடன் பயணிக்கிறார். இரயில் புது டில்லியை நெருங்கியபோது அந்த அதிகாரி பின்னால் இருந்த ஒருவரால் தள்ளி விடப்பட்டார். ஓடும் இரயிலுக்கு வெளியிலே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த அதிகாரியின் தந்தையார் ஓடி வருகிறார். தான் பின்னால் இருந்து தள்ளப்பட்டதை அப்பாவிடம் கூறுகிறார் மகன்.


அப்பா மருத்துவமனையின் வெளியில் காத்திருக்க, சுபாஷ் இறந்துவிட்டதாக அதிகாரிகள் சொல்லுகிறார்கள். சற்று முன்தானே என் மகனிடம் பேசி விட்டு வந்தேன் என்று கூறுகிறார். இரண்டு நாட்களாகவே கோமாவில் இருக்கிறார் என்று அதிகாரிகள் பதில் கூறுகிறார்கள்.


நீதியாவது கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்கு மூலம் வாங்கினீர்களா என்று கேட்கிறார் தந்தை. கோமாவில் இருந்தவரிடம் எப்படி வாக்கு மூலம் வாங்க முடியும் என்று  எதிர் கேள்வி கேட்கிறார்கள். தந்தையாருக்கு நன்கு விளங்கி விட்டது. பாபர் மசூதி வழக்குத் தொடர்பான ஆவணங்களை லிபரான் ஆணையத்திடம் அளிக்கச் சென்றார். மசூதி இடிப்புக் குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் அந்த ஆவணங்களில் இருந்தன. இந்தப் பின்னணியில் இந்த மரணம் விபத்து என்று கூறி கோப்பு முடிக்கப்பட்டது (‘தி வீக்‘ 21.7.2003).


நம்புங்கள் இது திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல. இந்தக் கொலைக்கும், பாபர் மசூதி இடிப்புக்கும் சம்பந்தமே யில்லை - இது சத்தியம் - நம்பித் தொலையுங்கள்.


‘சோ’ ராமசாமி எழுதியது என்ன?


லிபரான் ஆணைய அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்ற நிலையில் ‘துக்ளக்‘கில் சோ. ராமசாமி என்ன எழுதினார்? இந்த அறிக்கை என்ன சாதிக்கப் போகிறது? நாடாளுமன்றத்தில் லிபரான் கமிஷன்மீது விவாதம் நடக்காது, ரகளைதான் நடக்கும் என்று எழுத வில்லையா?


லிபரான் அறிக்கை 68 பேர் குற்றவாளிகள் என்று குறிப்பிட்டது. அதில் வாஜ்பேயும் ஒருவர், பாபர் மசூதி இடிப்பில் வாஜ்பேயி தன் பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது என்று கறாராகவே கூறிவிட்டது - லிபரான் ஆணையர்.


ஆதாரம் இல்லாமல் லிபரான் ஆணையம் கூறவில்லை.


“நாளைய தினம் அயோத்தியில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. கூரியகற்கள்மீது அமர்ந்து கொண்டு பஜனைப் பாடல்களை பாட முடியாது. மண்ணை சமப்படுத்தி அமர்வதற்கு ஏற்றபடி சமன் செய்ய வேண்டும்“ என்று அடல்பிஹாரி வாஜ்பேயி உ.பி. தலைநகரமான லக்னோ பொதுக் கூட்டத்தில் பாபர் மசூதி இடிப்புக்கு முதல்நாள் (5.12.1992) பேசவில்லையா?


இதற்கு என்ன பதில்? சோ எழுதிய மாதிரியே லிபரான் ஆணையத்தின்மீது விவாதத்தை நடத்தவிடவில்லை பிஜேபி - மாறாக ரகளை தான் செய்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை  சோ கூட்டமும், பிஜேபி வகையறாக்களும் மதிக்கும் லட்சணம் இதுதான். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ‘துக்ளக்‘ கருப்பு அட்டை போட்டு தன் எதிர்ப்பைத் தெரிவித்தது என்றும் இவ்வார 'துக்ளக்'கில் குறிப்பிட்டுள்ளாரே குருமூர்த்தி அய்யர் - இது   இரட்டை வேடம் தானே!


உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமார் கங்குலியின் பார்வையில்....


2010 செப்டம்பர் 30ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளை அமர்வு பாபர் மசூதி தொடர்பாக ஒரு தீர்ப்பினை வழங்கியது. சம்பந்தப்பட்ட இடங்களை மூன்று பிரிவாகப் பிரித்துக் கொடுத்து, இடிக்கப்பட்ட இடத்தில் ராமன் கோயிலைக் கட்டிக் கொள்ளலாம் என்பது இத்தீர்ப்பு.


இதுகுறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக்குமார் கங்குலி என்ன கூறுகிறார்? இதோ பார்ப்போம்!


“அங்கு ஒரு மசூதி இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வந்துள்ளனர். அது இடிக்கப்பட் டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அரசமைப் பின் மாணவனாக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும். 


 1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது. அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மசூதி என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு - அது அரசமைப்பால் உத்தரவாதம் அளிக்கப் பட்ட ஒரு அடிப்படை உரிமை. 


 ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மசூதி பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசமைப்பு வந்தபோது அங்கு ஒரு மசூதி இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறுக்குமா?  அரசமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். 


அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப் படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப் பில்  வராது. அதற்கு முன்பு இந்திய ஜன நாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.


பின்னர் ஒரு மசூதி இருந்த இடத்தில்,  ஒரு பவுத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்... இது போன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால், நிறைய கோயில்கள் மற்றும் மசூதிகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும்.   நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராமன் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.


விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மசூதியின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மசூதி கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மசூதியை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?


500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமை களைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. அய்ந்து நூற்றாண்டு களுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டிய தில்லை. மசூதி இருந்தது என்று நீதிமன்றம் சொல்ல வேண்டும் - அது ஓர் உண்மை. அது வரலாற்று உண்மை அல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர் களுக்கு (முஸ்லிம்களுக்கு) ஒரு மசூதியை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மசூதியை கட்ட அய்ந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழி நடத்து கிறீர்கள்? ஏன்? மசூதி இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.


நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மசூதியை மீண்டும் கட்ட சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், ‘அந்த பகுதி, மசூதியும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லி யிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனை யையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மசூதி அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக் களுக்கு கொடுக்க முடியாது. அப்படித் தரவேண்டும் என்பது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை.


அவர்கள் எந்த மசூதியையும் இன்றோ, பின்னரோ  இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள் ளனர். இப்போது அவர்கள் நீதித்துறை யின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பா லோர் இதை இப்படித் தெளிவாக சொல்லப் போவதில்லை” என்று கூறியுள்ளார். 


சட்டவிரோதமாக யார் இடித்தார்களோ அவர்களுக்கே இடிக்கப்பட்ட இடம் சொந்தம் - யார் எல்லாம் சேர்ந்து இடித்தார்களோ  அவர்களில் ஒருவர்கூடக் குற்றவாளியல்ல - அத்தனைப் பேரும் விடுதலை! விடுதலை!! திருடியவன் கையில் வீட்டுச் சாவியை ஒப்படைக்கலாம்!


ஆம் என்க!


No comments:

Post a Comment