எது விஷம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

எது விஷம்

எது விஷம்?


அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'டைம்' ஏடு உலகின் செல்வாக்குள்ளவர்களை வெளியிடுவது வழக்கம். அரசியல் பிரிவில் இந்தியாவில் 5 பேர்களுள் ஒருவர் என்று 'டைம்' ஏடு வெளியிட்டுள்ளது.


மோடி பிரதமர் ஆனதிலிருந்து இதுவரை 5 முறை அவ்வாறு வெளியிட்டுள்ளது.


'டைம்' இதழின் ஆசிரியர்களுள் ஒருவர் அதே இதழில் பிரதமர் மோடியைப் பற்றிக் குறிப்பு ஒன்றையும் எழுதியுள்ளார்.


"ஜனநாயகத்தின் முக்கிய அம்சம், அமைதியாக தேர்தல் நடத்தப்படுவது அல்ல; அது, யார் அதிக ஓட்டுகள் பெற்றார் என்பதை மட்டுமே காட்டுகிறது. வெற்றி பெற்றவர் கடமை என்பது - ஓட்டுப் போடாதவர்களுக்கும் உரிமை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே முக்கியம். கடந்த, 70 ஆண்டுகளுக்கு மேலாக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது.


அதன், 130 கோடி மக்கள் தொகையில், கிறிஸ்தவர், முஸ்லிம், சீக்கியர், புத்தம், ஜெயின் என, பல்வேறு சமூகத் தினரும் உள்ளனர். அனைவரும் இந்தியாவை மதித்து, நேசித்து நடக்கின்றனர். இதைத் தான், சமூக ஒற்றுமை மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதாரணமாக, தலாய்லாமா பெருமையுடன் கூறுகிறார்.ஆனால் நரேந்திர மோடி, இதில் சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டார். இந்தியாவில் இதுவரை இருந்த பிரதமர்களில் பெரும்பாலானோர், மக்கள் தொகையில், 80 சதவீதம் உள்ள ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், மோடி மட்டுமே, மற்ற மதத்தினர் பற்றி தனக்கு கவலை இல்லை என கருதுகிறார். மக்களுக்கு அதிக அதிகாரம் அளிப்போம் என்று வாக்குறுதிகள் கொடுத்து தேர்ந்தெடுக்கப்பட்ட, பா.ஜ.க., அரசு, முஸ்லிம்களை குறிவைத்து, அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.


தற்போதைய கரோனா வைரஸ் காலத்தையும், எதிர்ப் பாளர்களை நசுக்குவதற்கு வாய்ப்பாக பயன்படுத்துகிறது. உலகின் மிகவும் துடிப்புள்ள ஜனநாயகம், இருட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்த இதழ் வெளியிட்ட, 100 பேரில், மோடி குறித்தே இவ்வாறு எதிர்மறையான விமர்சனம் முன் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இது புதிதல்ல, 'டைம்' இதழ் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக, குறிப்பாக மோடிக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டு உள்ளது.உலகின் மிகப் பெரிய ஜனநாயக நடைமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மோடி. இந்திய மக்கள், 130 கோடி பேரின் பிரதிநிதியாக உள்ளார். அவர் குறித்த விமர்சனம் மூலம், இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து உள்ளது, 'டைம்' இதழ்."


இந்தச் செய்திகளை வெளியிட்ட 'தினமலர்' பூணூல் ஏடு (25.9.2020 பக்கம் 14) கொடுத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?


"இந்தியா, மோடிக்கு எதிராக விஷம் கக்கும் 'டைம்!'" என்பதுதான் 'தினமலர்' கொடுத்த எட்டு பத்தி தலைப்பாகும்.


மோடியைப் பாராட்டினால் 'பிரமாதம், பிரமாதம்!' மோடியின் மதவாத சிந்தனை, போக்குகள் சிறுபான்மை யினருக்கு எதிரான செயல்பாடுகளை அதே 'டைம்' சுட்டிக்காட்டி எழுதினால் - அது விஷமாம்!


உண்மையில் 'தினமலர்' இப்படி எழுதுவதுதான் "ஆலகால விஷம்!"


'தமிழ் மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஏழை நெசவாளர் வீட்டுக் கைத்தறி நிற்காமல் இருக்கும்; ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்" ('தினமலர்' வாரமலர் 13.6.2004).


'தினமலரின்' இந்த எழுத்துக்கள்தான் உண்மை யிலேயே கலப்படமற்ற 'அக்மார்க்' விஷத்தின் ஊற்று.


"பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட் டோமா இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதியில் முப்போகம் விளையாதா என்ன?" ('தினமலர்' 18.8.2009) என்று 'தினமலர்' எழுதியதை விடவா விஷம் வேறு இருக்கிறது?


'டைம்' ஏடு பிரதமர் மோடிபற்றி எழுதிய தகவ லும், கருத்தும், இந்தியாவில் நடந்துவரும் மதவாதத் தன்மையிலான கோரங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எழுப்பிய விமர்சனம். அதுவே 'தினமலர்' பார் வையில் விஷம் என்றால் செம்மொழி, திருவள்ளுவரை மய்யப்படுத்தி 'தினமலர்' எழுதியது வெறுப்பின், எதிர்ப்பின் வெளிப்பாடு என்பது வெளிச்சமாகவே தெரி யக் கூடிய ஒன்றாகும்.


பார்ப்பனர்களின், பார்ப்பன ஊடகங்களின் விஷம் கொந்தளிக்கும் விஷமங்களைப் புரிந்து கொள்ளலாம். பாம்புக்குப் பல்லில் விஷம் - பார்ப்பனருக்கு உடம்பெல் லாம் விஷம் என்று எங்கோ கேள்விப்பட்ட பழமொழி!


No comments:

Post a Comment