தமிழ்-மொழிப் புனைவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 29, 2020

தமிழ்-மொழிப் புனைவுகள்

சு.அறிவுக்கரசு



“எங்கள்  தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லி


தலைமுறைகள் பல கழித்தோம்


குறை களைந்தோமில்லை” - என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.


அவரின் சினம் சரியா? ஞாயமானதா?


ஆதிசிவன் என்னைப் பெற்றுவிட்டான். அகத்தியன் எனும் முனிவன் உயர்மேவும் இலக்கணம் செய்தான் என்றொரு கருத்துமுண்டு. மொழியை எவனாவது படைக்க முடியுமா? ஆ, ஓ, என்று ஓசை எழுப்பினான் ஆதி மனிதன். அத்தகு ஓசைகளே நீட்சி பெற்ற சொற்களாக, மொழியாக உருப்பெற்று வளர்ச்சி பெற்றன என்பது மொழியியல் அறிஞரின் முடிவு. இதுதான் சரியாக இருக்கும்.


மாறாக, சிவனின் திருவருள் சக்தியால் விந்து அசைக்கப்படும் போது, நாதம் தோன்றுகிறது. அந்த நாதமே ஓம் என்பது. இந்த ஓங்காரத்தில் இருந்து அகரம் முதலிய 50 எழுத்துகளும் தோன்றின. ஒன்பது பிரிவுகளாக அமைந்துள்ள எழுத்துகளால் சொற்களாம். சொற்களால் சாஸ்திரங்களும் தோன்றும் என்கிறது சைவ சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை ஏனைய சித்தாந்தங்கள் ஏற்கின்றனவா? குறிப்பாக வைணவம் ஏற்கிறதா?


சைவத்தைப் போற்றுவது, நிலைநிறுத்துவது என்ற போர்வையில் ஆரிய வேதங்களையும், வேள்விகளையும் பாதுகாக்கும் நோக்கம் மறைந்துள்ளது.


ஞானசம்பந்தன், “வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆகமில்(லா) அமணரொடு” எனப் பாடுகிறான். “வைதிகத்தின் வழி ஒழுகாத அக்கை தவமுடை அமண தேரர்” எனும் அவன் பாடல் சமணரைச் சாடுகிறது. வைதிகத்திற்கு வக்காலத்து வாங்குகிறது சைவத்தின் பெயரால்.


“அந்தணர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர்” என்ற வரிகள், பூனைக்குட்டி வெளியே வந்ததை வெளிப்படுத்தும். பாடியவனும், பார்ப்பான். பாடு பொருளும் பார்ப்பனரைக் காப்பது.


சம்பந்தனின் தேவாரம் போன்றதே, இறையனார் களவியல் என்பதும் அதன் உரைப்பாயிரமும்.


களப்பிரரின் தோல்விக்குப் பிறகு பல்லவ, பாண்டியர்களுக்குள் ஆதிக்கப் போட்டி. அக்காலக்கட்டத்தில் சைவத்தை நிலைநாட்டி வைதிகத்தை மீட்டுருவாக்கம் செய்வது முக்கிய நோக்கம். தமிழ் பேசும் நிலத்தில் முதல்வனாகச் சிவனை நிறுத்துவதும் நோக்கம்.


என்றாலும், சிவனைப் போற்றும்போது, “வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண்” என்றே வடமொழிக்கு முதலிடம் தந்துதான் பாடினர்.  (அப்பர் தேவாரம்). “ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயனறிகிலா அந்தகர்” என்றே, சமணரைத் தாக்கும் சம்பந்தன் தேவாரம்.


சமயக் காழ்ப்பின் காரணமாகவே, சைவக் குரவர்கள், சமணரைத் தாக்கினர். சமணர்கள் கல்வி உலகிலும், அறிவுலகிலும் தழைத்து விளங்கினர். அவர்களின் காலமே தமிழ் நாகரிகத்தின் “பொற்காலம்“ என்றார் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்.


சமணப் பள்ளிகள் காஞ்சியைத் தலைமை இடமாகக் கொண்டிருந்தன. பவுத்தமோ, காஞ்சி, வஞ்சி, பூம்புகார் போன்ற ஊர்களில் இருந்த விகாரைகளின் மூலம் கல்வி, சமயம், மருத்துவம், வானியல் கற்பித்தது. உறையூர், நாகப்பட்டினம், புத்தமங்கலம், மயிலாடுதுறை போன்ற ஊர்களும் பவுத்த மய்யங்களாக விளங்கின.


பல்லவர் காலத்தில் சமஸ்கிருதம் வளர்க்கப்பட்டது. கடிகைகள் கட்டப்பட்டு அந்த மொழி கற்பிக்கப்பட்டது. வேதங்கள் சொல்லித் தரப்பட்டன. பார்ப்பனர் மட்டுமே சேர்க்கப்பட்டுத் தங்க வைக்கப்பட்டு, உணவு அளித்து ஊக்கப்படுத்தினர். சமஸ்கிருதமே ஆட்சி மொழியான கொடுமை தமிழ்நாட்டில் நடந்தது.


தமிழ் வளர்த்த மூன்று சங்கங்கள் பற்றி இறையனார் களவியல் அகப்பொருள் நூலை ஆதாரம் காட்டுகின்றனர். 60 பாடல்களில் களவியலுக்கு 33, கற்பியலுக்கு 27 எனக் கொண்ட நூல். எதனால் எழுதப்பட்டது இந்த நூல்?



பாண்டிய நாட்டில் 12 ஆண்டுகள் பஞ்சமாம். மக்களைக் காப்பாற்ற இயலாத மன்னன், எங்காவது போய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள். நாடு செழிப்பானதும் திரும்பி வாருங்கள் என்றானாம். 12 ஆண்டுகள் கழித்து, நாடு வளமானதாம்.


கற்றறிந்தோரும் திரும்பினர். எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் கற்றோர் மட்டுமே திரும்பி வந்தனராம். பொருளதிகாரம் அறிந்தோர் இல்லையாம். மன்னன் மனம் வருந்தினான். அவன் வருத்தம் தீர்க்க, மதுரைக்கடவுள் அறுபது சூத்திரம் செப்புத்தகட்டில் எழுதித் தன் சிலைக்குக் கீழ்ப் பீடத்தில் மறைத்து வைத்ததாம்.


ஏன் மறைக்க வேண்டும்? வருத்தப்பட்ட மன்னன் மனங்குளிரும்படி அவனிடமே அளித்திருக்கலாமே!


பன்னிரண்டு ஆண்டு பஞ்சத்தைத் தீர்க்க எதுவும் செய்யாத கடவுள், இதற்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை எடுத்து எழுதியது?


கடவுளா எழுதியது? தொல்காப்பியச் சூத்திரங்கள் அப்படியே திருடப்பட்டு, வரிசை எண் மாற்றித் தரப்பட்டுள்ளன. 37, 40, 42 பாடல்கள், இறையனார் களவியலில், 7, 18, 17 என்று மாற்றித் தரப்பட்டுள்ளன என்பது தமிழறிஞர் கூற்று. தொல்காப்பியம் கற்பியல் பாடல், 187 இறையனின் களவியலில், 42ஆம் எண் பாடலாக வந்துள்ளதாம்.


கடவுள் இப்படிப்பட்ட எழுத்துக்  களவைச் செய்திருக்குமா? எழுத்துக் களவாணி எவனோ செய்துவிட்டுக் கடவுள் தலையில் கட்டி விட்டானோ?


குறுந்தொகையில் 2ஆம் பாடலைப் பாடிய புலவன் பெயரும் இறையனார். எனவே இந்தப் பெயரில் பலர் இருந்திருக்க வாய்ப்பு உண்டு அல்லவா?


அடுத்த கதை, களவியல் கிடைத்ததும் உரை எழுத ஆணையிட்டானாம் அரசன்.  49 புலவர்கள் எழுதினர். எது சிறந்தது? அவரவர் உரையே சிறந்தது என்று 49 பேரும் வாதிட்டனர். பொன்னும், புகழும் கிடைக்கும் அல்லவா?


அரசன் குழம்பினான். ஆண்டவனிடம் முறையிட்டான். உப்பிரிகுடி கிழார் என்பான் மகன் உருத்திரசன்மன் எனும் ஊமைச் சிறுவனிடம் படித்துக் காட்டுங்கள். யாருடைய உரைக்கு சிறுவனின் கண்களில் நீர் வடிகிறதோ, அதுவே சிறந்த உரை என்றதாம்.


அவ்வாறே செய்தபோது, மருதன் இளநாகனார் உரைக்குச் சிறுவனின் கண்கள் நீரைச் சொரிந்தனவாம். அதுவே மெய்யுரை என்றானதாம்.


இக்கதையின் புனைவுகளைப் பார்ப்போமா! நூலின் உரைப்பாயிரத்தை நக்கீரன் எழுதியதாகக் கூறுகிறது. நக்கீரன் சங்க காலப் புலவனாம். சங்க காலத்தில் தமிழ் அல்லாத, வார்த்தை, சீட்டர், பிராமணன், சுவர்க்கம், சனம், குமாரசுவாமி, வாசகம், காரணிகன் போன்ற வடசொற்கள் நிறைய உள்ளன.


பாண்டிக் கோவை எனும் நூலிலிருந்து, 325 பாடல்கள் மேற்கோளாகக் காணப்படுகிறது. பாண்டிக் கோவை பொ.ஆ. 642-670இல் வாழ்ந்த கூன் பாண்டியனைப் பெருமைப்படுத்திப் பாடிய நூல். எனவே, களவியல் உரை ஏழாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதே. சங்க காலத்தைச் சேர்ந்தது அல்ல.


இறையனார் அகப்பொருள் உரை எழுதியது நக்கீரர் அல்ல என்றார் உ.வே.சாமிநாத அய்யர். இதை தஞ்சை சீனுவாசப் பிள்ளையும் ஆதரித்தார். இதற்கு ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, டாக்டர் மு.வ.ஆகியோரும் இசைவுக் கருத்து தெரிவித்துள்ளனர்.


எனவே இறையனார் அகப்பொருளுரை கடவுள் எழுதியது என்பதும் புனைவு, நக்கீரன் உரை எழுதியதாகக் கூறுவதும் புனைவு.


ஏன் இத்தகைய புனைவுகள்? களப்பிரரால் அழிக்கப்பட்ட, பார்ப்பனரின் வேத முறைகளை, வைதீகத்தை மீண்டும் முதன்மை இடத்திற்குக் கொண்டு வருவதற்குச் சிவனையும், சைவத்தையும் முன் நிறுத்தச் செய்யப்பட்ட புனைவுகள். வைதீகம் என்பதன் ஆணிவேரே, நான்கு வருணப் பாகுபாடு என்பது நாம் அறிந்ததே.


முச்சங்கம் வளர்த்த தமிழ் என்பார்கள். முதல் சங்கம், காய்சின வழுதியால் நிறுவப்பட்டது. கடுங்கோன் முதலிய 89 அரசர்கள் வளர்த்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் அகத்தியன், கடவுள் சிவன், முருகன், முரஞ்சியூர் முடிநாகராயர், குபேரன் உள்பட 4449 பேர். இடைச்சங்கம், வெண்டேர்ச் செழியனால் நிறுவப்பட்டது. முடத் திருமாறன் உள்பட 59 பேர் வளர்த்தனர். அகத்தியன், தொல்காப்பியர், துவரைக்கோன், கீரந்தை உள்பட 3700 புலவர்கள். கடைச்சங்கம் முடத்திருமாறனால் நிறுவப்பட்டது. உக்கிரப் பெருவழுதி உள்பட 49 பேர் வளர்த்தனர். சிறுமேதாவியார், சேந்தம் பூதனார், மருதன் இள நாகனார், கணக்காயர் மகன் நக்கீரன் உள்பட 449 புலவர்கள்.


முதல் சங்கம் மதுரையில் (கடல் கொண்ட ஊர்) 4440 ஆண்டுகள் செயல்பட்டது. கண்ணுதல் கடவுள் கழகமோடு அமர்ந்து பணி புரிந்த பெருமைக்குரியது.


இடைச்சங்கம் கபாடபுரத்தில் (கடலில் மூழ்கியது) இதிலும் அகத்தியர் இருந்தார். 3700 ஆண்டுகள் செயல்பட்டது.


கடைச் சங்கம் (இன்றிருக்கும்) மதுரையில் 1850 ஆண்டுகள் செயல்பட்டது.


முதல் சங்கத்திலும், இடைச்சங்கத்திலும் செயல்பட்டவர்களில் அகத்தியன் எனும் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் ஒருவரா? இருவரா? பலரா? சற்றொப்ப 8140 ஆண்டுகள் ஒரே ஆள் (அகததியன்) வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டா? இவையெல்லாம், புனைவல்லாமல் வேறென்ன?


நெற்றியில் கண்படைத்த முக்கண்ணன் எனும் கடவுள் (சிவன்) புலவர்களுடன் அமர்ந்து தமிழ்ப் பணி ஆற்றியது என்றால், (கடவுள் உண்டா என்பதே அய்யமாயிற்றே) புனைவு அல்லாமல் வேறென்ன?


தமிழ்ச் சங்கங்கள் செயல்பட்ட காலம் எனப்படுவது புனைவு போலவே உள்ளது. 37 எனும் எண்ணை 120ஆல் பெருக்கினால் வரும் தொகை 4440. (முதல் சங்க கால 4440 ஆண்டுகளாம்). இடைச் சங்க காலம் 3700 ஆண்டுகள் அதே எண் 37அய் 100ஆல் பெருக்கினால் வரும் தொகை. அது போலவே 37 எண்ணை 50ஆல் பெருக்கினால் வரும் தொகை 1850 என்பது கடைச் சங்கத்தின் காலம்.யோசித்தால் புனைவு என்ற முடிவுக்கே வரமுடியும். 37 எனும் எண் மீது காதல் கொண்ட குறும்பனின் புனைவு என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். இதே அய்யம், 2000இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட “தமிழ்நாட்டு வரலாறு” எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சங்கம் என்பதே தமிழ்ச்சொல் அல்ல. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முதல், இடைச் சங்கங்கள் இயங்கின என்பதும் புனைவுகளே. கடவுள்கள் எனக் கற்பிக்கப்பட்ட சிவன், அதன் மகன் முருகன், திருப்பதிக் கடவுளுக்கே கடன் கொடுத்த (கந்து வட்டி) குபேரன் ஆகிய கடவுள்களும் புலவர்களோடு அமர்ந்து என்ன பாடல் பாடினர்? எந்த இலக்கியம் படைத்தனர்? எல்லாமே புனைவுதான்.


“பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் எனவியப்பாம்


வையகம் போர்த்த வயங்கொலிநீர் கையகலக்


கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு


முன்தோன்றி மூத்தகுடி”


என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாடல் (எண் 35).


இரும்பால் செய்யப்பட்டது வாள். வரலாற்றில் இரும்புக் காலம் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன். அதாவது கி.மு. 10,000 ஆகும்.


மேற்காணும் பாடலின்படி, தமிழன் இரும்பாயுதம் ஏந்தினான் என்றால், 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் வாழ்ந்தான் எனப் பொருள். மானுடவியல், தொல்லியல், புவியியல் போன்ற அறிவியல் ஆய்வுகளின்படி, ஆப்பிரிக்க நாட்டில் தோன்றி இடம்பெயர்ந்த மனித இனம், இந்திய மண்ணில் தடம் பதித்தே சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளாம். பாடல் புனைவோ? சுயதம்பட்டமே.


திராவிட மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணரும், திராவிடர் இயக்கம் சார்ந்த பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையும் இந்திய மாக்கடலில் மூழ்கிப் போன லெமூரியாக் கண்டத்து மனிதன் தமிழன் என்றும், அவன் பேசிய மொழி தமிழ் என்றும் பேசினர்.


லெமூரியா கண்டம் உடைபட்டு, மூழ்கி இடம் பெயர்ந்து 250 லட்சம் ஆண்டுகள் ஆயின என்று, “இந்திய மாக்கடல் மர்மங்கள்” (பக். 47) எனும் நூலில் ரெஹிதோவ் பதிவு செய்துள்ளார். நம் அறிஞர்கள் இருவரும் மொழி அறிவை மட்டுமே கொண்டிருந்தோர். இவர்தம் மொழிப் பற்றால் தம் கருத்தைக் கூறிவிட்டனரோ?


ஹோமோ சேப்பியன் எனும் அறிவியல் பெயரால் அழைக்கப்படும் தற்போதைய மாந்தன் உருப்பெற்றது சுமாராக 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான். 250 லட்சம் ஆண்டுகளுக்கு முன் குரங்குதான்.


தமிழ் வரலாறு என்ற தம் நூலில் பாவாணர், “தமிழர் குமரிக் கண்டத்தில் தோன்றி, கடல் கோள், இனப் பெருக்கம், நாடுகாண் விருப்பம் முதலிய பல்வேறு கரணியங்களால் வடக்கே சென்றனர். அவருட் பலர், பனிமலை வரை சென்று திராவிடராயினர். வடநாட்டுத் திராவிடருள் ஒரு சாரார், வடமேற்கு எத்தியோப்பியா, எகிப்து, செப்பறை (சைப்ரஸ்) தீவு, கிரத்தா, கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகள் வழியாகக் காண்டினேலியம் வரை (ஸ்கான்டினேவியா) சென்று ஆரியராக மாறினர். அவருடன் ஒரு வகுப்பாரே வேத ஆரியராகச் சின்ன ஆசியா, பாரசீகம் முதலிய நாடுகள் வழியாய் இந்தியாவிற்குள் (கி.மு. 2000-1500) புகுந்தனர்” என்று எழுதியுள்ளார்.


பீம்சிங், இது என்ன குழப்பம் எனக் கூவத் தோன்றுகிறதா?


கிட்டத்தட்ட, பாவாணரின் கருத்தையே பன்மொழிப் புலவரும் எழுதியுள்ளார். (நூல்: 1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், பக்கம் 34).


லெமூரியாக் கண்டத்து (குமரிக் கண்டத்து)  மாந்தனுக்கு கைகள் நீண்டவை. மூக்கு சப்பை.  கண்கள் பெரியவை. நெற்றி 6 அல்லது 7 அங்குலம் அகன்றவை. மூக்குக்கு மேலே சதைப் புடைப்பு உண்டு. நெற்றியில் கண் போன்ற உறுப்பு உண்டு என்கிறார் பன்மொழிப் புலவர்.


தானே பார்த்தவன் போல் ரவிவர்மா, இந்துக் கடவுள்களை வரைந்தது போலவே, கா.அப்பாத்துரையும் முதல் மாந்தனை வருணிக்கிறார்.


இதுவும் ஒரு புனைவுதான்.


பொ.ஆ.1868இல் எர்னஸ்ட் ஹெகல் எனும் ஜெர்மானியர் தன் கட்டுரையில், லெமூர் எனும் விலங்கு பற்றி எழுதினார். ஆரியரே உயர் இனம் என்றார். லெமூர் விலங்கு இந்தியா, மலேசியா, ஆப்ரிக்கா, பகுதிகளில் காணப்பட்டதாகும். எனவே இப்பகுதியை லெமூரியா என்று ஃபிலிப் ஸ்லேட்டர் பெயரிட்டார். லெமூர் மந்தியிலிருந்து உருமலர்ச்சி பெற்றதால் மாந்தன் என்றனர். 1904இல் “மறைந்த லெமூரியா” எனும் நூலை, ஸ்காட் எலியட் என்பவர் எழுதினார்.


லெமூரியர்களுக்குத் தலையின் பின்பக்கம் ஒரு கண் இருந்தது என்றார். முன்னும், பின்னும் எளிதாக நடக்க முடிந்தது என்று எழுதினார்.


ஆரிய இனம், வெள்ளையர் இனம் என்று உயர்த்தி எழுதியதால், பிரம ஞான சபை ஆள்களும் (அன்னிபெசண்ட் அமைப்பினர்), ஆங்கிலேயர்களும் இதைத் தூக்கி வைத்து ஆடினர்.


தமிழறிஞர்களான பாவாணர், அப்பாதுரை, ந.சி.கந்தையா போன்றோர் லெமூரியா, மாந்தன், முதல் மாந்தன் என்ற சொல்லாடல்களைக் கைப்பற்றிக் கொண்டனர்.


சீன மொழியே லெமூரியரின் மொழிக்கு மூலம் என்று ஸ்காட் எலியட் எழுதினார்.


இவர்களோ, முதல் மாந்தன் தமிழ் பேசினான் என்றனர்.


இரண்டு கருத்துகளும் அறிவியல் ஆய்வு செய்து சொல்லப்பட்டவை அல்ல. வெறும் புனைவுகளே.


தமிழே உலகின் முதல் மொழி என்கிற கருத்தினை, மாகறல் கார்த்திகேயன் 1913இல் வெளியிட்டார். 1920இல் கா.சுப்ரமணியம், 1930இல் ஞானப்பிரகாசர் ஆகியோரால் வழிமொழியப்பட்டது. பாவாணர் 1931இல் பேசினார்.


மொழிப் பற்று இருப்பதில் ஞாயம் உண்டு. ஆனால், முதல் மொழி இதுதான் என்று பேச, எழுதிட பற்று மட்டும் போதா. உயிரியல், ஒலியியல், சொல்லியல், மொழியியல், மானுடவியல், சமூகவியல் போன்ற பலப்பல அறிவியல் துறைகளில் ஆய்வு செய்து மெய்ப்பிக்கப்படல் வேண்டும். இருக்கிறதா? இல்லையே!


சிவன் எனும் கடவுள், உடுக்கை அடித்து ஆடினான். அப்போது ‘ஹல ஹல’ என்ற ஓசை எழுந்தது. அதுவே சமஸ்கிருதம். தமிழ் என்றாயிற்று என்று “தெய்வத்தின் குரல்” நூலில், இறந்துபோன சந்திரசேகரன் சங்கராச்சாரி எழுதி உள்ளார்.


நடராஜன் பாடே “ததிங்கினத்தோம்“ என்றாகி விட்டது. சங்கர மடத் தலைவரின் ஆதாரமற்ற, ஆராய்ச்சி அற்ற, அறிவுக்கு ஒவ்வாத கூற்று.


ஆண்டவன் மொழியை ஏற்படுத்தினது என்பது அறிவற்றவர்களின் பேச்சு.


அதுபோன்றே மொழியின் “மூலம்” கூறப்படுகிறது. முதல் மொழி இதுதான் எனக் கூறப்படுவதும் நம் விருப்பம்தான். ஆசைதான். அறிவியல் ஆதாரம் அற்ற கூற்றுதான். புனைவுதான்.


புனைவுகளற்ற மொழி ஆக்குவோம்!


No comments:

Post a Comment