‘புதிய சிந்தனையாளர் குழுமம்' என்ற போர்வையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள் அமைப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 1, 2020

‘புதிய சிந்தனையாளர் குழுமம்' என்ற போர்வையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள் அமைப்பு

திரிபுரா வழியில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பார்களாம்!



சென்னை, ஆக.1  ‘புதிய சிந்தனையாளர் குழுமம்' என்ற போர்வையில் இயங்கும் ஆர்.எஸ்.எஸ். இளைஞர்கள் அமைப்பு. திரிபுரா வழியில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பார்களாம்!


ஏபிவிபி போன்ற அமைப்பின்


மறு பெயர்


சமீபகாலமாக திராவிடக் கொள்கை மோச மானது- தூய தமிழ் தேசியம் மற்றும் விவசாயச் சார்பு என்று பேசிக்கொண்டு பொது வெளியில் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட அமைப்பின் பின்புலத்தில் இருந்து வருகிறார்கள். அந்த அமைப்பு ‘புதிய சிந்தனையாளர் குழுமம்' என்று வெளியே கூறப்பட்டாலும், இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு பொது வெளியில் தொடர்ந்து பலரை இறக்கிவிடும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் அமைப்பான ஏபிவிபி போன்ற அமைப்பின் மறு பெயர் என்று தெரியவருகிறது.


சமீபகாலமாக யாரெல்லாம் வலதுசாரி அரசியல் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பரப்புகிறார்களோ - மாரிதாஸ் முதல் பத்ரி சேஷாத்ரி வரை, ரங்கராஜ் முதல் ஷ்யாம் சேகர் வரை மற்றும் கோலாகல கிருஷ்ணன் முதல் புதிதாக இறக்குமதி ஆகியுள்ள அண்ணாமலை வரை... இவர்கள் அனைவரையும் ஒருங் கிணைக்கும் புள்ளி இதுதான்.


தமிழக வலது அரசியல் போக்குகளின் ஊக்கத்துணையான இந்த அமைப்பு. புதிய சிந்தனையாளர் குழுமம், சுவராஜ்ய அமைப்பு, ஏபிவிபி அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ் என்று இந்த வலைப்பின்னல் போகிறது. 2016 இல் தமிழ்நாட்டில் புதிய சிந்தனையாளர் குழுமம் தொடங்கப்பட்டது. அந்தத் தொடக்க விழாவில் ஆர்.எஸ்.எஸ்-ஸின் தேசிய செயற்குழு உறுப்பினர் ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். இணைப் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோஸபலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஹோஸபலே, அறிவுத்துறையில் நமக் கான போர் வீரர்களை உருவாக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.


இதைத்தான் இந்த அமைப்பு செய்து வருகிறது. 2017 நவம்பரில் இந்த அமைப்பு மயிலாப்பூரில் சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்தி யது. இதைத் தொடங்கி வைத்தவர் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன். இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நீண்ட காலத் தொடர்பு உள்ளவர் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விருந்தினர் பட்டியல் இன்னும் சுவாரசியமானது.


‘தந்தி' டி.வி.யின் அசோக வர்ஷினி, ‘நியூஸ் மிண்ட்' இணைய தளத்தை உருவாக்கிய தன்யா ராஜேந்திரன், பாடகி சின்மயி, தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் ஷ்யாம் சேகர், சுமந்த் சி.ராமன், பானு கோம்ஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டு உரையாற்றினர்.


இதில் பேசிய, ‘ஸ்வராஜ்யா’ இணைய தளத்தின் ஆசிரியர் பிரசன்னா வெங்கடேசன் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் வெளிப்படையாகப் பேசினார்.


தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர்


“தமிழ் சமூக ஊடகத்தில் திராவிட சிந்தனை அதிகமாக உள்ளது. இது தொழிற்துறை வளர்ச்சிக்கு எதிரான போக்கை வளர்க்கிறது. நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் எதிர்க்கும் போக்கு உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றியின் உந்துதலால், தமிழ்நாட்டை ஒரு எதிர்ப்பு மாநிலமாக மாற்ற முயல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட ஜாதி இலக்கு வைத்துத் தாக்கப்படுகிறது. இந்து போபியா வளர்த்து விடப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்'' என்று தங்கள் நோக்கத்தைத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.


சுருங்கச் சொன்னால் அறிவுத்துறையில் வலதுசாரிப் போக்கை வளர்த்தெடுப்பது இந்த அமைப்பின் ஒற்றை நோக்கம்.


இதன் செயல்பாடுகளைத் தேடிப் படித்தால் ஷ்யாம் சேகர், மாரிதாஸ், பத்ரி சேஷாத்ரி, ரெங்கராஜ் பாண்டே போன்றவர்கள் இதன் பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருவதை அறிய முடிகிறது. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் பெரிய கூட்டம் இல்லை. 30 பேர், 50 பேர் வருகிறார்கள். இந்த அமைப்பில் சமூக வலைதளங்களில் பெரிய அளவுக்கு பிரபலமானவைகள் இல்லை. இருப்பினும் பத்ரி, ஷியாம் சேகர் போன்றோர் இதன் நிகழ்ச்சி களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துக் கலந்து கொள்கிறார்கள்.


மாரிதாஸ் என்ற நபர், ‘நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்?’ என்ற புத்தகத்தின் வழியேதான் இங்கு அறிமுகம் செய்யப்படுகிறார். அதற்கு முன்னால் இந்தப் பெயரைக்கூட யாரும் கேள்விப்பட்டதில்லை. அந்தப் புத்த கத்தைத் தன்னுடைய கிழக்குப் பதிப்பகம் மூலம் வெளியிட்டவர் பத்ரி சேஷாத்ரி. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிப் பேசியவர்களில் ஒருவர் கே.டி.ராகவன். புத்தகம் போடும் திட்டம் பத்ரிக்கு... வாழ்த்திப் பேசும் டார்கெட் ராகவனுக்கு. வதந்தி பரப்பும் திட்டம் மாரிதாஸுக்கு. ஆகவே, மாரிதாஸை மட்டுமல்ல. மேலும், இந்த புதிய சிந்தனையாளர் குழுமமானது, இளையோர் நாடாளுமன்றம் என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்குள் ஊடுருவிச் செல்வது, நிதிநிலை அறிக்கை கொள்கை விளக்கக் கூட்டங்கள், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை மீதான கூட்டம் என பரந்த வரையறையில் ஒரு கருத்துருவாக்க வேலையிலும் ஈடுபட்டு வருகிறது.


இந்த ஆண்டு முதல் ‘அம்பேத்கர் - ராமானுஜாச்சார்யா விருதுகள்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு விருதுகளையும் வழங்கி வருகிறது. ‘கக்கன் வாழ்நாள் சாதனையாளர் விருது’ என்ற பெயரில் மற்றொரு விருதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் புதிய சிந்தனையாளர் குழு மம் இந்தியா முழுவதும் நடத்தி வருவது ‘இந் தியா ஃபவுண்டேஷன்’ என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு கொண்ட அமைப்பு. இந்த இந்தியா ஃபவுண்டேஷனின் ஆலோசகர்களாகச் செயல் பட்டு வருவோரில் முக்கியமானவர்கள் நிர்மலா சீதாராமன், ஆர்.எஸ்.எஸ். தேசியச் செயலாளர் ராம்மாதவ் உள்ளிட்டோர்.


இதைப் போலவே, ‘விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷன்' என்ற மற்றொரு அமைப்பு வழியேயும் இதே வேலையைச் செய்து வருகின்றனர். இதன் ஆலோசகர்களில் ஒருவர் குருமூர்த்தி. இந்த அமைப்பு வழியாகத்தான் 2011 இல் ஊழலுக்கு எதிரான பொது மேடை என அன்னா ஹசாரே முன் நிறுத்தப்பட்டார். அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளே வந்தார். சுப்ரமணியன் சாமி, கிரண் பேடி என்று பலர் அதில் அணி திரண்டனர்.


தமிழகத்தைக்


குறிவைத்துள்ளனர்


ஊழல் மட்டுமே நாட்டின் முதன்மைப் பிரச்சினை என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டு பா.ஜ.க. ஆட்சியையும் பிடித்தது. தற்போது இவர்கள் தென்னிந்திய ஊடகங்களை, குறிப்பாக சமூக ஊடகத்தை கைப்பற்றி மக்களை திராவிட கட்சிகளுக்கு எதிராக நிற்கச் செய்யும் வேலைத் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளனர். ஏனெனில் பாரம்பரிய ஊடகங்கள் ஏற்கெனவே அவர்களின் கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்டன. சமூக ஊடகம்தான் சவாலானதாக இருக்கிறது என்பதால் அதைக் குறி வைத்துள்ளனர். இதற்காக மாரிதாஸ், ரெங்கராஜ் பாண்டே போன்றோர் முன்னே நிற்பவர்கள் என்றால், பத்ரி சேஷாத்ரி, ஷ்யாம் சேகர், பானு கோம்ஸ் போன்றோர் பின்னால் நிற்கிறார்கள். மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இவர்கள் செயல்படுகின்றனர். இவர்கள் சத்தமில்லாமல் ஆழமாக ஊடுருருவும் வேலையில் இறங்கியுள்ளனர். திரிபுராவிலும் இவர்கள் இப்படிச் செயல்பட்டு அடிமட்டத்தில் இடது சாரி கட்சிக்கு எதிரான அனைத்து சதி வேலைகளையும் செய்து மக்களைக் குழப்பி அங்கு பாஜக ஆட்சியில் அமர்ந்தது. தற்போது இவர்கள் தமிழகத்தைக் குறிவைத்துள்ளனராம்.


No comments:

Post a Comment