கேள்வி: நாராயணகுருவின் பணியைப் போற்றுமளவு கூட, 'ஆரிய எதிர்ப்பை' சன்மார்க்கம் மூலம் வலுப்படுத்திய வள்ளலாரின் பணியைப் போற்றாதிருப்பதேன்?
- தமிழறிவன், இணையம் வாயிலாக
பதில்: ஆமாம் உண்மைதான்! இதற்கு முன்பே, தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்கூட இதே கருத்தை - கேள்வியை முன்வைத்துள்ளனர். வங்கத்தில் இருந்து இராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் மூலம் இராமகிருஷ்ண மிஷன் பரப்பப்படும் அளவுக்கு, அவரைவிட பன்மடங்கு உயர்ந்து, ஆறாம் திருமுறையில் மிகப் பெரிய அறிவு வெளிச்சத்தைத் தானும் பெற்று, தரணிக்கும் உணர்த்திய வள்ளலாரின், ‘கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போகவேண்டும்; மதமென்ற ‘பேய்’ பிடியாதிருக்க வேண்டும்’ என்பனவற்றை உள்ளடக்கிய, நால்வருணக் கண்டனம் உள்பட, பலவற்றையும் பரப்பிடவும் வேண்டும்.
‘இராமலிங்கர் மிஷன்’ அமைத்து இதை உலக இயக்கமாக, சரியான கோணத்தில் காட்டவேண்டும். அவரது முற்போக்குக் கொள்கை காரணமாக வடலூரார் ஒழிக்கப்பட்டது போலவே, அவரது தொண்டும் அறிவுரைகளும் கூட இருட்டடிக்கப்படுகின்றன.
1930களிலேயே, அதாவது 90 ஆண்டுகளுக்கு முன்பே தந்தை பெரியார் - குடிஅரசு ஏட்டில் பரப்பினார்; ஒரு சிறு நூலாகக் கூட வந்துள்ளது; மீண்டும் செய்யலாம். அவரை ஒரு பக்தராக - மகானாக்கிக் காட்டுவதைவிட, மறுமலர்ச்சியாளர் என்றும், மதப்புரட்சி செய்த மகத்தான மாமனிதர் என்றும் நம் மக்களுக்குப் புரியவைக்கப்படல் வேண்டும்.
ஆறாம் திருமறையே முன்னிறுத்தப்படவேண்டும். கடைசியாக ஒருவரின் ஒப்புதல் வாக்குமூலம் போன்ற அரிய கருவூலம் அது!
கேள்வி: சமூக வலைதளங்களில் ‘ஊடகத் தமிழர்கள்’ மீதான ‘பார்ப்பன சங்கிகளின்’ தாக்குதல் எதைக் காட்டுகிறது? - ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி
பதில்: அவர்களிடம் உள்ள சொந்த சரக்கு - அறிவு சூன்யமே என்பதையும், அவர்களது தோல்வி மனப்பான்மையையும், விரக்தியின் வெளிப்பாட்டையும் காட்டுகிறது!
கேள்வி: நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்திய அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே! இனி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?
- சீ.இலட்சுமிபதி, தாம்பரம்.
பதில்: தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதலை, இடைவிடாமல் செய்யத் தவறக்கூடாது. அகில இந்திய அளவில் அதனைப் பற்றிய புரிதல் தொடங்கி விட்ட நிலையில், பணியைத் தொய்வின்றிச் செய்ய வேண்டும். எடுத்தவுடன் வெற்றி கிட்டாவிட்டாலும், வெற்றிக் கிட்டும் வரை போராடுவது தான் போர் வீரர்களின் பணி!
கேள்வி: தமிழக அரசியலில் புதிது புதிதாகப் பலரை பி.ஜே.பி களம் இறக்குகிறதே... பலன் உண்டா? - ப.ஜோதி, கீழக்கரை
பதில்: ‘எண்ணெய்ச் செலவே தவிர பிள்ளை பிழைக்காது!’.
கேள்வி: ஒரு வேளை 'ஆசுவ ஈகத்தை" (spirituality based on knowledge) பெரியார் தொட்டிருந்தால், 'ஆன்ம ஈகத்தை' (spirituality based on aanma) வைத்து ஆர்.எஸ்.எஸ்.சும், அன்றைய காங்கிரசும் அரசியல் நடத்த முடியாது போயிருக்கக் கூடுமோ?
- ஏ.ஜே.லிங்கேசுவரன், இணையம் வாயிலாக
பதில்: காணொலியில் இதற்கு விளக்கம் அளித்துவிட்டோம். ஆன்மீகம் என்பதே இல்லாத ‘ஆத்மா’வை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆர்.எஸ்.எஸ். தங்களின் ஆரியக் கலாச்சாரத்தினைப் புதுப்பிக்கவே ஹிந்து இராஷ்டிரம், பார்ப்பன வர்ணாசிரமம், சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்பு என பலவாறாக முயற்சிக்கிறது. இவைகளுக்கு பதிலாக, மாற்றாக, எந்த மத அடையாளமும் அமையவே முடியாது - பயன்படாது.
புத்தத்தையே விழுங்கி விட்டார்கள். ஆசீவகத்தை ஏற்கெனவே மறைத்து விட்டார்கள். அதே வழியைத்தான் மேலும் தீவிரமாக முன்னெடுப்பார்கள். பிறகு ‘நோயைவிட சிகிச்சை மோசம்‘ என்பதாகவே முடியக்கூடும்.
கேள்வி: புராண ஆபாசங்களைப் பொது வெளியில் வெளியிடுவது ‘சட்டப்படி குற்றம்’, ‘நீதிமன்ற தண்டனை’ என்றால், அந்த ‘ஆபாசக் குவியல்’களை எழுதியவர்களும், அதற்கு ’புனிதம்’ கற்பிப்பவர்களும் குற்றவாளிகள் இல்லையா? அவர்களை யார் தண்டிப்பது? - சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
பதில்: மக்கள் தண்டிப்பார்கள் - அடுத்த காட்சிக்கு காத்திருங்கள்.
கேள்வி: அரசுப் பள்ளிகளில் படித்து இன்று அரசுத்துறை அதிகாரிகளாகவும், பல துறைகளின் பிரபலங்களாகவும் உள்ளவர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை, அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது, இன்று அதிசய செய்தியாகி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் பரப்பரப்பாகி வருகிறதே? - மன்னை சித்து , மன்னார்குடி - 1.
பதில்: ‘புதுமையாக ஆகும் அளவுக்கு மற்றவர்கள் இம்முறையைப் பின்பற்றாததனாலேயே. இது ‘செய்தியாகி’ விளம்பர வெளிச்சம் தேடுகிறது!
கேள்வி: பெரியார் விமானப் பயணம் செய்தது உண்டா? எப்போது?
- தென்றல், ஆவடி
பதில்: உண்டு. பர்மாவில் - இன்றைய மியான்மரில் ரங்கோனிலிருந்து, மோல்மீன் என்ற வேறோர் ஊருக்கு தந்தை பெரியாரும், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரும் விமானம் மூலம் பயணம் செய்துள்ளனர் (8.12.1954) என ‘பர்மாவில் பெரியார்’ என்ற நூலில் கவிஞர் நாரா.நாச்சியப்பன் எழுதியுள்ளார்.
கேள்வி: ஓய்வு எடுக்க வாய்ப்புள்ள கொரோனா காலச் சூழலில் காணொலிக் கூட்டங்கள், நேரில் தோழர்களைச் சந்தித்துப் பேசுவது எப்படியான உணர்வைத் தருகிறது? - கவிப்பிரியன், திருத்துறைப்பூண்டி
பதில்: இக் கூட்டங்கள் எனக்கு முழு மன நிறைவைத் தருகின்றன. பேசுவது, அதற்கு ஆயத்தமாவது, தோழர்களை நேரில் சந்தித்த மன நிறைவைத் தருகிறது. சுமை அல்ல, சுகமே!
கேள்வி: சிறப்பு அந்தஸ்து ரத்து, மாநிலப் பிரிப்புக்கு எதிராக காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளும் இணைந்து விடுத்திருக்கும் கூட்டறிக்கை மத்திய அரசுக்கு அவர்களின் உணர்வைப் புரியவைக்குமா? - வி.அருமைநாதன், சூளகிரி
பதில்: ‘பாசிசம்‘ அவ்வளவு சீக்கிரத்தில் பாடம் கற்றுக் கொள்ளாது!
சிறப்புக் கேள்வி
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்,
ஆசிரியர், தமிழ்ப்பணி
கேள்வி: கடவுள் மறுப்புக் கொள்கை ஒன்றைத் தவிர்த்த, மற்ற அனைத்திலும் தந்தை பெரியாரைப் பின்பற்றும் என்னைப் போன்றவர்களை, திராவிட இயக்கத்தவர் பலர் ஒதுக்கிவிட்டார்கள். என் போன்ற பகுத்தறிவுப் பக்தர்களையும் கழகத்தில் இணைத்துக் கொண்டால் கழகத்துக்கும் நாட்டுக்கும் நலம் பயக்காதா?
பதில்: நன்றி சகோதரர் பெருங்கவிக்கோ அவர்களே!
தங்களைத் திராவிட இயக்கத்தவர்களால் ஒருபோதும் ஒதுக்க முடியாது. காரணம் தாங்கள் ஆற்றும் தமிழ்த் தொண்டு திராவிடர் இயக்கப் பணியின் ஒரு முக்கிய கூறுதானே! பகுத்தறிவு-பக்தர்கள் - ‘முரண்தொடை‘ என்றாலும் தங்களைப் போன்றவர்களை, எப்போதும் நாம் இணைத்தே ஒரு குடும்பமாக கருதியே வருகிறோம். அஞ்சற்க!
No comments:
Post a Comment