ஓணம் பண்டிகையை - வாமன ஜெயந்தியாக்கிக் கொண்டாடச் சொன்ன பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டம் கேரளத்தில் பலிக்கவில்லை!
ஆரியம், திராவிடப் பண்பாட்டை - அதன் தளநாயகர்களை அழித்த பின்னணிதான் ஓணம் பண்டிகையின் உள்ளார்ந்த தத் துவம் என்றும், ஓணம் பண்டிகையை - வாமன ஜெயந்தியாக்கிக் கொண்டாடச் சொன்ன பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டம் கேரளத்தில் பலிக்கவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கேரளத்துச் சகோதர, சகோதரிகள் கொண் டாடும் ஓணம் திருவிழா - மாவலிச் சக்ரவர்த் தியைக் கொண்டாடும் ஓர் பண்டிகை - விழாவாகும்.
ஓணம் பண்டிகையின்
உள்ளார்ந்த தத்துவம்
இங்கே எப்படி நரகாசுரனை - கிருஷ்ணா வதாரம் எடுத்து மகாவிஷ்ணு கொன்று வெற்றி பெற்றதை, அந்த நரகாசுரனே கொண்டாடச் சொன்னான் என்றெல்லாம் ‘தீபாவளி' புராணக் கட்டுக்கதையை கட்டவிழ்த்து, ஆரியம் திரா விடப் பண்பாட்டையும் அதன் தளநாயகர்களாக இருந்தவர்களையும் அழித்த பின்னணியோ, அதேபோன்றதே ஓணம் என்ற பண்டிகையின் உள்ளார்ந்த தத்துவமும்.
மாவலி மன்னன் மிகச் சிறப்பாக ஆண்ட - மக்களை மகிழ்ச்சியோடு வைத்திருந்த மன்னன் - அவனை ஆரியம் சூழ்ச்சியில் வென்ற கதைதான் மகாவிஷ்ணு வாமன அவதாரம் என்ற குள்ளப் பார்ப்பான் உருவில் வந்து மூன்றடி மண் கேட்டு, பிறகு அளக்கச் சொன்னபோது, வானம், பூமியை இரண்டடி களால் அளந்து மூன்றாவது அடியை அந்த மன்னன் தலைமீது வைத்து அவனை அழித் ததாகவும், பிறகு அவன் உணர்ந்து ஓணம் கொண்டாடச் சொன்னார் என்று, ‘தீபாவளி கதை' போல சொல்லப்பட்டாலும், அடிப்படை யில் இது ஆரியப் பண்பாடு; திராவிடர்களை வீரத்தால் அல்லாது சூழ்ச்சியால் வென்ற நாளே என்பதை, அம்மக்களில் ஒரு சாரார் புரிந்து வருகின்றனர்.
‘‘சத்திய சோதக் சமாஜ்'' அமைப்பின்மூலம் விழிப்புணர்வு!
மராத்திய சமூகப் புரட்சியாளர் ஜோதி பாபூலே அவர்கள் இந்த 10 அவதாரக் கதை களையும் கடல்வழியேயும், தரை வழியேயும் பாரப்பனரல்லாத சூத்திர, ஆதிசூத்திர மக்களை படையெடுத்து சூது, சூழ்ச்சி, தந்தி ரங்களால் வென்றது என்று 200 ஆண்டு களுக்குமுன்பே, அங்கே தந்தை பெரியார் போன்று அறிவுறுத்தி, இந்தப் புராணக் கதை களின் உள்ளார்ந்த தத்துவங்களை அந்த மக் களுக்கு அக்கால சுயமரியாதை இயக்கமாகிய ‘‘சத்திய சோதக் சமாஜ்'' மூலம் அறிவுறுத்தி விழிப்புணர்வு கொள்ளச் செய்தார்.
மாவலி மன்னன் திரும்ப அச்சூழ்ச்சியிலி ருந்து மீண்டு வந்ததைக் கொண்டாடும் திரு விழாவை முன்பு மிக விமரிசையாக, மராத்திய கிராமம், பட்டிதொட்டிகளில் எல்லாம், பண் பாட்டு மீட்டுருவாக்கிக் கொண்டாடவும் செய்தார்.
நாம் பொங்கல் திராவிடர் நாளைக் கொண் டாடி மகிழ்வதைப்போல ஒரு மறுமலர்ச்சி விழா.
அதே தத்துவம்தான் ஓணத்தின் உண்மைத் தத்துவம். முத்தமிழ் அறிஞர் கலைஞர்கூட இதுபற்றி சில ஆண்டுகளுக்குமுன் விளக்கி எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமித்ஷா, பா.ஜ.க.வை கேரளத்தில் காலூன்ற வைக்க ஓணத்தை வாமன ஜெயந்தி ஆக்கிக் கொண்டாடச் சொன்ன சூழ்ச்சித் திட்டத்தைக் கேரளத்தவர்கள் புரிந்து, அதனை முறியடித்தார்கள்.
எனவே, இந்தப் பண்பாட்டுப் படையெடுப் பைப்பற்றி கேரள முற்போக்காளர்கள் மேலும் சிறப்புடன் ‘ஓணம்' பண்டிகைபற்றி விளக்க வேண்டியது அவசியம்!
கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.8.2020
No comments:
Post a Comment