சென்னை, ஜூலை 31, திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செய லாளர்கள்.நாடாளுமன்ற உறுப்பினர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப் பினர்கள் கூட்டம் நேற்று (30.7.2020) மாலை, காணொலிக் காட்சி வழியாக நடைபெற்றது.
கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலில் சேர்த்திடுக!
“புதிய கல்விக் கொள்கை 2019” குறித்து -திமு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 14.7.2019 அன்று வல்லுநர்கள் குழு அமைத்து அறிக்கை பெற்று - திமு கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சரி டம் 28.7.2019 அன்று அளித்து, “அர சியல் சட்டத்திற்கு எதிரான, மாண வர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான 2019 வரைவு தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடி யாது. அதை திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற அமர்வு இல்லாத - கரோனா பேரிடர் அனைத்து மாநிலங்களிலும் ஊடுருவி மக்களை வதைத்துவரும் இந்த நேரத்தில் - மக்கள் பிரதிநிதிகளின் விவாதத்திற்கே இடம் அளிக்காமல் - இக்கொள்கை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு எதிரானது.
ஒட்டுமொத்தத் தமிழக மக்கள் கொண்டுள்ள எண்ணத்தின் எதி ரொலியாக திராவிட முன்னேற்றக் கழகம் காட்டிய வலிமையான எதிர்ப் பினை அடுத்து, “இந்தி கட்டாயம் அல்ல” என்று புதிய கல்விக் கொள்கை - 2020-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால், “மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை”, தமிழகத் தில் அறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடை முறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோ தமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை, கழக மாவட்டச் செயலாளர்கள், நாடாளு மன்ற - மாநிலங்களவை - சட்டப் பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஆணித்தரமாகவும், கடுமை யாகவும் எதிர்த்து, நிராகரிக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய, “1 முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்மொழி கட்டாயப் பாடம்” என்ற “தமிழ் கற்பதற்கான சட்டம் 2006” அடிப் படையில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை அகில இந்திய அளவில் தாய் மொழிக் கல்வி ஏற்றுக் கொள் ளப்பட்டுள்ளது - கல்விக் கொள்கை யில் - கல்வி முன்னேற்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொலை நோக்குப் பார்வைக்கு கிடைத்த வெற்றி! அதேநேரத்தில் சமஸ்கிருத மொழிக்கு மட்டும் கொடுக்கப்பட்டி ருக்கும் முக்கியத்துவம், ஏனைய இந்திய மொழிகள் மீது கொண்டுள்ள மாற்றாந்தாய் மனப்பான்மையை உணர்த்துகிறது. ஆனால், ஊட்டச் சத்தையும், ஆரோக்கியத்தையும் இணைத்து வழங்கப்பட வேண்டிய மழலையர் பருவத்தில் முறைசார்ந்த கல்வி, 3,5,8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு, தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கும் ‘பிளஸ் டூ’ கல்விமுறையில் மாற்றம், தமிழகத்தில் மக்களால் புறக்கணிக் கப்பட்ட ‘குலக்கல்வி’த் திட்டத்தின் மறு வடிவமான தொழிற்கல்வி, இருக்கின்ற பள்ளிகளை மூட வழி வகுக்கும் பள்ளி வளாகங்கள், ஆசிரி யர் தேர்வு, ஆசிரியர் பணி குறித்த தர நிர்ணயம் உள்ளிட்டவை, மாநிலங்க ளிடம் எஞ்சியிருக்கும் கல்வி உரி மையிலும் தேவையே இல்லாமல் தலையிட்டு - மத்திய அரசைத் தவிர மாநிலங்களுக்கு கல்விச் சீர்திருத்தம் பற்றி எதுவுமே தெரியாது என்று நினைப்பது மேலாதிக்கப் போக்கா கும்.
மாணவச் சமுதாயத்திற்கு இளம் வயதிலேயே தலையில் தூக்கமுடியாத சுமையையும், மனதில் தாங்கவியலாத அழுத்தத்தையும் ஒருசேர ஏற்படுத் துவது - குழந்தைகளின் உரிமையை அப்பட்டமாக மீறும் அநியாயச் செயலாகும்.
உயர்கல்வியில், தன்னாட்சி உரிமை பெற்ற தமிழ்ச் செம்மொழி மத்திய நிறுவனத்தை பல்கலைக்கழ கங்களுடன் இணைப்பது, மாநிலங் களில் உள்ள பல்கலைக்கழகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கு உயர் கல்வி ஆணையம் அமைப்பது, கலை மற்றும் அறிவியல் பட்டயப் படிப்பு களில் சேரவும் நுழைவுத் தேர்வு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது- மாநிலங்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய பாடங்களை தேசிய அளவில் வகுப்பது ஆகியவை மாநிலங்களைப் புறக்கணித்து, கல்வியை மய்யப்படுத்தி வைக்கும் பின்னடைவாகும்.
“மழலைக் கல்வியைக் கூட மத்திய அரசு முடிவு செய்யும்” என்கிற இந்த தேசியக் கல்விக் கொள்கை; திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த பரிந் துரைகளுக்கு எதிராக இருக்கிறது. ஆகவே, பொதுப்பட்டியலில் உள்ள கல்வி, மீண்டும் மாநிலப் பட்டிய லுக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை இந்தக் கூட்டம் மீண்டும் வலியுறுத்து கிறது.
ஆகவே நாடாளுமன்றம் கூடி - கூட்டாட்சித் தத்துவம், சமூகநீதி, சமத்துவம் ஆகியவை குறித்து அனைத்து மாநிலக் கட்சிகளும் விவாதிக்கும் வரை - அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள “புதிய தேசியக் கொள்கை-2020”-அய் நடைமுறைப் படுத்தக் கூடாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.
மத்திய அமைச்சரவையால் 29.7.2020 அன்று ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ள- “புதிய கல்விக் கொள்கை-2020”இன் இறுதி வடிவத்தை உடன டியாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என்றும்; “தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையே தொடர்ந்து கடைப் பிடிக்கப்படும். மும்மொழிக் கொள் கைக்கு இடமில்லை” என்றும்; “சமூக நீதி, மாநில உரிமைகள் ஆகியவற்றைப் புறக்கணித்து, ஒருதலைப் பட்சமான தாக அமைந்துள்ள இந்த கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்றும்; அ.தி.மு.க. அரசு தீர்மான மாக உடனே அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
கே.எஸ். அழகிரி கண்டனம்
“இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களிடையே மதம், $£தியின் கார ணமாக கல்வியிலும், சமூக வாழ்க்கை முறையிலும் ஏற்றத் தாழ்வுகள் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகின்றன. அதனால் அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர இந்தியாவில் அனைவ ருக்கும் கல்வி கொடுக்க வேண்டு மென்று அரசியலமைப்புச் சட்டத் தில் உள்ள வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டு, அதை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பல கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன.
மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 6 முதல் 14 வயது உள்ள அனைவருக்கும் கல்வி பெறுகிற உரிமை சட்டமாக நிறைவேற்றப் பட்டது. நகர்ப்புறங்களில் கிடைக்கிற தரமான கல்வி கிராமப்புறங்களில் கிடைக்கவில்லை. கல்வி வணிக மயமாகிவிட்ட நிலையில் தரமான கல்வி ஏழை, எளியவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கிடைக்கவில்லை.
அரசுப் பள்ளிகள் மூலமாகத்தான் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும். அதை வழங்குவ தற்கு புதிய கல்விக் கொள்கையில் எந்தவிதமான வாய்ப்பும் இல்லை. அதேபோல, உயர் கல்வியில் அனைத்து விதமான பட்டப் படிப் புகளுக்கும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நீட் தேர்வு காரண மாக தமிழக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். இதே நிலைதான் உயர் கல்வித்துறையிலும் நுழைவுத் தேர்வு வைத்தால் ஏற்படப் போகிறது.
நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்த கல்விக் கொள்கைகளுக்கு முற்றிலும் புறம்பாக வகுப்புவாத கொள்கைகளைப் புகுத்தி மதச்சார் பற்ற கொள்கைக்கு உலை வைக்கும் நோக்கத்துடன் புதிய கல்விக் கொள் கையை பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது.
இந்தக் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள முற்போக்குச் சிந்தனை கொண்ட அறிஞர் பெரு மக்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
தொடக்கத்தில் மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந் தியைக் கட்டாயப் பாடமாக திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எதிர்ப்பு கண்டு அஞ்சிய மத்திய அரசு, மூன்றாவது மொழி என்ன என்பதை மாநில அரசுகளே முடி வெடுக்கலாம் எனக் கொள்கையை மாற்றிக் கொண்டு பின்வாங்கியது.
மும்மொழிக் கொள்கையின்படி சமஸ்கிருதம் அனைத்துப் பள்ளி மற்றும் உயர் படிப்புகளில் விருப்பப் பாடமாக சேர்க்கப்பட்டு ஊக்குவிக் கப்பட இருக்கிறது. மற்ற செம் மொழிகளும் இந்திய இலக்கியங்களும் விருப்பப் பாடங்களாக சேர்க்கப் பட்டுள்ளன. இதில் மத்திய அரசின் பாரபட்சம் வெளிப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு மாநிலங்களிடையே நிலவும் பன்முகக் கலாச்சாரம் சிதையப் போகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் மூன் றாவது மொழி சமஸ்கிருத மொழியா? இந்தி மொழியா? அல்லது வேறு மொழியா என்பதை முடிவு செய்ய வேண்டிய இடத்தில் தமிழக அரசு உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு பன்முகக் கலாச்சாரத்தை போற்றி வருகிற இந்திய நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்” என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தி, சமஸ்கிருத மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் மக்களிடையே பிளவு மனப்பான்மைதான் வளரும்.
சமீபத்தில் மத்திய - மாநில பாஜக அரசுகள் பாடத்திட்டங்களிலிருந்து மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட் டம், குடிமக்கள் உரிமைகள் மற்றும் விடுதலைப் போராட்ட மாவீரர் களான திப்பு சுல்தான் போன்றவர் களின் வரலாற்றுப் பாடங்களை நீக்குகிற முடிவையும் எடுத்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பார்க்கிறபோது, புதிய கல்விக் கொள்கையை காவி மயமாக்கும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் கடுகளவு விவாதம் கூட நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் மாதத்தில் நாடாளு மன்றம் கூடுவதற்கு வாய்ப்பு இருக் கிறது. அப்போது இதுகுறித்து விரி வாக விவாதித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிந்து பாஜக அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவசரச் சட்டத்தின் மூலம் ஆட்சி நடத்துகின்ற நரேந்திர மோடி அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இல்லை.
எனவே, கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் போக்காமல், வகுப்புவாதக் கொள்கைகளைப் புகுத்தாமல் அரசியலமைப்புச் சட் டப்படி மக்களுக்கு இருக்கிற உரி மைகளைப் போற்றிடும் வகையில் புதிய கல்விக் கொள்கை இல்லை. இந்தக் கொள்கை நடைமுறைப்படுத் தப்பட்டால் 136 கோடி மக்களும் மதரீதியாகப் பிளவுபடுத்துகிற வகையில் கல்வி முறை புகுத்தப்பட்டு காவிமயமாவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றன.
மக்கள் விரோத புதிய கல்விக் கொள்கையை உடனடியாக நிறை வேற்றாமல் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடத்துவதோடு, அனைத்து மாநில அரசுகளோடு கலந்து பேசி நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு காங்கி ரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment