* புதிய தேசியக் கல்விக் கொள்கையா?
* பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனத் திட்டமா?
* குருகுலக் கல்வியாம் - தொழிற்கல்வியாம் - குலக்கல்வித் திட்டம் புதுப்பிக்கப்படுவதா?
* மும்மொழித் திட்டம் என்ற பெயரால் சமஸ்கிருதம் நுழைவதா?
மாநில அரசைக் கலக்காமலேயே தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை மாநில அரசுகள் எதிர்க்கவேண்டும்!
மத்திய அரசு திணிக்கும் தேசியக் கல்வித் திட்டம் என்பது பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ்.சின் மனுதர்ம திட்டமே - மாநில அரசுகளைக் கலக்காமல் தன்னிச்சையாகத் திணிக் கப்படும் பார்ப்பனிய - பனியா திட்டத்தை வீழ்த்திட அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்துப் போராடும் பணியில் திராவிடர் கழகம் ஈடுபடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2015 ஜனவரியில் புதிய கல்விக் கொள்கை ஒன்றினை உருவாக்க முனைந்தது. அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிர மணியன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு குழு 2016 மே மாதம் தன் அறிக்கையை மத்திய அரசிடம் ஒப்படைத்தது.
அதனைத் தொடர்ந்து, ‘இஸ்ரோ' அமைப்பின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரெங்கன் தலைமையில் 2017 ஜூன் மாதத்தில் மற்றும் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தன் அறிக்கையை மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்ச ரிடம் 2019 மே 31 ஆம் தேதி அளித்தது.
மக்கள் கருத்தென்ன?
நாடு முழுவதும் இந்தப் புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்தினைப் பொது மக்களிடமிருந்து வரவேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்குக் காலக்கெடு 2019 ஜூலை 31 வரையாகும்.
அதன்படி இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக ஆலோச னைகள் வந்து சேர்ந்ததாக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், மத்திய அமைச்சரவை நேற்று (29.7.2020) இந்தப் புதிய கல்விக் கொள்கைக்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
புதிய கல்விக் கொள்கையானது ஆரம்ப நிலைக் கல்வி, தொடக்க நிலைக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி என்று மாணவர்களை 4 முறையில் வகைப்படுத்துகிறது.
தற்போது 6 வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி என்று இருப்பது 3 வயது முதல் 18 வயது வரை என மாற்றப் படும்.
பள்ளிக்குச் செல்லாத 2 கோடிக் குழந்தைகளுக்கு மீண்டும் கல்வி வழங்கப்படும்.
புதிய 5+3+3+4 பள்ளிப் பாடத் திட்டம் 12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பு மற்றும் 3 ஆண்டு அங்கன்வாடி, மழலையர் பள்ளிப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.
6 ஆம் வகுப்பில் இருந்தே தொழிற்கல்வி தொடங்கப்படும்.
5 ஆம் வகுப்பு வரையில் தாய்மொழி, பிராந்திய மொழியில் பயிற்றுவிக்கப்படும்.
பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் மும்மொழித் திட்டம் வழங்கப்படுகிறது.
3, 5, 8 ஆம் வகுப்புகளில் அனைத்து மாணவர்களும், உரிய ஆணையம் நடத்தும் பள்ளித் தேர்வுகளை எழுது வார்கள்.
ஒவ்வொரு மாநிலமும், மாவட்டமும், பகல் நேர உறை விடப் பள்ளியாக, ‘பால பவன்கள்' அமைக்க ஊக்குவிக்கப்படும்.
தரம் குறைந்த ஆசிரியர் கல்வி நிறுவனங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டிஜிட்டல் கல்வி முறை விரிவுப்படுத்தப்படும்.
2030-ஆம் ஆண்டிற்குள் கற்பித்தலுக்கான குறைபட்ச பட்டத் தகுதி நான்கு வருட பி.எட். பட்டமாக இருக்கும்.
எம்.பில் படிப்பு ரத்து செய்யப்படும்.
பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் கலை, அறிவியல் பாடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
கல்விக்கு ஜி.டி.பி.யில் 6 சதவிகிதம் நிதி கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடுபற்றியும், புதிய கல்விக் கொள்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்விக் கொள்கை குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) சீதாராம் யெச்சூரி குறிப்பிடுகையில், ‘‘அதிமுக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தை நாடாளு மன்றத்தில் வைத்து விவாதம் நடத்தாமல், அமைச்சரவைக் கூடி ஒப்புதல் வழங்கியிருப்பது ஏற்கத்தக்கதல்ல'' என்று கூறியிருப்பது முக்கியமான கருத்தாகும்.
இரண்டு லட்சம் பேர் கருத்துத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கூறிய கருத்துகளின் திரட்சி என்ன என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும்.
மாநில அரசின்
கருத்துக் கேட்கப்படாதது ஏன்?
மாநில அரசுகளின் கருத்து என்ன என்பதுதான் மிக மிக முக்கியமாகும். கல்வி என்பது வெறும் மத்திய அரசை மட்டும் சார்ந்ததல்ல. மாநில அரசும், மத்திய அரசும் இணைந்த ஒத்திசைவுப் பட்டியலாகும். அப்படி இருக்கும்போது, மிக முக்கியத்துவம் வாய்ந்த - கொள்கை முடிவு எடுக்கப்பட வேண்டிய அவசியமான ஒரு திட்டம்பற்றி மாநில அரசின் கருத்தைக் கேட்காமல், ஒரு சார்பாக மத்திய அரசு முடிவெடுக்கலாமா? முடிவுதான் எடுக்க முடியுமா?
கரோனா காலகட்டத்தைப் பயன்படுத்தித் தான்தோன்றித் தனமாக இப்படியொரு முடிவை எடுத்திருப்பது - 130 கோடி மக்களின் கண்டனத்துக்கு உரியதாகும்.
இந்தக் கல்வித் திட்டத்தைப்பற்றிக் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை வைத்துக் கொண்டு விவாதிக்கப் பட்டதாக ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்' ஏடு தெரிவிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவே!
‘பூனைக்குட்டி வெளியில் வந்தது' என்று சொல்வதுபோல - ஆர்.எஸ்.எஸின் நிகழ்ச்சி நிரல் ‘அஜெண்டா!' இப்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதுதான் இதன்மூலம் பெறப்படுகிறது.
1998 இல் வாஜ்பேயி காலத்தில்
கொண்டுவரப்பட்ட திட்டம்!
1998 இல் அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது டில்லியில் நடைபெற்ற மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிபுணர் சிட்டியங்லா என்பவ ரால் தயாரிக்கப்பட்ட ஒரு கல்வித் திட்டம், மாநில கல்வி அமைச்சர்களால் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்பட்டது.
அம்மாநாட்டில் தமிழக அரசு சார்பாக - அன்றைய கல்வி அமைச்சர் நமது இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் பங்கேற்று எதிர்ப்புக் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்பொழுது அதே ஆர்.எஸ்.எஸ். கல்வித் திட்டம் புது முகமூடி அணிந்துகொண்டு இந்தியா முழுவதும் உள்ளே நுழைகிறது.
1). மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்கவில்லை.
இத்திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு அண்ணா பெயரில் உள்ள அரசு தன் கடுமையான எதிர்ப்பினைப் பிரகடனப்படுத்த வேண்டும்.
2). தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது சட்டப்படியான நிலைப்பாடு; இந்த நிலையில், மூன்றாவது மொழியைத் திணிப்பது ஏற்கத்தக்கதல்ல - முதற்கட்டத்திலேயே நிராகரிக்கப்படவேண்டிய ஒன்று.
மூன்றாவது மொழி
சமஸ்கிருதமா?
மூன்றாவது மொழி என்று சொல்லி - ஆரியக் கலாச்சார அடையாளமான சமஸ்கிருதத்தை இலாவகமாகத் திணிப்பதை ஏற்பது என்பது எந்த காலகட்டத்திலும் தமிழ்நாட்டில் இல்லவே இல்லை.
3). 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய ஆணையம் தேர்வு நடத்தும் என்பதை எந்தக் கல்வியாளர்களும் ஏற்க மாட்டார்கள். அய்ந்தாம் வகுப்பு வரை தேர்வே கிடையாது என்ற நிலையில், இப்படி மூன்றாம் வகுப்பிலிருந்தே தனி ஆணையம் தேர்வு நடத்தும் என்பது - கல்வியின்மீது இளம் பிஞ்சுகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் விபரீதத் திட்டமாகும்.
4). இனி, கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., போன்ற இளங்கலை, விஞ்ஞானப் பட்டப் படிப்புக்குக்கூட என்.டி.ஏ. என்ற ஓர் அமைப்பை அகில இந்திய அளவில் உருவாக்கி அதன்மூலம் நுழைவுத் தேர்வை நடத்தித் தேர்வு செய்யப்படும்.
நுழைவுத் தேர்வே கூடாது, ‘நீட்' அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்ற மக்கள் கருத்து ஓங்கி ஒலித்துக் கொண்டி ருக்கும் இந்தக் காலகட்டத்தில், ‘ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பதுபோல, அடாவடித்தனமாக இப்படியொரு முறையைத் திணிப்பது தலைமுறை தலைமுறையாகக் கல்வி வாசனை என்றால் என்னவென்றே அறியாத மக்களின் குடும்பத்திலிருந்து முதல் தலைமுறையாக வரும் இருபால் மாணவர்கள் அதிகபட்சமாக 12 ஆம் வகுப்போடு தங்கள் கதையை முடித்துக் கொள்ளவேண்டும் என்ற நோக்கம் - சதி இதன் பின்னணியில் பதுங்கிக் கிடக்கிறது.
குருகுலக் கல்வி என்பது என்ன?
குருகுலக் கல்வி , ஆறாம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்வி என்பது எல்லாம் பச்சையான வருணாசிரம - பார்ப்பனக் கலாச்சார - மனுதர்மத் திட்டம் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.
பார்ப்பனர்கள் அதிகாரத்தில் வரும்பொழுதெல்லாம் - பார்ப்பனர் அல்லாதார் குறிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் தப்பித் தவறி படித்துவிடக் கூடாது என்பதிலேயே குறியாக, கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்பதற்கு இந்த 2020 ஆம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கையே எடுத்துக்காட்டு! (1952 இல் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் காரணமாக, மக்கள் எதிர்ப்பில் ஆட்சியை விட்டே அவர் விலகி ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது என்பது நினைவிருக்கட்டும்).
கல்வித் திட்டத்தைத்
தயாரிப்பவர்கள் யார்?
கல்வித் திட்டத்தைத் தயாரிப்பது என்.சி.இ.ஆர்.டி. என்ற அமைப்பாம். மாநிலங்களில் கல்வியாளர்களே கிடையாதா? இந்தியா முழுவதும் ஒரே கல்வி என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதைச் செயல்படுத்தத் தகுதியுள்ள ஒரே அமைப்பு இந்த என்.சி.இ.ஆர்.டி.தானாம்!
இந்திய வரலாற்றுத் துறைகளிலும் சரி, என்.சி.இ.ஆர்.டி. என்ற அமைப்பும் சரி - அதில் இடம்பெற்றுள்ளவர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களும், ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்களும்தான். மத்திய அரசு உருவாக்கிய கல்வியாளர்கள் குழுவில்கூட எந்தக் கல்வியாளரும் பெரும் பாலும் இடம்பெறவில்லை என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
நுழைவுத் தேர்வு, ‘நீட்' தேர்வு என்பது எல்லாம் கோச்சிங் சென்டர் நடத்தும் கார்ப்பரேட்டுகளை மேலும் கொள்ளை யடிக்கச் செய்யும் ஏற்பாடுதான். இளங்கலைப் பட்டப் படிப்புக்கே நுழைவுத் தேர்வு என்றால், இதன் பொருள் இதுதானே!
சமூகநீதி வெளிச்சமும், சமூகநீதிக்கான உரிமைக் குரலும் இனி நாடெங்கும் பரவும், கேட்கும் என்பதும் உறுதி! உறுதி!!
புதை குழிக்கு அனுப்பிட
ஒன்று திரள்வோம்!
பச்சையான பார்ப்பனீயப் பாசிச ஆட்சி என்பதற்கு இந்தக் கல்வித் திட்டத்தைவிட வேறு சாட்சியம் தேவையில்லை.
அனைத்துக் கட்சியினரையும், அமைப்பினரையும், கல்வியாளர்களையும், பெற்றோர்களையும் ஒருங்கிணைத்து இந்த புதிய கல்வித் திட்டத்தைப் புதைகுழிக்கு அனுப்பும் பணியில் திராவிடர் கழகம் முன்வரிசையில் நிற்கும். அதற்கான பணி உடனடியாக மேற்கொள்ளப்படும் என்பதைத் தெரி வித்துக் கொள்கிறோம்.
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
30.7.2020
No comments:
Post a Comment