மத்திய அரசின் புதிய தேசியக் கொள்கை என்னும் பேராபத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

மத்திய அரசின் புதிய தேசியக் கொள்கை என்னும் பேராபத்து!

தமிழ்நாடு (அ.தி.மு.க.) அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது?


அண்ணா பெயரிலுள்ள கட்சி - அண்ணாவின் இருமொழிக் கொள்கையைக் கைவிடப் போகிறதா?



மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை என்னும் பேராபத்து! தமிழ்நாடு (அ.தி.மு.க.) அரசு என்ன முடிவெடுக்கப் போகிறது? அண்ணா பெயரிலுள்ள கட்சி - அண்ணாவின் இருமொழிக் கொள்கையைக் கைவிடப் போகிறதா? என்று  கேள்வி எழுப்பி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை வருமாறு:


மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை தீமைகள், ஆபத்துகள், மாநில உரிமைப் பறிப்புகள், குலக்கல்வியாக உருவெடுக்கக் கூடிய பேரபாயம், இடை நிற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ள கொடுமை - ஏழைகளுக்கும், கிராமப்புற மாணவர் களுக்கும் - பட்டப்படிப்பு இனி எளிதில் எட்டாக்கனி என்பது போன்ற பலவற்றை உள்ளடக்கியுள்ள திட்டமாகும். இதனை மாநில அரசுகள், குறிப்பாக தமிழ்நாடு போன்ற ஒடுக்கப்பட்டோர் கல்விக்காக அரும் பாடுபட்ட திராவிடர் இயக்கம், கல்வி வள்ளல் காமராசர் ஆட்சி - இவற்றால் சாதனை படைத்துத் திராவிடர் ஆட்சிகளில் அது மேலும் பெருகி வருவதைத் தடுக்கும் திட்டம் என்பதை ஆழ்ந்து பரிசீலித்தாலா யொழிய பலருக்கு இது எளிதில் புரியாது.


மேலெழுந்தவாரியாக நுனிப்புல் மேய் பவர்களுக்கு இது மேலான திட்டமாகவே தோன்றக்கூடும்.


நமது வேண்டுகோள்!


தமிழ்நாடு அரசும் முதல்வரும், அமைச் சரவையும் இன்னும் சில நாட்களில் இதுபற்றி முடிவு எடுக்கப் போவதாகச் செய்தி கள் வந்துள்ளன! அவர்கள் ஆழ்ந்து பரிசீலித்து, தெளிவான, துணிவான முடிவு எடுக்கத் தவறக்கூடாது என்பது நமது வேண்டுகோள் ஆகும்!


பெரிதும் ஆர்.எஸ்.எஸ். அஜெண்டா வின் நிறைவேற்றம்தான் மத்திய பா.ஜ.க. அரசின் இப் புதிய தேசியக் கல்விக் கொள்கை என்பது ஆழ்ந்து அதைப் பரிசீலிக்கும் எவருக்கும் புரியும்.


அது ஒருபுறம் இருக்கட்டும்.


1.டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைந்த குழுவானாலும் சரி, அதற்குப் பிறகு மாற்றியமைக்கப்பட்ட கஸ்தூரி ரெங்கன் குழுவானாலும் சரி, அக்குழுக் களில் கல்வி நிபுணர்கள் யாராவது இடம்பெற்றார்களா?


இக்கேள்வியை எழுப்பி, பல கல்வி நிபுணர்கள் பிறகு அனுப்பிய திருத்தங்கள், பரிந்துரைகள், மாற்றங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு மறு ஆய்வு செய்து உருவாக்கப்பட்டதா  மத்திய அமைச்சரவை ஒப்புக்கொண்ட இந்த அறிக்கை?


மத்திய அரசின் செயல்பாடு ஏற்கத்தக்கதா?


மாநிலங்களின் அதிகாரமாகிய ‘ஒத் திசைவுப் பட்டியலில்தான்' (Concurrent List) கல்வி உள்ளது என்பதை அறவே புறந்தள்ளிவிட்டு, கல்வி ஏதோ யூனியன் லிஸ்ட்டுக்கு - மத்திய அரசின் ஏகபோகத் திற்கே மாற்றப்பட்டதுபோல் செயல்படுவது ஏற்கத்தக்கதா?



  1. நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்படாமலேயே இதற்கு ஒப்புதல் அளிப்பது - அதுவும் கரோனா தொற்று ஊரடங்கு, நாடாளுமன்றம் கூடாமலிருக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இப்படி முடிவு செய்வது - மக்கள் விரோத, ஜனநாயக நடைமுறைக்கு விரோத நடவடிக்கை அல்லவா?

  2. மாநிலங்களின் ஒப்புதலை - ஒத்தி சைவை இத்திட்டம் பெற்றால்தானே நடை முறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்த வாய்ப்பு ஏற்படும்.


மூத்த கல்வியாளர்


எஸ்.எஸ்.இராஜகோபாலன் கருத்தை அலட்சியப்படுத்திவிட முடியாது!



  1. இதே பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மூத்த முதுபெரும் முதிர்ச்சியான கல்வி யாளர் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் இக்கல்வித் திட்டத்தைப்பற்றி கூறியுள்ள கருத்து அலட்சியப்படுத்திவிடக் கூடிய கருத்தா?


நேற்றைய ‘விடுதலை'யில் (30.7.2020) நாம் விடுத்த அறிக்கை, இது குலதர்மக் கல்வியை மீண்டும் லாவகமாக - மறை முகமாக புகுத்தும் என்று கூறியுள்ளதை அவர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டு, எச்சரிக்கை மணி அடித்துள்ளாரே! அதை தமிழக அரசோ, மத்திய அரசோ, மக்களோ புறந்தள்ளிவிட முடியுமா?



  1. எஸ்.எஸ்.எல்.சி. என்ற பத்தாவது வகுப்புச் சான்றிதழிலேயே - பிளஸ் டூ வருவதற்கு முன்புகூட ‘‘Eligible for College Course'' ‘‘கல்லூரியில் சேர்ந்து படிப்பதற் கான சான்றிதழ்'' என்பதுபோல குறிப் பிட்டிருக்கும். இப் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்தில் அதனை அடியோடு மறுக்கும் வகையில், புகுத்தப்படும் மாற்றம் அமைந்துள்ளது.


இதனை மூத்த கல்வியாளர் திரு.எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர்கள் (அவர் அரசியல்வாதியோ, கட்சிக்காரரோ அல்ல; இன்னும் கேட்டால், ஜாதி உணர்ச்சிக்கு அப்பாற்பட்ட முற்போக்கு உயர்ஜாதிக்காரர்) கூறுவது என்ன?


‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 12 ஆண்டு பள்ளிக் கல்வி சிறப்புற நடைபெற்று வருகின்றது. சிறு கிராமத்திலுள்ளவர்க்கும், உயர்கல்வி செல்ல வாய்ப்புத் தரப்பட் டுள்ளது. இப்பொழுது அதனை 11 ஆண் டாகக் குறைத்தது பிற்போக்கான செயல்.


பட்டப்படிப்பு 4 ஆண்டுகளுக்குக் குறையாது இருக்குமாதலால், கல்விச் செலவு அதிகரிக்கும். 12 ஆம் வகுப்புவரை இலவசக் கல்வி பெற்றுவரும் மாணவர் களுக்குக் கூடுதல் செலவாகும். பட்டப் படிப்பும் கல்வி மறுப்பிற்கு உதவும்.''


அது மட்டுமா? ‘நீட்' தேர்வுக்கு எதிரான சத்துள்ள பல வாதங்களுக்கு மத்திய அரசால் பதிலளிக்க முடியாத நிலையில், எல்லா பட்டப் படிப்பிற்கும் நுழைவுத் தேர்வு நடத்தித்தான் மேலே படிக்க முடியும் என்பது ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், கிராமப்புற மாணவர்களுக்கு கதவடைத்து, பட்டப் படிப்பை படிக்க முடியாமல் செய்யும் சூழ்ச்சி அல்லாமல் வேறு என்ன?


மனுதர்மத்தின்


மறு அவதாரம் அல்லவா!



  1. கார்ப்பரேட் முதலாளிகள் ‘நீட்' தேர்வில் அடிக்கும் பகற்கொள்ளைகள், எல்லா பட்டப் படிப்பிற்கும் நீளும் என்பதால், அவர்களின் ‘கோச்சிங்' முதலி யன - தேர்வு - பணக்கார உயர்ஜாதியினர் பயன்படத்தான் கல்வி என்ற மனுதர்மத்தின் மறு அவதாரம் அல்லவா இது?

  2. உயர்கல்வியில் சேருவதற்கான மாநில அரசுகள் நடத்தும் இறுதி ஆண்டு கல்வித் தேர்வு முடிவுகளுக்கு எந்த மதிப்பும் கிடையாதா? அதற்குப் பிறகும் ஒரு தனி நுழைவுத் தேர்வு ஒவ்வொருவரும் எழுத வேண்டும் என்பது மாநில அரசினுடைய கல்வித் திட்டத்தையே மறுப்பதாகத்தானே ஆகும்!


கல்வியாளர் திரு.எஸ்.எஸ்.இராஜகோபா லன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாவது:


‘‘6 ஆம் வகுப்பிலிருந்து ஒரு கைத் தொழில் பழகவேண்டும் என்பதிலே கருத்து  வேறுபாடில்லை. அதனைப் பள்ளி யில் உறுதி செய்யாது ஒரு தொழிலகத்தில் பயிற்சியாளராகக் கற்கவேண்டும் என்று கூறியிருப்பதே இராஜாஜியின் குலக் கல்வித் திட்டமாகவே சிற்றூர்களில் மாறி விடும். கிராமங்களில் தொழில் பயில வாய்ப் புகள் குறைவாதலால் பெற்றோரிடமே தொழில் கற்க வேண்டியிருக்கும். அந்தக் காலத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஆபத்து உள்ளது.''



  1. மும்மொழித் திட்டம் என்ற பெயரில் சமஸ்கிருதம், ஹிந்தித் திணிப்புக்கு இது இடமேற்படுத்தும்.


அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை - கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெய லலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்குமேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடப் போகிறதா?


தீராப் பழியை ஏற்கப் போகிறதா


எடப்படியார் அரசு!


அது பெரும் வரலாற்றுப் பிழையாகி விடும் அல்லவா? தீராப்பழியை அ.தி.மு.க. அரசு - எடப்பாடியார் தலைமையில் உள்ள அரசு ஏற்கப் போகிறதா?


குட்டக் குட்டக் குனிவதற்கும் ஓரளவுதான் பொறுமை உண்டு என்று காட்டவேண்டிய தருணத்தில், இது மாநில உரிமைகளைத் ‘தியாகம்' செய்து, திராவிட ஆட்சியின் தொடர்ச்சி அல்ல என்று கூறிவிடப் போகிறதா?


மக்கள் நலன்தான் முக்கியம்


ஆகவே, இதில் ஆழ்ந்து சிந்தித்துத் தமிழக அமைச்சரவை முடிவு எடுக்க வேண்டும்!


நமக்கு எந்த அரசியல் பார்வையும் இல்லை - மக்கள் நலன்தான் முக்கியம் என்பதே இந்த வேண்டுகோளின் அடிப் படை!


 


கி. வீரமணி


தலைவர்


திராவிடர் கழகம்


சென்னை


31 .7.2020


No comments:

Post a Comment