'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 30, 2020

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்

'தினமலருக்குப் பதிலடி!' எது 'பிராமண' துவேஷம்?


* மின்சாரம்



லாலா லஜபதி ஒரு முறை சொன்னார் தென்னாட்டுப் பிராமணர்கள் தாங்களே துவேஷிகளாக இருந்து கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘துவேஷிகள், துவேஷிகள்!’ என்று சொல்லுவார்கள் என்ற கருத்துதான் ‘தினமலரில்’ (28.6.2020 பக்கம் 7) வெளிவந்த ஒரு கட்டுரையைப் பார்த்தவுடன் பளிச் சென்று நினைவிற்கு வருகிறது 'என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?' என்பது அக்கட்டுரையின் தலைப்பு. எழுதுகோல் பிடித்தவர் எஸ். கார்த்திகேயன் - சமூக ஆர்வலராம்.


சமூக ஆர்வலர் என்ற போர்வையில் தொலைக்காட்சி களில்கூட அவ்வப்போது வந்துவந்து போவார்கள் பெரும்பாலும் பூணூல்காரர்கள்.


கட்டுரை முழுவதும் இவர் தன்னை முன்னிலைப் படுத்தியுள்ளார். ‘நான் ஜாதி பார்ப்பதில்லை. நான் ஜாதி பார்ப்பதில்லை -  நான் பரிசுத்தம்!’ என்பதுபோல அடிக்கடி ஒரு தடவை தன்னைப் பற்றி தன் முதுகைத் தட்டிக் கொண்டே இருக்கிறார்.


அவரிடம் ஒரே ஒரு கேள்வி உங்கள் முதுகில் பூணூல் தொங்குகிறதா? என்பதுதான்.


பூணூல் எல்லோரும் தான் போடுகிறார்கள் என்றெல் லாம் சொல்லித் தப்பிக்க வேண்டாம் - ஒரு முறை ‘சோ’ இராமசாமி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களிடம் ஒரு பே¢ட்டியில் சரியாக சிக்கி மூச்சுத் திணறினார். ‘வீட்டாரைத் திருப்திபடுத்தத்தான் சங்கடப்படுத்தாமல் இருக்கத்தான்! என்றார்.


பூணூல் கல்யாணம் நடத்தி முதுகில் அதைத் தொங்க விட்ட பிறகுதான் பிராமணன் -அதாவது துவிஜாதி - இருபிறப்பாளன் ஆகிறான்.


இது சரியா, தவறா என்பதை சங்கர மடம் சென்று கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்!


பிராமணர்கள் மட்டுமா போடுகிறார்கள்? ஆசாரி, பத்தர் செட்டியார் கூடத்தான் போடுகிறார்கள் என்று தப்பித்து ஓட வேண்டாம். அதற்கு இந்து மத சாத்திரத்தில் இடம் உண்டா என்பதற்குப் பதில் சொல்லட்டும்.


பிராமணனுக்குப் பஞ்சு நூலாலும், க்ஷத்திரியனுக்கு வில்லின் நாணையொத்த முறுவற் புல்லினாலும், வைசிய னுக்கு க்ஷணப்பநாரினாலும் மேடு பள்ளமில்லாமல் மெல் லியதாகப் பின்னி மூன்று வடமா மேலரைஞாண் கட்ட வேண்டியது (மனுதர்மம் அத்தியாயம் - 2 சுலோகம் 42).


இதில் எங்காவது சூத்திரர் பூணூல் அணியலாம் என்று கூறப்பட்டுள்ளதா?


சந்தேகமில்லாமல் இன்னொரு இடத்தில் மிகவும் வெளிப்படையாகவே மனுதர்மம் அறைந்து கூறுகிறது.


சூத்திரன் பிராமண ஜாதிக் குறியை - பூணூல் முதலி யதைத் தரித்தால் அரசர் சூத்திரனின் அங்கங்களை வெட்டி விட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9 - சுலோகம் - 224).


இதை எடுத்துச் சொன்னால், இப்போதெல்லாம் மனுவை யாருங்க கடைப்பிடிக்கிறாங்க - நீங்கதான்  ஞாபகப்படுத்துறீங்க என்று நழுவும் Ôமீன்களைÕப் பார்க்க முடிகிறது.


‘துக்ளக்‘ இதழில் வரிந்து வரிந்து மனுதர்மத்துக்கு வக்காலத்து வாங்கி ‘சோ’ இராமசாமி எழுதியதுண்டே!


காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ‘'திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான்” என்று காஞ்சிபுரம் ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளியில் பேசினாரே (12.8.1976).


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் திருக்குறளும், பிறவியின் அடிப்படையிலேயே வருணபேதம் கற்பிக்கும் மனுதர்மமும் ஒன்று என்று சொல்லுகிறார் இவர்களின் ஜெகத்குரு என்றால், மனுதர்மத்தை எந்த அளவுக்கு  அவர்கள் இன்றளவும் போற்றுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாமே!



ஏதோ அதே நேரத்தில் தப்பிப்பதற்காக தப்பிலித் தனமாகப் பேசலாமா? பதினெட்டு ஸ்மிருதிகளில் மனுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதி களும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந்தாலும், அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று என்று மனுதர்ம சாஸ்திரத்தின்  பீடிகையில் கூறப்பட்டுள்ளதே!


இந்த மனுதர்மத்தை நியாயப்படுத்த முடியாத நிலையில், இப்போதெல்லாம் யார் பார்க்கிறார்கள் - கடைப்பிடிக்கிறார்கள் என்று கூறுவது அசல் ஏமாற்று வேலையே!


வேண்டுமானால் ஒன்று செய்யட்டுமே! சங்கராச் சாரியார் தலைமையில் ஒரு நாளைக் குறிப்பிட்டு, மனுதர்மத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்த முன் வரட்டுமே - வருவார்களா என்று சவால் விட்டே கேட்கின்றோம்.


மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் கொளுத்தினார்கள் என்பதை உணரட்டும்.


இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தங்கத்தினால் செய்த பூணூலைப் போட்டதுதான். திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் (5.4.2002) திருப்பரங்குன்றம் முருகனுக்கு ரூ.15 லட்சம் செலவில் பூணூல் (தினமணி 27.2.2014 படத்துடன் வெளியிட்டு இருந்தது) சீரங்க ரங்கநாதனுக்கோ ரூ.50 லட்சம் மதிப்பில் வைரப் பூணூல் போட்டவர்தானே ஜீயர்.


சங்கராச்சாரியார் ஒருவர் பிரதிஷ்டை செய்யப் படும் போது - அவர் அதுவரை அணிந்திருந்த பூணூலை அகற்றி விடுவார்கள் எந்தவித ஆசாபாசங்களுக்கும் ஆளாகக் கூடாது என்று; ஆனால், அதே சங்கராச்சாரியார் அவர்கள் நம்பும் கடவுள்களுக்கே பூணூல் அணிவித்து, ‘கடவுள்களும், நாங்களும் ஒரே ஜாதி!’ என்று காட்டுவதுதானே இதன் நோக்கம்? என்று தணியும் இந்த பிராமண துவேஷம்!” என்று தினமலரில் கட்டுரை எழுதும் திருவாளர் பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.


பிராமணர்கள் எல்லாம் சாதுவானவர்களாம் - எந்த அடிதடிக்கும், சச்சரவுக்கும் போகாதவர்களாம். அத்தகைய பிராமணர்களைத் துவேஷிக்கிறார்கள் என்று துக்கம் தொண்டையை அடைக்க தூரிகை பிடிக்கும் இவர் என்ன எழுதுகிறார்? எந்த சொல்லைக் கையாளுகிறார்?


“ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள்தான் பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை தூண்டிவிட முயன்றனர்” என்று எழுதுகிறார்.


சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்தவர்கள் யார்? பிறப்பிலேயே பேதம் கற்பிக்கும் வருணாசிரமத்தை உருவாக்கியவர்கள் யார்? இன்றுவரை ஆவணி அவிட் டம் என்ற பெயராலே நாங்கள் பிர்மாவின் முகத்திலே பிறந்த துவிஜாதி என்பதற்கான பூணூலை புதுப்பித்துக் கொள்பவர்கள் யார்?


சண்டாளர்கள் என்கிற தடித்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பதிலிருந்தே இவர் போடும் நரி வேஷம் என்ன என்பது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!


சண்டாளர் என்றால் என்ன பொருள் இந்து மதத்திலே தெரியுமா? சூத்திரன் மூலம் பிராமணன் மற்றும் இதர வருணத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பிறந்தவன் என்று பொருள்.


‘இழிந்த சூத்திரன் - உயர் வருணத்துப் பெண்ணைக் கூடிப் பிள்ளை பெற்றதை ஆத்திரத்தோடு கண்டிக்கும் அந்த சொல்லை - இந்த ஜாதி ஒழிப்பு(?) வீரர் பயன்படுத்துகிறார் என்றால் என்ன பொருள்? இவர் வேடத்தை இவரே கலைத்துக்கொண்டு விட்டாரே!


“எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப் பட்டதாகக் கூறி, அதற்கு இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடன் பார்க்கின்றன'' என்று எழுதுகிறார்.



9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற Ôஅருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியிட்டு விழாவிலே காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன பேசினார்?


“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும், அந்தணர்கள்தான் குருவாக இருந்தார்கள். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் காஞ்சி பெரியவாள். ஆண்டவன் கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில் என்று பேச வில்லையா? அனைத்தையும் கட்டறுத்தவர் என்பதற் காகப் பூணூலை அறுத்துக் கொண்ட சங்கராச்சாரியார் தான் ஒரு பிராமணர் என்ற அகந்தையிலிருந்து விலகவில்லையே!


கடவுளுக்கு மேலே பிராமணன் எனும் ஆரிய ஆணவம் தலைக்கேறி பேசிய காலம் - தினமலர் எழுத்தாளர் கூறும் எத்தனையோ காலத்திற்கு முன்பு தானா? நாம் வாழும் காலத்தில்தானே!


இந்து மதத்தில்கூட அனைவருக்கும் ஒரு சுடுகாடு கூடாது என்று சொன்னவரும் அதே காஞ்சி பெரியவாள்தானே (8.3.1962).


தீண்டாமை க்ஷேமகரமானது என்று சொன்னவர் மகா பெரியவாள் என்று மகத்தான குரலில்-போக்கில் பேசப்படும் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி தானே! (நூல் - ஸ்ரீ ஜெகத்குருவின் உபதேசங்கள்)


தீண்டாமையை வலியுறுத்திய இவரை பிணையில் வெளிவர முடியாத சட்டத்தின் கீழ் நியாயமாக (PCR act) சிறையில் தள்ளியிருக்க வேண்டாமா?


வெகு நாட்களுக்கு முன் போக வேண்டாம் - இந்தியாவின் முதல் குடிமகனான முப்படையின் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காப்பாளரான இந்தியக் குடியரசு தலைவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்கிற ஒரே காரணத்தால், வடநாட்டில் இரண்டுகோயில்களில் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டது மனுமந்தாதா காலத்திலா? நம் கண் முன்னாலா?


அஜ்மீர் பிர்மா கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 15.5.2018), பூரி ஜெகநாதர் கோயிலிலும் ('டைம்ஸ் ஆப் இந்தியா' 27.6.2018) ஒரு குடியரசுத் தலைவருக்கே இந்த அவமானம் நடந்ததே!


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற அத்தனைப் பேரும் பார்ப்பனர்கள்தானே மறைந்த காஞ்சி சங்கராச் சாரியார் சிறீபெரும்புதூர் ஜீயர் பின்னணியில் அது நடக்கவில்லையா?


ராஜாஜியின் சிபாரிசின் பெயரில்  ஃபீஸ் வாங்காத வக்கீலாக பல்கிவாலா ஆஜராகி வாதாடவில்லையா?


வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி சூத்திரன் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி செத்து விடும், தீட்டுப்பட்டு விடும், அந்தத் தீட்டைக் கழிக்க ஆயிரம் கலசங்களைப் புதிதாக வைக்க வேண்டும், பிராமண போஜனம் நடத்த வேண்டும் என்று சொன்னவர்கள் யார் - தினமலர் எழுத்தாளரே?


உங்களுக்கு அடியாட்கள் தேவைப்படும் பொழுது இந்துக்களே ஒன்று சேர்வீர் என்பீர்! மற்ற நேரத்தில் சூத்திரன் அர்ச்சகரானால் சாமி செத்துப் போய்விடும், தீட்டுப் பட்டு விடும் என்பீர்!


காஞ்சிமடத்திலே சுப்பிரமணியசாமி சென்றால் சங்கராச்சாரி பக்கத்திலே சமமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார முடிகிறது. அப்துல் கலாமும், அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணனும் தரையில் உட்கார வேண்டியிருந்ததே!


இவை எல்லாம் எப்பொழுதோ நடந்தது என்று சொல்லப் போகிறீர்களா திருவாளர் கார்த்திகேயன் அய்யர் அவர்களே?


ஈ.வெ.ரா. தூண்டி விட்டது ஜாதி துவேஷம் என்று குறிப்பிட் டுள்ளீர்களே -


ஈ.வெ.ரா. ஜாதியையும் உண்டாக்கவில்லை, யாரையும் தூண்டியும் விடவில்லை - ஜாதியை உண்டாக்கியது நீங்கள்; ‘இன்றும் நாங்கள் பிராமணர், பூணூல்காரர் கடவுளுக்கும் மேலே நாங்கள்!” என்று சொல்லுவது நீங்கள்.


நீங்கள் பிராமணர்கள் என்றால் நாங்கள் சூத்திரர்களா? நான்கு வருண அமைப்பில் அப்படிதானே பொருளாகும்! சூத்திரர்கள் என்றால் ஏழு வகைப்படும் -அதில் ஒன்று வேசி மக்கள் என்பதுதானே உங்களின் ஹிந்து மதம்!


இதை எதிர்த்துக் கேட்டால் துவேஷமா? உண்மையிலேயே திருடியவனை விரட்டினால் ‘திருடன் திருடன்’ என்று உண்மைத் திருடனும் சேர்ந்து கத்திக் கொண்டு ஓடித் தப்பிக்கும் தந்திரம் பெரியார் சகாப்தத்தில் நடக்காது, நடக்க விடவும் மாட்டோம் - அதற்கான ஆணித்தரமான அசல் தலைமையும் உண்டு - எஃகு பலம் படைத்த இயக்கமும் உண்டு!


உண்மையைச் சொல்லப் போனால் உங்களுக்கு ஒரு வகையில் பாதுகாப்பாக இருந்தவர்தான் பெரியார். மக்கள் மத்தியிலே தக்க பிரச்சாரத்தின்மூலம் விழிப்புணர்வை உண்டாக்கி ஜாதியை ஒழித்து பிராமணனும் இல்லை - சூத்திரனும் இல்லை, “அனைவரும் மனிதர்தான்” என்ற நிலையை உண்டாக்கத்தான் 95ஆம் வயதிலும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன்தான் தந்தை பெரியார்! நீங்கள் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டீர்கள்.


உடல் எல்லாம் மூளை என்று கூறிக் கொள்ளும் ராஜாஜியே இவ்வாறு சொன்னதுண்டு!


In fact in one occasion Rajaji Proudly said that he valued his Brahminhood more than his Chief Ministership (caravan april 1, 1978. Gandhiji’s Crusade against Casteism) முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணராக இருப்பதில்தான் பெருமைப்படுவதாகச் சொன்னார் என்றால் வேறு யாரை எதிர்ப்பார்ப்பது?


தீண்டாமை ஒழிக, ஜாதி ஒழிக என்று சங்கராச்சாரியார் சொல்லுவாரா? பார்ப்பனர் சங்கம் தீர்மானம் போடுமா?


பார்ப்பனிய ஆதிக்க நஞ்சை ஏதோ பெரியார்தான் எதிர்த்தாரா? சமூகத்தில் மாற்றம் தேவை  என்று எண்ணியவர்கள் எல்லாம் பார்ப்பனர்களை வெறுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லையா?


புத்தர் முதல் சித்தர்கள் உட்பட, ஜோதி பாபூலே, நாராயண குரு, சாகு மகராஜ், அண்ணல் அம்பேத்கர் (ஏன் விவேகானந்தர்கூட) என்று தொடர்ச்சியாக ஏன் எதிர்த்தனர் - வெறுத்தனர் என்பதைக் கொஞ்சம் அறிவோடு சிந்திக்க வேண்டாமா? பூணூல், பூணூல் ஆணவத்தோடு அணுகினால் அவர்களின் புத்தி தினமலர், ‘துக்ளக் போல்தான் மேயப் போகும்.


காந்தியாரை மகாராட்டிரத்தைச் சேர்ந்த நாதுராம் கோட்சே எனும் சித்பவன் பார்ப்பான் சுட்டுக் கொன்றபோது, மும்பையில் அக்கிரகாரங்கள் எரிந்தன; பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர்.


பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புணர்வு கொதி நிலையில் உள்ள தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் என்று எதிர்ப்பார்ப்பு இருந்தது; அதனைத் தடுத்தாட்கொண்டவர் தந்தை பெரியார் என்ற நன்றியை மறந்து விட்டு, தர்ப்பைப் புற்கள் தலைகொழுத்துத் திரிய வேண்டாம்!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒரு வேட்பாளராகக்கூட பார்ப்பனரை நிறுத்த எந்த கட்சியும் முன்வராததற்கு என்ன காரணம்? நாதியற்ற நிலையைத் தேடிக் கொண்டது யார் என்பதை திரிநூல் பத்திரிகை எண்ணிப் பார்க்கட்டும்.


இந்தக் கட்டுரையில் கூட, 'என்று தணியும் இந்த பிராமண துவேஷம்?' - என்று தானே குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆம். இந்தப் பிராமணன் எனும் தொனியும், உச்சரிப்பும், அடையாளமும், உங்களிடம் ஆணவமாக துள்ளித் திரியும்  வரையிலே, ஆவணி அவிட்டங்கள் தொடரும் வரையில், அதனை  எதிர்த்து- துவேஷமல்ல - மனித உரிமையும், சமத்துவ உணர்வும் - சமர் செய்து கொண்டுதானிருக்கும். மேலும் மேலும் உங்களின் புலம்பலும், உங்கள்மீதான வெகு மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் எரிமலையாய்க் கனன்று கொண்டுதானிருக்கும்-ஆத்திரப்படாமல் சிந்தியுங்கள் ஆவணி அவிட்டப் பூணூல்கார்களே!


யாரால் பாதுகாப்பு?


இதற்கு மேல் இழைக்கப்பட முடியாது என்கிற அளவுக்குக் கொடுமைகளையும், இழிவுகளையும், உரிமைப்பறிப்புகளையும் ஒரு சிறுபான்மைக் கூட்டம் பெரும்பாலான-மண்ணுக்கு உரிய மக்கள்மீது சுமத்திய-திணித்த உண்மையை - ஒரு மாபெரும் தலைவரால், ஒரு மாபெரும் இயக்கத் தால் புரிய வைக்கப்பட்ட நிலையில், இன்றளவும் பிராமண - சூத்திரத் தன்மையை நிலை நிறுத்து வதில் குறியாக இருக்கும் ஓர் ஆதிக்க வெறிக் கூட்டம் பாதுகாப்பாக, நிம்மதியாக, தங்கள் விகிதாச்சாரத்துக்கும் மேல் பன்மடங்கு எல்லாவற் றிலும் அனுபவிப்பவர்களாக இங்கு வாழ முடிகிறது என்றால், அதற்குக் காரணம் அந்தத் தலைவர் தந்தை பெரியாரும், அந்த இயக்கமும்தான் அதன் பண்பாட்டால்தான்  என்பதை உணர வேண்டிய வர்கள் உணர வேண்டும். இதைப் பலகீனமாக எடுத்துக் கொள்ளுகிறார்களா என்று தெரிய வில்லை. முடிவு அவர்கள் கையில்!


No comments:

Post a Comment