ஆசிரியர்பற்றி அய்யா.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 1, 2020

ஆசிரியர்பற்றி அய்யா....


இந்த நிலையில், தோழர் வீரமணி அவர்கள் நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகை தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக்கொண்டு தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்து விட்டார்.


இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல் வாய்ப்பு என்றே கருதி, திரு.வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும்,  இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


***


உண்மையைச் சொல்லுகிறேன், தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால், தினசரி ‘‘விடுதலை''யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில்  அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.


- தந்தை பெரியார்


‘விடுதலை', 10.8.1962


***


வீரமணி அவர்கள் எம்.ஏ., பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத்தன்மையும், புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன், மாதம் ரூ.300, ரூ.400 வரும்படி வரத் தக்க (குறிப்பு 1964 இல் இது பெரிய தொகையே) அளவுக்குத் தொழில் வளர்ந்ததோடு, கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ.500, ரூ.1000 என்பதான வரும்படி வரும் நிலையில், அவர் ஒரு சாதாரண ‘‘ஏழை''க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில், சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார், வருகிறார், வரக்கூடும் என்பது உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.


அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின்மீதே அவரை நம் ‘விடுதலை' ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை'யை ஒப்படைத்துவிட்டேன். ‘விடுதலை' பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்.


- தந்தை பெரியார்


‘விடுதலை', 6.6.1964


No comments:

Post a Comment