பிராமணியத்திற்கு இரட்டை அடி. ராஜாஜி பதவி இழந்தார், வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது
தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில தலைவரும், தமிழ்நாட்டின் சிறந்த சமூக வரலாற்று ஆய்வாளருமான எழுத்தாளர் பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம்" எட்டு தொகுதிகளும் மிக அரிய சமூக வரலாற்றுப் பெட்டகங்கள் ஆகும். அதில் தந்தை பெரியார் - திராவிடர் கழகம் பற்றிய அவரது கண்ணோட்டம் கருத்துப் பதிவுகளாக வெளிவந்துள்ளன. அவற்றை நாம் இங்கே தொடர் கட்டுரைகளாகத் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
சிலவிடங்களில் மாறுபட்ட கருத்துக்கள் கூறப்பட்டிருப்பினும் அத்தகைய அய்யங்களைப் போக்கி, தெளிவுபடுத்தி, புரிதலை ஏற்படுத்துதல் நமது கடமை என்ற உணர்வோடும், பெருமிதத்தோடும் இத்தொடரினை நமது வாசக நேயர் களுக்குப் பயன்பட வெளியிடுகிறோம் - வரலாற்று மீள் பார்வை இதன் மூலம் கிடைக்கிற ஒரு வாய்ப்பு நமக்குக் கிட்டுகிறது! நன்றி...
- ஆசிரியர், 'விடுதலை'
1951 - 52 1952 - 53 (ஆச்சாரியார் மெடிக்கல் கல்லூரிகள் உத்தரவுப்படி)
பார்ப்பனர் - 63 - 104
ஜாதி இந்துக்கள் - 130 - 56
மற்றவர்கள் - 125 - 158
எஞ்சினியரிங் கல்லூரிகள்
பார்ப்பனர் - 85 - 177
ஜாதி இந்துக்கள் - 138 - 50
மற்றவர்கள் - 370 - 37
“அதாவது பார்ப்பனர்கள் 48%. இதற்கு முந்திய ராஜியத்தில் பார்ப்பனருக்கு 23% தான் கிடைத்தது. பார்ப்பனர் 100க்கு 3 பேர்தான் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கட்டும்‘’
உயர் கல்வித்துறையில் இப்படி வருணாசிரமத்தைத் திட்டமிட்டு புகுத்திய ராஜாஜிதான் தொடக்கக் கல்வி யிலும் கை வைத்திருந்தார். அதுமட்டுமல்ல இடைநிலைக் கல்வியிலும் திருகுதாளம் செய்திருந்தார். “விடுதலை” யில் (10.6.53) வந்த ஒரு செய்தி அந்த உண்மையைச் சொன்னது.
“எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை 100க்கு 31 என்று அறிவிக்கப்படுகிறது. சென்ற ஆண்டில் 100க்கு 42 ஆக இருந்தது. இந்த ஆண் டில் குறைந்ததற்குக் காரணம் என்ன? சென்ற ஆண்டில் ‘செலக்ஷன்’ என்ற பன்னாடை முறை இல்லை. ஆனால் இந்த ஆண்டில் உயர்திரு ஆச்சாரியார் அவர்களின் அக்கிரகார லீலைகளில் ஒன்றாக இந்த வடிகட்டும் முறை புகுத்தப்பட்டது”.
பன்வாடை என்றால் வடிகட்டும் துணி, அதைக் கொண்டு வடிகட்டி பலரையும் தூக்கி எறிந்து விடுவார்கள், அதனால்தான் இந்த ‘செலக்ஷன்’ முறைக்கு இந்தப் பெயர் சொல்லி அழைத்தது இந்த எடு, பள்ளியில் சேருகிற சகலரையும் பரீட்சை எழுத அனுமதிப்பதில்லை இந்த முறை. இடையிலேயே எதோவொரு அளவுகோலை வைத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள், இப்படிப் பலரது வாழ்வும் பாழாக்கப்பட்டது. இப்படித்தான் பள்ளி யில் சேர்ந்தவர்களில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கைக் குறைந்து போனது. இப்படியாகப் பல வகைகளிலும் சூத்திரர்கள் - பஞ்சமர்களின் கல்வியைப் பாழாக்குகிற வேலையில் இறங்கியிருந்தது ராஜாஜி சர்க்கார், சுதந்திர இந்தியாவில் பிராமணரல்லாதாரின் கல்வி உரிமையை வெட்டுகிற பல கட்டாரிகளைக் கண்டு பிடித்து வீசினார் பக்கா பிராமணியவாதியாகிய ராஜாஜி.
முடிவில் அடிமரத்தில் வெட்டரிவாளை வீசினார். 1953 ஜூன் 18 முதல் குலக்கல்வித் திட்டத்தை நடை முறைப் படுத்தியே விட்டார். முதலில் மைனர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்குத்தான் இந்தக் கல்வி முறை என்று சொல்லி வந்தவர், இப்போது மேஜர் பஞ்சாயத்துப் பிரதேசங்களுக்கும் பொருந்தும் என்றார். ஆக, கிராமப் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் இந்தக் கல்வி முறை! இதிலேயே ஓரவஞ்சனை தெரிந்தது. நகர்ப்புறத்தாருக்கு ஒருவகைக் கல்வி, கிராமப்புறத்தாருக்கு வேறுவகைக் கல்வி! நகரத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 6 மணி நேரம் தினம் படிப்பார்கள், கிராமத்திலுள்ள பள்ளிப் பிள்ளைகள் 3 மணி நேரம் மட்டுமே படிப்பார்கள்! இதென்ன கொடுமை? கல்லூரி அனுமதியிலும், படிப்பிலும் கிராமத் துப் பிள்ளைகளால் நகரத்துப் பிள்ளைக ளோடு எப்படிப் போட்டி போட முடியும்? நகரத்து உயர்சாதி மாணவர்களே முன்னேறிக் கொண்டு போவார்கள். பச்சையான பிராம ணியம் ராஜாஜியின் இச்சையாக வெளிப்பட்டது.
குலக்கல்வித் திட்டம் ஒழிந்தது
இப்படிப்பட்ட சூழலில்தான் ஜூலை 14 அன்று சட்டசபை முன்பு மறியல் போராட்டம் நடத்தியது தி.க. “விடுதலை” ஆசிரியர் குருசாமி, வ. வீராசாமி எம்.பி., 6 பெண்கள் உள்ளிட்ட 80 பேர் கைதானார்கள். ஆயிரக் கணக்கானோர் அங்கு திரண்டு நின்று இவர்களுக்கு ஆத ரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இந்தத் திட்டத்தை எதிர்த்து ராஜாஜி வீட்டு முன்பு மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது தி.மு.க. அதற்கும் முன்னதாக அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட் டார்கள். அந்தச் செய்தியையும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது “விடுதலை”.
தி.மு.க. வின் மும்முனைப் போராட்டத்தில் தூத்துக் குடியில் போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் 9 பேர் அநியாயமாகப் பலியானார்கள். 50 பேர்க ளுக்கு மேல் படுகாயம் பட்டார்கள். பல நூறு பேர் கைதா னார்கள். இதையும் ஆவேசத்தோடு வெளியிட்டது. “விடு தலை” என்பது மட்டுமல்லாது, இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து பெரியார் வலுவான அறிக்கையும் வெளியிட்டார். தி.க.விலிருந்து தி.மு.க. பிரிந்து போனதிலிருந்து இரு அமைப்புகளுக்கும் இடையே இயல்பாகவே மிகுந்த கசப்புணர்வு இருந்தது. ஆனால் குலக்கல்வி எதிர்ப்பு எனும் பொது விஷயத்தில் பெரியார் தி.மு.க.வின் போராட்டத்தையும் உற்சாகத்தோடு ஆதரித்தார் என்பது குறிக்கத்தக்கது. அதுமட்டுமல்ல, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஜூலை 24அய் கண்டன நாளாகக் கடைப்பிடித்தார் பெரியார். அன்று சென்னை கடற்கரை யில் பெரியார் முழங்கினார். அவரது பேச்சைக் கேட்க லட்சம்பேர் கொண்ட ஊர்வலம் நடைபோட்டது என் கிறது “விடுதலை” (25-7-53). குலக்கல்வித் திட்டம் வாபஸ் பெறப்படும் வரைப் போராட்டம் ஓயாது என்றார் அந்தச் சமூகப் போராளி.
மெய்யாலும் ஜூலை 20 முதல் தமிழகத்தின் பல ஊர்களிலும் பல பள்ளிகள் முன்பு மறியல் கிளர்ச்சி நடை பெற்றது. இதற்கு மாணவச்சிறார்களும் ஒத்துழைத்தார்கள். நூற்றுக்கணக்கான தி.க.வினர் சிறையில் அடைக்கப் பட்டார்கள். சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டது என்றது “விடுதலை” (28-7-53).
இப்படிப்பட்ட பின்புலத்தில்தான் குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடக் கோரும் தீர்மானம் சட்டசபையில் முன்மொழியப்பட்டது. முன் மொழிந்தவர் கம்யூனிஸ்டு கேபி. கோபாலன். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 138 வாக்குகளும், எதிராக 138 வாக்குகளும் பதிவாயின; சமநிலை. சபாநாயகர் சிவஷண்முகம்பிள்ளை தீர்மானத் திற்கு எதிராக வாக்களித்து அதைத் தோற்கடித்தார். அப்படியும் விடவில்லை எதிர்க் கட்சியினர். இன்னொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். அது இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்து, நிபுணர்கள் குழுவின் பரிசீலனைக்கு விடுமாறு கூறியது. இது காங்கிரசிலிருந்த அதிருப்தியாளர் களுக்கும் வசதியாக இருந்தது. ஆகவே தீர்மானத்திற்கு ஆதரவாக 139 வாக்குகளும், பாதகமாக 137 வாக்குகளும் விழுந்து தீர்மானம் நிறைவேறிவிட்டது.
அரசுக்கு ஏற்பட்ட இந்தத் தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி கோரியது. இதற்கு முதலமைச் சரின் பதில் என்ன தெரியுமா? “அது ஒரு சிபாரிசுதானே தவிர வேறல்ல” என்று சொன்னார். இது சர்வாதிகாரப் போக்கு என்று கம்யூனிஸ்டு தலைவர்கள் நாகிரெட்டி, கல்யாணசுந்தரம், கே.பி. கோபாலன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டார்கள்.
இந்தக் கட்டத்தில் - 1953 அக்டோபர் 1இல் தமிழகத்திலிருந்து ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. இனி ஆங்கிலம் தெரிந்தவர்தான் சென்னை மாநிலத்திற்கு முதல்வராக இருக்க வேண்டும் எனும் தேவையில்லாமல் போனது. மொழிவழி மாநிலம் அந்நியமொழி தெரியாத வரும் ஆட்சிக்கட்டில் ஏறும் வாய்ப்பை உருவாக்கியது. தமிழ்நாடு காங்கிரசுக்குள் காமராஜர் ஆதரவு கோஷ்டியினர் தீவிரமாகக் களம் இறங்கினார்கள். குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு அதற்கு ஏதுவாக இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் காமராஜருக்கு ஆதரவு பெரு கியது. தான் பதவி விலகுவதாக 1954 ஜனவரியிலேயே கூறினார் ராஜாஜி, அப்படியாகவே மார்ச்சில் விலகவும் செய்தார். ஏப்ரலில் முதல்வராகிப் போனார் காமராஜர். அடுத்த மாதமே குலக்கல்வித் திட்டம் ரத்துசெய்யப்பட்டது. பெரியாருக்கு இது பெரும் மகிழ்ச்சியைத் தந்தது; பிராமணியத்திற்கு இது இரட்டை அடி. ஒருபுறம் ராஜாஜி பதவி இழந்தார், மறுபுறம் வருணாசிரமக் கல்வி முறை ஒழிந்தது.
இந்தித் திணிப்புக்கும் அடி
இதற்கிடையில் 1952 ஆகஸ்டு 1, 1953 ஆகஸ்டு 1ல் ரயில் நிலையங்களின் பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்தைத் தார் கொண்டு அழிக்கும் கிளர்ச்சியை நடத்தி யிருந்தார் பெரியார். அப்போது முதல்வராக இருந்த ராஜாஜி இந்தப் போராட்டம் பலம் பெறக் கூடாது என்று கிளர்ச்சியாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கா மல் இருந்தார். 1954 ஆகஸ்டு 1 வந்தது. இப்போது காமரா ஜர் முதல்வர். இவரும் இது விஷயத்தில் ராஜாஜியின் வழி நடந்தார். இந்தி எதிர்ப்பு தீக்கனல் தமிழ்நாட்டில்தான் அணையாமல் காக்கப்பட்டு வந்தது. இது சங்பரிவாரத்தின் - அதன் அரசியல் பிரிவான ஜனசங்கத்தின் - ஏக இந்தி மொழிக் கொள்கைக்கு நேர் எதிரான நிலைபாடு என் பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
- தொடரும்
No comments:
Post a Comment