பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி மற்றும் நீரவ் மோடி ஆகியோர் வங்கி மோசடி, கடன் திருப்பித் தராதது உள்ளிட்ட பண மோசடி குற்றங்களைச் செய்து விட்டு நாட்டை விட்டு குடும்பத்துடன் தப்பி ஓடி விட்டனர். இவர்களில் நீரவ் மோடி லண்டனில் உள்ளார். மெகுல் சோக்சி ஆண்டிகுவா குடியுரிமை பெற்று அங்கேயே தங்கி விட்டார். இவர்களை இந்தியாவுக்குக் கூட்டி வந்து விசாரணை செய்ய அரசு முயன்று வருகிறது.
இவர்களுடைய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16 அன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒரு கேள்வி எழுப்பினார். ஆனால், அதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை நிதி அமைச்சர் அனுராத் தாக்குர் ஆகிய இருவரும் பதில் அளிக்க மறுத்துள்ளனர்.
இதையொட்டி சமூக ஆர்வலர் சாகேத் கோகலே ரிசர்வ் வங்கிக்கு தற்போதைய அதிக அளவில் கடன் திருப்பிச் செலுத்தாத 50 பேர் மற்றும் கடன் நிலுவைத் தொகைகள் உள்ளிட்டவை குறித்துத் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேள்விகள் அனுப்பினார். இதற்கு ரிசர்வ் வங்கி பதில் அனுப்பி உள்ளது. அதில், ‘‘கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கி அதிக அளவில் கடன் வாங்கியோரில் 50 பேருக்கு ரூ. 68,000 கோடி கடன் தொகையை மத்திய அரசின் ஆலோசனைக்கிணங்க தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், 2015 டிசம்பர் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி வெளிநாட்டுக் கடன் பெற்றோர் குறித்த விவரங்களை அளிக்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இந்தக் கடன் வாங்கியோர் பட்டியலில் முதல் இடத்தில் நாட்டை விட்டு ஓடிய மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி நிறு வனம் உள்ளது. கீதாஞ்சலி நிறுவனம் ரூ. 5492 கோடி கடன் வாங்கி இருந்தது. இதே குழுமத்தின் மற்ற நிறுவனங்களான கிலி இந்தியா லிமிடெட் ரூ.1447 கோடியும், நட்சத்திரா பிராண்ட் லிமிடெட் ரூ.1119 கோடியும் பாக்கி வைத்துள்ளன.
இரண்டாவதாக ஆர் இ அய் அக்ரோ லிமிடெட் ரூ.4314 கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. இதன் இயக்குநர்கள் சந்தீப் ஜுன்ஜுன்வாலா மற்றும் சஞ்சய் ஜுன்ஜுன்வாலா ஆகி யோர் கடந்த சில ஆண்டுகளாக, அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். அடுத்ததாக ரூ.4076 கோடி கடனுடன் உள்ள ஜடின் மேத்தா நிறுவனத்தின் அதிபர் ஜடின் மேத்தாவும் தலைமறைவாகி உள்ளார். அவரை சி.பி.அய். தேடி வருகிறது.
அடுத்தபடியாக ரோடோமேக் குளோபல் பி லிமிடெட் என்னும் கோத்தாரி குழுமம் ரூ.2850 பாக்கி வைத்துள்ளது. அதைத் தொடர்ந்து குடோஸ் பெரி ரூ.2326 கோடி, பாபா ராம்தேவின் ருசி சோயா ரூ.2212 கோடி, குவாலியர் நகரில் உள்ள ஜூம் டெவலப்பர்ஸ் ரூ.2012 கோடி கடன் தர வேண்டியது உள்ளது.
ரூ.1000 கோடி முதல் ரூ.2000 கோடி வரை மொத்தம் 18 நிறுவனங்கள் கடன் தொகை தர வேண்டியுள்ளன. இதில் அகமதாபாத்தின் ஹரீஷ் மேத்தாவின் பிரிஷியஸ் டயமண்ட் நிறுவனம் ரூ.1962 கோடியும், விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் விமான நிறுவனம் ரூ.1943 கோடியும் தர வேண்டி யுள்ளது.
ரூ.1000 கோடிக்குக் கீழ் கடன் தரவேண்டிய பட்டியலில் 25 நிறுவனங்கள் உள்ளன.
மொத்தமுள்ள 50 நிறுவனங்களில் 6 நிறுவனங்கள் வைரம் மற்றும் தங்க வர்த்தக நிறுவனங்கள் ஆகும். இவர்கள் புகழ்பெற்ற தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் வாங்கி விட்டுப் பல ஆண்டுகளாகத் திருப்பித் தராமல் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்மீது பல விசாரணைகளும், கடன் மோசடி நடவடிக்கைகளும் நடந்து வருகின்றன.
கடன் திருப்பிச் செலுத்தாத 50 பேர் பட்டியலில், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, மருந்து தயாரித்தல் ஆகிய நிறுவனங்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒருபுறம் பெரும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கும்போது, மத்திய அரசுக்கு நெருக்கமான நீரவ் மோடி. மெகுல் சோக்சி உள்ளிட்ட நிதி மோசடி செய்து பெரும் பணத்துடன் தப்பி ஓடியவர்களுக்கு, அவர்களின் பணத்திற்குப் பாதுகாப்பு வழங்கி, கடனையும் தள்ளுபடி செய்துள்ளது பி.ஜே.பி. அரசு.
லட்சம், கோடிகள் மதிப்புள்ள கடன் தொகைகளை வாரக் கடன் வரிசையில் பட்டியலிட்டு விட்டு, அதனை தள்ளுபடி செய்யக்கூறிய பிறகு, அதை மக்களிடையே மறைத்தும் வைத்துள்ளது.
கரோனா நிவாரணத்துக்காக மாநில அரசுகள், மத்திய அரசிடம் கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், பெருமுதலாளிகளுக்கோ பல்லாயிரம் கோடி கடன் தள்ளுபடி - இதுதான் கார்ப்பரேட் பி.ஜே.பி. அரசு.
No comments:
Post a Comment