* மின்சாரம்
அய்யய்யோ அநியாயமாக வர்ணசிரமம் அழிந்து விட்டதே!
=ஆயிரம் ஆண்டுகளாக ஹிந்து மதம் நீடித்து நிற்கிறது என்றால், காரணம் இந்த வர்ணாசிரமம் தான் என்று பெரியவாள் சங்கராச்சாரியார் சொல்லி யிருக்காளே!
= பவுத்தமும், சமணமும் எல்லோரும் சமம் என்றது - அப்படி அல்ல. சமம் என்பது வேறு, இந்து தர்மம் சொல்லும் வர்ணாசிரமம் வேறு.
= அவரவர் தொழிலை அவாள் அவாள் செய்து கொண்டிருந்தால் சிக்கல் இல்லை. ஆனால் அனைவரும் சமம் என்று செய்யும் பொழுதுதான் சமூகத்தில் குழப்பமோ குழப்பம்!
= முகலாயர் ஆட்சியிலும்கூட சிக்கல் இல்லை; வர்ணாசிரமம் தழைத்தது - சுபிட்சம் செழித்தது.
= ஆங்கிலேயன் வந்தாலும் வந்தான் - எல்லாம் தலைகீழாகி விட்டது. நம்மவளான பிராமணர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டு கலாச்சாரத்தைச் சிதைத்துக் குட்டிக் சுவராக்கி விட்டார்களே! பிராமண வாழ்க்கையை மறந்து, இங்கிலீஸ்காரன் வாழ்க்கை முறையைப் பின்பற்றினார்கள்.
பிள்ளைகளையும் அப்படியே பழக்கினார்கள். பிராமணர்களின் வசதி வாழ்க்கை முறையைக் கண்டு மற்றவர்கள் பொறாமை கொண்டார்கள். அவர்களைப் போல் வாழ வேண்டும் என்று பேராசை கொண்டனர். இங்குதான் சிக்கலே முளைத்தது.
=வர்ணாசிரமம் என்ற ஓர் அழகிய படிநிலை சிதைந்ததால் சமூகமே சிதைந்து சின்னா பின்னம் ஆகி விட்டது.
= சங்கராச்சாரியாரைச் சந்தித்த பின் மகாத்மா காந்தியார் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஒரு நூலே எழுதினார்.
=வர்ணாசிரமத்தில் உணவு முறை உண்டு. பிராமணர்கள் சைவ உணவைச் சாப்பிட வேண்டும். சத்திரியர்கள் அசைவ உணவைச் சாப்பிட வேண்டும். அவரவர் வாழ்க்கை முறைக்கு இது தேவை. சத்திரியர்கள் சண்டையிட வேண்டும் என்றால் அவர்கள் அசைவ உணவைச் சாப்பிட்டு உடல் வலிமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
= பெரியவாள் கூறுவார் பானகத்தில் வெல்லம், புளி, ஏலக்காய் போன்றவற்றைக் கலந்தால் சுவையான பானகம் கிடைக்கும்.
அனைத்தும் சமம் என்று கூறிக் கொண்டு பானகத் தில் உப்பைக் கரைத்தால் உப்பின் மகத்துவமும் போய் விடும் வெல்லத்தின் முக்கியத்துவமும் போய் விடும்.
= இது போல்தான் பிராமணர்களின் வாழ்க்கை முறையைக் கண்டு பொறாமை கொண்டவர்களால் சிக்கல் ஏற்பட்டு விட்டது.
= பிராமணர்களும் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வந்த தங்களின் வாழ்க்கை முறையை சிதைத்துக் கொண்டு, ஆத்ம பலத்தைப் பறிகொடுத்தனர். வேதம் கூறிய வாழ்க்கை முறையைத் தொலைத்து மனம்போன போக்கில் வாழ்கின்றனர்.
= பிராமணர்கள் மீண்டும் அவர்களின் வாழ்க்கை முறையை பழைய படிக்கு மாற்றி அமைத்துக் கொள்ள முன் வர வேண்டும். வேதங்கள் கூறியபடி பிராமணர்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும். உலகம் முழுவதும் அமைதியான வாழ்க்கை முறையைக் கொண்டு வர இதுதான் சிறந்த வழி.
= வர்ணமுறையைச் சீரழித்ததால் தான் கரோனா போன்ற கொடு நோய்களைச் சந்தித்து வருகிறோம். நமது வர்ணாசிரமத்தில் முக்கியத்துவத்தை உணர்ந்து தொடர்ந்து பேசி வருகிறேன்.
அடேயப்பா இவ்வளவு அமுத மொழிகளையும் சாரைசாரையாக உதிர்த்தவர் சாதாரணமானவர் அல்லர், பரத நாட்டிய நர்த்தகி சாட்சாத் பத்மா சுப்பிரமணியம்தான்.
வீடியோ மூலமாக இந்தக் கரோனா காலத்தில் ஆங்கிலத்தில் பேசி உலவ விட்டுள்ளனர்.
21ஆம் நூற்றாண்டிலுமா ஆரியம் இப்படி இருக் கிறது? அவர்களின் நரிக்குணம் குருதியை விட்டு விலகி ஓடவில்லை. ஜாதித் திமிர் வாதம் அவர்களின் மண்டையை விட்டுக் கீழே இறங்கவில்லை.
இந்த அம்மையாரின் பேச்சுக்கு எந்தவித விளக்கமும் தேவையில்லை.
அம்மையாரின் இந்த அக்கிரகாரப் பேச்சைக் கேட்ட பொழுது அவரிடம் சிலவற்றைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் நம்மைத் தொலைத்து எடுக்கிறது.
வேதப்படிதான் வாழ வேண்டும் என்று வேகம் காட்டும் முறைப்படி நர்த்தகியாரே நர்த்தகியாரே! - முதலில் நீங்கள் வேதம் வழி காட்டும்படிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்களா?
ஆங்கிலத்தால் கெட்டு விட்டது என்று அபிநயம் பிடிக்கும் நீங்கள், ஆங்கிலத்தில் பேசித்தானே உரையை உலவ விட்டுள்ளீர்கள்.
ஆரிய கலாச்சாரப்படி மடிசார் முறையில்தான் புடவை உடுத்துகிறீர்களா?
உங்கள் ஆத்துப் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பாமல் காஞ்சிபுரம் வேதபாட சாலைக்குத்தான் அனுப்பியுள்ளீர்களா?
ஸ்மிருதிகளில் முதல் இடத்தில் வைத்துப் பூஜிக்கப் படும் மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் ஒன்று சுலோகம் 103 இவ்வாறு கூறுகிறது.
“சூதாடுகிறவன், கூத்தாடி, பாடகன், கொடிய நடை யுள்ளவன், வேதஸ்மிருதிகளை நிந்திப்பவன், விரத அனுஷ்டானம் இல்லாதவன், ஆபத்து இல்லாதபோது தன் ஜாதித் தொழிலை விட்டு, மற்றொரு ஜாதித் தொழிலைச் செய்பவன், குடியன் இவர்களை அரசன் பட்டணத்தை விட்டு ஓட்ட வேண்டியது.'
மனுதர்மம் கூறும் இந்தப் பட்டியலில், கூத்தாடியைப் பட்டணத்தை விட்டு விரட்ட வேண்டும் என்று சொல்லப்படுகிறதே - இதன்படி, மனு தர்மத்தின் மொழியில் சொல்லுவதனால் நாட்டிய கூத்தாடியாகிய தாங்கள் சென்னைப் பட்டணத்தில் வாழ்வது எப்படி? உங்களை இங்கு விட்டு வைப்பதுகூட சாஸ்திர விரோதம்தானே! அம்மையாருக்கு என்ன உத்தேசம்?
வர்ணாசிரமத்துக்கு இவ்வளவு வக்கணையுடன் வளவளவென்று சப்பைக் கட்டுகளைக் கட்டும் திருமதி பத்மா சுப்பிரமணியம் அவர்களே! உங்களின் வேதக் கருவூலம் காய்த்துத் தொங்கும் ஹிந்து மதத்தில் பெண்களுக்கான நிலை என்ன? என்ற கேள்விக்கு உங்களிடமிருந்து பதில் கிடைத்தால் உங்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்று செய்ய எளிதாக இருக்கும் அல்லவா?
நான்கு வருணாசிரம அடுக்கில் பெண்கள் எந்த வருணாசிரமத்தின் கீழ் வருவார்கள்!
பிராமணர்களா?
சத்திரியர்களா?
வைசியர்களா?
சூத்திரர்களா?
இதில் எதிலும் வர முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்ணஸ்தர்கள் பட்டியலில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களோடுதான் உங்களை இணைக்க வேண்டும் - ஏற்றுக் கொள்கிறீர்களா?
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் (மனுதர்ம சாஸ்திரம் அத்தி யாயம் 9 - சுலோகம் 17)
இதில் நீங்கள் எந்த இரகம் என்று நாங்கள் கேட்க மாட்டோம் - காரணம் - பாலியல் நீதியில் பார்ப்பனப் பெண்களுக்கும் எங்கள் கொள்கையால் நல்ல பலன் உண்டு.
'பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல் லுதல் பாதகமாகாது' (மனுதர்மம் 9 - சுலோகம் 343).
மீண்டும் இந்தக் காலத்துக்குப் போக வேண்டும் என்கிறீர்களே. இது நியாயம்தானா!
அய்ந்தாம் வேதம் என்றும், பகவான் கிருஷ்ணனால் அருளப்பட்டது என்றும் வானத்துச் சிம்மாசனத்தில் வைத்துக் கூத்தாடப்படும் கீதை என்ன கூறுகிறது?
பெண்களும், வைஷ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (ஙிஷீக்ஷீஸீ ளிut ஷீயீ கீஷீனீதீ ஷீயீ ஷிவீஸீ) (‘கீதை’ அத்தியாயம் 9 - சுலோகம் 32).
திருமதி பத்மா சுப்பிரமணியம் அம்மையார் அவர் களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்.
இந்தக் கீதையைக் கொளுத்தி, பெண்ணாகிய உங்கள் மானத்தையும், மரியாதையையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்பதுதான் அந்த வேண்டுகோள்!
இதனை நீங்கள் ஏற்க மாட்டீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஏன் எனில் உங்களுடைய பழைய கந்தாயம் எங்களுக்குத் தெரியும்.
மதுரையில் நடந்த 5ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழறிஞர்கள் மத்தியில் மூக்குடைபட்டது பிரசித்தம்.
பரத நாட்டியம் பரத முனிவரால் காஷ்மீரில் எழுதப்பட்டது என்று தாங்கள் கூறப்போக நாலாத் திசைகளிலிருந்தும் கணைகள் பாயவில்லையா?
ஏனிந்த பார்ப்பனத்தனம் என்று வினாக்கள் பாய்ந்து எழவில்லையா?
மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி மகாராஜன் அவர் களே சீறினாரே! ‘வேண்டாம் இந்தக் கட்டுக் கதைகள்? தமிழ்நாட்டில்தான் அந்தக் கலை கொட்டிக் கிடக்கிறது' என்று மண்டையில் அடிக்கவில்லையா?
ஏற்கெனவே இன்னொரு நடன நடிகை சுவர்ண மால்யா, 'தேவதாசி முறை மீண்டும் வர வேண்டும் - நாட்டியக் கலைக்கு அது தேவை' என்று தேவையில்லாமல் உளறி, வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லையா?
கடைசிக் கடைசியாக ஒன்று - வேத காலத்துக்குத் திரும்ப வேண்டும் என்று கூறுகிறீர்களே, நீங்கள் கூறும் அந்தப் பிராமணர்கள் - பிச்சை எடுக்கத் தயார்தானா?
பிச்சை எடுத்துதான் பிராமணர் ஜீவனம் செய்ய வேண்டும் என்பதுதான் வேத சாரம் - உங்கள் மகா பெரியவாளும் பல முறை சொல்லியிருக்கா.. ரெடி தானா?
அடடே, முக்கியமான ஒன்று அதைவிட்டு விடலாமா? வர்ணமுறையைச் சீரழித்ததால்தான் கரோனா போன்ற கொடிய நோய்களை சந்திக் கிறோம் என்று உங்களின் ஆங்கில உரையில் மங்களம் பாடியுள்ளீர்களே - அப்படியானால் உங்கள் ஹிந்து மதத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் கடவுள்களான மும்மூர்த்திகளும், மூன்று பெண் தெய்வங்களும் அட்டத்திக்கு பாலகர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும், மகா மகா பெரியவாள்களும் அட்டர் வேஸ்ட்டுதானா?
வாயை அடக்குங்கள் நர்த்தகி அவர்களே!
நடிகையர் ஜோதிகா கூறிய நியாயமான கருத்துக்குக் கண்டனக் கணைகளை ஏவிய கூட்டம் - பத்மா சுப்பிர மணியத்தின் ஆரியத் திமிர் பொங்கி வழியும் இந்த அடாவடித்தனப் பேச்சுக்கு வாயைத் திறக்காதது - ஏன்? ஏன்?
No comments:
Post a Comment