1925 ஆம் ஆண்டில் சுயமரியாதைச் சங்கத்தினை நிறுவிய பின்னர், தந்தை பெரியார் முதன்முதலாகச் சென்றது இன்றைய மலேசியா, சிங்கப்பூர் (அன்றைய மலாயா - Federated Malay States - FMS) ஆகிய நாடுகளாகும்.
1928-29 ஆம் ஆண்டில் முதல்முறையும், 1954-55 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையும் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு தந்தை பெரியார் பயணம் செய்தார். வாழ்வாதாரம் தேடி, புலம் பெயர்ந்து, தமிழர் களும் பிற இந்தியர்களும் நான்கு தலைமுறைகளுக்கு முன்னர் சென்றபொழுது மலேசிய வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இரப்பர் தோட்டங்களில் தொழி லாளர்களாகவும், உடல் உழைப்புத் தொழிலாளர்களுமாக வாழ்ந்தனர். தமிழகத்தில் நிலவிய ஜாதியின் தாக்கம் புலம் பெயர்ந்த பொழுதும், தமிழர்களிடையே சேர்ந்து தான் சென்றது. தந்தை பெரியார் தமது முதல் பயணத்தின் பொழுது சந்தித்து உரையாடிய தமிழர்களிடையே சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்து தமிழர் களிடையே ஜாதி உணர்வு கூடாது; பிறப்பால் பேதம் கற்பிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார். பல கூட் டங்களிலும் மாநாடுகளிலும் உரையாற்றினார். இரண்டாம் முறையாக 1954-55 ஆம் ஆண்டில் மியான்மர் (அன்றைய பர்மா) நாட்டு ரங்கூன் நகரில் நடைபெற்ற உலக புத்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு மலேசியாவிற்குச் சென்றார். இந்த இடைப்பட்ட 25 ஆண்டு காலத்தில் தமிழர்கள் பல முன்னேற்றங்களைக் கண்டனர். சுயமரியாதைக் கருத்துகளை உள்வாங்கி, கடைப்பிடித்து அமைப்பு ரீதியாக ஒற்றுமையாக வாழ்ந்தனர்.
மலேசிய திராவிடர் கழகம்
மலேசிய நாட்டு சட்டவிதிகளுக்கு உட்பட்ட அமைப்பாக 1946-ஆம் ஆண்டு மலேசிய திராவிடர் கழகம் (Persatuan Dravidian Malaysia) உருவாக் கப்பட்டது. மலேசிய நாட்டுக்கு விசுவாசமான குடி மக்களாகவும் அதே நேரம் தங்களது உரிமைகளை பெற்றிடவும் மலேசிய திராவிடர் கழகம் அரசியல் சாராத சமூக அமைப்பாகவே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டது. மலேசியநாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும், கிளைகள் தொடங்கப்பட்டு மலேசியா நாட்டு அரசியல் கட்சியினரே மலேசிய திராவிடர் கழகத்தின் செயல்பாட் டைப் பார்த்து வியந்தும் பாராட்டியும் வந்தனர்.
2000 - ஆண்டு தொடக்கத்தில் மலேசிய திராவிடர் கழக செயல்பாட்டில் ஒரு தொய்வு நிலை ஏற்பட்டு அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் பிரிந்து சென்று தனி அமைப்பு நிறுவி செயல்படத் தொடங்கிய காலம் வந்தது. அமைப்புரீதியாக தனியாகச் செயல்பட்டு வந்தாலும், பெரியார்தம் கொள்கையினைக் கடைப்பிடித்து, அதனைப் பிரச்சாரம் செய்திடும் பணியில் ஒரே தன்மை யினராக, உறுதிப்பாடு கொண்டவர்களாக இருந்தனர். அமைப்பு ரீதியாக பிரிந்து செயல்பட்டாலும், தமிழகம் வருவதும், திராவிடர் கழகத்தின் தலைமையிடமான சென்னை-பெரியார் திடலுக்கு வருகை தருவதும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் மீது மாறாத பற்றும் மரியாதையும் கொண்டவர்களாகவே அந்த அமைப்பினர் இருந்து வந்தனர். அந்த அமைப்பினர் தம்மை சந்திக்க வரும் பொழுதெல்லாம், அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தமிழர் தலைவர் வலியுறுத்தி வந்தார். காலப் போக்கில் ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவ சியத்தை பிரிந்து சென்ற தோழர்களும் உணரத் தொடங்கினர். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக ஆனார்கள்.
மலேசிய திராவிடர் கூட்டமைப்பு
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர் திருச்சுடர் கே. ஆர். ராமசாமி அவர்களின் பெயர்த்தியான, அவரது மகன் கே. ஆர். ஆர். அன்பழகனின் மகளுக்கு சுயமரியாதை சீர்திருந்த திருமணத்தை நடத்தி வைக்க தமிழர் தலைவர் மலேசிய நாட்டிற்குச் சென்றிருந்தார். திருமணம் நடைபெற்ற அடுத்த நாள் 24.12.2019 அன்று பிரிந்து சென்ற அமைப்புகளின் பொறுப்பாளர்களையும், மலேசிய திராவிடர் கழகத்தின் பொறுப்பாளர்களையும், தமிழர் தலைவர் சந்தித்து கலந்துறவாடி அதன்படி மலேசிய திராவிடர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் மலேசிய திராவிடர் கழகம், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகம், மலேசிய தமிழர் தன்மான இயக்கம் மற்றும் பேராக் மாநில பெரியார் பாசறை ஆகிய அமைப்புகள் அங்கம் வகித்தன.
அமைப்பு ரீதியாக தனித்தனியாக செயல்பட்டாலும், பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் தேவைப்படும் காலக் கட்டங்களில் பெரியார் பற்றாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக கூட்டமைப்பு இருந்திடும் எனும் உறுதிமொழியினை நான்கு அமைப்பின் பொறுப்பாளர் களும் ஏற்றுக் கொண்டனர். அப்படி உருவாக்கப்பட்ட ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் சார்பாக தந்தை பெரியாரின் 46-ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியினை நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அறிவுரையை கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம்பூரிலும், பல்வேறு மாநிலங்களிலும் டிசம்பர் 24, 2019 தொடங்கி தந்தை பெரியாரின் நினைவுநாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றிட தமிழர் தலைவர் அவர்கள் தமிழக திராவிடர் கழகத்திலிருந்து பொறுப்பாளர் ஒருவரை அனுப்பி வைப்பதாகக் கூறிவந்தார். கழகத் தலைவர் தமிழர் தலைவரின் அறிவுறுத்தல்படி மலேசிய நாட்டில் நடை பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிடும் அரிய வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. மலேசியா நிகழ்ச்சிகளில் பங்கேற் றிட டிசம்பர் 23-ஆம் நாள் காலை 8.30 மணிக்கு சென் னையிலிருந்து கோலாலம்பூர் செல்லும் ஏர் ஆசியா (Air Asia) விமானத்தில் பயணம் செய்தோம்.
மலேசிய நாட்டு நேரத்திற்கும், இந்திய நேரத்திற்கும் நிலவிடும் வேறுபாடு 2.30 மணி. மலேசிய நாடு உலகப் பந்தில் இந்தியாவிற்கு கிழக்குப் பக்கத்தில் இருப்பதால் விடியலும், இரவும் 2.30 மணி நேரம் முன்னதாகவே வந்துவிடும். விமானப் பயணநேரம் 4.00 மணி. மலேசிய நாட்டு நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்தோம். விமான நிலையத்திற்கு மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன். பொன்வாசகம், தேசியப் பொருளாளர் கு. கிருஷ்ணன், மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு, (மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தேசியப் பொருளாளர்), ஆலோசகர் ரெ.சு. முத்தையா (மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் தேசியத் தலைவர்) ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
விமானப் பயணத்திலேயே சிற்றுண்டி அளிக்கப்பட்டு இருந்தாலும், நண்பகல் உணவினை (மலேசிய நேரப்படி மாலை 6.30 மணி) இந்திய நேரம் மாலை 4.00 மணிக்கு அருந்திடும் சூழல் ஏற்பட்டது. நேர வேறுபாடு காரண மாக உணவு உண்ணும் நேரமும் மாறத் தொடங்கியது. மலேசிய திராவிடர் கூட்டமைப்பின் தோழர்கள் தொடர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மின்னல் பண்பலையில் உரைப் பதிவு
விடுதி அறைக்குச் செல்வதற்கு முன்பாகவே மலேசிய நாட்டு அரசாங்கத் தினர் நடத்திவரும் மின்னல் பண்பலையில் (Minnel FM) ஓர் உரை ஆற்றிட ஏற்பாடு செய்திருந்தனர். 'இலக்கியத்தில் ரசித்தவை' எனும் தலைப்பில் உரை ஆற்றிடப் பணித்தனர். யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் சங்க இலக்கியக் கூற்றிலிருந்து தொடங்கி, தந்தை பெரியார் போற்றிப் பரப்பிய திறக்குறளில் உள்ள 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' மற்றும் பிற பாக்களில் தந்தை பெரியாரின் மனித நேயத்திற்கும் பகுத்தறிவிற்கும் வலு சேர்த்திடும் கருத்துகள் உள்ளதை எடுத்துச் சொல்லி உரையாற்றிடும் வாய்ப்பு கிடைத்தது. மின்னல் பண்பலை நிகழ்ச்சி ஒலிப்பதிவு முடிந்ததும், அந்த நிகழ்ச்சியின் பொறுப் பாளரிடம் விடைபெற்ற பொழுது அவரது பெயரைக் கேட்ட பொழுது சரஸ்வதி எனக் கூறினார். உடனே நமது தமிழர் தலைவர் பல கூட்டங்களில் - குறிப்பாகப் பெண்கள் - மாணவியர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அடிக்கடி குறிப்பிடும் செய்தியை அந்த அறிவிப்பாளரிடம் கூறிடும் வாய்ப்பு கிடைத்தது. கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்று கூறப்பட்டது. இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் சரஸ்வதி எனும் பெயர் கொண்ட பெண்கள்கூட கல்வியறிவு, எழுத்தறிவு இல்லாதவர்களாகத்தான் இருந்தனர். ஆனால் இன்று அதே பெயர் கொண்ட மகளிர் பலர் படித்துப் பட்டம் பெற்று ஆட்சி அதிகாரம் செலுத்திடும் பணிகளில் உள்ளனர். பாட்டி சரஸ்வதி கல்வி அறிவு இல்லாதவர்; பேத்தி சரஸ்வதி கல்வியாளர். இந்த புரட்சிகர மாற்றத்திற்கு வித்திட்டு, தொடர்ந்து பாடுபட்டு, வெற்றி கண்டவர் தந்தை பெரியார் எனச் சொல்லியதும், சரஸ்வதி எனும் அந்த அறிவிப்பாளர், பெண் விடுதலைக்கு - முன்னேற் றத்திற்கு உழைத்தவர் தந்தை பெரியார் என்பதை அறி வோம் எனச் சொன்ன பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.
செய்தியாளர் கூட்டம்
மின்னல் பண்பலை நிகழ்ச்சியினை முடித்துக் கொண்டு நேராக தங்கும் விடுதிக்கு (Hotel Regal) வந்தோம். தோழர் பொன். பொன்வாசகம் மாலை 7.00 மணி அளவில் மறுநாள் (24.12.2019) நடைபெறவிருக்கும் தந்தை பெரியாரின் 46-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சி பற்றி விளக்கும் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதை நினைவூட்டி உடனே அதற்குச் செல்ல வேண்டும் எனக் கூறினார். அரை மணி நேர இடைவெளியில் விடுதியிலேயுள்ள உணவரங்கிலே செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய பொதுச்செயலாளர் பொன். பொன்வாசகம் தந்தை பெரியாரின் நினைவுநாள் பற்றியும் அதில் கலந்து கொள்ள இருப்போர் பற்றியும் சுருக்கமாக எடுத்துரைத்தார். பின்னர் நான் பேசும் பொழுது தந்தை பெரியார் இரண்டு முறை மலேசிய நாட்டிற்கு வருகை தந்தது பற்றியும், புலம் பெயர்ந்து வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்திட சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்ததையும், அதனால் ஏற்பட்ட மேம்பாட்டு விளைவு களையும் விளக்கிக் கூறிடும் வாய்ப்பு கிட்டியது. 1925 இல் தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் இன்று உலகளாவிய அளவில் அனைத்து நாட்டு மக்களும் பின்பற்றத்தக்க, பயனடைந்திடும் வகையில் மனிதநேய நோக்குடன் உள்ளதையும் கூறினோம். செய்தியாளர் சந்திப்பின் பொழுது மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் தலைவர் நாக. பஞ்சு, ஆலோசகர் ரெ.சு. முத்தையா மற்றும் மலேசிய திரா விடர் கழகத்தின் தேசியப் பொருளாளர் கு. கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். மலேசிய நாட்டின் முன்னணி நாளிதழ்களான தமிழ்முரசு, மலேசிய நண்பன், தமிழ்மலர் ஆகியவற்றின் செய்தியாளர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். (அடுத்தடுத்த வந்த விடு முறைகளின் காரணமாக அடுத்த நாள் நடைபெற்ற தந்தை பெரியாரின் 46-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சிக்கும் செய்தியாளர்கள் வருகை தந்தாலும் அது குறித்த பத்திரிகை செய்தி சற்று தாமதமாகவே அனைத்து ஏடுகளிலும் வந்தது). செய்தியாளர் சந்திப்பு முடிந்து, அனைவருடனும் இரவு உணவினை அருந்தி விடுதியை ஒட்டி உள்ள சாலையில் இளைப்பாறுதலுக்கு நடந்து சென்றோம். விடுதிக்கு அருகிலேயே டத்தோ துன் சம்பந்தன் பெயரிலான பல அடுக்குநிலை கட்டடம் கம்பீரமாக இருந்தது. அந்தக் கட்டட வளாகத்தில் உள்ள டத்தோ சிறீ கே.ஆர் சோமா அரங்கில்தான் அடுத்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது எனச் சொன்னார்கள். மலேசிய நாடு விடுதலை அடைந்த பொழுது நாட்டு நிர்மாணத்தில் முக்கிய பங்காற்றியவர் தமிழர் சம்பந்தன் ஆவார். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு பலவிதங்களில் உதவி புரிந்து பொதுப்பணி ஆற்றியவர். மலேசிய நாட்டு கூட்டுறவுக் கழக அலுவலகம் அவரது பெயரால் அமைந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அவரை அடுத்து பொது வாழ்க்கையில் சேவை புரிந்து இன்றும் வரலாறாக வாழ்ந்து வரும் தமிழர், அய்யா கே.ஆர். சோமசுந்தரம் அவர்களது பெயரில்தான் அந்தக் கட்டடத்தில் அரங்கம் அமைந்துள்ளது. பெரியார் இயக்கக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு கோலாலம்பூர் மாநகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள டத்தோ சிறீ கே.ஆர் சோமா அரங்கம் பல வகையிலும் வசதியாக உள்ளது. அய்யா சோம சுந்தரம் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர். 83-வயதில் வாழ்ந்து வரும் அய்யா சோமசுந்தரம் அவர்களை நவம்பர் மாதம் கோலாலம்பூருக்கு வந்த பொழுது தமிழர் தலைவர் நேரில் சந்தித்து உரையாடினார்.
மலேசிய நாட்டிற்கு முதல் பயணமாக இருந்த எமக்கு கோலாலம்பூர் நகரில் இருந்து முதல் நாள் நிகழ்ச்சிகள், அடுத்தடுத்து தொடர்ந்து நிகழ்ச்சிகள் இருந்தாலும், அவையனைத்தும் மனதிற்கு நிறை வளிக்கும் வகையிலேயே இருந்தன.
(தொடரும்)
- ஒரு தொகுப்பு -
* வீ. குமரேசன்
No comments:
Post a Comment