‘எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம்' என்ற முழக்கத்தின் மற்றுமொரு பரிணாமம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 22, 2020

‘எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம்' என்ற முழக்கத்தின் மற்றுமொரு பரிணாமம்!

‘விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா!



‘‘எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம்'' என்ற முழக்கத்தின் மற்றொரு பரிணாமம் - ‘விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா! வாசகர் சங்கிலிமூலம் வாகை சூட வரிந்து கட்டுங்கள் தோழர்களே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:


பேரன்பிற்குரிய ‘விடுதலை' வாசகப் பெருமக்களே,


கழகக் கொள்கைக் குடும்பத்து உறவுகளே,


பகுத்தறிவாளர் கழகத்தின் அரிய வரவுகளே,


சமூகநீதிக் களத்தில் ‘விடுதலை'யால் பயன் பெறும் இளைஞர், மாணவர், மகளிர் பட்டாளங்களே,


கருத்துக் கதிரொளி பரப்பும் நாளேடு ‘விடுதலை!'


‘விடுதலை' தனது லட்சியப் பயணத்தின் 86 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் (ஜூன் 1 இல்) இந்நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்துக் கூறுவதில் மிகவும் மகிழ்கிறது .


கரோனா ஊரடங்கால் - உலகடங்கால், அன்றாட வாழ்வின் முடங்கல் - இவற்றைப் பொருட்படுத்தாது, இயற்கை உற்பாதங் களையும் எதிர்கொள்ளும் அறி வியல் பணியோடு தனது கடமையை ‘விடுதலை' அடக்கமாக, முடிந்த அளவுக்கு நம் கடன் சமுதாயப் பணியாற்றுவதே என்பதால் - நான்கு பக்கங்களாக அளவைக் குறைத் தாலும், ‘சரக்கு முடுக்கை'க் குறைக்காமல், அன்றாட அறிவுப் பசி தீர்க்கும் அறுசுவை என்று கூற முடியாவிட்டாலும்கூட, சத்துணவு, ஊட்டச் சத்தில் என்றும் நாட்டஞ்செலுத்திக் கடமையாற்றிவரும் கருத்தொளி நாளேடு நம் ‘விடுதலை'யாகும்!


‘விடுதலை'யின் ‘வாட்ஸ்-அப்' வாசகர் வட்டம் இந்தக் காலகட்டத்தில் விரிந்து பெருகி வருவது, பலரது மகிழ்ச்சி கலந்த வரவேற்பு, நம்மை உழைக்கும் பொறுப்பிலிருந்து நாளும் நகர விடாது - நன்றாகக் கடமையாற்ற பெரிதும் உந்துகிறது.


சமூகத் தொற்று நோய் ஒழிப்புப் பெரும் பணி எப்போதும் நமக்கு!


கரோனா நோயை விரட்டும் பணி இப்போது;


அறியாமை, ஜாதி, தீண்டாமை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்ற பிறவி பேத நோய் ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற சமூகத் தொற்று நோய் ஒழிப்பு என்ற  பெரும் பணி எப்போதும் நமக்கு!


‘பார்ப்பனீய வைரஸ்' போன்ற கொடு மையான நோய்த் தொற்றால், நம் உழைக்கும் சமூகம், கல்வி, பொருள், வாழ்வாதாரத்தை மட்டும் இழக்கவில்லை; இழக்கக் கூடாத உயிரினும் மேலான மானத்தையும், அறி வையும்கூட இழந்து வருவதை எதிர்க்கும் அறிவுப் போரை - கடந்த ஒரு நூறாண் டுக்குமேல் தொடர்ந்து நடத்திடும் இயக்கம் நம் இயக்கம் என்றால்,


அதனுடைய சக்தி வாய்ந்த போர்க் கருவி, படைக்கலன்தான் என்றும் முனை மழுங்காத ‘விடுதலை' என்ற அறிவாயுதம்!


‘விடுதலை' தனது நெடிய


நேர் பயணத்தை நிறுத்தாமல் தொடர்கின்றது!


அதனை நாளும் பரப்பிடுவதன்மூலம் மக்களின் அறியாமை, கல்லாமை, இல்லாமை, முயலாமை, இயலாமை - நோய்களையெல்லாம் விரட்டி அடிக்கலாம் என்பதால்தான், எத்துணை சோதனை, இழப்புகள், தடைகள் வந்தாலும், ‘விடுதலை' தன்னுடைய நெடிய நேர் பயணத்தை நெஞ்சை நிமிர்த்தித் தொடர்கின்றது!


கரோனா என்ற தொற்றுப் புயலில் பெரும் பத்திரிகை மரங்கள் சாய்ந்து தள்ளாடுகின்றன. இந்த சிறு நாணலோ அதன் பணியை ஆர வாரமின்றி அமைதியாக செய்து, அறிவு கொளுத்தி வருவதில் அகமகிழ்ச்சி அடை கிறது!


‘சபாஷ்', ‘பலே பலே' என்று தட்டிக் கொடுத்தால் மட்டுமே போதுமா தோழர்களே,


ஆக்கப்பூர்வச் செயலை - உடனடியாக களத்தில் இறங்கி ‘காரிய சித்தியாக்கிக்' காட்டத் தவறலாமா நீங்கள்?


‘‘‘விடுதலை' வாசகர் விளைச்சல் பெருவிழா!''


‘‘‘விடுதலை' வாசகர் விளைச்சல் பெரு விழா!''வை 2020 ஜூன் ஒன்றாம் தேதி - ‘விடுதலை'யின் 86 ஆவது பிறந்த நாள் விழாவில் தொடங்கி தொடர்ந்து கொண்டாட - சங்கிலித் தொடர் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திட, ஒவ்வொரு இயக்கத் தோழரும், அதுபோலவே, எக்கட்சி ‘விடுதலை வாசக ராயினும்', திட்டமிட்டு தெவிட்டாத தேனாகச் செய்து, சுவைத்து மகிழலாமே!


எச்செலவுமின்றி, சிறு அளவில் நாளும் கடமையாற்றுதல் - ஒவ்வொரு வாசகரும் தங்கள் கைத்தொலைப்பேசியில் ‘விடுதலை' வாட்ஸ்-அப்' இணைய வழி 20 முதல் அதிகபட்சம் எவ்வளவு உற்றார், உறவினர், கொள்கையினர், தோழர்கள், அறிமுகமானோர், அவசியமாகப் படிக்க வேண்டியவர் என்ற பட்டியல் ஒன்றை நாளையே தயாரித்து, நாளும் இதற்காக  ஒரு 30 மணித்துளிகளை ‘‘‘விடுதலை' வாசகர் எண்ணிக்கை விரி வாக்கத்திற்கு இதோ எனது தொண்டு'' என்று கருதி பணியாற்றுங்கள்!


ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வாசகர்கள் - மிக எளிதில் உலகம் முழுவதும் இப்போது படிக்கிறார்கள் என்ற எண்ணிக்கை மேலும் மேலும் பெருகிடும் ஒரு வாய்ப்பு ஏற்படும்!


எவரும் செய்ய முடியாததை


நாம் செய்வோம் என்ற முழக்கத்தின் மற்றுமொரு பரிணாமம் இது!


எடுத்துக்காட்டாக நாம் 20 பேருக்குப் பகிர்கிறோம் என்றால், அந்த இருபது பேரும் தங்களால் முடிந்த எண்ணிக்கையில் மற்றவர் களுக்குப் பகிரச் செய்தால், இந்த இலக்கை எளிதில் எட்டலாமே - தொடர் ஓட்டப் பணி  (Relay Race) போன்றது இது!


‘விடுதலை'யால் நேரிடையாகவே பயன் அடைந்தோர் எத்தனை எத்தனை இலட்சம்! இன்னும் பலன் பெறவேண்டிய பணிகளும் இருக்கத்தானே செய்கின்றன? அந்தப் பொறுப் பும், கடமையும், நன்றியும் நம் திராவிடப் பெருமக்களுக்கு இருக்கவேண்டாமா? இதில் பொருள் செலவு கிடையாது - மனமிருந்தால் மார்க்கமுண்டு - உழைப்பிருந்தால் வெற்றி நிச்சயம்!


இதற்கான தூண்டும் சக்தியாக நம் இயக்கத் தோழர்கள் தொண்டு மனப்பான்மையோடு துரிதமாகப் பணியாற்ற வேண்டாமா?


களத்தில் இறங்குங்கள்!


ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ‘விடுதலை' சந்தாக்களைச் சேர்த்துக் கொடுத்த சக்தி வாய்ந்த நம் கருஞ்சட்டைச் சேனைக்கு - செலவில்லாத இந்தப் பணியைச் செய்து முடிப்பதில் சேதாரம்தான் ஏது?


முண்டியடிக்கும் ‘‘முரட்டுத்தனத்துடன்'' ஈடுபடுவோம்! ‘‘எவரும் செய்ய முடியாததை நாம் செய்வோம்'' என்ற முழக்கத்தின் மற்றுமொரு பரிணாமம்தான் இது!


வாசகர் சங்கிலிமூலம்


வாகை சூட வைப்பீர்!


‘விடுதலை' வாசகர்களே, ஒரு வாசகர் சங்கிலிமூலம் வாகை சூட வைக்க வரிந்து கட்டுங்கள் தோழர்களே!


உங்களுக்குத் தோன்றும் மற்ற புதுப்புது உத்திகளையும் பயன்படுத்தி, ‘‘விடுதலை வாசகர் விளைச்சல் பெருவிழா!''வை - வாரத் திருவிழாவாக்குங்கள் - இருந்த இடத்தி லிருந்தே!


காணொலி நடத்தினீர்கள்; பாராட்டு! கருத்தொலியின் முழக்கம், கருஞ்சட்டைகளின் சங்கநாதம் உலகெங்கும் ஒலிக்க ஓடோடி வந்து, உதவுங்கள் தோழர்களே!


ஓயாதீர்! ஓயாதீர்!!


நன்றி! நன்றி!!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


22.5.2020 


No comments:

Post a Comment