ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
2050 ஆம் ஆண்டிலாவது ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு ஒழிக்கப்படுவதுபற்றி அரசு சிந்திக்கவேண்டும் என்று கூறும் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
September 9, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

ஜாதியை ஒழித்திட சட்டம் வரட்டும் - 2040 ஆம் ஆண்டிலேயேகூட

‘இட ஒதுக்கீடு ஒழிக்கப்படும் நிலை' ஏற்பட்டுவிடும்!

2050 ஆம் ஆண்டிலாவது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப் படுவது குறித்து அரசு சிந்திக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். இட ஒதுக்கீடுக்குக் கார ணமான ஜாதியை ஒழிக்கும் வகையில் சட்டம் தேவை என்று நீதிபதி கூறி யிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்; ஜாதியை அரசியல் சட்டப்படி ஒழிக்கட்டும், 2050 என்ன? 2040 ஆம் ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை ஒழிக்க முடியும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்னாள் (7.9.2020) விசாரணைக்கு வந்த தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சம் பந்தப்பட்ட வழக்கொன்றில், அதை விசா ரித்த மாண்பமை நீதிபதி ஜஸ்டீஸ் திரு. எஸ்.வைத்தியநாதன் அவர்கள் ஒரு கருத்தை திடீரென்று குறிப்பிட்டு, அது ஏடு களிலும், ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது.

இட ஒதுக்கீட்டை ஒழிப்பது குறித்து நீதிபதி....

மாநில அரசு 2050 ஆம் ஆண்டிலாவது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட் டினை ஒழித்திட வேண்டி சிந்திக்கவேண்டும் என்று யோசனை கூறுவதுபோல கூறி யிருக்கிறார்!

பொதுவாக வழக்குகளை விசாரிக் கும்போது நீதிபதிகள் தங்கள் சொந்தக் கருத்துகளைக் கூறுவதும், அதை ஊட கங்கள் விளம்பரப்படுத்துவதும் சரிதானா என்ற கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.

அரசமைப்புச் சட்டப்படிதான் தற் போதுள்ள இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை முதன்முதலில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியது திராவிடர் இயக் கமோ, மாநில அரசுகளோ அல்லது சட்டத் திருத்தங்கள் மூலம் செயல்படுத்திவரும் மத்திய அரசோ அல்ல. பின் யார்?

மனுதர்மம்தானே காரணம்?

மனுதர்மம்தான் அதனைச் செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜாதிகளைப் பிரசவித்தார் பிரம்மா; தனது தலையில் பிராமணனையும், தோளில் க்ஷத்திரியனையும், தொடையில் வைசி யனையும், காலில் சூத்திரனையும், (பஞ்சமர், பெண்கள் அவர்ணஸ்தர்கள் - ளிut சிணீstமீs) என்றும், இவர்களில் கல்வி, அதன் காரணமாக உத்தியோகம் பிராமணனுக்கே என்றும்; மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் பொறாமையின்றி குற்றேவல் செய்வது சூத்திரர்களின் கடமை என்றும் பிரித்து இட ஒதுக்கீட்டை உருவாக்கியது மனுதர்மம் தானே?

அந்தப் பாதிப்பின் காரணமாகத்தானே, நாட்டின் மிகப்பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்களான ‘சூத்திரர்கள்', ‘பஞ்சமர்கள்', ‘பெண்கள்' தங்களது உரிமைகளான கல்வி, வேலை வாய்ப்பைப் பெற முடியாத நோயின் கொடுமையிலிருந்து மீளும் சிகிச்சை முறைதானே இட ஒதுக்கீடு என்பது.

பந்தியில் பசியேப்பக்காரர்களை வெளியே நிறுத்திவிட்டு, பட்டினி போட்டு கொன்ற கோரக் காட்சியை மாற்றி, புளியேப்பக்காரர்களே மீண்டும் மீண்டும் அமர்ந்து அஜீரணமாகும் வண்ணம் விருந்தைச் சாப்பிடுவது நியாயமா? ‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது' என்ற மனுவின் அதர்மத்திலிருந்து மீட்கப்படு வதற்கே கடந்த 100 ஆண்டுகளுக்குள் இந்த இட ஒதுக்கீடு - இருந்தாலும் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் போதுமான அளவில் கிடைக்கவில்லையே!

இந்த வரலாற்றை மாண்பமை நீதிபதி அறியாதவராக இருக்க முடியாதே!

நீதிபதியின் பரிந்துரை எதுவாக இருக்கவேண்டும்?

அதுமட்டுமா? இந்த இட ஒதுக்கீட்டின் தேவை என்பதால், ஜாதி இதனால் பாது காக்கப்படுகிறதே என்பது அவரது கவலையானால், அவர் எதைப் பரிந்துரை செய்திருக்கவேண்டும்? அல்லது கூறி யிருக்கவேண்டும்?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ‘ஜாதி ஒழிக்கப்படுகிறது' என்ற அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து, 17 ஆவது பிரிவில் உள்ள ‘தீண்டாமை' என்ற சொல்லுக்குப் பதில் ‘‘ஜாதி'' என்று போட்டு, ஜாதி ஒழிக்கப்படுகிறது. ஜாதியோ, ஜாதிச் சின்னமோ நாட்டில் எங்கும் இனி இருக்கக் கூடாது என்று சட்டத்தை அவ சரமாகக் கொண்டு வரவேண்டும்; ‘சுதந்திரம்' பெற்று 73 ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், பிராமணன் - சூத்திரன் - பஞ்சமன் என்று கூறலாமா? திருமண விளம்பரங்களில் தனித் தனி ஜாதிக்கென திருமண அமைப்புகள் இயங்கலாமா? ஜாதிச் சின்னங்களான பூணூல் போன்றவை அதற்குப் பிறகு இருக்கலாமா? மனித குலத்தை - குறிப்பாக இந்தியாவில் எல் லோருக்கும் ஒரே வாய்ப்பு - ஒரே ஜாதிதான் - ஒன்றே குலம்தான் என்று கூறட்டுமே!

கேரளாவில் நடைபெற்ற பிராமணர்கள் மாநாட்டில் ஓர் உயர்நீதிமன்ற நீதிபதியே பங்கு கொண்டு முழங்கியது உண்டே! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரும் அந்த பிராமணர்கள் சங்க மாநாட்டில் பங்கேற்றுள்ளாரே!

ஜாதி ஒழிப்புச் சட்டம் வரட்டும் -

இட ஒதுக்கீட்டைக்

கைவிடத் தயார்!

பிராமணர் சங்கம் என்பதற்குள்ளே அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா என்றெல்லாம் பல பிரிவுகள் உள் அடக்கம் என்பது யாருக்குத் தெரியாது?

ஜாதி ஒழிந்தது என்று நாளை அறிவிக்கட்டும்; அதற்கடுத்த நாள் முதல் இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் தேவையே இருக்காதே!

ஜாதி ஒழிப்பைத்தான் இட ஒதுக்கீடு கோரும் நாம் விரும்புகிறோம்.

ஜாதி ஒழிப்பு இலட்சியம் - இலக்கு. அதை அடையும்வரை ஏற்றத் தாழ்வு, ஜாதிக் கொடுமையால் ஏற்பட்ட கல்வி, உத்தியோக வாய்ப்புக் கேட்டினை சரிப் படுத்தவே - மேடு பள்ளங்களை சமப் படுத்தவே - இடைக்காலத் தீர்வாக, ஏற்பாடாகத்தான் இந்த இட ஒதுக்கீடு? உலகம் உள்ளளவும் இது நிரந்தரமாக இருக்கவேண்டும் என்பது நமது நிலைப் பாடோ, கோரிக்கையோ அல்ல; அல்லவே அல்ல!

பலமுறை ஓர் உதாரணம்மூலம் விளக்கியுள்ளோம்.

எதுவரை இட ஒதுக்கீடு?

பாலம் கட்டி முடிக்கும்வரை பயணங்கள் மாற்றுப் பாதையில் (Diversion Road) தானே செல்ல முடியும்?

‘‘எவ்வளவு காலத்திற்கு இந்த மாற்றுப் பாதைப் பயணம்?'' என்று கேட்டால், அதற்கு ஒரே பதில், எவ்வளவு விரைவில் பாலம் கட்டி முடிக்கப்படுகிறது (ஜாதி சட்டப்படி ஒழிக்கப்படுகிறது) என்பதைப் பொறுத்ததுதானே!

அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படை உரிமை அத்தியாயத்தின்கீழ் உள்ள இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் ஒன்று வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்டது - 16 ஆவது பிரிவு. அதில், 16(4) இல் உள்ள விளக்கமும் இட ஒதுக்கீட்டினை முடி விற்குக் கொண்டுவரும் வழிமுறைக்கு வெளிச்சம் காட்டியுள்ளதே!

‘‘Nothing in this article, shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State. ...''

இதன் தமிழாக்கம் வருமாறு:

‘‘இந்த சரத்திலுள்ள எதுவும், அரசின் கீழுள்ள பணியங்களில் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் எதனையும் சேர்ந்த குடிமக்களின் நலச்சார்பாகப் பதவியமர்த்தங்களை அல்லது பணி யிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடு எதனையும் அரசு செய்வதற்குத் தடை இல்லை.''

இதன்படி, தீர்வு கூறப்பட்டுள்ளதே, Adequately என்ற சொல் லத்தின் மூலச் சொல்  ‘Adequatus'  என்பதிலிருந்து வந்தது; அதற்கு என்ன பொருள்? ஆங்கில அகராதியின் விளக்கம் ‘Till it is equalized' மற்றவர்களை சமப்படுத்தும் வரையில் என்பதுதான்.

இதையெல்லாம் நம்மைவிட கூடுத லாகவே மாண்பமை நீதிபதிகள் அறி வார்களே!

எனவே, ஆதிக்கம் செலுத்துகின்ற வர்களுக்குச் சமனிய முறையில் நிலை மைகள் சரி வர வைத்தால், பிறகு சமூகத்தில் மேடும் இருக்காது; பள்ளமும் இருக்காது - எல்லாம் சமதளமாகி விட்டால் மண் அள்ளி பள்ளத்தை மேடு அளவுக்குக் கொட்டும் அளவுக்கு வேலையே இராது.

சமப் போட்டி என்பது என்ன?

தற்போது அதுபற்றி கவலைப்படாமல், மேட்டில் ஒரு கூடை மண், பள்ளத்தில் ஒரு கூடை மண் போடும் முறை. சமத்துவம் Equality- சம வாய்ப்பு  Equal Opportunity   என்று வியாக்கியானம் செய்வதால்தானே இட ஒதுக்கீடு நீட்டப்பட வேண்டிய அவசியம்.

There can be equality only among equals; not among unequals.

சம பலம் உள்ளவர்களிடையே நடக்கும் போட்டிதான் - சமப் போட்டிதான் சரியான தாக இருக்க முடியும் - ஒரு நோஞ்சானையும் - கிங்காங்கையும் ‘சம வாய்ப்பு' என்று கூறி, கோதாவில் இறக்கிவிட்டால், நியாயமா?

ஜாதி ஒழிக்கப்பட்டால்

2040 இல் கூட

இட ஒதுக்கீடு போய்விடும்!

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் 2010 லேயே (பத்தாண்டுகளுக்கு முன்பே)

State of Uttar pradesh

Vs

Ram Sajivan

(AIR 2010 s.c. 1738)

என்ற வழக்கில் ஜாதியை ஒழிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதை வற்புறுத்தியும், 10 ஆண்டுகளாக எந்த அரசும் கண்டு கொள்ளாதது ஏன் என்ற கேள்வி அல்லவா மய்யப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்?

‘‘It is absolutely imperative to abolish the caste system as expediously as possible, for the smooth functioning of Rule of Law and Democracy in our Country.''

இதன் தமிழாக்கம் வருமாறு:

“நம் நாட்டில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும் தடையின்றி செயல்பட, எவ்வளவு விரைவாக ஜாதி முறையை ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஒழிப்பதே முக்கியமானதாகும்.”

எனவே, ஜாதி ஒழிந்தால் 2050 என்ன, 2040 இல் கூட இட ஒதுக்கீட்டை நீக்க முடியும்; அதேநேரத்தில், சமவெளி - சமதளம் அதற்குள் ஏற்படுத்தப்பட வேண்டும்; ‘எல்லோருக்கும் எல்லாம்' - ‘அனைவருக்கும் அனைத்தும்' கிட்டினால், இட ஒதுக்கீடு தேவைப்படாது என்பதே யதார்த்தமான உண்மையாகும்!

 

 

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

9.9.2020