ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
1971 ஆம் ஆண்டு தேர்தலில் என்ன நடந்ததோ - அதே நிலைதான் 2021 தேர்தலிலும் நடக்கும்!
July 22, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

சாதனை படைத்த திராவிடர் இயக்கத்தின் வரலாறு நூற்றாண்டைக் கடந்தது

அலட்சியப்படுத்த வேண்டியதை அலட்சியப்படுத்துவீர் - வெற்றியே நமது இலக்கு!

1971 ஆம் ஆண்டு தேர்தலில் எதிரிகள் எப்படி நடந்துகொண்டனரோ - அதேபோல் தான் இப்பொழுதும் நடந்துகொள்கிறார்கள் - 1971 தேர்தல் முடிவுதான் 2021 தேர்தலிலும் நடக்கும் - அலட்சியப்படுத்தப்பட வேண்டி யவைகளை அலட்சியப்படுத்தி, வெற்றியே நமது இலக்கு என்று உழைப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உண்மையான திராவிடர் இயக்கங்களின் வரலாறும், வளர்ச்சியும் ஒரு நூற்றாண்டைக் கடந்த வரலாறு.

சமூகநீதிக்காகவே போர்ச் சங்கு ஊதி, போர் முழக்கம் செய்து, புரியாத மக்களைப் புரிய வைத்து,  இயக்கம் தொடங்கிய 3, 4 ஆண்டுகளிலேயே பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அழைக்கப்பட்ட நமது திராவிடர் இயக்கம் செய்த சாதனைகள் - அதுவும் மத்தியில் பிரிட்டிஷ்காரர்களி டையே அதிகாரங்கள் குவிந்த நிலையில், 6 ஆண்டு ஆட்சியிலும், அதன் ஆதரவு பெற்ற ஆட்சிகள்மூலமும் சாதித்தவை உள்பட ஏராளம்! ஏராளம்!!

வகுப்புரிமைமூலம் கல்வி, வேலை வாய்ப்புகள், பெண்களுக்கு வாக்குரிமை உள்பட பல்வேறு உரிமைகளும் அவ் வாட்சியின் பெருமைமிகு அருட்கொடை கள் - அடிமைகளாய், ஆமைகளாய், ஊமைகளாய் இருந்த நமது ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கப் பெற்றன.

அதன் தொடர் அத்தியாயம்தான் அறிஞர் அண்ணா அவர்களால், 1967 இல் அமைக்கப்பட்ட மீள் எழுச்சி வரலாறான தி.மு.க.வின் ஆட்சி.

அண்ணாவின் அறிவிப்பு

அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா வெற்றிக் கனி பறித்தவுடன் விரைந்தது திருச்சி பெரியார் மாளிகையை நோக்கித் தான்!

18 ஆண்டுகள் பிரிவு பாசத்தை, பந்தத் தைப் பெருக்கியதே தவிர, சுருக்கிடவில்லை என்பதை இன எதிரிகள் கண்டு அதிர்ந்தனர் - அயர்ந்தனர். ‘எங்களை வழி நடத்துங்கள் எங்கள் ஆசானே!' என்றார் அண்ணா. நாவலரும், கலைஞரும், அன்பிலும் சென் றார்கள் - வென்றார்கள் தங்கள் ஆசானின் வாழ்த்துகளை!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘‘தந்தை பெரியாருக்கே இந்த அமைச்சரவையைக் காணிக்கையாக்குகிறோம்'' என்று பிரகட னப்படுத்தினார் (20.6.1967) முதலமைச்சர் அறிஞர் அண்ணா! உலக வரலாற்றில் தனது சீடர்கள், தன்னால் ஆளாக்கப்பட்டவர்கள் அரசியலில் பெற்ற அபார வெற்றி மாலையை அவர்கள் அணிவிக்கக் கண்டு மகிழ்ந்த வாய்ப்பு அவர்களது தலைவருக்கு - தந்தை பெரியாருக்கு என்பது தனித்ததோர் வரலாறு அல்லவா!

அதைவிடச் சிறப்பு - சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தந்தை பெரியார் ‘‘இது கேட்டு என் வலி குறைந்தது'' என்று கூறி மகிழ்ந்தார்; அவரது மகிழ்ச்சி கேட்டு, தனயர்கள் அடைந்த உவகையோ ஒப்பற்றது!

கலைஞரின் பிரகடனம்

அதேநிலை அண்ணா மறைந்து, கலை ஞர் அவர்கள் முதல்வராகியும் நீடித்தது; திராவிட ஆட்சியின் சாதனைகளாக நாளும் வரலாறு படைத்த கலைஞர் சொன்ன ஓர் வரலாற்றுப் பிரகடனம். எதிர்க்கட்சி உறுப்பினர் எச்.வி.ஹண்டே சட்டமன்றத்தில், ‘‘இது மூன்றாம் தர ஆட்சி'' என்று தாக்கிப் பேசினார்; உறுப்பினர்கள் வெகுண்டு எழுந்ததை அடக்கிவிட்டு, முதல்வர் கலைஞர் புன்னகையுடன் பதில் சொன்னார்; ‘‘எதிர்க்கட்சி உறுப்பினர் மாண்புமிகு ஹண்டே அவர்கள் சொன் னார்கள், இந்த ஆட்சி மூன்றாம் தர ஆட்சி என்று, நான் சொல்லுகிறேன் இந்த ஆட்சி மூன்றாம் தர ஆட்சியல்ல; நான்காம் தர ஆட்சி; நான்காம் தர மக்களான சூத்திர மக்களாக இருக்கிற சூத்திரர்களுக்கான (ஒடுக்கப்பட்ட மக்களுக்கான) ஆட்சி'' என்றார். அதை செயலால் செதுக்கி வரலாறு படைத்தார் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் முதல், அடுத்தடுத்த  ஆட்சிக் காலங்களில் ஜாதியற்ற பெரியார் சமத்துவ புரங்களை உருவாக்கியதுவரை!

ஆச்சாரியாரின் தோல்வி

இதற்கிடையில் ஆரியம், அதன் கைவரி சையைக் காட்டி, எப்படியும் தி.மு.க. ஆட் சியை வீழ்த்திவிட வேண்டும் என்று முயற்சி செய்தது- 1971 இல் பொதுத் தேர்த லில்! தேர்தலுக்குச் சம்பந்தமில்லாமல் சேலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டு ஊர்வலத்தில், இராமர் பட விஷ யத்தில் பழைய ஜனசங்கத்தினர் ஏற் படுத்திய நிகழ்வின் விளைவு - எதிர்விளை வையே, கடைசி நேரப் பிரச்சாரமாக ஊதிப் பெருக்கி, கலைஞர் தலைமையில் நடந்த தி.மு.க. ஆட்சியை ஒழிக்க நினைத்து, படு தோல்வி அடைந்தனர் என்பது பழைய வரலாறு.

அதன் தள நாயகர் உடல் எல்லாம் மூளை என்று பார்ப்பனர்களால் வர்ணிக்கப் படும் குலதர்மக் கல்வி நாயகர், குல்லூகப் பட்டர் ஆச்சாரியார் - அவர் வியூகமே அன்று படுதோல்வி!

இது பழைய வரலாறு - இன்றும், நாளையும் நினைவிருக்கட்டும்!

தளபதி ஸ்டாலின் தயார்

இடையில் ஆட்சிக் கலைப்புகள் - நெருக்கடி காலத்தை எதிர்த்த நெஞ்சுரம் அதன் மணிமகுடத்தின் முத்து! ஜனநாயகம் காப்பாற்றப்பட அதன் சிப்பாய்கள் சிறை யில் அடைக்கப்பட்டு அடிபட்ட வரலாறும் உண்டு.

அந்த உலைக்களத்தில் அடிவாங்கிப் பக்குவப்பட்டவர்தான், இன்றைய தி.மு.க. வின் ஒப்பற்ற ஆற்றல்மிகு தலைவர் அருமைச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள். எதிர்க்கட்சித் தலைவர் மட்டு மல்ல; தமிழ்நாட்டின் முக்கியக் கட்சிகளை  - இயக்கங்களை உள்ளடக்கிய கூட்டணி யின் தலைவரும்கூட!

சோர்விலா உழைப்பும், இலக்கு நோக் கிய இணையற்ற போர்த்திறனும், அரசியல் மதியூகமும், காலங்காலமாய், பல தலைவர் களின், தலைமுறைகளின் அறிவுசார் சொத்தாகப் பெற்று, அனைவரையும் அர வணைத்து, ஆட்சி என்பது காட்சிக்கல்ல; நம் இனத்தின் மீட்சிக்கு என்பதால், சமூகநீதி, அனைவருக்கும் அனைத்தும் என்ற எந்த இலட்சியத்திற்காக திராவிடர் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ அதனை இன்றும் அரசியல் களத்தில் தொய்வின்றி நடத்தி வருகிறார்.

நடந்து முடிந்த

நாடாளுமன்றத்

தேர்தல் முடிவுகள்!

நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தலைமை, அவரது ஆற்றலை அகில இந்தி யாவிற்கும் தெரிவித்து தமிழ்நாட்டு வெற்றிப் பதாகை பட்டொளி வீசிப் பறந்து, இது பெரியார் மண்; சமூகநீதி மண்; திராவிட மண் என்று நாடாளுமன்றத்தில் முழங்கச் செய்தது.

அத் தேர்தலில் சம்பந்தா சம்பந்தம் இல் லாமல், மத மயக்கத்தை உருவாக்க எண்ணி, பார்ப்பனரும், அவர்தம் கொத்தடிமைகளும் ஏமாந்தனர்.

முன்பு தேர்தலுக்கு ‘‘இராமனை''  அழைத்து வந்தவர்கள், பிறகு ‘‘கிருஷ் ணனை'' அழைத்து வந்தார்கள்.

தமிழ்நாட்டு மக்கள் - குறிப்பாக வாக்கா ளர்கள் மத மயக்கமோ, மதி மயக்கமோ இன்றி, மகத்தான வெற்றியைத் தந்தனர்!

பண பலம், பதவி பலம், பொருத்த மில்லாத பொல்லாங்கு பிரச்சாரம் - தி.மு.க. வின் கூட்டணி விளைச்சலுக்குப் போடப் பட்ட உரமானது!

பொதுவாக, கெட்ட பின்பாவது ஞானம் வரும் என்பார்கள்; ஆனால், இங்குள்ள காவிகளுக்கும், அவர்களுடைய பர மார்த்தக் கூட்டாளிகளுக்கும் அப்படி ஏதும் வரவில்லையே!

 அண்மையில் ஏற்பட்ட திசை திருப்பல், திருகுதாளம், கோயபல்சு பிரச்சாரம் மூலம் அது தெளிவாகியுள்ளது

தந்தை பெரியார் சிலைகள் அவமதிப்புத் தொடங்கி, தி.மு.க.மீது வீண் பழி போடும் வெற்று டப்பாக்களான இந்த வீணர்களின் வேலைகள் அவர்களுக்கு ஒருபோதும் கைகொடுக்காது; கரை சேர்க்காது.

நம் தோழர்களுக்கு ஒரு முக்கிய  வேண்டுகோள்.

அலட்சியப்படுத்தப்பட வேண்டியவை களை அலட்சியப்படுத்துங்கள்! அவற்றை  ‘அகண்ட'மாக்காதீர்கள்.

வரும் தேர்தல் புத்தி புகட்டும்!

‘மக்களே போல்வர் கயவர்' என்ற குறளுக்கேற்ப, நம் இன எதிரிகளின் அறிவற்ற அலங்கோல ஆவேசங்கள் அவர்களுக்கு ஒருபோதும் பயன்படாது என்பதைப் புரிய வைப்பது நமது தலையாய கடமை!

வரும் தேர்தலும் அவர்களுக்கு நன்கு புத்தி புகட்டக் காத்திருக்கிறது.

இந்தப் பெரியார் மண்ணில், சமூகநீதி நிலத்தில் - ‘எட்டிகளை' ஏறெடுத்து எவரும் பாரார்!

வெட்டியாகத்தான் முடியும் வீண் அபவாதங்கள்!

தி.மு.க.வின் உதயசூரியனின் தகத்தகாய ஒளியில் இருட்டும் சரி, இருட்டுப் பேர்வழி களும் விரட்டப்படுவது உறுதி! உறுதி!!

எதிர்நீர்ச்சல் - திராவிட இயக்கங்களின் பழக்கப்பட்ட களப்பணி -

பழிக்கஞ்சாப் பணி முடித்தல்தான் நமது ஒரே இலக்கு!

இலக்கு மட்டுமே நம் கண்ணுக்குத் தெரியவேண்டும் - வேறு எதிலும் கவனம் செலுத்தாதீர்!

ஆயத்தமாவீர்! ஆயத்தமாவீர்!!

 

கி. வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

22.7.2020