ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்திய கலாச்சாரத்தை ஆய்வு செய்திட 16 பேர் கொண்ட குழுவில் பெரும்பாலும் பார்ப்பனர்கள்! பார்ப்பனர்களே!!
September 16, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

தென்னிந்தியரோ அல்லது மற்ற கலாச்சாரத்தை சேர்ந்தவரோ ஒருவர்கூட  கிடைக்கவில்லையா?

வேதக் கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம் என்று காட்ட  மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பைப் பதிவு செய்க!

12,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரம் என்பதுபற்றி ஆய்வு செய்ய மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிபுணர் குழு என்பது - முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களைக் கொண்டது; திராவிடர் நாகரிகத்தை மறைத்து ஆரிய வேத கால நாகரிகம் என்று நிரூபிப்பதற்கான இந்த ஏற்பாட்டை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்; நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே தி.மு.க. உறுப்பினர்கள் முன் னின்று எதிர்ப்பைப் பதிவு செய்து முறி யடிக்கவேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

புதிய கல்விக் கொள்கை என்ற மனுதர்மத் திட்டம் திணிக்கப்படுவதற்கு அடுத்த கட்டத் திற்கும் மத்தியில் பெரும்பான்மை பெற்றுள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி ஆயத்தமாகி விட்டது!

12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கலாச்சாரத்தைத் தோண்டி ஆராய முழுக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு

இந்திய கலாச்சாரம் - 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எப்படிப்பட்ட தொன்மை வாய்ந்த வரலாறு உடையது என்பதை ஆராய்ந்து நிறுவிட, 16 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய கலாச்சார நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளதாக எழுத்துபூர்வ பதில் ஒன்றினை நாடாளுமன்றத்தில் கலாச்சார, சுற்றுலாத் துறை ஸ்டேட் அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் அறிவித்துள்ளார்!

யார் யார் உறுப்பினர்கள்?

இக்கமிட்டியின் உறுப்பினர்களின் பட்டி யலை நன்கு ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.

 1. கே.என்.தீட்சத், இந்திய தொல்பொருள் துறை தலைவர், மற்றும் முன்னாள் தொல் பொருள் துறை சர்வே ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல்.
 2. டாக்டர் ஆர்.எஸ்.பிஷ்த், முன்னாள் ஜாயிண்ட் டைரக்டர் ஜெனரல் ஆர்க்கியால ஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா.
 3. டாக்டர் பி.ஆர்.மணி, முன்னாள் டைரக்டர் ஜெனரல் நேஷனல் மியூசியம், புதுடில்லி, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா.
 4. பேராசிரியர் சந்தோஷ் சுக்லா - ஜவகர் லால் நேரு யுனிவர்சிட்டி, புதுடில்லி
 5. டாக்டர் ரமேஷ் குமார் பாண்டே, சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி
 6. பேராசிரியர் மக்கன்லால், டைரக்டர் டில்லி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெரிடேஜ் மேனேஜ்மெண்ட், விவேகானந்தா இன்டர் நேஷனல் பவுண்டேசன், புதுடில்லி
 7. டாக்டர் ஜி.என்.சிறீவத்சவா, முன்னாள் அடிஷனல் டைரக்டர் ஜெனரல், ஜியோ கிராபிகல் சர்வே ஆஃப் இந்தியா.
 8. ஜஸ்டீஸ் முகுந்த்காம் சர்மா, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி, வேந்தர், சிறீ லால்பகதூர் சாஸ்திரி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யா பீடம், புதுடில்லி
 9. பேராசிரியர் பி.என்.சாஸ்திரி, துணை வேந்தர், ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான், புதுடில்லி
 10. பேராசிரியர் ஆர்.சி.சர்மா, தலைவர், டிபார்ட்மெண்ட் ஆஃப் லிங்குஸ்டிக்ஸ், டில்லி பல்கலைக் கழகம்
 11. பேராசிரியர் கே.கே.மிஸ்ரா, டீன், ஆந்த் ரோபலஜி, அய்தராபாத் பல்கலைக் கழகம், முன்னாள் டைரக்டர் ஆந்த்ரோபலஜிக்கல் சர்வே ஆஃப் இண்டியா.
 12. டாக்டர் பல்ராம் சுக்லா, சமஸ்கிருதத் துறை, டில்லி பல்கலைக் கழகம்
 13. பேராசிரியர் ஆசாத் கவுஷிக், விஞ்ஞானி, பன்னாட்டு சிந்தனையாளர், கனடா.
 14. பண்டிட் எம்.ஆர்.சர்மா, தலைவர், ‘‘சங் மார்க்'', உலக பிராமணர்கள் பேரவை, புதுடில்லி, இந்தியா.
 15. பிரதிநிதி, மத்திய கலாச்சாரத் துறை, புதுடில்லி அமைச்சகம், டில்லி.
 16. பிரதிநிதி, ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா

மேற்கண்ட அறிவிப்பில் வெளியான நிபுணர்கள் என்பவர்களில் ஒருவர் அல்லது இருவரைத் தவிர மற்ற அத்தனைப் பேரும் பச்சைப் பார்ப்பனர்களே!

அதுமட்டுமல்லாது, சமஸ்கிருத மொழியே பிரதானம் என்ற கொள்கை கொண்ட சமஸ்கிருத வடமொழியாளர்களே!

இதிலுள்ள பி.ஆர்.மணி என்பவர் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா குழுவின் தலைவராக இருந்து, இராமஜென்ம பூமி பாபர் மசூதி இடத்தை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தோண்டுகின்ற பணியை செய்தபொழுது, அலகாபாத் உயர்நீதி மன்றம் 2003, மே மாதம் மேற்கண்ட நபரை விலக்கிவிட்டு, வேறொரு நபரை அந்த இடத் திற்கு நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது என்றால், அவரைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்; அவர் எதற்காக இதில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்பது புரிகிறதா?

உலகப் பிராமணர் சங்கத் தலைவரும் இந்தக் குழுவிலாம்!

இதில் உலக பிராமணர்கள் சங்கப் பெட ரேஷன் தலைவர் என்று ஒருவர் இருப்பது இப்போதுதான் வெளிச் செய்தியாகி உள்ளது! அவரும் இதில் உறுப்பினர்!

இதில் தென்னாட்டு, மேற்கு வங்காளம், கிழக்குப் பகுதிகள் போன்ற எந்தப் பகுதியிலும் இருக்கக்கூடிய பலவித கலாச்சாரங்களின் பிரதி நிதிகளோ, அவற்றில் ஊறித் திளைத்தவர்களோ, செம்மொழி தகுதி பெற்ற மொழி சார்ந்த விற்பன்னர்களோ எவரும் மருந்துக்குக்கூட ஒருவரும் இடம்பெறவே இல்லை!

வேதக் கலாச்சாரம் என்பதுதான்

இவர்களின் முடிவு!

வெளிப்படையாகவே எங்கள் வேதக் கலாச்சாரம் - ஆரியக் கலாச்சாரம் மட்டும்தான் இந்திய கலாச்சாரம் என்று திட்டமிட்ட வகையில் ஒரு அறிக்கை தந்து, அயோத்தியில் இராமன் கோவில் கதைபோல ஒன்றை வலுக் கட்டாயமாக இந்த ‘பூதேவர்கள்' குழு மூலம் வரலாறு, மற்ற தரவுகளை தலைகீழாக மாற்றிட, கால்கோள் விழாதான் இந்தக் கலாச்சார ஆராய்ச்சி!

அடிவேரையே அழிக்கும்

ஆபத்தான முயற்சி!

இந்திய கலாச்சாரம் என்பது பன்முகத்தன் மையது என்பதைத் துளியளவாவது ஒப்புக் கொள்ள இன்றைய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. மத்திய ஆட்சி தயாராக இல்லை என்பதையும், நாங்கள் திணிப்பதை நீங்கள் மற்ற குடிமக்கள் ஏற்கவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ‘‘பிஞ்சராப் போல்கள்' நிறைந்த ஒரு அக்கிரகாரக் கமிட்டி!

இந்த முயற்சி மிகவும் ஆபத்தானது, அடி வேரையே அகற்றிடச் செய்யும் மிகப்பெரிய ஆபத்து!

இதனைப் புரிந்து உடனடியாக மற்ற கலாச் சாரத்தினர்கள் எதிர்ப்புக் குரலைப் பதிய வைக்கவேண்டும்.

இதில் பிரபல  வரலாற்றாசிரியர்களோ, ஆய் வாளர்களோ, பொதுவானவர்களோ எவருக்கும் இடமில்லாது செய்திருப்பதால், புரிந்துகொள்ள வேண்டியது என்ன?

முறியடிக்க வேண்டியது

அவசியம்! அவசரம்!!

இந்திய கலாச்சாரம் என்றால், வேத கலாச் சாரம், சமஸ்கிருத கலாச்சாரம் - பார்ப்பனீய, ஆரிய கலாச்சாரம் என்று நிறுவிட இது கால் கோள் விழா - இதனை முறியடிப்பது நம்மக் களின் அவசரப் பணி - அலட்சியம் வேண்டாம்!

ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்களே!

டோனி ஜோசப் போன்றவர்கள் எழுதியுள்ள மரபணு ஆராய்ச்சிமூலம் ஆரியர்கள் வெளி யிலிருந்து வந்தவர்கள்தான் என்பதும், மொகஞ்சாதாரோ, ஹரப்பா கலாச்சாரங்கள் ஏற்கெனவே பழைமை வாய்ந்த கலாச்சாரம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தொடரிலேயே

எதிர்ப்பைப் பதிவு செய்க!

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி தோண் டல்களும் கிடைக்கும் பொருள்களும் தொன்மை வாய்ந்த திராவிடர் நாகரிகத்தினை உறுதிப்படுத்தும் சான்றுகளாக உள்ளனவற்றை மறைத்தோ, திசை திருப்பியோ, எப்படி சமஸ்கிருதம்தான் எல்லா மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஒரு அண்டப் புளுகை, திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனரோ அதுபோல செய்வதற்கும், அரசு செலவில் இந்த அக்கிரகார ‘‘பிஞ்சராப் போல்கள்'' (கிழட்டு மாடுகளின் அடைக்கலம்). மற்ற அனைவரும் இதனை எதிர்க்க வேண்டும். தி.மு.க. மற்றும் தென்னாட்டு எம்.பி.,க்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பை இத்தொடரிலேயே பதிவும் செய்ய வேண்டும்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

16.9.2020