ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
'மஹா பெரியவாளையும் வென்றவர் பெரியார்!'
September 5, 2020 • Viduthalai • மற்றவை

"ரீஃபார்ம்களை ஆரம்பித்து விடுகிற லீடர்களையும், ஒழுங்கு தப்பினவர்கள்என்று சொல்வதற்கில்லைதான். சாஸ்த்ர, ஸம்பரதாய விதிகளான ஒழுங்குகளை இவர்களும் விட்டவர்கள் தான் என்பதால், இவர்களை ஸனாதனதர்ம பீடங்களான மடஸ்தானங்களிலிருக்கிற நாங்கள் ஒப்புக் கொள்ளத்தான் இல்லை என்றாலும் இவர்கள் Personal Lifeல் (தனி வாழ்க்கையில்) ஸத்யம், ஒழுக்கம், தியாகம், அன்பு போன்ற பலவற்றைக் கடைப்பிடித்தவர்கள் என்பதை ஆக்ஷேபிப்பதற்கில்லை. ஓரளவுக்குப் படிப்பு, விஷய ஞானம் எல்லாம் உள்ளவர்களாகவும், ஜனங்களை நல்வழியில் கொண்டு போகவேண்டும் என்பதில் நிஜமான அக்கறை கொண்டவர்களாகவும் இந்தச் சீர்திருத்த தலைவர்களில் பலர் இருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்" இவ்வளவையும் எழுதி இருப்பவர் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் அவாள் பாஷையில் மஹா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதிதான் இப்படி எழுதியுள்ளார். (ஆதாரம்: "தெய்வத்தின் குரல்" 3ஆம் பாகம் பக்கம் 336).

இந்த சங்கராச்சாரியார் வாழ்ந்த காலத்தில்தான் தந்தை பெரியார் என்ற ரீஃபார்மர், வாழ்ந்திருக்கிறார். தந்தை பெரியாரை மனதிற் கொண்டுதான் இதனை சொல்லியிருக்க வேண்டும்.

அந்த சங்கராச்சாரியாரின் தனிப்பட்ட வாழ்விலும், தந்தை பெரியாரின் பெருந்தன்மை என்னும் தாக்கம் உண்டு.

சென்னை லஸ் அருகில் சங்கராச்சாரியாரும், அவரது அடியாரும் வந்துகொண்டு இருந்தபோது திராவிடர் கழகத்தினர் பிரச்சினை செய்தார்கள். உடன் வந்த டி.டி.கே., சதாசிவம் போன்றவர்கள் பதைபதைத்தனர். முன்னேறிச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டபோது ‘ஏன் வீணாப் பயப்படறேள்' அவா ஒண்ணும் பண்ண மாட்டா' என்று புன்னகையுடன் சொல்கிறார் சங்கராச்சாரியார்.

அந்த இடத்திற்கு வந்த பெரியார், தொண்டர்களுக்கு உரத்தக் குரலில் கட்டளையிட்டார். 'அவரைப் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு’ என்றார். அவ்வாறே நடந்தது இது ஒரு நிகழ்வு!

அந்தக் காலத்தில் எல்லாம் சங்கராச்சாரியாரை 'மேனா'வில் (பல்லக்கில்) தூக்கிச் செல்லுவார்கள். ஒருமுறை மூத்த அந்த சங்கராச்சாரியார் 'மேனா'வில் சென்று கொண்டிருந்தபோது வழியில் மேடை போட்டுப்பெரியார் பேசிக் கொண்டு இருந்தார். ‘மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்து கொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனை கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும்' என்று பெரியார் முழங்க, அது சங்கராச்சாரியாரின் காதில் விழுந்தது. அவ்வளவுதான். மேனாவைவிட்டு இறங்கி சங்கராச்சாரியார் நடக்க ஆரம்பித்தார். கடைசி வரையிலும் அதற்குப் பிறகு நடந்தே சென்றார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (விழுப்புரம் சாமிநாதன்). மூத்த காஞ்சி சங்கராச்சாரியாரின் வாழ்வில் இந்த இரு நிகழ்வுகளும் தந்தை பெரியாரால் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. அந்தக் காஞ்சி சங்கராச்சாரியாரிடம் 40 ஆண்டுக்காலம் சேவை செய்த மாங்காட்டைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் (வயது 76) கூறிய இந்தத் தகவல்களை ‘சக்தி விகடனில்' அதன் பொறுப்பாசிரியர் ரவி பிரகாஷ் எழுதியுள்ளார்.

இவற்றையெல்லாம் மனதிற் கொண்டுதான் தந்தை பெரியாரை நினைத்தே "ரீஃபார்ம்கள் ஆரம்பித்து நடத்துகிற லீடர்களின் பெருமையைப் பதிவு செய்துள்ளார். தமது 'தெய்வத்தின் குரல்' நூலில் (பாகம் 3 பக்கம் 336)

தமது உயரிய பண்பாட்டால் - குருமூர்த்திகள் தூக்கிக் கொஞ்சும் 'அந்த மஹா பெரிய வாளையே' வென்றிருக்கிறார் தந்தை பெரியார் என்பதைக் குருமூர்த்தி வகையறாக்கள் உணரட்டும்!