ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
“மத்திய அரசே! ஒடுக்கப்பட்ட மாணவர்களின்  உயிரை குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்! ரத்து செய்!”
August 27, 2020 • Viduthalai • கழகம்

தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் அறப்போராட்டம்

சென்னையில் கழகத் தலைவர் பங்கேற்பு

சென்னை, ஆக. 27  ஒடுக்கப்பட்ட மக்களை தலையெடுக் காமல் செய்து, அவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இன்று தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் அவரவர் வீட்டின் முன்பு  கரோனா ஊரடங்கு விதிகளைப் பின்பற்றி பதாகை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் அறப் போராட்டம் நடைபெற்றது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அமைந் துள்ள கழகத் தலைவரின் இல்லத்தின் முன்பு, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (27.8.2020) காலையில் 10.30 மணி அளவில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் “நீட் தேர்வை ரத்து செய்!”, “அவசரச் சட்டம் இயற்றிடு!” “உயிரைப் பறிக்கும் கரோனாவை விட கொடியது நீட் தேர்வு பிடிவாதம்!” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தலைவர் அவர்கள், “தமிழக அரசே! தமிழக அரசே! நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோரி அவசரச் சட்டம் இயற்றிடு!”, “போதாதா, போதாதா, அனிதா முதல் சுபசிறீ வரை கொன்று குவித்தது போதாதா?”, “நீட் என்னும் பெயராலே மாணவர் உயிரைக் குடிக்காதே!”, “பறிக்காதே, பறிக்காதே! ஒடுக்கப்பட்டோர் மருத்துவக் கனவை பறிக்காதே, பறிக்காதே!”, “திணிக்காதே, திணிக்காதே! கார்ப்பரேட்கள் கொள்ளை அடிக்க நீட் தேர்வைத் திணிக்காதே!”, “மருத்துவக் கல்வி இடங்களை யெல்லாம் வடமாநிலத்தவர் கொள்ளையடிக்க நீட் தேர்வைத் திணிக்காதே!”, “நுழைவுத் தேர்வுகள் எல் லாம் சமூகநீதி பறிப்பேதான்!”, “விடமாட்டோம், விடமாட் டோம்! போராடிப் போராடிப் பெற்ற சமூக நீதியைத் தட்டிப் பறிக்க விடமாட்டோம்!”, “ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன சதியை முறியடிப்போம், முறியடிப்போம்!”, “மத்தியத் தொகுப்பு என்று சொல்லி இட ஒதுக்கீட்டை மறுப்பதா?”, “புதிய கல்வி என்று சொல்லி கல்வி வாய்ப்பை ஒழிப்பதா?”, “தொழிற்கல்வி என்று சொல்லி குலக் கல்வியைத் திணிப்பதா?”, “நீட் தேர்வு என்று சொல்லி மருத்துவக் கனவைப் பறிப்பதா?”, “அனுமதி யோம், அனுமதியோம்! சமூகநீதியை அழிப்பதை அனுமதி யோம், அனுமதியோம்!”, “போராடுவோம், போராடுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!!” என ஒலி முழக்க மிட்டார். இதனைப் பின்பற்றி உடனிருந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன், பெரியார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தென் சென்னை இளைஞரணி அமைப்பாளர் சிவசீலன், பகுத்தறிவாளர் கழக வழக்குரைஞர் அருணாசலம் உள்ளிட்டோர் ஒலி முழக்கமிட்டனர்.

சென்னை பெரியார் திடலில் இன்று (27.8.2020) காலை 10.30 மணி அளவில் பெரியார் திடல் நுழைவு வாயில் முன்பு, நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி நடைபெற்ற அறப் போராட்டத்திற்கு திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் சமூகக் காப்பு அணி ஒருங்கிணைப்பாளர், சோ.சுரேஷ்,  வடசென்னை மாவட்ட அமைப்பாளர் அன்புச்செல்வன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், ஆனந்த்,  ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்று ஒலி முழக்கங்களை எழுப்பினர்.