ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
“நின்ற சொல்லர்; நீடு தோன்றினியர்” நூற்றாண்டு நாயகர் நாவலர் புகழ் ஓங்குக!
July 21, 2020 • Viduthalai • மற்றவை

பா.வீரமணி

தமிழகத்தின் அரசியல் உலகில் முதன் முதலாக நாவலராகப் போற்றப்பட்டவர் நாவலர் இரா.நெடுஞ்செழியனே ஆவர். அவருக்கு முன்பாக இலக்கிய உலகில் நாவலர் எனப் போற்றப்பட்டவர்கள், நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரும், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டாருமே ஆவர். இவர்கள் இருவரும் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக இருந் தபோது அவர்களுக்கு மாணவராக விளங்கியவர்தான் நம் நாவலர். பெரும் பேராசிரியர்களாகிய அந் நாவலர் களிடத்துப் பயின்றதால்தான் இவரும் நாவலர் ஆனார் போலும். நாவலரின் தந்தையார் இராசகோபாலன் நீதிக் கட்சியின் மீதும், தந்தை பெரியாரின் கொள்கை மீதும் அடங்கா ஆர்வமும் பற்றும் கொண்டவர். நாவலரின் இயற்பெயர் நாராயணசாமி. குடும்பச் சூழலாலும், அக்காலத்திய அரசியல் சமுதாயச் சூழலாலும் அவர் எட்டு வயது முதற்கொண்டே பகுத்தறிவில் பற்றுக் கொண்டு விளங்கினார்.

தமிழைக் கசடறக் கற்றவர்

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிவுச் சூழலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தின் கல்விச் சூழலும் அவரது ஆளுமைக்கு அடிப் படையாக விளங்கின. இவற்றுடன் தந்தை பெரியாரின் பகுத்தறிவும், பரப்புரையும், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனையும் அவரைப் புடம் போட்டன. அவை, அவ ரைக் கொள்கைக் குன்றாக உருவாக்கியன. அவரின் தமிழ்ப் புலமையை நன்கு வளர்த்து எடுத்தது அண்ணா மலைப் பல்கலைக்கழகமேயாகும். அக்காலத்தில் அங்குப் பணியாற்றிய பேராசிரியர்கள் அனைவரும் பெரும் புலமை வாய்ந்தவர்கள். தமிழைக் கசடறக் கற்ற வர்கள். இலக்கியத்திலும் இலக்கணத்திலும் தேர்ந்த புலமை உடையவர்கள். இந்தச் சூழல், அவரைப் பட்டை தீட்டியது. நாவலர் இலக்கியத்தில் மட்டுமே யன்றி இலக்கணத்திலும் மிகுந்த ஈடுபாடுடையவர். தொல்காப்பியப் புலவர் என்று போற்றப்பட்ட வெள் ளைவாரணர், வாழும் சேனாவரையர் என்று பாராட் டப்பட்ட அ.பூவராகவம் பிள்ளை ஆகியோரிடத்து அவர் இலக்கணம் பயின்றதால் அந்த ஈடுபாடு ஏற் பட்டிருக்கலாம். அதனால்தான் அவரது மேடைப் பேச்சு, இலக்கண உச்சரிப்போடு அமைந்திருந்தது. கொச்சைத் தமிழையோ, அயல்மொழிச் சொற்க ளையோ அவர் பேச்சில் சிறிதும் காணமுடியாது. செந் தமிழின் செழுஞ்சுவை அவரது பேச்சில் பெருக் கெடுத்து ஓடும். அந்தச் சுவைக்கு, அவரது குரல் வள மும் மிடுக்கான உச்சரிப்பும் அழகுக்கு அழகு சேர்க்கும். இவற்றுடன் சங்கப்பாடலும், குறளும், பாரதிதாசனின் கவிதையும் இடையிடையே வந்து பேச்சுக்கு சுவை சேர்க்கும். அப்பேச்சு, கேட்போரை மலைக்க வைக்கும். வியக்க வைக்கும். அப்படியே எல்லோரையும் கட்டிப் போட்டுவிடும். அப்படி கட்டிப் போட்டதால்தான் திராவிட இயக்கம் வெகு விரைவில் வளர்ந்து, குறைந்த ஆண்டுகளில் ஆட்சியில் அமர்ந்தது. இதுவொரு வரலாற்றுச் சாதனை. இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பெருங் காரணம் திராவிட இயக்கத்தின் மேடைப் பேச்சேயாகும். அப்பேச்சுகளில் நாவலரின் பேச்சும் முக்கியப் பங்களிப்பாகும்.

விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார் பெறின் -

என்று அன்றே கூறிச் சென்றார் வள்ளுவர். திராவிட இயக்கத்தின் " சொல்லுதல் வல்லார்" களின் பணியால்தான் திமுக 1967 - இல் ஆட்சி அமைத்தது.

"தம்பி வா!" "தலைமை ஏற்க வா!”

நாவலர் பேச்சில் மட்டுமின்றி, பண்பிலும் சிறந்து விளங்கியவர். எளிமை, தூய்மை, உண்மை, உறுதி ஆகியவற்றின் கொள்கலனாக விளங்கியவர். இப் பண்புகளினால்தான் அவரைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1956 -ஆம் ஆண்டில் நடந்த திருச்சி மாநாட்டில் "தம்பி வா!" "தலைமை ஏற்க வா!” என்று போற்றி அழைத்தார். இதனுடன் நில்லாமல் அவரை “நடமாடும் பல்கலைக்கழகம்” என்றும் பாராட்டினார். இவற்றிலிருந்து அவரது ஆளுமையை நன்கு உணரலாம். திமுகவில் அவர் இருந்தபோது கட்சியிலும் ஆட்சியிலும் அண்ணாவுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருந்தார். கலைஞர் ஆட்சியிலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ஆட்சியிலும், மாண்புமிகு, ஜெயலலிதா ஆட்சியிலும் அவர் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந் ததால் பலர் அவரை "இரண்டாமவர்” என்று நக்கலாகக் கூறுவர். இப்படி ஏன் கூறுகிறோம் என்று கூறுபவர் களும் சிந்திப்பதில்லை. கேட்பவர்களும் அதனை மறுப்பதில்லை. சில நாளேடுகளும் கூட இந்த நக்கலை அனுமதித்தன என்பது தான் சோகம். நல்லவற்றை நாடு வதை விட அல்லாததைத் தம்பட்டம் அடிப்பதுதான் சிலரின் இயல்பு போலும்! சமுதாயத்தில் இந்த இயல் புடையோர் எக்காலத்திலும் இருக்கின்றனர். இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், அவர்களின் கருத்தை மறுக்க வேண்டிய பொறுப்பு நல்லவர்களுக்கு உண்டு; நல்லவர்கள் இதனைச் செய்வதில்லை. அதனால்தான் விளம்பரம் பெறுகின்றன. இந்தத் தீயவை விளம்பரம் பெறுவதால், பொய் கூட உண்மையாகக் காட்சி அளித்து விடும். இதற்கு நாம் இடம் தரக்கூடாது.

நாவலரின் பலம்

நாவலர் எப்போதும் இரண்டாமவர் என்று கேலி பேசுவோரும், அதனைக் கேட்போரும் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். அண்ணாவுக்குப் பின்னால் அவர் இரண்டாமவராக இருந்ததை யாரும் தவறாகக் குறிப் பிட மாட்டார்கள். ஆனால், அவருக்குப் பின்பு இருந்த வர்களுக்கு, அவர் இரண்டாமவராக இருந்ததைத்தான் அவர்கள் குறை கூறுகின்றனர். அப்படி அவர் இருந்த தற்கு, அப்படியான தவிர்க்க முடியாத சூழல் இருந்தது என்பதுதான் உண்மை. இந்தச் சூழலில் எப்படிப் பட்டவர் ஆனாலும் இரண்டாம் இடத்தில் தான் இருந் திருக்க முடியும். அந்த இரண்டாம் இடம் கூட அவர் களுக்குக் கிடைக்காமலும் போய் மூன்றாம் இடமோ நான்காம் இடமோதான் அவர்களுக்குக் கிடைத்திருக் கும். ஒரு வேளை எதுவுமே கிடைக்காமலும் காணா மலும் போயிருப்பர். ஆனால் நாவலரோ கலைஞருக்கு அடுத்து, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியிலும் எந்த முனகலும் இல்லாமல் முழு மனதுடன் இரண்டா மவராக அமர்த்தப் பெற்றார். கவுரவிக்கப்பட்டார். இதுதான் உண்மை . நாவலர் இல்லாமல், வேறு ஒருவர் அவர் நிலையில் இருந்திருப்பின் அந்த மூவர் ஆட்சி யிலும் ஒருவரே தொடர்ந்து இரண்டாமவர் ஆக இருந்திருக்க முடியாது. அதுதான் நாவலரின் பலம். மற்றொன்றும் சிந்திக்கத்தக்கது. கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் மக்களின் பேராதரவைப் பெற்ற முதல்வர்களாக விளங்கியவர்கள்; வெளியுலகில் அவர் கள் மக்களின் மிருக பலம் பெற்றவர்கள். அவர்களைப் போன்று நாவலர் பெரிதும் மக்கள் பலம் பெற்றவர் அல்லர். அப்படியிருக்க அவர் முதல்வராக எப்படி வர முடியும்? அண்ணாவுக்குப் பின்னர் அவர் முதல்வ ராக வந்திருக்கலாம். அது வரமுடியாமல் போனது. அதற்குக் காரணம், கலைஞரும், எம்ஜிஆரும், தந்தை பெரியாருமே ஆவர். இம் மும்மூர்த்திகள் தடையாக இருந்தபோது நாவலரால் என்ன செய்ய முடியும்? யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதுதான் அப் போது நடந்தது.

அனுபவம் மிக்க தலைவராக

நாவலர் மூன்று ஆட்சிகளிலும் இரண்டாமவராக இருந்தாலும், அந்த ஆட்சிகளில் முக்கிய துறைகளைக் கொண்டவராகவே இருந்துள்ளார். மூன்று முதல்வர் களும் நாவலின் கருத்தை மதித்துச் செயலாற்றினர். அவரை அனுபவம் மிக்க தலைவராக, தோன்றாத் துணையாக மதித்துப் போற்றினர். குறிப்பாக அவரை ஒரு வழித் துணைவராகவே கொண்டனர். இரண்டாம வராக, அதுவும் தொடர்ந்து மூன்று கால கட்டங்களில், வேறான முதல்வர்களுடன் அடுத்தடுத்து, தொடர்ந்து இருந்தது அத்துணை எளிதன்று. அது மிகவும் அரிது.

நம்பிக்கையின் முழு உருவமாக நாவலர்

இவ்வாறு மூன்று முறை இருப்பதற்குத் தகுதியும் திறமையும் மட்டுமே போதுமானவை அல்ல. அதற்கும் மேலாக நம்பிக்கைக்கு உரியவராக இருத்தல் வேண் டும். இதுதான் மிக முக்கியமானது. அந்த நம்பிக்கையின் முழு உருவமாக நாவலர் இருந்தார். இதுதான் அவரது தனிச்சிறப்பு. இரண்டாமவர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால் தான், முதல்வர் எளிதாக அமைதியாக ஆட்சி செய்யமுடியும். இரண்டாமவர், முதல்வருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்தால் தான் பிந்தியவர் களுக்கு (மற்ற அமைச்சர்களுக்கு) ஏற்றவராக இருக்க முடியும். இரு கரைகளுக்குப் பாலம் எத்துணை முக்கி யமோ அதுபோல முதல்வருக்கும் மற்றவர்களுக்கும் இரண்டாமவர் இருத்தல் வேண்டும். சூதும் வாதும் அற்றவராகவும், நேர்மையும் உண்மையும் நிரம்பியவ ராக இரண்டாமவர் இருத்தல் வேண்டும். "நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி ” என்றார் வள்ளுவர். அந்தக் கோடாமை கொண்ட சான்றோர்தான் நாவலர். அண்ணா அவர்கள் நாவலரைக் “கழகத்தின் காவலர்” என்றார். அவர் கழகத்திற்கு மட்டுமன்று ஆட்சிக்கும் தான். இரண்டாமவராக இருந்து வழிகாட்டியாகச் சிறந் தவர்தான் நாவலர். அவரொரு நம்பிக்கை நட்சத்திரம். நாவலரை இரண்டாமவர் என்று கேலி பேசும் நல்லவர்கள் இனியாவது சிந்திக்கட்டும். இனியாவது தங்களைத் திருத்திக் கொள்ளட்டும்.

சிறந்த நாத்திகர்

நாவலர் அப்பழுக்கற்ற பகுத்தறிவுவாதி; உறுதியான கடவுள் மறுப்பாளர். மொத்தத்தில் சிறந்த நாத்திகர். இவற்றில் எதிலும் சமரசம் செய்துகொள்ளாமல் குன் றென நிமிர்ந்து நின்றவர். அவர் நாத்திகரானாலும் ஆத்திக இலக்கியங்களை நன்கு கற்றவர். "கற்றலினும் கேட்டல் இனிது'' என்பதற்கேற்ப வல்லாரிடத்துச் சமய இலக்கியங்களைக் கேட்டறிந்தவர். சைவ இலக்கியங் களையும், வைணவ இலக்கியங்களையும் நன்கு அறிந் தவர். ஆழ்வார்களின் பாடல்கள் அவருக்கு நல்ல மன னம். குமரகுருபரின் பாடல்கள் அவருக்கு அத்துபடி. எனினும் அவற்றில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவற்றை எடுத்துக் காட்டுவார். அவருக்குச் சமய இலக்கிய அறிவு ஏற்பட்டதற்கு அவருடைய பேராசிரியர் கா.சுப் பிரமணியம் பிள்ளை பெருங்காரணமாவர். இதனை இக்கட்டுரையாளரிடத்து நாவலரே நேரில் கூறியிருக் கிறார். அண்ணாமலையில் நாவலர் படிக்கும்போது விடுமுறை நாட்களிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் நாவலர் கா.சு.பிள்ளையின் வீட்டில் இருப்பாராம். அந்நாள்களில் பெரும் புலவர்கள் சமயம் குறித்து கா.சு.பிள்ளையிடம் உரையாடுவார்களாம். அந்த உரை யாடல்கள் இவருக்கு நல்லுணவாக அமைந்திருந்ததாம். மற்றும், சைவ சமயம் குறித்துச் சொற்பொழிவாற்ற கா.சு.பிள்ளை வெளியூர்க்கு அடிக்கடி செல்வாராம். அப்போது ஒருநாள் நாவலரிடம் "நீயும் வரலாமே அப்பா" என்றாராம். அதற்கு நாவலர் “நான் நாத்திகன். வர மாட்டேன்'' என்றாராம். அதற்கு, அவர் "நீ நாத்தி கனானாலும், ஆத்திக இலக்கியங்களை விமர்சனம் செய்ய நீ அந்த இலக்கியங்களை நன்கு அறிந்தால் தானே முடியும்! அதற்கு இக்கூட்டங்கள் பயன்படுமே" என்றாராம். அக்கூற்றை ஏற்று நாவலரும் ஒவ்வொரு முறையும் தம் ஆசிரியரோடு சென்றிருக்கிறார். அப்படித் தம் அறிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். மேலும், அவர் ஆசியரியரிடத்தே சமயம் குறித்து எதிரும் புதிருமாக விவாதித்து இருந்திருக்கிறார். கா.சு.பிள்ளையிடத்து விவாதிப்பது எளிதன்று. அவர் வெறும் தமிழ்ப் பேராசிரியர் அல்லர்.

செந்தமிழ்ப் பண்மிழிற்றும் தேனீ

இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் தேர்ந்து தெளிந்தவர். வரலாறு, சட்டம், பொருளாதாரம் ஆகிய வற்றை நன்கு கற்றவர். சட்டத்தில், தமிழகத்தில் முதல் முறையாக எம்.எல் பட்டம் பெற்றவர். சேக்ஸ்பியர் இலக்கியத்தில் வல்லுநர். மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர். அவருடைய ஒவ்வொரு நூலும் அறிவுக்கருவூலம். அவரது புகழ் பட்டொளி வீசி பரவியிருக்க வேண்டும். அப்படி பரவாதது தமிழகத்தின் சோகம். அவரைக் குரு வாகக் கொண்டவர்தான் நாவலர். நாவலரின் ஆளு மைக்கு அவரும் ஒரு காரணம். சமய இலக்கியங்களை நாவலர் விமர்சனம் செய்யும் போது அதில் தருக்கம் (Logic) நிறைந்திருக்கும். ஆத்திகர்கள் வாயடைத்துப் போவார்கள். நாவலர் செந்தமிழ்ப் பண்மிழிற்றும் தேனீ மட்டுமன்று; சமய இலக்கியங்களைப் புரட்டிப்போடும் நெம்புகோலும் ஆவர். ஆத்திகம் குறித்து அவர் மறுப் பது உண்மையும் உறுதியும் கொண்டது. இதில் அவர் “நின்ற சொல்லர்'' அதாவது அவர் கருத்து இறுதியானது. அகத்தில் "நின்ற சொல்லர், நீடு தோன்றினியர்.''ஆம், அவர் "நின்ற சொல்லர்; நீடு தோன்றினியர்"

நாவலர் புகழ் ஓங்குகவே!