ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘‘நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்ய முடியாது''
July 20, 2020 • Viduthalai • கழகம்

‘‘ஒப்பற்ற தலைமை" எனும் தலைப்பில் 4ஆம் சொற்பொழிவு:  காணொலியில் தமிழர் தலைவர்

கலி. பூங்குன்றன்

‘ஒப்பற்ற தலைமை' எனும் தலைப்பில் காணொலி மூலம் நான்காம் சொற்பொழிவை நேற்று (19.7.2020) மாலை கழகத் தலைவர் நிகழ்த்தினார்.

I. தன்னிலை விளக்கம்

காங்கிரசில் சேர்ந்து,  பார்ப்பனர்களோடு சேர்ந்து திராவிட ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் ஈடுபட்டதைக் குற்ற உணர்வோடு தந்தை பெரியார் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டினார் கழகத் தலைவர். அதற்குப் பிராயச்சித்தமாகத்தான் இப்பொழுது பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தந்தை  பெரியார் கூறியதையும் கழகத் தலைவர் வெளிப்படுத்தினார்.

தமிழ்நாட்டின் பொது வாழ்வில் தந்தை பெரியார் அவர்தம் மனைவி நாகம்மையார், தங்கை கண்ணம்மாள் ஆகியோரின் பங்களிப்பு என்னவாக இருந்தது?

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தந்தை பெரியார் ஈரோட்டில் கைது செய்யப்பட்டு, கை விலங்கிடப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தச் செய்தி பரவிய நிலையில், 200 பெண்களும், 800 ஆண்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மறியலில்  ஈடு பட்டனர். நாகம்மையாரும், கண்ணம்மாளும் வழி நடத்தினர். வெள்ளைக்கார அதிகாரிகள் இந்தத் தகவலை மேலிடத்திற்குத் தெரிவித்தனர். மக்கள் ஆதரவு போராட்டக்காரர்களுக்கு இருக்கிறது என்று தெரிந்த நிலையில் நான்கு கள்ளுக்கடைகளும் மூடப்பட்டன.

இந்தச் செய்தியினை காந்தியார் பத்திரிகைகளில் படித்தார். பம்பாயில் சங்கரன் நாயர் தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றபோது, சங்கரன் நாயரும் (பிற்காலத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியாக வந்தவர்) மாளவியாவும் காந்தியாரிடம் சொன் னார்கள், கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைத் தொடர வேண்டாம்; நிறுத்தி விடலாம் என்று கேட்டுக் கொண்டபோது - “அது என் கையில் இல்லை; ஈரோட்டில் இரு பெண்களின் கைகளில் இருக்கிறது'' என்று சொன்னார். இந்தச் செய்தி அப்பொழுது 1922 ஜனவரி 19ஆம் தேதி இந்து இங்கிலீஷ் பத்திரிகையில் வந்தது என்று டி.எஸ்.எஸ். ராஜனும், ராஜாஜியும் சொன்னதாக தந்தை பெரியார் கூறிய வரலாற்று நிகழ்வை கழகத் தலைவர் எடுத்துக் கூறினார்.

 

II. ஒப்பற்ற தலைமையின் விளைச்சல்

ஒப்பற்ற தலைமையின் விளைச்சல் என்று வரும்போது தனக்குப் பிறகு இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தும் ஒருவர் உருவாக்கப்பட்டதும் ஒன்றாகும். அந்த வகையில் அன்னை மணியம்மையார் உருவாக்கப்பட்டது எப்படி என்பதற்கு ஆசிரியரின் உரையில் விளக்கம் கிடைத்தது.

1933ஆம் ஆண்டில் அன்னை நாகம்மையார் மறைவுற்றார்கள். 1943ஆம் ஆண்டில் மணியம்மையார் அய்யாவின் உதவிக்காக வந்து சேர்கிறார்கள் (அவரின் இயற்பெயர் காந்திமதி. குடியாத்தம் அண்ணல்தங்கோ அவர்கள், ‘அரசியல்மணி' என்று பெயரை மாற்றினார்.)

அன்னை நாகம்மையார் மறைந்து இடைப்பட்ட 10 ஆண்டு களில் தந்தை பெரியார் அவர்களின் நிலை என்ன? உடல் நிலை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டு - பொதுப்பணியைத் தொடர்ந் தார் என்பதற்கு மணியம்மையார் ‘குடிஅரசு’ இதழில் (6.11.1943) எழுதிய அறிக்கையை எடுத்துக்காட்டியுள்ளார்.

அந்த அறிக்கை இதோ:

வேலூர் அ. மணி எழுதுவது

‘‘பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒருமாத கால மிருந்தேன். அவர் உடல்நிலை மிக்க பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப்பற்றி கவலைப் படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியத்தைப் பார்க்க தகுந்த முழுநேரக்காரரும், முழுக் கொள்கைக்காரரும் கிடைப் பார்களா என்கின்ற கவலையிலேயே இருக்கிறார். இயக்கத்துக்காக என்று தன் கைவசமிருக்கும் சொத்துக்களை என்ன செய்வது என்பது அவருக்கு மற்றொரு பெருங்கவலையாய் இருப்பதையும் கண்டேன். அதோடு இயக்கத்துக்கு வேலை செய்ய சில பெண்கள் வேண்டுமென்றும் அதிக ஆசைப்படுகிறார். அப் பெண்களுக்கு ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்துவிட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார். இந்தப்படி பெரியாரை நான் ஒரு மாத காலமாக ஒரு பெருங்கவலையுருவாகவே கண்டேன். அவர் நோய்வளர அவை எருப்போலவும், தண்ணீர்பாய்வது போல வுமே இருக்கிறது. நான் ஒரு பெண் என்ன செய்ய முடியும்?

இன்னும் சில பெண்கள் முன்வர வேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும், மானம், ஈனம், ஊரார் பழிப்பு யாவற் றையும் துறந்து. நல்ல கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதிகளாயும், வேறு தொல்லை இல்லாதவர்களாயும் இருக்கவேண்டும். அவர்களது முதல் வேலை, பெரியாரைப் பேணுதலும், பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று இயக்க மக்களை அறிமுகம் செய்து கொள்ளவேண்டியதும், இயக்க புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும், நன்றாய்ப்

பேசவும் தெரிந்துகொள்ளவேண்டும். வீடுகள்தோறும் இயக்கப் புத்தகங்களும் ‘குடிஅரசுÕம் இருக்கும்படியாகச் செய்து அவற்றை நடத்தும் சக்தி பெற வேண்டும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது. பெண் மக்களே யோசியுங்கள்.

குடிஅரசு - வேண்டுகோள் - 23.10.1943 (அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை அய்யாவின் உதவியாளராகச் சேர்ந்த நிலையில்)

இந்த அறிக்கையை மணியம்மையார் வெளியிட்டார். ஆனாலும் யாரும் முன்வரவில்லை.

இதன்பிறகு 6 ஆண்டுகள் வரை நன்கு தேடி, கஷ்டப்பட்டு வேறு முடிவுக்கு வர முடியாத நிலையில் தான், தந்தை பெரியார் அவர்கள் மணியம்மையாரை சட்டப்படி திருமணம் செய்து. அதன்மூலம் ஓர் ஏற் பாட்டினை, பாதுகாப்பினை இயக்கச் சொத்துக்களுக்கு உருவாக்கினார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எவ்வளவோ இழிமொழிகளுக்கும், ஏளனத்துக்கும், ஏச்சு பேச்சுகளுக்கும் இடையே, அவர் அய்யாவின் முடிவுக்கு இசைந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதே நேரத்தில்  தந்தை பெரியாரின் முடிவு எவ்வளவு சரியானது - தொலைநோக்கானது என்பது தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு அன்னை மணியம்மையார் இயக்கத்தை சிறப்பாக நடத்திக் காட்டியதின் மூலம் தெளிவாக வெளிப்படவில்லையா?

 

III. “நல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை செய்யமுடியாது”  - தந்தை பெரியார்

“நான் பல ஸ்தாபனங்களுக்கு, அதாவது முனிசிபா லிட்டி, தாலுகா போர்டு, தேவஸ்தானக் கமிட்டி, ஸ்கூல் நிர்வாகம், வியாபார சங்கம் முதலியவைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கிறேன். ஜில்லா போர்டுக்கும் ஒரு முக்கிய வாயாடி அங்கத்தினனாக இருந்திருக் கிறேன். வேறு சில ஸ்தாபனங்களுக்கும் சர்வாதிகாரி யாகவும், தலைவனாகவும் இருக்கிறேன். இவைகள் ஒன்றிலாவது பொது ஜனங்களிடமோ,  நம்மை  அனுசரித்துப் பின்பற்றுகிறவர்களிடமோ நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்று நான் ஒரு நாளும் முயற்சித்ததில்லை. எனது 35 வருடப் பொதுவாழ்வில் நான் நல்ல பெயர் எடுத்ததுமில்லை.

பொது ஜனங்களின் யோக்கியதை எனக்குத் தெரியும். 100க்கு 85 பேர் தற்குறிகள். தங்களுக்கு வேண் டியவை என்னவென்பதைக் கூடத் தெரியாதவர்கள். தங்கள் முன்னோர்கள் யார்? தங்கள் நாடு எது? தங்கள் ஜாதி, இனம் என்ன? என்பவற்றையே உணராதவர்கள். மீதியுள்ளவர்களில் 14 பேர்கள் சுயநலக்காரர்கள். பக்கத்து வீடு தீப்பிடித்து எரிந்தால் அதை அணைக்க ஒரு செம்புத் தண்ணீர் கூடக் கொடுக்க மனம் வராத வர்கள். அதுவும் நம் வீடு எரியும்போது அணைக்கத் தண்ணீர் வேண்டாமா என்று கருதிக்கொண்டு அதை மிச்சப்படுத்தி வைத்திருக்கும் அவ்வளவு புத்திசாலிகள். இந்தமாதிரி ஜனங்களிடத்தில் ஒரு மனிதன் நல்ல பேர் வாங்குவதென்றால் அது உண்மையான பொதுத் தொண்டு ஆகுமா? அந்த நல்லபேர் பொதுத் தொண்டி னால் ஏற்பட்டதாக இருக்க முடியுமா?

இவர்களிடம் நல்ல பேர் வாங்க அனேக பித்த லாட்டங்களும் அயோக்கியத்தனங்களும் ஏமாற்றல் களும் செய்தாக வேண்டியிருக்கும். ஆதலால்தான் பொது ஜனங்களிடம் நல்லபேர் எடுக்க முயற்சிப்பவன் பொதுத் தொண்டுக்கு லாயக்கற்றவனாவான் என்று சொல்லி வருகிறேன்.

மற்றப்படி, நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லுகிறேனென்றால், பொதுநல உணர்ச்சி சிறிதாவது உள்ளவர்கள், பொதுமக்களுக்கு உண்மையாக நலம் தரக்கூடிய காரியம் எதுவென்று நடுநிலையிலிருந்து ஆலோசித்து முடிவு கட்டி, அது வேறு யாருக்குக் கேடு தருவதாயிருந்தாலும் சிறிதும் பயப்படாமல், துணிவோடு செய்ய வேண்டும்.

பொதுஜனங்கள் தயவால் மறுபடியும் நாம் இந்த ஸ்தானத்துக்கு வரவேண்டுமே என்று கருதவே கூடாது.

பாமர மக்களையும் சுய நலக்காரரையும் திருப்திப் படுத்துவதுதான் பொதுநலத் தொண்டு என்று எண் ணினால், உண்மையான நல்ல காரியம் ஒன்றும் செய்ய முடியாது. இவர்களை லட்சியம் செய்யாமல் நமக்குச் சரியென்று பட்டதைத் தைரியமாகச் செய்து கொண்டு போனால் அவை இன்றுள்ள மக்களால் போற்றப்படா விட்டாலும் இவர்களது பின்சந்ததியார் நன்மையடைந்து அவர்களால் போற்றப்படத்தக்க வையாக இருக்கும்.

முன்னோர்கள் செய்துவைத்ததை மாற்றக்கூடாதே யென்று கவலைப்படுகிறவர்கள் கோழைகளேயா வார்கள். முன்னோர்களைவிடக் கண்டிப்பாக நாம் அதிக அனுபவசாலிகளேயாவோம். நம்மை விட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவ சாலிகளேயாவார்கள். 5வயதுப் பையனைவிட, 10 வயதுப் பையன் எப்படிக் கொஞ்சம் புத்திசாலியோ, அவனுக்கு விஷயம் தெரிந்து கொள்ள எப்படிப் பல சௌகரியங்களும் சாதனங்களும் இருக்கின்றனவோ, அது போலவே, முன்காலத்தைவிட இந்தக் காலத்தவர்களுக்கு அதிக விஷயம் தெரிந்து கொள்ளச் சில சௌகரியங்களும் சாதனங்களும் இருக்கின்றன. அதுபோலவே, நமக்கு முன் இருந்தவர்கள் செய்த காரியத்திற்கும், நாம் செய்யவேண்டிய காரியத்திற்கும் தன்மை தெரிய வேண்டுமானால், அவர்கள் யார்? நாம் யார்? அவர்கள் லட்சியம், நம் லட்சியம் என்ன? என்ப வற்றைச் சிந்தித்துப் பார்த்து நாம் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்ய வேண்டும்.”

தந்தை பெரியாரின் இந்தக் கருத்துகளை 18-12-1943 குடிஅரசு இதழிலிருந்து தமிழர் தலைவர் எடுத்துக் காட்டினார்.

 

IV மாணவர்களுக்கு அறிவுரை

மாணவர்களுக்கு தந்தை பெரியாரின் அறிவுரை மிகவும் முக்கியமானது.

மாணவர்களே, உங்களை நான் நம்புகிறேன். நீங்கள்தான் என் சொத்து! அதே நேரத்தில் மாணவர்கள் என்பவர்கள் நல்ல சிப்பாய்களே தவிர கமாண்டர்கள் ஆக மாட்டார்கள். கல்வியில் கவனம் செலுத்த வேண் டும் என்றும் சொன்னவர் தந்தை பெரியார் (ஒரு மாநாட் டுக்குத் தலைமை வகித்த ஒரு தோழர், தான் ஒரு சின்ன பையன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கச் சொல்லி வேடிக்கை காட்டுகிறீர்கள் என்று சொன்ன பொழுது.

தந்தைபெரியார் சொன்னதாவது:

பொடியன்கள் எனது ஆசை

“மாநாட்டுக்குத் தலைமை வகித்த தோழர் அவர்கள் தான் ஒரு சின்னப் பையன் என்றும், தன்னைத் தலைமை பதவியில் உட்கார வைத்து நான் வேடிக்கை செய்கிறேன் என்றும் சொன்னார். இந்த இயக்கம் இன்று ஏதாவது மதிக்கத்தகுந்த அளவுக்குப் பயன்பட்டு வருகின்றது  என்று சொல்லப்படுமானால், அதற்குக் காரணம் இந்த மாதிரி “சின்னப் பையன்களே”. இந்த இயக்கத்திலே இருப்பதினாலேயேதான் எனக்கு ஒருபுறம் வயது வளர்ந்தாலும் வாலிபமும் கூடவே வளர்ந்து வருகிறது. எனது சகவாசம் முழுவதும் சின்னப் பையன்களிடமே இருப்பதினால்தான் சின்னப் பையன் தன்மை எனக்கு இன்னமும் இருந்து வருகிறது. என் ஆசையெல்லாம் நான் எப்பொழுதும் சின்னப் பையன்கள் மாதிரியே இருக்க வேண்டுமென்பதோடு பெரிய ஆள்கள் மாதிரி ஆகக் கூடாது என்பதுமாகும்.”

- தந்தை பெரியார்

‘குடிஅரசு’ 10.1.1948

தந்தை பெரியாருடன் ஒப்பிடக்கூடிய

உலகத் தலைவர் யார்? கேள்விகளுக்கு தமிழர் தலைவர் பதில்

* சிகாகோ டாக்டர் சோம. இளங்கோவன்,

கேள்வி: பெரியாரிடம் எது தலைமையானது?

பதில் : கெட்ட பெயர் வாங்குவது பற்றிக் கவலைப் படாமல் பொதுத்தொண்டு செய்வது. சமூக விஞ்ஞானம் என்பதுதான். டார்வினும், கலிலியோவும் கெட்ட பெயர் எடுப்பது பற்றிக் கவலைப்பட்டிருந்தால், புதிய கண்டு பிடிப்பைக் கொடுத்திருக்க முடியாது.

* நடராசன்

கேள்வி: பெரியார் உலகம் எந்தக் கட்டத்தில் உள்ளது?

பதில்: ஏழெட்டுத் தடையிலா சான்றுகள்-அனு மதிகள் கிடைக்கப் பெற்றுவிட்டன. தமிழ்நாடு அரசிட மிருந்து வர வேண்டிய ஓர் அனுமதி இரண்டாண்டு காலமாக நிலுவையில் உள்ளது. முதல் அமைச்சரின் மேசையில் இருக்கிறது. பணிகள் நடந்து வருகின்றன. கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டியதுதான்.

* அரசு செல்லையா - அமெரிக்கா

கேள்வி: தந்தை பெரியாருடன் ஒப்பிடக் கூடிய உலகத் தலைவர் யார்?

பதில்: கடினமான கேள்விதான். தானே ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி - தலைமை தாங்கி - அதற்கான ஓர் இயக்கத்தையும் உருவாக்கி - வழியும் நடத்தி-அதற்கான பிரச்சாரத்தையும் மேற்கொண்டு - களங்களும் கண்டு - சிறைச்சாலை உள்ளிட்ட விலையும் தந்து - தமக்குப் பிறகும் அந்த இயக்கம் தங்குத் தடை யின்றி செயல்படுவதற்கான ஏற்பாடுகளையும் கட்ட மைப்புகளையும் உருவாக்கிய - இவ்வளவு பரி மாணங்கள் கொண்ட ஒரு தலைவர் தந்தை பெரியாரைத் தவிர வேறு யார் உளர்?

ஒப்பாரும் மிக்காரும் இலாத தலைவர் தந்தை பெரியார் என்பது இந்த அடிப்படையில்தான்.

* டாக்டர் திருநாவுக்கரசர், மனோரஞ்சிதம்

கேள்வி: மதப்பாதுகாப்புச் சட்டம் என்பது இருக்கலாமா?

பதில்: வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அவன் மதத்தையும், பைபிளையும் பாதுகாக்கக் கொண்டு வரப்பட்ட சட்டம் அது. காலாவதியாக வேண்டிய காலனிய சட்டம்.

மதமும் - அரசியலும் தனித் தனியாக்கப்பட வேண்டும்.

* சிகாகோ அரசர்

கேள்வி: மதமில்லை என்று பதிவு செய்யலாமா?

பதில்: போடலாம், தடை ஏதும் கிடையாது. தீர்ப் பெல்லாம் கூட இருக்கிறது. கோவில்பட்டியில் நடை பெற்ற திராவிடர் கழக மாநாட்டில்கூட இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.

வாக்குரிமைக்கு வயது 21 என்றிருந்தது - இப்பொழுது 18 ஆகியிருக்கிறது. அதுபோல - பிறக்கும் எந்த குழந்தையும் மத அடையாளத்துடன் பிறப்பதில்லை.

18 வயது நிறைந்த நிலையில் தன் மதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை ஒரு மனிதனுக்கு இருப்பதுதானே சரியானது.

ஒரு தாய்க்குப் பிறப்பதாலேயே அந்த குழந்தைக்கு தாய் அல்லது தந்தையின் மதம்தான் அந்தக் குழந் தையின் மதம் என்பது என்ன நியாயம்? தனது மதத்தைத் தேர்ந்தெடுப்பதும் அல்லது மதமே தேவை யில்லை என்பதும் ஒரு தனி மனித உரிமையே! (பெட்டி செய்தி தனியே காண்க).

* மும்பை கணேசன்

கேள்வி: உண்மை இதழில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் பகுத்தறிவும் - பண்பட்ட வாழ்வும் எனும் தலைப்பில் தொடர்ச்சியாக எழுதி வந்தார் - அது நூலாக்கப்படுமா!

பதில்: கொண்டு வரப்படும் - ‘இனமுரசு’ சத்யராஜ் தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அதையும் கொண்டு வருவோம்.

* பேராசிரியர் கண்மணி

கேள்வி: முழு நேரம் பணியாற்றிட பெண்கள் முன் வந்தால் ஏற்கும் நிலை உண்டா?

பதில்: தாராளமாக. தந்தை பெரியார் சொன்ன அந்தத் தகுதியோடு, கட்டுப்பாடும், தன்னல மறுப்பும் கொண்ட யாரும் முன் வரலாம். இப்பொழுது நம் மகளிர் பலர் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

* ரமாபிரபா - வடலூர்

கேள்வி: சங்கிகள் குடைச்சல் கொடுத்து வரு கிறார்களே!

பதில்: நம் கவனத்தைத் திசை திருப்ப முயற்சிக் கிறார்கள். அதற்குப் பலியாகாமல், நமது இயக்கப் பணி, இலட்சியப்பயணத்தைத் தொடர வேண்டும்.

* வழக்குரைஞர் மு.க. இராசசேகரன், கரூர்

கேள்வி: சட்டம் மக்களை ஆள்வதா, மக்கள் சட்டத்தை ஆள்வதா?

பதில்: மக்களைப் போதுமான அளவுக்கு நாம் பக்குவப்படுத்தினால், நாம் விரும்பும் சட்டம் நொண்டி அடித்துக் கொண்டு பின்னாலே வந்து சேரும். மக்களுக்காகத்தான் சட்டம்.

* டாக்டர் சரோஜா - அமெரிக்கா

கேள்வி: விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது எப்படி?

பதில்: குழந்தைப் பருவத்திலேயே அதற்கு பழக்க வழக்கங்களை ஊட்ட வேண்டும். குழந்தைகளின் தேடலைப் புரிந்து கொண்டு பெற்றோர்கள் அறிவு ரீதியாக வளர்க்க வேண்டும். கேள்வி கேட்கும் உணர்வை ஊட்ட வேண்டும்.

எடுத்துக்காட்டாக - தஞ்சை வல்லத்தில் கோடையில் ஆண்டுதோறும் நாம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாமில் என்ன நடக்கிறது?

கையிலே பல வண்ணக் கயிறுகளைக் கட்டிக் கொண்டுகூட குழந்தைகள் வருவார்கள். வலுக் கட்டாயமாக நாங்கள் நீக்குவதில்லை. ஒரு குழந்தையின் கயிற்றை வாங்கி - திருச்சி நமது பெரியார் மருந்தியல் கல்லூரிக்குச் சோதனைக்காக அனுப்பி வைக்கிறோம் அவர்கள் சோதனை செய்து அதில் உள்ள கிருமிகள் பற்றியும், அவற்றால் வரும் நோய்கள் குறித்தும் ஆதாரத்துடன் எடுத்துச் சொல்லும் போது, மற்ற மற்ற பிள்ளைகளும், தாங்களாகவே கயிறுகளை அறுத்து எறிந்து விடு கிறார்கள் - அது போல்தான் விஞ்ஞான மனப்பான் மையை ஊட்ட வேண்டும்.