ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘‘ஊசி  மிளகாய்'' - உ.பி.யில் இராமனுக்கும் - பரசுராமனுக்கும் போர்! மதம் பிடித்து அலையும் அரசியல்!!
August 17, 2020 • Viduthalai • மற்றவை

வடநாட்டில் குறிப்பாக இராமனை வைத்து அரசியல் செய்யவே பாபர் மசூதி இடிப்பு, இராமர் கோவில் கட்டுவது எல்லாம் நடந்தன என்பது உலகறிந்த உண்மை.

ஆனால், இதன் விளைவு இன்று அதே உத்தரப்பிரதேச மாநிலத்தின் அரசியலை - மதவாதப் போட்டி அரசியலாக்கி வருவது மிகப்பெரிய மானக்கேடு!

உலக மக்கள் நம் நாட்டவரைப் பார்த்து இப்படியும் மக்களா என்று வியப்பில் ஆழ்ந்து விடுவார்கள்.

ஒருபுறம் இராமர் கோவில் பிரச்சினை முடிந்ததே என்று சிறுபான்மை மதத்தவரான இஸ்லாமியர்கள் பெருமூச்சு விட முடியாதபடி, அடுத்து, அயோத்தி போலவே மதுராவில் கிருஷ்ணன் பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலை இடித்து அதன் பாதியில் ஷாயி ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவாவாதிகள் கூறி வருகின்றனர்.

அதுபோலவே காசி விசுவநாதர் கோவில் அமைந்த இடத்தின் பாதியை இடித்து அதற்கு ஒட்டியபடி அமைந்துள்ள இயான்வாபி மசூதி கட்டப்பட்டதாகவும் புகார் கூறி வருகிறார்கள்.

எனவே, அயோத்தியுடன் இவ்விரண்டையும் சேர்த்துக் குறிக்கும் வகையில், ‘‘பாப்ரி மஸ்ஜித் தூட்டி ஹை, காசி, மதுரா பாக்கி ஹை'' என்பது இந்துத்துவா அமைப்பினரின் கோஷமாக இருந்து வருகிறது!

தற்போது அயோத்தி வழக்கில் இந்துத்துவாவினருக்குக் கிடைத்த சாதகமான தீர்ப்பால் இராமர் கோவில் அமைந்துள்ளது. இதன் பிறகு மதுரா, காசி பிரச்சினைகள் மீண்டும் எழும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இதுகுறித்து, ராமன் கோவில் போராட்டத்தில் பங்கு பெற்ற பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி., வினய் கட்டியார் கூறும்போது, ‘‘காசியிலும், மதுராவிலும் கோவில் கட்டுவது எங்கள் திட்டத்தில் இன்னும் உள்ளது. இதை நிறைவேற்ற நாங்கள் அமர்ந்து முடிவு எடுப்போம். மிகவும் கடினமான இந்தப் பணியை முடிக்க அதிக காலம் பிடிக்கும்'' என்றார். (‘தமிழ் இந்து திசை', 8.8.2020).

இது ஒருபுறமிருக்க, அதே உத்தரப்பிரதேசத்தில் இராமருக்கு எதிராக ‘‘அரசியல் '' செய்ய எதிர்க்கட்சிகளுக்கு இப்போது பரசுராமன் கிடைத்துள்ளான்! இராம அவதாரம் எடுத்ததுபோலவே, பரசுராம  (பார்ப்பனர்) அவதாரம் எடுத்து க்ஷத்திரியர்களைக் கோடரி கொண்டு கொன்று வீழ்த்தியதாக புராணம் கூறுவதால், உ.பி.யின் இராமருக்கு எதிராக பரசுராமன் போட்டியிட உள்ளான் என்பது என்னே வேடிக்கையான மதவாத அரசியல்!

உ.பி.யில் பார்ப்பனர் எண்ணிக்கை 12 சதவிகிதம் (மற்ற மாநிலங்களைவிட அங்கு மிக அதிகம்) அந்த வாக்குகளைப் பெற எதிர்க்கட்சிகளிடையே இப்படி பரசுராமனுக்கு ஏக கிராக்கி போலும்!

செய்தி ஊடகங்களில் இதுபற்றி வெளியாகியுள்ள மற்றொரு வேடிக்கை மிகுந்த செய்தி இதோ:

‘‘உத்தரப்பிரதேசத்தில் ராமனுக்கு இணையாகப் பரசுராமனைத் தூக்கிப் பிடிக்கும் எதிர்க்கட்சிகள்  விவகாரத்தில் அகில இந்திய சாதுக்கள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதாம்!

உ.பி.யில் இராமன் கோவிலுக்கான பூமி பூஜைக்குப் பிறகே, பார்ப்பனர்களின் வாக்குகளைக் கவரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. இதனால் இராமனுக்குப் போட்டியாக பரசுராமனை எதிர்க்கட்சிகள் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த அமைப்பின் தலைவரான மகந்த் நரேந்திர கிரி என்பவர்,

‘‘கடவுளின் அவதாரங்களை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குச் சொந்தமானதாகக்  கருதுவது  தவறு. இவற்றை  ஜாதிவாரியாகப் பிரிப்பது - (இராமன் க்ஷத்திரியன் - பரசுராமன் ‘‘பிராமணன்'' என்பதாகப் பிரிப்பது) என்பது இந்து மதத்தை வலுவிழக்கச் செய்வது'' என்று கூறியுள்ளாராம்.

‘‘உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 75 மாவட்டங்களிலும் பரசுராமனுக்குச் சிலை வைக்கப்படும். 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்படு''ம் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்!

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தன் பங்குக்கு, ‘‘தாங்கள் ஆட்சிக்கு வந்தால், சமாஜ்வாதிக் கட்சி கூறுவதைவிட அதிக உயரத்தில் பரசுராமனுக்கு சிலை வைக்கப்படும்'' என்றார்!

உ.பி. காங்கிரஸ் கட்சியோ,  பார்ப்பனர் வாக்குகளைக் கவர, ஒரு புது முயற்சியாக ஜிதின் பிரசாத் என்ற பார்ப்பனர் தலைமையில் (முன்னாள் மத்திய அமைச்சர் இவர்) ‘பிராமண சேத்னாசமிதி' என்ற ஒரு தனி அமைப்பை உருவாக்கி, ‘பிராமணர்களின் உரிமைகளுக்குப் போராடுவோம்' என்கிறார்! தேர்தல் 2022 இல் வருவதற்கு முன்பே இப்படிப் பல வித்தைகள் அங்கே!

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த அரசியல் எதிர்க்கட்சிகள் மற்ற 88 சதவிகித மக்களின் வாக்குகளைப்பற்றி கவலைப்படாமல், 12 சதவிகித பார்ப்பனர்களின் வாக்குகளுக்காக இப்படி அலைவது எந்த வகையில் ஆரோக்கியமான அரசியலாகும். உண்மையான ஜனநாயகத்திற்கு உகந்ததாகுமா?

அந்தோ, மதம் பிடித்து அலைகிறதா அரசியல்?