ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘மேக் இன் இந்தியா', இதுதானா
August 18, 2020 • Viduthalai • தலையங்கம்

‘மேக் இன் இந்தியா?' இதுதானா?

‘மேக் இன் இந்தியா' என்று பிரதமர் நரேந்திரமோடி சும்மா தூள் பரப்பினார்; குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு புதிய முழக்கத்தைக் கொடுத்து, மக்களைத் திசை திருப்புவார்.

"இந்த ‘மேக் இன் இந்தியா' என்பது யதார்த்தமான நிலையல்ல" என்று பிரதமரின் லகானான ஆர்.எஸ்.எஸ். பீடமான நாக்பூர் தலைமகனார் மோகன் பாகவத்தோ காயைத் திருப்பிப் போட்டு விட்டார்.

தலைநகர் டில்லியில் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காணொலி மூலம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது: “இந்த உலகில் சிறந்ததாக இருக்கும் அனைத்தையும் இந்தியா எடுத்துக்கொள்ளலாம். நம்முடைய தேவைக்கு ஏற்ப வெளிநாடுகளிலிருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதேசி என்பது உள்நாட்டு பொருட்களுக்கும், தொழில் நுட்பத்துக்கும் முக்கியத்துவம் அளிப்பதாகும். அதே நேரத்தில் எல்லா வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம் நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில் நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்து நம் நாட்டுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளலாம்.

கரோனா வைரஸ் தொற்று, உலகமயமாக்கல் என்பது பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வுகளைத் தராது என்பதைத் தெளிவாக உணர்த்திவிட்டது. ஒரே பொருளாதார மாதிரித் திட்டம் என்பதை அனைத்து இடங்களிலும் செயல்படுத்த முடியாது. சுயச்சார்பு அடைந்த நாடுகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டுறவு தேவை. உலகம் என்பது ஒரு குடும்பம், ஒரு சந்தை அல்ல என்பதை அனைவரும் கருத வேண்டும்.

சுதந்திரத்துக்குப்பின், மேற்கத்திய மற்றும் வெளிநாடுகளின் தாக்கத்தால் ஏற்படும் இழப்பிலிருந்து நம்மைக் காக்கும் பொருளா தாரக் கொள்கைகளை நாம் நடைமுறைப்படுத்தவில்லை.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைவிட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், தொழில்நுட்பங்கள் சிறப்பாக இருக்கின்றன. இது மிகவும் நல்ல அறிகுறி. நாம் சரியான திசையில் வளர்ந்து வருகிறோம் என்பதைத்தான் காட்டுகிறது. இருப்பினும் வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்களை உள்ளூர் மயமாக்குவது சமூகத்துக்கு அவசியமானது” இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

இப்போது புரிகிறதா, இவர்களின் தேசபக்தி!

2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தபிறகு Ôமேக் இன் இந்தியாÕ என்ற ஜால வார்த்தையுடன் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அதாவது, இனிமேல் அனைத்துமே மேட் இன் சைனா, மேட் இன் கொரியா, மேட் இன் ஜப்பான் என்று இருக்கக் கூடாது, Ôமேட் இன் இந்தியாÕ வாக இருக்கவேண்டும், அதற்கு நாம் முதலில் தயாராக வேண்டும். அதற்கான திட்டம்தான் இந்த Ôமேக் இன் இந்தியாÕ என்றார். வடக்கத்தியர்கள் கைதட்டினார்கள். சுமார் ஒருமாதம் இந்தத் தலைப்பை வைத்து மோடியின் புகழைப் பாடித் தீர்த்தார்கள்.

ஆனால், அந்த திட்டம் அறிவித்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. கரோனா பரிசோதனைக் கருவிகளைக்கூட கிழக்காசிய நாடுகளிடமிருந்துதான் இறக்குமதி செய்துகொண்டு இருக்கிறோம். இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கரோனா தொற்றுக்கான பாதுகாப்புக் கவச உடைகள், முகவுறைகள் அனைத்துமே தரமற்றவை என்று கூறி ஆப்பிரிக்க நாடுகள்கூட நிராகரித்துவிட்டன.

இந்த Ôமேக் இன் இந்தியாÕ திட்டத்தை எப்போது முழங்கினாரோ, அப்போதே தோல்வியில் முடிந்து விட்டது. கரோனா காலத்தில் திடீரென Ôஆத்தும நிர்பர் பாரத்Õ என்று அறிவித்தார். அதாவது தற்சார்பு இந்தியாவாம்!

அதாவது இனிமேல் நாம் ஊருக்குச் சென்றால்கூட ரயிலையோ, பேருந்துகளையோ அல்லது இதர வாகனங்களையோ எதிர்பார்க்கக் கூடாது. காசிருந்தால் அவற்றில் பயணம் செய்யலாம். இல்லையா, அக்காலத்தைப் போல் ஊருக்கு நடந்து செல் என்று மறைமுகமாக கூறினார் போலும்! அதனால்தானோ என்னவோ, மும்பை, பெங்களூரு, சூரத், டில்லி, அய்தராபாத் போன்ற தொழில் நகரங்களில் இருந்து சுமார் 2000 கிலோ மீட்டர் தூரம் பீகார், மேற்குவங்கம், அசாம் போன்ற மாநிலங்களுக்கு மக்கள் நடந்தே சென்றனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.

அண்மையில் Ôசீனப்பொருள் புறக்கணிப்புÕ என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் துணை அமைப்பான சுவதேசி ஜாக்ரன் மஞ்ச் பிரச்சாரம் செய்தது, ஆனால் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு படியளக்கும் மார்வாடிகள் சீனப் பொருட்களை இறக்குமதி செய்துகொண்டே இருக்கின்றனர். இறக்குமதி வணிகம் இந்தியாவின் அடிமட்டம் வரை வலைப்பின்னல்போல் அமைந்து விட்டது. ஆடையில் தைக்கும் ஜிப் முதல் பள்ளிப்பிள்ளைகள் பயன்படுத்தும் பென்சில், ரப்பர், பேனா என அனைத்துமே சீனாவிலிருந்து இன்றளவும் இறக்குமதிச் சரக்குகளாக வந்து கொண்டே இருக்கின்றன.

இந்த அழகில் மோடி வார்த்தை ஜாலம் காட்டும் விதமாக முன்பு Ôமேக் இன் இந்தியாÕ இன்று Ôஆத்ம நிர்பர் பாரத்Õ என்கிறார்.

ஆனால், மோகன் பாகவத்தோ வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்காதீர்கள் என்று இதோபதேசம் செய்கிறார். பா.ஜ.க. தங்களது சுதந்திர தின வாழ்த்துப் பதாகையில் காங்கிரஸ் தலைவர்களையும், பகத்சிங், சந்திரசேகர் ஆசாத் போன்ற கம்யூனிஸ்ட் நாத்திகத் தலைவர்களையும் வெட்கமில்லாமல் போட்டுக்கொண்டு வாழ்த்து கூறுகிறது.

ஹிந்து மதம் என்பதே முதலில் சுதேசியல்ல; வெள்ளைக்காரன் சூட்டிய பெயர்தான். இந்த இலட்சணத்தில் ஹிந்து ராஜ்ஜியம் என்ற முழக்கமேகூட சுதேசித் தன்மை இல்லாததுதான்.

பேண்ட்டும், சூட்டும்கூட வெள்ளைக்காரன் கலாச்சாரம்தான். பஞ்சக்கச்சத்துடன் நடமாடும் அமைச்சர்கள் உண்டா? கோஷத்துக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

Ôமேக் இன் இந்தியா' அவ்வளவுதான்!