ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘துக்ளக்‘க்குப் பதிலடி : பெரியார் யார் 'பெரியவாள்' யார்
September 1, 2020 • Viduthalai • கழகம்

‘துக்ளக்‘க்குப் பதிலடி : பெரியார் யார்? 'பெரியவாள்' யார்?

* மின்சாரம்

இன்று வெளிவந்த ‘துக்ளக்‘ இதழில் (9.9.2020) ‘பெரியார் மண்ணும் தலித்களுக்கு அவமரியாதையும்‘ எனும் தலைப்பில் கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு எதிரான நடவடிக்கைகள், அவமதிப்புகள் நடக்கின்றன - இதுதான் பெரியார் மண்ணா? என்று கேலி செய்கிறது அந்தக் கட்டுரை.

இதன் மூலம் ‘துக்ளக்‘ தன்னை அறியாமலேயே தலித்கள் அவமதிப்பு - ஜாதிப் பிரச்சினை என்றால் இவை பெரியாரால்தான் ஒழிக்க முடியும் - அவர் ஏற்படுத்திய திராவிடர் கழகம்தான் இதில் அக்கறை யுள்ள அமைப்பு என்பதை  ஒப்புக் கொண்டு விட்டதே!

‘துக்ளக்‘குக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது ஜாதி ஒழிப்புக்காகப் பாடுபட்டு வருவது- பிரச்சாரம் செய்து வருவது போராடுவது - சிறைத் தண்டனை ஏற்பது எல்லாம் அவர்தம் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்று தெரிந்த காரணத்தால்தான் - தாழ்த்தப்பட்ட வர்கள் அவமதிக்கப்படும் பொழுது உடனடியாக பெரியார் நினைவு தான் அவர்களுக்கு வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

தீண்டாமை ஒழிப்புக்காக வைக்கம் வரை இன்றைக்கு 95 ஆண்டுகளுக்கு முன் தம் குடும்பத் தோடு சென்று போராடியவர், சிறை சென்றவர் பெரியார் என்பது  ‘துக்ளக்‘ உள்ளிட்ட பார்ப்பனர் களுக்கு மிக நன்றாகவே, வெளிச்சமாகவே தெரிகிறது.

தமிழ்நாட்டில் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டத்தை குருமூர்த்தி, சோ ராமசாமி உட்பட வெட்டி எறிந்தது- அப்படிப் போட்டுக் கொள்வது கேலிக்குரியது என்ற நிலை நாட்டில் உருவானதற்குக் காரணம் பெரியாரும், அவர் கண்ட இயக்கமும்தான் காரணம் என்று அவாளுக்கு மிக மிக நன்றாகவே தீர்க்கமாகவே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜாதிப் பிரச்சினைகள் வரும்போது பெரியாரை நினைக்கிறது ‘துக்ளக்‘ கும்பல்.

ஜாதி - அதன் விளைவான தீண்டாமை குறித்து ‘துக்ளக்‘ கூட்டத்தின் கருத்து என்ன? அவர்கள் துதிக்கும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்களின் புத்தி என்ன? நழுவாமல், வழுக்கிச் செல்லாமல் நேரடியாகப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!

தீண்டாமை இன்னும் இருக்கிறது என்றால் அதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்று சங்கர மடங்களே! இந்த வார ‘துக்ளக்‘கில் கூட ‘மஹா பெரியவாளை’ப்பற்றி ஆகா, ஊகா என்று உச்சியில் வைத்துப் பூஜை செய்து எழுதுகிறார் குருமூர்த்தி.

அந்த ‘மஹா பெரியவாளை’ மதிக்கும், பக்தி செலுத்தும் கூட்டம் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கெல்லாம் ‘மஹா பெரியவாள்’ சொல்லும் உபதேசம், அருள்வாக்கு ‘தீண்டாமை க்ஷேமகரமானது!’ என்பதுதானே!

இது சட்டப்படி குற்றம் - ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பப்பட வேண்டிய குற்றம்!

‘தீண்டாமை க்ஷேமகரமானது’ என்று வெளிப்படையாக சொன்ன தற்காக அந்த ‘மஹா பெரியவாளே கைது செய்து ஜெயிலுக்குள் தள்ளியிருந்தால் தீண்டாமை  அனுசரிப்பது குற்றம்  - குறைந்தபட்சம் பயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். அல்லவா? சங்க ராச்சாரியார் பக்தர்களின் மனதிலும் ஒரு மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருந் திருக்குமே! இந்த மஹா குற்றவாளி- மஹா பெரியவாளாகப் பவனி வர முடியாமல் போயிருக்குமே!

‘மஹா பெரியவாளைக் கைது செய்வதா?’ என்று பதற்றப்படத் தேவையில்லை - காரணம் இந்த மஹா பெரியவரின் மஹா சீடரான ஜெயேந்திர சரஸ்வதி கொலைக் குற்றத்தின்கீழ் ஜெயிலுக்குள் சென்று கம்பி எண்ணிவந்தவர்தானே!

சிருங்கேரி சங்கராச்சாரியின் நிலைப்பாடு என்ன?

The Panchama is asked to be at a distance. because the inborn impurity of his body. Any amount of washing of the body with the best available soap and any clothing and decoration of it in the best upto date style cannot remove from its in laid filth that has originated from the deep rooted contamination filthy in hereditity (Book: 'Hindu Ideal' - P.230)

“தாழ்த்தப்பட்டவர்களைப் பார்த்து ‘எட்டிநில், தொடாதே!’ என்று சொல்லுவதற்குக் காரணம் பிறப் பின் அடிப்படையிலேயே அவர்களைப் பிணைந்த தூய்மையற்ற தன்மையே!

மிக உயர்ந்த சோப்பைப் போட்டுக் குளிப்பாட்டி னாலும், ஆடை, அணி மணிகளால் அலங்கரித்தாலும், பாரம்பரியமாக அவர்களைப் பீடித்த துப்புரவுக் கேடான, அழுக்குப் படிந்த அவர்களின் நிலையை மாற்ற முடியாது - மாற்றவே முடியாது.” என்று சொன்ன சிருங்கேரி சங்கராச்சாரியாரைத் தூக்கி சிறையில் கிடாசியிருந்தால் தீண்டாமை குறித்த அச்சம் மக் களுக்கு குறிப்பாக அவாளின் பக்தர்களுக்கு ஏற்பட்டு இருக்குமே!

ஜாதி ஒழிப்பு சரித்திரம் படைத்த தந்தை பெரியாரை இழிவுபடுத்தியும், அதே நேரத்தில் ஜாதியையும், தீண்டாமையையும்  ஜரிகைக்குல்லா மாட்டித் தூக்கிப் பிடிக்கும் ‘பெரியவாளை’ போற்றியும் பாடும் இந்த இருள் மனம் படைத்த   - பாரம்பரியமான அழுக்கு மனம் கொண்ட இரட்டை வேட இருட்டு வவ்வால் களை ‘துக்ளக்‘ வாசகர்களுமே (குறிப்பாகப் பார்ப்பனர் அல்லாத வாசகர்களும்) புரிந்து கொள்வார்களாக!

பெரியார் என்றால் ஜாதி ஒழிப்பு  சரித்திரத்தலைவர்  - பெரியவாள் என்றால் ஜாதி - தீண்டாமை காக்கும் பேர் வழிகள் என்பது நினைவிருக்கட்டும்!