ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
‘ஆட்சியை விட்டுவிட்டு, அய்யாவுடன் சமூகப் பணியைத் தொடரவா' - அறிஞர் அண்ணா
September 15, 2020 • Viduthalai • கழகம்

‘ஆட்சியை விட்டுவிட்டு, அய்யாவுடன் சமூகப் பணியைத் தொடரவா?' - அறிஞர் அண்ணா

‘‘வேண்டாம்- ஆட்சிப் பணியைத் தொடருங்கள்; இந்தப் பணியை நாங்கள் தொடர்கிறோம்! - தந்தை பெரியார்

நாகரசம்பட்டி பள்ளி விழாவில் நடந்ததை எடுத்துக்காட்டி

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அண்ணா பிறந்த நாள் அறிக்கை!

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டியில் நடைபெற்ற - பள்ளி விழாவில் பங்கேற்ற முதல மைச்சர் அண்ணா அவர்கள் ‘ஆட்சியை விட்டு அகன்று, தந்தை பெரியாரோடு சமூகப் பணி யைத் தொடரவா அல்லது ஆட்சிப் பணியைத் தொடர்வதா என்பதை அய்யா முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று முதலமைச்சர் அண்ணா, தந்தை பெரியார் முன்னிலையில் சொல்ல - வேண்டாம், முழு ஆட்சிப் பணியை ஒரு நிமிடம் கூட பாக்கி வைக்காமல் தொடர்க - இந்தப் பணியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று தந்தை பெரியார் பதிலாகத் தெரிவித்த தகவல்களை எடுத்துக்காட்டி, அய்யாவும், அண் ணாவும் முக்கிய முடிவுகளை எந்த வகையில் எடுத்தார்கள் என்பது நமக்கெல்லாம் வழிகாட்டு வதாகும் என்று அண்ணாவின் 112 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செய்தியாக - அறிக்கைமூலம்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வெளிப்படுத்தி யுள்ளார்.

அறிக்கை வருமாறு:

1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது - மக்களின் பெருவாரி யான வாக்குகளை தேர்தல்மூலம் பெற்று ஒரு பகுத்தறிவாளர் ஆட்சி அமைத்தது இந்திய வரலாற்றிலேயே புதுமையானது - புரட்சிகரமானது!

அதற்குமுன் காமராசர் ஆட்சியை ஆதரித்தது தந்தை பெரியாரும், திராவிடர் கழகமும்; தி.மு.க. ஆட்சி ஏற்படுவதன்மூலம் ஆச்சாரியார் ஆட்சி மீண்டும் இவர்கள்மூலமாக வந்து அமர்ந்துவிடுமோ என்ற அச்சமும், ஆவேசமும்தான் தி.மு.க.வை கடுமையாக தந்தை பெரியார் எதிர்த்ததன் நோக்கம்.

தமிழ்நாட்டின் அரசியல் திருப்பம்!

ஆச்சாரியாரும், மிகவும் ஆசையோடும், ஆவ லோடும் அப்படி ஒரு நிலை வரும் என்று எதிர் பார்த்து இறுதியில் ஏமாந்தார்; அண்ணாவின் ‘இராஜதந்திரம்' வெற்றி பெற்றதற்கு அடையாளம் தாங்கள் பெற்ற வெற்றிக் கனியை - நேரே 200 மைல்களுக்கு அப்பால் திருச்சியில் பெரியார் மாளிகையிலிருந்த தந்தை பெரியார் அவர்களை நேரில் சந்தித்து வெற்றிக் கனியை அவர்தம் காலடி யில் வைத்து, ‘‘எங்களை வழிநடத்துங்கள்'' என்று கேட்டது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய திருப்பமாகும்!

அதனைக் கண்டு ஆரியமும் - ஆச்சாரியாரும் அசந்து, கசந்துவிடத் துவங்கினர்.

ஆரியம் வைத்த ‘கண்ணிவெடி!'

‘‘தி.மு.க.வினர் ஆட்சி அனுபவம் இல்லாத வர்கள், ஆகவே, அனுபவத்தால் பழுத்த ஆச்சாரி யாரே கொஞ்ச காலத்திற்கு ஆட்சிக்குத் தலைமை ஏற்று நடத்தினால் சிறப்பாக அமையும்'' என்று ஆங்கில நாளேடுகளில் ஆசிரியருக்குக் கடிதம் என்ற சாக்கில் தங்களது ‘அபிலாஷை'களை அர்ப்பணித்தனர்; ‘‘மாநிலங்களவையில், டில்லியில் அண்ணா இருப்பது மிகவும் சிறப்பு'' என்று கண்ணிவெடி வைத்ததும் பலிக்கவில்லை!

அறிஞர் அண்ணா தலைமையில் 9 பேர் கொண்ட அமைச்சரவை அமைந்தது - வரலாற்றில் முதன்முதலாக பார்ப்பனரே இல்லாத அமைச்சர வையை - தி.மு.க. அமைத்தது!

போதாக் குறைக்கு, ‘‘தந்தை பெரியாருக்கே இந்த அமைச்சரவை காணிக்கை'' என்று பிரகட னப்படுத்தினார் சட்டமன்றத்தில் முதலமைச்சர் அண்ணா!

அய்யா - அண்ணா தெரிவித்த

வழிகாட்டும் கருத்துகள்!

நொந்த ஆரியம் வெந்தது! ‘தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்தது' என்று வெடித்தார் ஆச்சாரியார்!

இந்த நிலையில்,  நாகரசம்பட்டி என்ற ஒரு சிற்றூரில் நடந்த ஒரு பள்ளிக்கூடக் கட்டடத் திறப்பு விழா (கிருஷ்ணகிரி மாவட்டம், 19.12.1967 இல்) - எனது தலைமையில்; தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் கலந்துகொண்டு பேசிய மிகப்பெரிய விழா - பல்லாயிரக்கணக்கில் சுற்றுவட்டாரப் பொது மக்கள் திரண்ட விழாவில், முதலமைச்சர் அண்ணா - தந்தை பெரியார் உரைகள் மிகப்பெரிய அரசியல் தத்துவ வரலாற்றின் அங்கீகார விதையாக ஊன்றப் பட்டன என்பதை கூர்த்த மதியோடு அலசிப் பார்ப்போருக்கு மட்டுமே புரியக் கூடிய ஒன்று.

முதலமைச்சர் அண்ணா பேசுகிறார் அங்கே:

‘‘பெரியார் வழியில் இயன்ற எதையும் இந்த ஆட்சி செய்யும். இப்போதிருக்கும் காலம் மிகவும் பக்குவம் நிறைந்த காலம். பெரியார் அவர்களின் கருத்துகளைச் சட்டம்மூலம் செயல்படுத்த இந்த சர்க்காரின் அதிகார எல்லைக்குட்பட்டு என் னென்ன செய்ய முடியுமோ அவற்றைச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன். பெரியாரவர்கள் எடுத்துச் சொல்கிற கருத்துகளையும், கொள்கை களையும் பரப்புவதற்கு, செயலாக்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சர்க்காரிலே இருந்துகொண்டு ஏதோ சில காரியங்களைச் செய்யவா? அல்லது விட்டுவிட்டு, உங்களோடு தமிழகத்திலே இதே பேச்சைப் பேசிக் கொண்டு உங்களோடு இருக்கவா என்பதை முடிவு செய்யும் பொறுப்பை பெரியார் அவர்களுக்கே விட்டு விடுகிறேன். அவர் என் னோடு வந்து பணியாற்று என்றால், அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

இறுதியில் இதற்குப் பதிலளித்து தந்தை பெரியார் பேசுகிறார்:

‘‘ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அண்ணா, அதன் முழுக் காலத்தையும் 5 வருடங்களையும் ஒரு நாள், ஒரு மணிநேரம், ஒரு நிமிஷத்தைக்கூட விட்டுக் கொடுக்காமல் அந்தப் பணிகளைத் தொடரவேண்டும். இந்தப் பணி செய்ய நாங்கள் (தி.க.) இருக்கிறோம்; நாங்கள் பார்த்துக் கொள் கிறோம்'' என்றார்.

இரட்டைக் குழல் துப்பாக்கி என்பது நிரூபணம்!

இதன் தத்துவம், தி.மு.க.வின் அரசியல் நிலைப் பாடு - கொள்கைகளை ஆட்சியில் அமர்ந்து செயல்படும் திராவிடர் இயக்கமாக என்றென்றும் தி.மு.க. இருக்கட்டும்; அதனை வழிநடத்தவும், அதற்கு வழி அமைக்கவும் ‘‘Sappers and Miners'' (சாப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ் படையாக) திராவிடர் கழகம் இருக்கும் என்று கூறி, ‘இரட்டைக் குழல் துப்பாக்கி' உதாரணத்திற்கு முழு அங்கீகாரம் கொடுத்த உரையல்லவா தந்தை பெரியாருடையது!

அது அறிஞர் அண்ணாவிற்குப் பிறகும், கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், அதற்குப் பிறகும் தளபதி மு.க.ஸ்டாலின் தி.மு.க. வுக்குத் தலைமையேற்ற பிறகு, தி.க. - தி.மு.க. உறவு தாயன்புடன், தாய்ப் பாசத்துடன், கொள்கை உற வாகவே நீடிப்பதும், தி.மு.க.வுக்கு, தி.க. வாளாகவும், கேடயமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இன்றும் திகழ்வது - அன்றைய ஆச்சாரியார்முதல் இன்றைய குருமூர்த்திகள் வரை அவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாகவே இருக்கிறது.

எப்படிப்பட்ட உறவு - கொள்கை லட்சிய உறவு!

நெருக்கடி காலத்தில்

அம்மாவின் உறுதிப்பாடு!

இடையில் நடைபெற்ற எத்தனையோ அடக்கு முறை காலத்து நிகழ்வுகளும்கூட அதனை உறுதிப் படுத்தி - கான்கிரீட் பூசப்பட்டதாக்கப்பட்டு விட்டதே!

1976 இல் நெருக்கடி காலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி அவர்களைச் சந்தித்து திராவிடர் கழகத் தலைவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், ‘‘எக்காரணமுமின்றி திராவிடர் கழகப் பொறுப்பாளர்களை, ஏன் ‘மிசா' கைதிகளாக்கி சிறையில் அடைத்திருக்கிறீர்கள் - விடுதலை செய்யுங்கள்'' என்று கேட்டபோது, ‘‘உங்களின் தி.க. - தி.மு.க.வோடு உள்ள உறவை விட்டுவிடச் சம்மதித்தால், அவர்களை விடுதலைச் செய்யச் சொல்கிறோம்‘‘ என்று கூற, அம்மா ‘‘சட்''டென்று கும்பிட்டுவிட்டு, ‘‘நன்றி! அது எங்க ளால் இயலாது - எங்களின் கொள்கை உறவு அது'' என்பதைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்!

இத்தனைக்கும், அம்மாவினால்தான் தி.மு.க.வே ஏற்பட்டது என்பது வரலாற்றில் பேசப்படும் ஒரு சூழலை உண்டாக்கிய நிலையில், அந்த ‘‘அம்மா'' எப்படி தந்தை பெரியார் வழியில் உறுதியாக நின்றார் என்பது முக்கியம். பெரியார் என்ற பாடம் இன்று நம் காலத்தில், நமக்கெல்லாம் வழிகாட்டியாக உள்ளது. அடுத்த தலைமுறையினரிடமும் அந்தப் பந்தமும், பாசமும், கொள்கை உறவும், உறுதியும் நீடிக்கிறது! நீடிப்பதோடு நிலைத்த வெற்றிகளையும் குவிக்க ஆயத்தமாகிறது என்பதை காலமும், அரசி யலும், சமுதாயத்திலும் உணர்த்தத்தான் போகிறது!

திராவிட மண்தான் - பெரியார் மண்தான்!

எனவே, அய்யாவோ, அண்ணாவோ மறைந்த வர்கள் அல்லர்! நம் உள்ளங்களில் கொள்கையாய் நிறைந்தவர்கள்; லட்சியங்களால் இந்த மண்ணில் உறைந்தவர்கள். இதை மாற்றிட துடிப்போருக்குக் காத்திருப்பது ஏமாற்றமே! தோல்வியே!

இது திராவிட மண்தான்; பெரியார் மண்தான் என்பது நாளும் உறுதிபடச் செய்யும் வரலாற்று நிகழ்வுகள் இந்த திராவிடர் இயக்க இரு குழல் களாலும் அடர்த்தியாக செயத்தக்க செய்யப்படும் என்பது உறுதி!

புதிய தலைமுறையினர்

கற்றுக் கொள்ள....

அண்ணா பிறந்த நாளில் இந்தப் பழைய வரலாற்றுச் சுவடுகளை இளைய தலைமுறையினரே, பார்த்து, படித்து பாடம் கற்றுக்கொள்வார்களாக!

 

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.9.2020