ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வெண்சட்டைப் பெரியார்!
July 25, 2020 • Viduthalai • மற்றவை

கனம் ரெட்டியார் இந்துமதத்தில் பற்றுள்ளவர்; இந்துமத தெய்வங்களிடம் பற்றுள்ளவர்; ஹிந்துமதக் கோட்பாடுகளிலும், சம்பிரதாயங்களிலும் நம்பிக்கையுள்ளவர்; நெற்றியில் விபூதி, குங்குமம் தரிப்பது போன்ற ஹிந்துமதத்தின் வெளிப்படையான சின்னங்களைக்கூடப் பக்தி சிரத்தையுடன் அனுபவித்து வருபவர். ஆலயங்களின் சன்னதியில் அவர் பரவசமடைந்து நிற்பவர். தேவார, திருவாசகங்களைக் கேட்டு ஆனந்தக்கண்ணீர் வடிப்பவர். ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சரையும், ஸ்ரீ ரமண ரிஷியையும், தெய்வாம்சம் பொருந்திய குருநாதர்களாகக் கொண்டு பக்தி செலுத்திப் பூசிப்பவர்.

இப்படிக் கல்கியால் தலையங்கத்தில் வரைந்து காட்டப்பட்டவர், வேறு யாருமல்ல. 1942இல் பிரதான அமைச்சராகப் பொறுப்பேற்ற (அன்று முதலமைச்சருக்கு அந்தப் பெயர்தான்) ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார். இவர் பழுத்த காங்கிரஸ்காரர்; காந்திபக்தர்; சிறை சென்றும், சுதந்திரப்போரில் முன்னின்றவர்.

இவர் பிரதான அமைச்சராக பொறுப்பேற்று செயல்படத் தொடங்கியதில் இருந்து, அவரது செயல்பாடுகள் காங்கிர சாருக்குக் கசப்பானதாகவும், சுயமரியாதை இயக்கத்தவருக்கு உவப்பானதாகவும் மாறிப் போனது. காரணம் அவர்,  நேர்மையாகச் செயல்பட்டார். சமூகநீதிக்குத் தோள் கொடுத்தார். எந்த மக்களுக்காகக் கோயில்களும், மடங்களும் உருவாக்கப் பட்டனவோ, அது ஒழுங்காக நடக்காமல் சிலருக்கு மட்டுமே பயன்படும் நிறுவனங்களாக மாறிப்போனதுதான் நாத்திகம் பரவக் காரணம் என்று நினைத்தே அறநிலையச் சட்டத்தை ஓமந்தூரார் கொண்டு வந்தார்.

எப்படி அன்று கோவில்கள்?

அன்று கோவில்களும், மடங்களும், கொள்ளை அடிப்பவர்கள் கூடாரமாகத் திகழ்ந்தன என ஓமந்தூரார் சென்னை சட்ட சபையிலும், கோயில் அறக்கட்டளைகள் நிர்வாகிகள் மாநாட்டிலும், விரிவாகப் பேசியதைப் படித்தால், அவர் பக்திமான் ராமசாமியா? அல்லது கடவுள் மறுப்பாளர் பெரியார் ராமசாமியா என்று சந்தேகமே வந்துவிடும்.

திருவண்ணாமலை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளில் கள் இறக்கி விற்றுவந்தனர். இச்செயல் கடவுளுக்கு ஒவ்வாது என 1937லேயே பலமுறை ஓமந்தூரார் எடுத்துச் சொல்லியும், தர்மகர்த்தாக்கள் கேட்கவில்லையாம். கள் விற்பது கோயில்பணியின் ஒரு பகுதியாக அன்று அங்கு இருந்து வந்திருக்கிறது.

வடக்கே விசாகப்பட்டினம் முதல், தெற்கே திருநெல்வேலி வரை பல  கோயில்களில் நகைமோசடி, நிலமோசடி என அன்றைக்குப் பல லட்சம் சுருட்டப்பட்ட விவரங்கள் தம்மிடம் உள்ளதாக, குறிப்பாக 65 மோசடிகள் குறித்து, பட்டியல் இருப்பதாக அவர் தெரிவித்தார். தஞ்சாவூர், சுவர்க்கபுரம் மடம், வேதாரண்யம் ஈஸ்வரர் தேவஸ்தானம் உட்பட பலமடங்களின் மோசடிகளையும், ஊழல்களையும் நெஞ்சு நெக்குருக,  ஓமந்தூரார் சட்டசபையிலேயே சொன்னார்.

 பல கோவில்களுக்குச் சொந்தமான நகைகளின்  பட்டியலைத் தயார் செய்யச் சொன்னபோது தர்மகர்த்தாக்களே, கோயில் நிர்வாகத்தில் தலை யிடுவதாகக் கூப்பாடு போட்ட விவகாரத்தை அவர் புட்டுப்புட்டு வைத்தார்.

1795 முதல் 1849 வரை, 21 ஜில்லாக்களில் 8292 கோயில்களில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்ததால், 1817 ஆம் ஆண்டு அந்நிய ஆட்சி, அந்தக் கோயில் நிர்வாகங்களைக் கைக்கொண்ட வரலாற்றைக் கோடிட்டுக் காட்டினார்.

காஞ்சிபுரம் கோயிலில் ஊழல் நடைபெற்றதால், 1759இல் கலெக்டர் தலையிட்ட வரலாற்றைச் சுட்டிக் காட்டினார்.

கோயில் நிர்வாக விஷயங்களில், ஊழல்கள் இருப்பதை இதுவரை யாரும் மறுக்க முடியவில்லை. காந்தியைவிட பக்தி சிரேஷ்டரான இந்து யாரும் இருக்க முடியாது அல்லவா? அவரே நம் கோயில்களைப்பற்றிக் கூறும்போது அவை பாவச்செயல்களின் உறைவிடம் என்றார்.

 இப்படியெல்லாம் பேசிய ஓமந்தூரார் யார்? முதல் பத்தியை மீண்டும் படியுங்கள்.

அவர் நெற்றியடியாகச் சொன்ன சில வரிகள், இன்றும் பொருந்தும். பலதார மணங்களைத் தடைசெய்து, மாதர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் சமூகப் பொருளாதாரக் கேடுகளைக் களைந்தெறிய விரும்பு வோமானால், இங்கேயும் மதத்துக்கு ஆபத்து என்ற கூச்சல் கிளம்பிவிடுகிறது. இதுபோல விவாக சம்மத வயது மசோதா, தேவதாசி ஒழிப்பு மசோதா போன்ற பல முற்போக்கான மசோதாக்கள் கொண்டுவரப்பட்ட போதெல்லாம் மதத்தின் பெயரால் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சிறந்த மசோதாக்கள் சட்டமாக்கப் படாமலிருந்தால், மூடநம்பிக்கை என்னும் அந்தகாரத்தில் அழுத்திக்கிடக்கும் மக்களாக நாம் இருந்திருப்போம் என்கிறார் ஓமந்தூரார்.

அதுமட்டுமா?

பாமர மக்களின் சமூகப் பொருளாதார, அரசியல் நிலைமையை உயர்த்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படும் போதெல்லாம், மதத்திற்கு ஆபத்து என்ற கூக்குரல் துர்ப்பாக்கியமாக நம் நாட்டில் கிளம்புவது சகஜமாகிவிட்டது.

உலகம் முன்னேறிவருகிறது; நாமும் துரிதமாக வேண்டும்; மதத்தின் பெயரால் நமது முற்போக்கின் வேகத்தைத் தடுக்க முன் வருபவர்கள், தாங்கள் நம்புவதாகக்கூறும் மதத்திற்கே தீமை செய்தவர்கள் ஆவார்கள்.

கிட்டத்தட்ட அனைத்து ஏடுகளும் ஒரே அணியில் நின்று ஓமந்தூராரை, மதத்துவேஷி எனக் குற்றம் சாட்டின. காங்கிரசாரும் களத்தில் எதிர்த்து நின்றனர். ஓமந்தூரார் இரண்டாண்டுகளுக்குமேல் அப்பதவியில் நீடிக்க முடியவில்லை.

நீதிபதி நியமன விஷயத்தில் பிராமணர் அல்லாத ஒருவரை தேர்வு செய்து முன்மொழிந்தார். இதனால் இராஜாஜி உட்பட பலரின் கடுங்கோபத்திற்கு ஆளானார். பொதுவாக சமூகநீதி விஷயங்களில் அக்கறை காட்டியதால், கருப்புச்சட்டை போடாத பெரியார் என காங்கிரசுக்குள் விமரிசனத்துக்கு ஆளானார். இந்த ஓமந்தூரார் பெயரில்தான் சென்னை அரசினர் தோட்டம் அமைந்துள்ளது.

('தீக்கதிர்' - 01.08.2008)