ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
விநாயகர் ஊர்வலம்
August 20, 2020 • Viduthalai • தலையங்கம்

விநாயகர் ஊர்வலம்?

விநாயகர் சதுர்த்தி என்ற பெயரால் விநாயகர் ஊர்வலத்தை நடத்திட இந்து முன்னணி, பிஜேபி சங்பரிவார்கள் திட்டமிட்டன.

கரோனாவால் பெரும் பாதிப்புக்கு மக்கள் ஆளான நிலையில் இத்தகு ஊர்வலங்களை அனுமதித்தால், கரோனா பாதிப்பு அதிகமாகும் என்ற அச்சத்தில் அரசு அனுமதியை மறுத்தது மிகவும் சரியான நடவடிக்கையே!

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கிலும் அனுமதி மறுப்பு சரியானதே என்று மிகவும் சரியான தீர்ப்பை வழங்கிவிட்டது.

வழக்கை வாபஸ் வாங்காவிட்டால் அபராதம் விதிக்க நேரும் என்றும் மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

இலட்சக்கணக்கான இடங்களில் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடத்துவோம் என்று இந்து முன்னணியினர் தொடை தட்டி, தோள் தட்டி எழுவதுபோலப் பாசாங்கு செய்கிறார்கள்.

சிவகங்கையில் அனுமதிமீறி வைக்கப்பட்ட பிள்ளையார் பொம்மைகளைக் காவல்துறை பறிமுதல் செய்ததும் சரியே!

கரோனா பாதிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் - விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் கலவரம் செய்வது என்பது இவர்களின் வாடிக்கையாகும்.

அனுமதிக்கப்பட்ட பாதை வழியாகச் செல்லாமல், வேண்டுமென்றே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்குள் ஊடுருவுவது வாடிக்கையாகும்.

இதில் பெரிய வீரர்போல, இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் நடந்து கொள்வார். காவல்துறையும் அவரைக் கைது செய்வதுபோல கைது செய்து சில மணி நேரங்களுக்குப் பிறகு விடுவித்து விடும்.

1982ஆம் ஆண்டில் என்ன நடந்தது? கிறித்தவர்களின் உலக ஜெப வாரம் கொண்டாடப்பட்டது.

அதன் இறுதி நாளில் குமரி மாவட்டத் தலைநகரமான நாகர்கோயிலில் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஊர்வலத்தை வரவேற்கும் வகையில் வணிகர் ஒருவர் ஒளிரும் சிலுவை ஒன்றை திங்கள் நகரின் மய்யப் பகுதியில் அமைத்திருந்தார். ஊர்வலம் முடிந்த பிறகு சிலுவையை அகற்றிக் கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக விநாயகர் சதுர்த்திக்காக அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். அய்ந்து நாள்கள் கழித்து, சட்டம் - ஒழுங்கு அடிப்படையில் அந்தச் சிலையைக் காவல்துறை அகற்றியது.

அவ்வளவுதான் அதை மிகப்பெரிய பிரச்சினையாக்கி, கலவரம் உருவாக்கப்பட்டு, துப்பாக்கிச் சூடும் நடத்தும் அளவுக்கு முற்றிவிட்டது. Ôமண்டைக்காடு கலவரம்Õ என்று இந்நாள்வரை பேசிக் கொண்டு இருக்கிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை விநாயகர் சதுர்த்தியன்று வீட்டில் படையல் செய்து பிள்ளையார் பொம்மையைப் பக்கத்தில் உள்ள கிணற்றிலோ, குளத்திலோ போட்டு விடுவார்கள். அதுதான் வழக்கம்.

மகாராட்டிரத்தில் திலகர் Ôவிநாயகர் சதுர்த்திÕ என்ற பெயரால் மக்கள் மத்தியிலே இந்துமதப் பிரச்சார யுக்தியாக ஊர்வலத்தை அறிமுகப்படுத்தினார்.

அதே முறையைத் தமிழ்நாட்டிலும் கொண்டு வந்து, கிட்டத்தட்ட ஒரு வார காலம் அமளி துமளியில் ஈடுபட ஆரம்பித்தனர்.

ஒரு பிள்ளையார் பிரதிஷ்டைக்கு நாள் ஒன்றுக்கு இவ்வளவு பணம் என்றெல்லாம் வழங்கப்பட்டது. விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் பண வசூல் கொள்ளை ஒருபுறம்.

இரசாயனங்கள் (கெமிக்கல்) மூலம் தயாரிக்கப்படும் விநாயகர் பொம்மைகளை நீர் நிலைகளில் கரைப்பதால், சுற்றுச்சூழலுக்குப் பெரும் பாதிப்பு.

பிள்ளையார் உருவம் தங்கள் இஷ்டத்திற்கு வடிவமைக்கப்படும். Ôகார்கில் பிள்ளையார்Õ என்று பிள்ளையார் கையில் துப்பாக்கிகள் - இவை எல்லாம் எந்த ஆகம விதியின்கீழ் என்று யாரும் கேட்டு விடக்கூடாது. அப்படிக் கேட்டால் மதத்துவேஷமாகி விடும்.

இவ்வாண்டு மட்டுமல்ல - சுற்றுச்சூழல் கண்ணோட்டத்திலும், மத நல்லிணக்கம் அடிப்படையிலும் இது போன்ற ஊர்வலங்களை நிரந்தரமாகத் தடை செய்வது அவசியமே!