ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வாழ்க மணமக்கள்!
October 7, 2020 • Viduthalai • தலையங்கம்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் (அதிமுக) பிரபு தனித் தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர். இவர் தான் காதலித்த சவுந்தர்யா என்னும் பார்ப்பன சமூகப் பெண்ணைத் (அர்ச்ச கரின் மகள்) திருமணம் செய்து கொண்டார். மணமக்களை வாழ்த்துகிறோம்.

இதுகுறித்து வழக்கம்போல சமூக வலைதளங்களில் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இதில் வெடிப்பதற்கு என்ன இருக்கிறது? ஆணுக்கு 21 வயதும் பெண்ணுக்கு 18 வயதும் நிறைந்து விட்டால், சட்டப்படி அவர்கள் வாழ்க்கை இணையர்களாக ஆவதில் எந்தவித சட்டத் தடையும் இல்லை.

"ரிசர்வ்' தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் ஜாதி நம்பிக்கை உடையவர் தானே - அப்படிப்பட்டவர் எப்படி ஜாதி ஒழிப்பு வீரர்?" என்று பெரிய புத்திசாலி போல கேள்வி அம்பைத் தொடுக்கிறார்கள். 

இந்த அம்பு முனை முறிந்து போன ஒன்று. குற்றம் சுமத்துபவர் ஜாதி ஒழிப்பு வீரரா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவரைப் போன்றவர்களைப் பார்த்து நாம் கேட்கும் கேள்வி. சட்டப்படி ஜாதி ஒழிந்து விட்டதா? குறைந்தபட்சம் ஜாதி சட்டப்படி ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்கள் மத்தியில் நின்று அன்றாடம் போராடிக் கொண்டு இருக்கிற ஜாதி ஒழிப்பு இயக்கமான திராவிடர் கழகத்தின் செயல்பாட்டுக்கு ஒரு துரும்பைக் கிள்ளிக் கொடுப்பவர்களா இத்தகையவர்கள்?

ஒருக்கால் மணமகன் தாழ்த்தப்பட்டவர் என்பதால் இந்த வறட்டுக் கூச்சலா? கல்கி சதாசிவமும்,  சுப்புலட்சுமியும் திருமணம் செய்து கொண்டதை உச்சி மோந்து பாராட்டுவோர், காந்தியாரும், ராஜாஜியும் சம்பந்திகளாகி அவர்கள் வீட்டில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணத்தைத் பலபடப் பாராட்டுவோர் - இன்னும் சொல்லப் போனால், அவர்களைப் பாராட்டுவதற்கு ஒரு கூடுதல் தகுதியாக்கித் தலையில் தூக்கி வைத்து ஆடுவோர் - இதில் மணமகன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவராகவும், மணமகள் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவராகவும் இருப்பதால்தானே கண்களை உறுத்துகிறது.

இந்து மத சாஸ்திரப்படி, மனுவின் கூற்றுப்படி தாழ் ஜாதி ஆண் உயர்ஜாதி 'பிராமண'  பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பெயர் ‘பிரதிலோமா' - அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சண்டாளர்களாம்.

'பிராமணன்' எனப்பட்டவர் தாழ் ஜாதிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டால்  அதற்குப் பெயர் 'அனுலோமா'வாம். இதற்கு அங்கீகாரம் உண்டு, முன்னது அங்கீகாரமானதல்ல. (மனுதர்மம் - அத்தியாயம் 10 - சுலோகம்  6 முதல் 12 வரை) ஜாதியைத் தாண்டி திருமணம் செய்து கொண்டாலும் செய்து கொண்ட ஆண் 'பிராமணன்' என்றால் அதற்கு அங்கீகாரம் கிடைத்து விடுகிறது. ஆண் என்பது மட்டுமல்ல- அவன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் என்ற முத்திரை இருக்கிறது அல்லவா?

என்னதான் சங்கர மடங்களும், பார்ப்பன சங்கங்களும் சல்லடம் கட்டி ஆடினாலும் ஜாதிகளைக் கடந்த, வருணங் களைக் கடந்த இத்தகைய திருமணங்களைத் தடுக்கவே முடியாது.

சென்னை பெரியார் திடலில் இயங்கும் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் இத்தகைய திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

'தாம்பிராஸ்' எனப்பட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் நவம்பர் 16 (2019) ஆம் தேதியை பிராமண 'சத்யப் பிரமாண நாள்' என்று அறிவித்து செயல்படவில்லையா?

அதில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. "சமீபத்தில் உலகமயமாக்கல் மற்றும் கணினி மயமாக்குதல் (IT Revolution) வழியாக பொருளாதார மேன்மையும் நமது பிராமண சமூகத்தை மிகப் பெரும் அளவில் பாதித்து, கலாச்சார சீரழிவிற்கு வழி வகுத்துள்ளது. இதன் விளைவாக சில பிராமண பெண்களும், சில பிராமண ஆண்களும் கலப் புத் திருமணம் செய்து கொள்வது பிராமண பாரம்பரியத்தை வேரறுக்கச் செய்திடும் என்பதனை நமது சமூகம் உணர்ந்திட வேண்டும்.

ஆகையினால் இந்தத் தவறான அணுகுமுறையினைத் தடுத்து நிறுத்திடும் முயற்சியில் நமது சமூகம் பெரும் அளவில் ஒற்றுமையோடு செயல்பட்டிட வேண்டியது நம் தலையாய கடமையாகும்.

நம் சமூகத்தில் பெருகி வரும் கலப்புத் திருமணங்களைத் தடுத்திட பிராமண சத்யப் பிரமாண நாளாகக் கொள்வது (16.11.2019) என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ('தாம்ப்ராஸ்' நவம்பர் 2019)

இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அமைப்பு ரீதியாகப் பார்ப்பனர்கள் எத்தகு ஜாதிவெறி மனப்பான்மையில் இருக் கிறார்கள் என்பதைப் பார்ப்பனர் அல்லாதவர்கள் இதன் மூலம் உணர வேண்டும்.

பார்ப்பனர்கள் என்ன முட்டு முட்டினாலும் இனி இந்தக் கலப்பைத் தடுத்திடவே முடியாது. தங்கள் உயர் ஜாதித் தன்மையை சாஸ்திர ரீதியாகக் காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் பார்ப்பனர்கள் மற்ற எல்லாவற்றிலும் சாஸ்திர சம்பிரதாயங்களைக் காப்பாற்றி வருகிறார்களோ!

கணவனை இழந்த பார்ப்பனப் பெண்ணை மொட்டை அடித்து, மூலையில் உட்கார வைத்து, 'மொட்டைப் பாப்பாத்தி' என்று கூறும் நிலை இன்று உண்டா? பதில் சொல்லட்டும் பார்ப்பனர்களும் அவர்களின் அடிவருடிகளும் பிரபு - சவுந்தர்யா இணையர்க்கு நமது வாழ்த்துக்கள்!