ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வாழும் புரட்சி: ரோசா லக்சம்பர்க்!
July 25, 2020 • Viduthalai • மற்றவை

அ.சி.கிருபாகரராஜ்

1914  ஆம் ஆண்டு தொடங்கிய ‌முதல் உலகப் போரில் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சோஷலிச அமைப்புகள் தத்தமது அரசுகளுக்கு ஆதரவளித்தன. அதுபோன்றே ஜெர்மனியின் SPD கட்சியும் போருக்கு தனது ஆதரவை அளித்தது. SDP கட்சி எடுத்த இம்முடிவு ரோசாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் சொல்லொணா வேதனையையும் அளித்தது. எனினும் உலகப்போருக்கு எதிரான எண்ணம் கொண்ட கிளாரா ஸெட்கின் (Clara Zetkin), பிரான்ஸ் மெஹ்ரிங் (Franz Mehring), லியோ ஜோகிசஸ் (Leo Jogiches) மற்றும் தீவிர சோஷலிஸ்டான நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல் லெய்ப்னெக்ட் (Karl Leibnect) ஆகியோருடன் இணைந்து போருக்கு எதிரான குழுவை (Gruppe internationale) உருவாக்கினார். அதுவே பின்னாளில் "ஸ்பார்டகஸ் லீக்" என்றழைக்கப்பட்டது. அவர்கள் பெர்லின் சாலைகளில் போருக்கு எதிரான முழக்கங்கள், செய்திகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர். அதன் பயனாக அனைவரும் தனிமைப்படுத்தல், அடக்குமுறை, சிறைப்படுத்துதல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர்.

பிப்ரவரி 1915 முதல் பிப்ரவரி 1916, பின்னர் ஜூலை 1916 முதல் உலகப்போர் முடியும் வரை சிறைப்படுத்தப்பட்ட ரோசா லக்சம்பர்க் சிறையிலிருந்தவாறே தன் சக தோழர்களுடன் கடிதப் பரிவர்த்தனைகளை மேற் கொண்டார். போருக்கு எதிரான தனது "ஜூனியஸ் துண்டறிக்கை" (Junius Pamphlet) 1915 இல் வெளியிட் டார். மனித நேயத்தின் மீதும் மனிதர்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று சமத்துவ சமுதாயத்தை அடைவதில் தீராத இலட்சிய வேட்கை கொண்ட ரோசா, "போர் என்பது முறைப்படுத்தப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட, மிகப்பெரும் கொலை" என அதில் தெரிவிக்கிறார். இரஷ்யாவில் அக்டோபர் புரட்சி வாயிலாக அதிகாரத்தைக் கைப்பற்றிய "போல்ஷிவிக்" படையினருக்கு ஆதரவளித்தார். எனினும் குறை எங்கிருப்பினும் அதனை சுட்டிக் காட்டத் தவறாத அவர் 1918 ஆம் ஆண்டு அவரின் 'இரஷ்யப் புரட்சி' நூலில் போல்ஷிவிக் பின்பற்றிய நிலம், தேசியவாதக் கொள் கைகளையும், பிரெஸ்ட் - லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் (Brest - Litovsk) மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான லெனின் - டிராட்ஸ்கி செயல்பாடுகளை விமர்சித்தும் எழுதினார்.

1918 ஆம் ஆண்டு ஜெர்மனியில் வெடித்த புரட்சியின் விளைவாக கெய்சர் வில்ஹெல்ம் றீறீ பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு ஜெர்மனி குடியரசாக அறிவிக்கப்பட்டது. ரோசா லக்சம்பர்க் உட்பட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார். சிறை மீண்டதும் பெர்லின் சென்று கார்ல் லெய்ப்னெக்ட் உடன் இணைந்து 1917 ஆம் ஆண்டு SPD கட்சியில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்பட்டு வந்த சோஷலிச - ஜனநாயக ஜெர்மானியக் கட்சியில் (Socialist - Democratic Party of Germany USPD) ஒரு பிரிவை ஏற்படுத்தி தங்கள் "ஸ்பார்டகஸ் லீக்" அமைத்தனர். அரசுப் பொறுப்பு சோஷலிச - ஜனநாயகக் கட்சியினர் வசம் வந்தது. ரோசா லக்சம்பர்க் அவர்களின் பழைய மாணவரான பெரடரிக் இபர்ட் தலைமையிலான அரசு, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் (Armistice) கையெழுத்திட்டு நான்காண்டுகள் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.

ஜெர்மனியின் அனைத்து தரப்பினருடைய  (அரசு, இராணுவம், தொழிலாளர்கள், USPD கட்சி) ஆகிய பெரும்பான்மையானவர்களின் செல்வாக்கை பெற்ற போதிலும் ரோசாவின் "ஸ்பார்டகஸ் லீக்" புரட்சியின் நோக்கத்தை விரிவுபடுத்திச் செயல்படுத்தும் விதமாக தேசியமயமாக்கல் நடவடிக்கையை மேற்கொள்ளவும், புரட்சிக்கு முன்னான இராணுவ, அரசு அதிகாரிகளை நீக்கவும், தொழிலாளர்களை இராணுவமயமாக்கவும், போல்ஷிவிக்குகளுக்கு ஆதரவளிக்க வேண்டியும் வலியுறுத்தி தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.

1918 புத்தாண்டுக்கு முன்தினம் USPD கட்சியில் இருந்து விலகிய "ஸ்பார்டகஸ் லீக்" ரோசா மற்றும் கார்ல் லெய்ப்னெக்ட் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியை (Communist Party of Germany KPD) நிறுவினர். கட்சி நிறுவிய ஒரு வாரத்திற்குள்ளாக பெர்லினில் இபெர்ட் தலைமையிலான அரசுப் படை & அரசு ஆதரவு வீரர் படை (freikorpa). பல்வேறு இடதுசாரிக் குழுக்கள் (USPD, KPD உள்ளிட்ட) இடையே ஆயுதக் கலவரம் மூண்டது. "ஸ்பார்டகஸ் எழுச்சி" என அரசால் அழைக்கப்பட்ட அவ்வெழுச்சியை ஒடுக்கிய அரசு, ரோசா லக்சம்பர்க் மற்றும் கார்ல் லெய்ப்னெக்ட் ஆகிய இருவரையும் கைது செய்தது. கார்ல் லெய்ப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தன் இளமைக் காலந்தொட்டு வாழ்நாளெல்லாம் மிகச்சிறந்த சமுதாய அமைப்பை அடைய விரும்பிய ரோசா, சக மனிதன் இவ்வுலகில் இனத்தால், தேசத்தால் பாகுபாடு கண்டறியப்பட்டு உரிமை, உடைமை, உயிரை இழக்கும் கொடும் அநீதிகளைக் கண்ணுற்று வளர்ந்த ரோசா, ஏற்றத்தாழ்வு அல்லாத அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்தும் கிடைக்கப்பெறும் சமத்துவ சமுதாய உலகு படைக்க வாழ்நாளெல்லாம் போராடிய ரோசா, இயற்கையின் உன்னதப் படைப்பின் மீதும் (தாவரவியலில் மிகுந்த நாட்டம் கொண்டவர்), கலைகள் - கலாசாரங்களின் அழகின் மீதும் அளப்பரிய அன்பு கொண்டு மரணம் தன்னை நெருங்கும் தருணம் வரை கருணை உள்ளம் கொண்டவராக, உறுதி மிக்கவராக விளங்கிய ரோசா லக்சம்பர்க் அவர்கள் சிறைக்கு இட்டுச் செல்லப்படும் வழியில் துப்பாக்கி முனையால் தாக்கப்பட்டு, சுடப்பட்டு கல்லில் பிணைக்கப்பட்டு பெர்லின் நகர லாண்ட்வெர் கால்வாயில் தூக்கியெறியப் பட்ட வரலாற்றின் கொடுமையான, கருணையற்ற நிகழ்வு நடந்தது. கொல்லப்படுவதற்கு முந்தைய நாளில் கூட “The revolution will ‘raise itself again clashing’, and to your horror it will proclaim to the sound of trumpets: I was, I am, I shall be.” என "புரட்சி மீண்டும் எழுச்சியுறும். அவை எழுப்பும் எக்காள ஒலி நான் வாழ்ந்தேன், வாழ்கிறேன், வாழ்வேன் என முழங்கி உங்களை திகிலுறச் செய்யும்" என எழுதியதில் வெளிப்படுகிறது ரோசா லக்சம்பர்க்கின் வைர நெஞ்சம்.

ரோசா லக்சம்பர்க் கொல்லப்பட்ட தினத்தில் ஆண்டு தோறும் உலக இடதுசாரிகள் கூடி மாபெரும் பேரணி களை நிகழ்த்தி, தங்கள் செம்மாந்த மரியாதை செலுத்துவதை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோசா லக்சம்பர்க் என்ற வரலாற்று நிகழ்வு ஜெர்மனி மற்றும் போலந்து நாட்டின் தவிர்க்கவியலாத அரசியல் கோட்பாட்டாளர், சிறந்த ஆசிரியர், பொது மக்களின் இயல்பான அரசியல் பேச்சாளர், தீரா வேட்கை கொண்ட புரட்சியாளர், மனிதநேய மாண்பாளர். பெண்களுக்கு வாக்குரிமையே வழங்கப் பெறாத காலத்தில் தீவிரமாக செயல்பட்ட மிகச் சிலரில் முக்கியமானவர், கல்லூரி வாயிலை அடையும் மிக அற்ப எண்ணிக்கை பெண்களில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பெண்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடாமலிருப்பது மிகப்பெரும் எதிர்ப்பைச் சந்தித்த காலத்தில் சரியான குடும்ப வாழ்வை வாழாதவர், யூத - போலிஷ் குடிமக்களாக இருக்கும் கொடும் சூழலில் உடற்குறைபாடுகளையும், பாகுபாட்டையும் சந்தித்தவர். அத்தகைய வரலாற்று நாயகியாக விளங்கிய அவரது சோஷலிசம் - முதலாளித் துவம்,  ஜனநாயகம் - எதேச்சதிகாரம், போர் - அமைதி, தேசியவாதம் - ஏகாதிபத்தியம், பெண் உரிமைகள் ஆகியவற்றைக் குறித்த பேச்சுகள், எழுத்துகள் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் உலகின் பல்வேறு தரப்பட்ட மக்களின் சிந்தைக்கு உரமாய் உயிர்ப்புடன் விளங்கி வருகிறது. ஜெர்மன் புரட்சிக்கு தன் உயிரை விடுத்த அவர் பெர்லின் சுவர் இடிப்புக்குப் பிறகும் தொடர்ந்து போற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறார்.

ரோசா லக்சம்பர்க் வாழ்க்கை ஒரு பாடமாகும் அவரை குறித்து லெனின் இவ்வாறு கூறுகிறார், “ரோசா மொத்த உலகிலுமிருக்கும் கம்யூனிஸ்டுகளின் நினைவில் நேசத்துக் குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும், அவருடைய நூல்களின் முழுமையான பதிப்பும், கம்யூனிஸ்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகவும் பயனளிக்கும் பாடமாக விளக்கும்”. ரோசா லக்சம்பர்க்கின் சிந்தனைகள், ஏன் அவர் பெயரின் ஒலி கூட புரட்சிக்கு வித்திடும்; ஊக்குவிக்கும்! ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அவர் கூறியபடியே இடி முழக்கமென எதிர்த்தும் நிற்கும்! (I want to affect people like a clap of thunder).

ரோசா லக்சம்பர்க் புகழ் என்றைக்கும் நிலைத்து ஓங்குக! வாழ்க ரோசா!