ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வழிகாட்டும் ஒடிசா அரசு
November 7, 2020 • Viduthalai • தலையங்கம்

முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்கு வசதியாக, இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம், ஜாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதிகள் விண்ணப்பித்த 60 நாட்களுக்குள் ஊக்கத்தொகை பெற முடியும்.

ஜாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்பதற்காக சுமங்கல் என்ற பெயரில் ஒடிசா அரசால்  திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இதுபோன்ற திருமணங்கள் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவும் என்று முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கூறுகிறார். இந்த இணையதளத்தை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வளர்ச்சி, சிறுபான்மையினர் மற்றும் பிற் படுத்தப்பட்டோர் நலத்துறை உருவாக்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், இதுபோன்ற திருமணங்களுக்கான ஊக்கத்தொகையை நவீன் பட்நாயக் அரசு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஊக்கத் தொகை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தம்பதியி னரின் கூட்டுக் கணக்கில் போடப்படும். திருமணமான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்கள் அந்தத் தொகையை எடுக்க முடியும். பயனாளிகளின் வருவாய் வரம்பு எதுவும் இதில் கணக்கிடப்படாது. 2017-2018 நிதியாண்டில், 543 தம்பதி கள் இந்த பலனைப் பெற்றனர்.

மாநில அரசு ரூ.2.65 கோடியை ஊக்கத்தொகையாக செலவிட்டது. ஊக்கத்தொகைக்கு தகுதி பெற, திருமணங்கள் செல்லுபடியாகும் வகையில் இந்து திருமணச் சட்டம், 1955இன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். இந்திய அரசமைப்பின் 341ஆவது பிரிவின்படி, வாழ்க்கைத் இணையில் ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதாவது வாழ்க்கைத் துணைவர்களில் ஒருவர் உயர்ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மற்றொருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை முதல் முறையாக திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே. இருப்பினும், கணவர் அல்லது மனைவியை இழந்தவர்களும் உதவித் தொகைக்கு தகுதி பெற்றவர்களாவர். ஊக்கத்தொகை நிலம் வாங்குவதற்கோ, தொழிலைத் தொடங்குவதற்கோ பயன்படுத்தப்பட வேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது தமிழ்நாட்டில் இத்தகையதொரு திட்டம் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்பவர்களுள் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் அப்பொழுதுதான் உருவாக்கப்பட்டு தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

தாழ்த்தப்பட்ட பெண்கள்மீது பாலியல் வன்கொடுமை, ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களை பெற்றோர் களே வெட்டிக் கொல்லும் விபரீதங்கள் நாட்டில் நாளும் பெருகி வருவது பெரிதும் வெட்கக் கேடே!

இந்த ஜாதி ஆணவக் கொலைக்கு கவுரவக் கொலை என்ற பெயர் வேறு "விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல!"

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து செய்வோரை ஊக்கப் படுத்தும் வகையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா அரசுகள் செய் வதுபோல பிற மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும்.

அதோடு ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டோர் களுக்கு அரசு வேலை வாய்ப்பு, தொழில் தொடங்க நிதி உதவி, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு (Inter-Caste  Quota) என்பது போன்ற ஆக்கப் பூர்வமான முறைகளை மேற் கொண்டால், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்குக் கூடுதல் தன்னம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும், உளரீதியாகவே ஏற்பட வழி வகுக்கும்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு (Inter-Caste Quota) என்பதைத் தொடர்ந்து திராவிடர் கழகம் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறது.

ஜாதிக் கலவரங்கள் நடக்கும் போது அரசு கூட்டும் அனைத்துக் கட்சிகள் கூட்டங்களில் இக்கருத்தை எழுத்துப்பூர் வமாக - ஆலோசனையாக பல முறை திராவிடர் கழகம் சார்பில் ஆவணமாக கொடுத்து வந்ததுண்டு.

ஜாதி ஒழிப்புத் திசையில் இது போன்ற ஊக்கப்படுத்தும் உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அளிப்பது என்பது மனித வளத்தைச் சார்ந்ததாகும். அதற்கானதோர் முதலீடு என்று கூடச் சொல்லலாம்.

"சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா?" என்று தந்தை பெரியார் எழுப்பிய வினாவுக்கு விடை இதுவரை கிடைக்க வில்லை என்றாலும், அத்திசை நோக்கி மத்திய, மாநில அரசுகள் நகர்ந்தால், அரசுகளின் நாகரிக மற்றும் ஓர் ஒப்புரவு சமுதாயத்தை உருவாக்கும் உயர் எண்ணமாக இருக்க முடியும்.