ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வள்ளுவர் கூறும் ஊழ் - விதி என்பது என்ன
July 23, 2020 • Viduthalai • மற்றவை

வள்ளுவர் கூறும் ஊழ் - விதி என்பது என்ன?

- தந்தை பெரியார்

விதி என்பதை வள்ளுவர் நன்றாக விளக்கிக் காட்டியுள்ளார். உனது அறிவைக் கொண்டு உன் முயற்சியின் படி நட! மக்க ளுக்கு நன்மை செய்! அறத்தை வளர்க்க! என்று கூறியுள்ளாரே தவிர, உன் விதிப்படி-கடவுள் இஷ்டப்படி நீ நட! என்பதாக எந்த இடத்திலும் கூறவே இல்லை.

குறளில் 'ஊழ்' என்ற தலைப்புக்குப் பொருள் கூறவந்த புலவர்கள், அவரின் கருத்துக்கு மாறுபாடாகவே கூறியிருக் கிறார்கள், மனிதனுடைய சரீர அமைப்பின் பயனாய் ஏற்படும். சில தனிப்பட்ட குணங் களுக்குத்தான் ஊழ் என்ற பெயரை அவர் கொடுத்திருக்கிறார். 'ஊழ்' என்பது பிறவிக் குணம், இயற்கைக்குணம், மனிதசுபாவத்தின் தனிப்பட்ட குணம் என்கிற கருத்துக்களே யாகும்.

உதாரணமாக, இரண்டுபேர் - உடன் பிறந்த அண்ணன், தம்பி. ஒருவன் சாதா ரணக் காரியங்களுக்குக்கூடச் சிரிப்பான், ஒருவன் பெரிய ஆச்சரியமான காரியங் களுக்குக்கூட சிரிப்பதில்லை. ஒருவன் சாதாரணக் காரியத்துக்கும் கோபிப்பான். மற்றவன் எவ்வளவு வசவைப் பெற்றாலும் கோபிப்பதேயில்லை. ஒருவனுக்குப் பனிக் கட்டியில் கால்பட்டால் ஜலதோஷம். மற்ற வனுக்கு அவன் அதிலேயே சதாயிருந்தா லும் ஒன்றும் செய்வதில்லை. ஒருவனுக்கு 40தில் கண்பார்வை மங்கல், ஒருவனுக்கு 60திலும் வருவதில்லை. ஒருவன் சிறு தொகையையும் திருடுவான், ஒருவன் பெருந்தொகையையும் திருடுவதில்லை. ஒருவன் சிறு விஷயத்திலும் பொய் பேசுவான். ஒருவன் பெரிய விஷயத்திற்கும் பொய் பேசான் -  இரண்டு பேரும் உடன் பிறந்த அண்ணன், தம்பிகளாயிருந்தும்கூட ஏன் இப்பேர்ப்பட்ட வேற்றுமைகள் ?

இவர்கள் இருவர் தலையிலும் இந்த இந்த மாதிரி தான் தனித்தனியாக நடக்க வேண்டும் என்று கடவுள் எழுதி விட்டாரா? அல்லது அவரவர்களின் போன ஜன்மத்தில் நடந்து கொண்ட கர்மத்திலிருந்து கடவுள் விதித்த விதியா? இல்லவே இல்லை. மற் றென்னயெனில் இவற்றிற்கு அவரவர்களின் உடற்கருவிகள் - காரணங்கள் அமைந்த தன்மை, உடலமைப்பு,  எதுபோல என்றால் ஒரு டன் வெண்கலத்தை உருக்கி 10 ராத்தல் வீதம் 200 மணிகளை வார்த்தெடுக்கிறோம். பிறகு ஒவ்வொரு மணியையும் அடித்தால் அவற்றின் ஓசையில் ஒன்றுக்கொன்று வித்தி யாசமிருக்கிறதே ஏன்? நாம் மணிக்காக வார்ப்படம் ஊற்றும் போது அவைகளுக்குள் கடவுள் புகுந்து மணிகளின் தலையில் எழுதி விட்டாரா? உனக்கு இவ்வளவுதான் ஓசை, இன்னொரு மணிக்குச் சற்று அதிக ஒசை என்று? இப்படி வேறுபட்ட ஓசை களுக்குக் காரணம் - ஒவ்வொரு மணி யையும் வார்க்கும்போது இருக்கும் இயற்கை வசதிகள், வார்ப்பட அமைப்பு, காற்றுப் போக்கு, சீதோஷ்ணத் தன்மை மற்றும் ஒரு குழலை ஊதினால் அதிலுள்ள ஓட்டை களுக்கு ஏற்ப-ஓட்டைகள் அமைப்புக்கு ஏற்ப-ஒலிபேதம் ஏற்படுகிறதே ஒழிய, அந்த மரத்தின் பிறவியின்படி ஏற்படுகிறதா? அதுபோலவே மனிதனுடைய உடல் அமைப்புக்கு ஏற்றபடிதான் சிலர் அனாவ சியமான காரியங்களுக்கும் பொய் பேசு வதும், சிலர் உயிர் போகும் அவசியமான காரியத்துக்கும் பொய் பேசாதிருப்பதுமாய் ஒருவர்க்கொருவர் மாறுபட்டிருக்கிறார்கள் என்றுதானே காண முடியும்?

உதாரணமாக காற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அது ஒரு வாழை இலையை முள்ளின்மீது பட வைத்து அதை எப்படிக் கிழிக்கிறது. அதே காற்று மற்றொரு இலையை எவ்வாறு கிழியச் செய்கிறது  என்பதை. அதுபோலவே மனிதனுடைய சரீரத்திலுள்ள சில மாறுபாடுகளே அவனது சில தனிப்பட்ட குணங்களுக்குக் காரண மாகிறதேயன்றி, புறம்பான விதியோ கடவுள் எழுதியதோ ஆன செயல் காரணம் அல்ல.

இவ்விதப் பிறவிக் குணங்களில் சிலவற் றைத் திருத்தலாம். ஆனால் பெரும்பாலான வற்றைத் திருத்த முடியாது அவற்றைத்தான் ஊழ் என்றும் ஊழ் முந்தூறும் என்றும் வள் ளுவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆக இவ்வித இயற்கைக் குணங்களைக் கர்மம், முற்பிறவி யின் பயன் என்பதெல்லாம் மதவாதிக ளுடைய வீண் கற்பனைகளேயாகும்.

- 'குடிஅரசு' 7.5.1949