ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வரலாறாகிய பெரியார் பதித்த கொள்கைத் தடங்கள் (13)
July 16, 2020 • Viduthalai • மற்றவை

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்

உ டன் உண்ணல் (சமபந்தி போஜனம்) என்ற உரிமைப் போர்

களம் காணும் முன்பே வெற்றிக்கொடி!

ரயில் நிலையங்களில் சம உரிமை

ரயில்வே அப்போது தனி வாரியம் - தனியார் நிர்வாகத்திலிருந்த ஒன்று. அங்கே இருந்த உணவுச் சாலைகளிலும் இப்படி ஜாதி வித்தியாசமான தனியே ஜாதி அடிப்படையில் உண்ணும் முறை பலகாலம் பயன் பாட்டிலிருந்ததை அறிந்து, 1940இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முடிவில், இதற் கென ஒரு தனிப் போராட் டம் - ரயில்வே நிர்வாகக் கம்பெனியார் மாற்றா விட்டால் - நடத்தப் போவதாக அறிவிப்புக் கொடுத்தார்.

போராட்டத்திற்கும் ஆயத்தமானார். இயக்கத் தோழர்களும் களத்தில் குதிக்கத் தயார் நிலையில் இருந்தனர்.

சர். ஏ. இராமசாமி (முதலியார்) - அவர் அதிகாரப் பொறுப்பில் இருந்தவர். அந்த ரயில்வே கம்பெனி யார்களிடம் தந்தை பெரியார் போராட விருப்பதை அறிவித்து அவர்கள் தாமாகவே முன்வந்து அந்த பேதங்கள் - தனித்தனி இடங்கள் என்ற ஏற்பாட்டை - ஒழித்து விடுவது நல்லது என்று அறிவுறுத்தியதை அக்கம்பெனிகள் ஏற்று, அனைவரும் ஒரே மாதிரி சமமாக அந்த உணவுச் சாலைகளில் அமர்ந்து சாப்பிடும் சமத்துவ ஏற்பாட்டை ஏற்றனர்.

போர்க்களம் போகாமலேயே, போராடி வெற்றி பெற்று சமத்துவத்தை நிலைநாட்டினார் - உண்ண லில், நம் உன்னதத் தலைவர்!

என்றாலும் பார்ப்பனரின் வர்ணதர்ம ஆதிக்கக் கொடி சிற்சில இடங்களில் பறக்கவே செய்தது!

ஆனால் தந்தை பெரியாரின் பருந்துப் பார்வையிலிருந்து அவை தப்ப முடியுமா?

மீண்டும் ஒரு குருகுலப் போராட்டம்

1941இல் மனிதர் அனைவரும் சமம் என்ற மனித உரிமைப் போரின் புதுக்களம் அவருக்குத் தென் பட்டது.

தஞ்சை மாவட்டம் திருவை யாறு என்ற (பார்ப்பனர் ஆதிக்கம் நிறைந்த) ஊரில் நடந்த ஒரு நிகழ்வு. இரண்டாவது குரு குலப் போராட்டம் நடத்த வேண் டிய அவசியத்தை தந்தை பெரியார் மீதும், சுயமரியாதை இயக்கம், திரா விடர் இயக்கத்தின் மீதும் திணித்தது!

அப்போது தந்தை பெரியார் 29.1.1941இல் ஆவேசம் கொப்பளிக்க 'விடுதலை' யில் எழுதிய தலையங்க அறிக்கை இதோ:

திருவையாறுவில் ஜாதித்திமிர்

"தமிழரே! ரோஷ, மான உணர்ச்சி உமக்கு உண்டா இல்லையா என்பதை சோதிக்க ஓர் சம் பவம் வந்திருக்கிறது.

சமத்துவம் கோருவோரே! உமது கொள்கையைக் கொலை செய்ய துணிந்து, உமது போரிடும் சுபாவத் தைப் பரீட்சிக்க ஓர் சம்பவம் ஏற்பட்டிருக்கிறது.

தேசியம் பேசுவோரே! எல்லாரும் பாரதமாதா மக்கள், இதில் பிராமணர், பிராமணரல்லாதார் என்று பேதம் பேச வேண்டாம் என்று மேடைகளில் பேசுகிறீர்களே! அது நடைமுறையில் இல்லை என்பதைக் காட்டி அதை நடைமுறையில் இருக்கச் செய்யும் துணிவு, நாணயம், உமக்கு உண்டா என்று கேட்டு உங்களை எடை போட சமயம் வந்திருக் கிறது.

இந்து மகாசபை சூரர்காள்! சிந்துவிலே அக்ரமம் என சோர்ந்துவிடும் சூரர்களே! இந்து ராஜ்யம் தேவை என்று முழக்கி, இந்துக்கள் எல்லோரும் ஒரு குல மக்கள், பேதமில்லை என்று பேசுகிறீர்களே! இதோ, உமது சொல்லுக்கு நேர் மாறாக செயல் ஒன்று நடக்கிறது. உமது வீரத்தை உறைத்துக் காட்ட சமயம் வந்திருக்கிறது.

சைவ வைணவர்களே! நீறும் நாமமும் நிலைத் திருக்க இன்பமும் பேறும் நிலைக்கும் என்றும், அன்பே சிவம் என்றும், தொழு நோயாயினும் அவனடி தொழுவோர் எமது குரு என்றும் பாடும் சைவ வைணவர்களே! அன்பு இல்லாத காரியம் நடக்கிறது! அதைத் தடுக்க உமது "தீரம்" எப்படி உபயோகமாகிறது பார்ப்போம். அதற் கோர் சந்தர்ப் பம் கிடைத்திருக்கிறது!

குருகுலப்போர் வீரர்களே! காங்கிர சின் பெயர் கூறி, பணம் வசூலித்து வ.வே.சு. அய்யர் நடத்திய குரு குலத் திலே, ஜாதி பேதம் காட்டப்பட்டபோது, போரிட்ட வீரர்களே! அது போலவே இது போதும் வீரம் மங்காது இருக்கிறதா என்று பரீட்சிக்க சமயம் வந்திருக்கிறது.

மாணவர்களே! தீவிரவாதம், சமதர்மம், உரிமைப் போர் என எக்காளம் இடுகிறீரே, ஜாதி பேதம், வர்ணாஸ்ரமம், தலை விரித்து ஆடுகிறது. இதனை அடக்க உமக்கு தைரியம் உண்டா என்பதை ஊரார் அறியக் காட்ட ஒப்பற்ற சமயம் வந்திருக்கிறது!

பத்திரிகைக்காரர்களே! அபிசீனிய மன்னருக்கு ஆதரவு. சீனா நிலைமை கண்டு சிந்தை நோவது, முதலியன எழுதி உமது விரிந்த மனப்பான்மையைக் காட்டிக் கொள்கிறீர்களே! குறுகிய, கோணிய, கொடிய மனப்பான்மையின் பயனாக ஒரு கோரச் செயல் நடக்கிறது. அச்சமற்ற கண்டனம் எழுதும் பேனா உம்மிடம் இருக்கிறதா என்ற பரீட்சைக்கு சமயம் நேரிட்டிருக்கிறது.

நாடி முத்துவின் நண்பர்களே, சிறை சென்றுள்ள தோழர் முத்துப்பிள்ளையின் உத்தரவை மதிக்க மறுக்கும் மதோன் மத்தர்களுக்குத் தக்க பாடம் கற்பிப்பதே அவருடைய நண்பர்களின் கடமை, கடமையைச் செய்து காட்ட சமயம் வந்திருக்கிறது.

என்ன பரீட்சை! என்ன சமயம்!"

சனிக்கிழமை வரை காத்திருங்கள்...