ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வயிற்றுக்குள்ளிருக்கும் கருவுக்கு வேத மந்திரமா
November 10, 2020 • Viduthalai • தலையங்கம்

வயிற்றுக்குள்ளிருக்கும் கருவுக்கு வேத மந்திரமா?

 பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேதப் பிரிவு மற்றும் சர் சுந்தர்லால் மருத்துவமனை இணைந்து கர்ப் சன்ஸ்கார் (கர்ப்பகால கலாச்சாரம்) என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி விஞ்ஞானத்தை இந்துமயமாக்குகிறது.

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் வளரும் சிசுக்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேத மந்திர ஒலிகள் மற்றும் வேத நூல்களில் கூறியுள்ளபடி நடந்திட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆலோசனைகள் கூறி உள்ளனர்.

இதற்காக முதலில் 40 கர்ப்பிணிப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். பரசுத்தி தந்தரா எனப்படும் ஆயுர்வேத கர்ப்ப காலப் பயிற்சிகள் கொடுக்கப்படுமாம். ஆயுர்வேத மற்றும் சமஸ்கிருதப் பேராசிரியர்கள் குழு இது தொடர்பாகப் பல அடுக்குகள் உள்ள திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

  அதில் பெண்களின் வயிற்றில் கரு உருவானது முதல் குழந்தை பிறக்கும் வரை தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு வேத மந்திரங்கள் வாசித்துக் காட்டப்படும். மேலும் வீட்டில் உள்ள நேரங்களில் அவர்கள் வேதமந்திர ஒலிகளைக் கேட்கவும்,  அது தொடர்பான இசைகளைக் கேட்கவும், 'ஓம்' என்ற மந்திரத்தைத் தினசரி மனதிற் குள்ளாக உச்சரித்துக் கொண்டே இருக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

 இது தொடர்பாக இந்த ஆய்வுக் குழுவில் உள்ள சமஸ்கிருதப் பேராசிரியர் ஒருவர் கூறும் போது, “ வேதங்களில் 'கர்ப்ப சன்ஸ்கார்' என்ற தலைப்பிலேயே 16 வழிமுறைகள் உள்ளன. இது ஆயுர்வேதத்தில் அப்படியே பின்பற்றப் படுகிறது,  முக்கியமாக மகாபாரதத்தில், கருவில் இருக்கும் குழந்தை அபிமன்யூ `சக்கர வியூகம்’ பற்றிக் கேட்கிறான். அதை குருஷேத்திரப் போரில் பயன்படுத்துகிறான்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது, நாரதர் சொல்லச் சொல்ல `ஓம் நமோ நாராயணா’ என்கிற மந்திரம் பிரகலாதனுக்குள் பதிந்து போகிறது. பின்னாளில் சிறந்த விஷ்ணு பக்தனாக மாற அதுவே காரணமாகிறது, இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் "நமது பண்டைய இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் பிறந்துள்ளனர். அவர்களின் தாயார்களின் அன்றாட நடவடிக்கையைக் கவனித்தால் அவர்கள் பயபக்தியோடு தங்களின் வாழ்நாளைக் கழித்தனர். ஆகையால் தான் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மிகவும் பாரதீரமிக்கவர் களாகவும், பெரும் அறிஞர்களாகவும் இருந்தனர்" என்று கூறினார்.

 இது தொடர்பாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' இதழில் இக்குழுவைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் குறிப்பிடும்போது “ஒரு மந்திரத்தை அல்லது கதையைத் திரும்பத் திரும்பக் கேட்பதும் குழந்தையின் கவனித்தல் திறனை, கற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்க்கும்; அதனடிப்படையில் நல்ல கலாச்சார இசையைக் கேட்டல், ஆன்மீகப் பாடலைப் பாடுதல், யோகாசனம், சமஸ்கிருத மந்திரங்களை உச்சரித்தல், யாகம் மற்றும் பூஜைகளின் போது சிறப்பு மந்திரத்தால் வலுப்பெற்ற ஆடைகளை மட்டுமே அணிதல் போன்றவற்றைக் கர்ப்பிணிப் பெண்கள் கடைபிடித்தால் பிறக்கும் குழந்தைகள் மிகவும் சிறப்பானதாக இருக்கும்" என்று தெரிவித்து உள்ளார்.

   பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆயுர்வேதப் பிரிவின் இந்தக் கூற்றுக்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இவர்கள் கற்பனைக் கதைகளை வைத்து மட்டுமே இது போன்ற முடிவுகளை எடுத்துவருகின்றனர். முக்கிமாக கருவுண்டான தாய்மார்களுக்குச் சத்தான ஆகாரமும், போதிய ஓய்வும் தேவை என்றுதான் மருத்துவ அறிவியல் கூறுகிறது..

 மேலும் தாய்மார்கள் அதிக நேரம் பேசுவது, அல்லது தொடர்ந்து ஓசைகளைக் கேட்பது போன்றவை வயிற்றில் வளரும் குழந்தை களின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் கர்ப்பிணிப் பெண்களின் ஆடை விவகாரத் தில் தூய பருத்தியிலான ஆடைகளை மட்டுமே அணியவேண்டும் என்றும், முடிந்தவரை ஆடைகளில் எவ்வித செயற்கை மணங்கள் இல்லாத வகையில் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறி யுள்ளனர்.

ஆனால் இவர்கள் யாகத்தில் ஆடையை வைத்து கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். யாகத்தின்போது ஏற்படும் புகை மற்றும் அங்குத் தெளிக்கப்படும் பல வேதிப் பொருட்கள் கலந்த நீர் ஆடைகளின் நூல் இழைகளில் ஊடுருவி விடுகிறது. இதனால் அணிபவர்களுக்கு அசவுகரியமான சூழலை உருவாக்குகிறது, அதே போல் மந்திர உச்சாடனத்தின் போது விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமாம்.   கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்தான ஆகாரமும், பசியுள்ள நேரத்தில் சாப்பிடும் பழக்கமும் கட்டாயமாகும். ஆனால் இவர்கள்  விரதமிருந்து உணவு உண்பது போன்றவை கர்ப்பிணிப் பெண்களின் உடல் நலத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். அதே போல் பிறக்கும் குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைப்பாட்டோடு பிறக்கும்.

 உலகமே அறிவியல் ரீதியில் முன்னோக்கிச் சென்று கொண்டு இருக்கும் போது பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆயுர் வேதப் பிரிவு பின்னோக்கியே சென்று கற்பனைக் கதைகளில் கூறப்பட்ட வைகளை நடைமுறைப்படுத்திப் பார்க்க முனைகிறது.

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. (51-A-h). ஆனால் அஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கிறது ஒரு பல்கலைக் கழகம். இதன்மீது சட்டப்படியான நடவடிக்கை தேவையில்லையா?