ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
வங்காளத்தில் எழுந்த புரட்சி!
October 12, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் கழகத் தலைவர்

மூன்று நூற்றாண்டில் சமூகநீதி (8)

* கலி. பூங்குன்றன்

இந்தியாவின் பல பகுதிகளிலும் பார்ப்பன மேல் ஜாதி ஆதிக்கத்தால் சுரண்டப்பட்ட - உரிமைப் பறிக்கப்பட்ட மக்கள் இருப்பது போல வங்காளத்திலும் இருந்ததுண்டு.

150 ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப்பட்ட மக்கள் புரட்சிக் கொடியைத் தூக்கிப் பிடித்தனர்.

முதல் இடத்தில் பிராமணன்,  காயஸ்தா பைதியாஸ் (Baidyas) எனப்பட்டவர்கள் ஆதிக்க ஜாதியினராக விருந்தனர். ஒடுக்கப்பட்ட, தீண்டப்படாத மக்கள் சண்டாளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

ஊரில் ஒதுக்குப்புறத்தில் அவல வாழ்க்கை. அவர் களுக்கென்று இருந்த சொத்துக்கள் என்பவை கழுதைகளும், நாய்களும்தான். 

சண்டாளர்கள் பற்றி மனுதர்ம சாஸ்திரம் என்ன சொல்லுகிறது? (அத்தியாயம் - 10, சுலோகம் 45.)

உலகத்தில் நான்கு வருணத்தாருக்கும், சங்கர ஜாதியிற் பிறந்தவர்களில் சிலர் மிலேச்ச பாஷையுள்ளவர்களாகவும் சிலர் ஸமஸ்கிருதம் முதலிய உயர்ந்த பாஷையுள்ளவர்களாயும் இருக்கிறார்கள். ஆகினும் அனைவரும் தஸ்யூக்கள் என்று சொல்லப்படுவார்கள் (தஸ்யூக்கள் என்றால் - திருடர்கள் என்று பொருள்).

மனு அத்தியாயம் 10 சுலோகம் 51 என்ன கூறுகிறது?

சண்டாளன் ஊருக்கு வெளியில் வீடு இருக்க வேண்டியது. அவர்களுக்கு உடலாக பாத்திரங்கள் கூடாது அவர்கள் தீண்டின பாத்திரங்களை சுத்தி செய்தாலும் பரிசுத்தமாகாது. அவர்களுக்கு நாயும், கழுதையும் வளர்க்கத்தக்கது. மாடு முதலியவற்றைக் கொண்டு ஜீவிக்கக் கூடாது.

அவர்கள் பிணத்தின் துணியையுடுத்த வேண்டும். உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும். இரும்பு, பித்தளை இவைகளால் செய்யப்பட்ட பூஷணங்களை அணிய வேண்டும். அவர்கள் எப்பொழுதும் தொழிலுக்காகத் திரிந்து கொண்டு இருக்க வேண்டும் (சுலோகம் 52).

தரும காரியம் செய்கிற சமயத்தில் அவர்களைப் பார்க்கவும், அவர்களோடு பேசவும் கூடாது. அவர்கள் தங்கள் ஜாதியிலேயே சம்பந்தம் செய்து கொள்ளவும். கடன் முதலிய வாங்கிக் கொள்ளவும் வேண்டியது (சுலோகம் 53).

இவர்களுக்கு நேரே அன்னம் போடக் கூடாது வேலையாளை விட்டு உடைந்த பாத்திரங்களால் அன்னம் போட்டு வைக்க வேண்டும். அவர்கள் ஊரிலும் பட்டணங் களிலும் இரவில் சஞ்சரிக்கக் கூடாது (சுலோகம் 54).

அவர்கள் பகலில் கிராமத்திலும் ஊரிலும் ஒரு பொருளை விற்கவும், வாங்கவும், அரசன் கொடுத்த அடையாளத்தோடு சஞ்சரிக்க வேண்டும். பந்து இல்லாமல் இறந்து போன அனாதைப் பிணத்தை எடுக்க வேண்டும். இது அவர்களுக்குத் தருமமுறை (சுலோகம் 55).

பின்னும் அரசன் உத்தரவுப்படி கொலை செய்யத்தக்க குற்றவாளிகளை விதிப்படி கொல்ல வேண்டும் கொல்லப்பட்ட வர்களின் வஸ்திரம், பூஷணம், படுக்கை இவைகளை எடுத்துக் கொள்ளக் கடவார்கள் (சுலோகம் 56).

சங்கர ஜாதியில் பிறந்தவன் வருணத்தாரைப் போல நல்ல வேடத்தைத் தரித்திருத்த போதிலும், மேற்சொல்லும் கெட்ட தொழிலினால் ஈனன் என்று அறிய வேண்டும் (சுலோகம் 57).

இவ்வாறு சண்டாளர்கள்பற்றி மனுதர்மம் சொல்லிக் கொண்டே போகிறது.

இதைவிட மனித வெறுப்பு என்பதை எண்ணிக் கூடப் பார்க்க முடியுமா?

வங்காளத்தில் பக்கிம் சட்டர்ஜி என்று பெருமையாகப் பேசப்படும் இலக்கியவாதி உண்டு. அவர்தான் "ஆனந்த மடம்" என்ற நாவலை எழுதியவர். (1838-1894)

இப்படிப்பட்டவர் என்ன சொல்லுகிறார் என்றால்.... மனுதர்மத்தில் சண்டாளர்பற்றி என்ன சொல்லப்படுகிறதோ அவை சரியானவையே - அவ்வாறுதான் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லும் கொடுமையை என்ன சொல்லுவது!

இந்து மதம் எத்தகு இழி தன்மை கொண்டது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்தவர். மறைந்த காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் ஆத்ம ஆலோசகர்; அவர் எழுதிய "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார்.

யார் அந்த சண்டாளர்கள்?

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைத்தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்குக் கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப் படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிட வேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை. அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.

"முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம். சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார். அவரை நாம் எதிர்க்க வேண்டும். அவரது பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான . காந்தியடிகளுக்குக் கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக் கொண்டோம். தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள். சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள் என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள். நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர்என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார். என்ன விவகாரம்? எனக் கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, ‘உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம்' என்கிறார்கள். கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்துக் கூப்பிட்டார். போனோம். முன்வரிசையில் நான்தான் இருந்தேன் Why are you demonstrating young men? எனக் கேட்டார்

நாங்கள் போராட்டம் பற்றி சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் எனப் பட்டம் கட்டி அவர்களை கொடுமைப் படுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில் களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க் கிறீர்கள். நீங்கள் மநு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மநுவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக் கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம் , அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராமணர்களுக்குத் தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்புப் பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன்? கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள்.

பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திரப் பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள் பிராமணர்கள். நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள் அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல் லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை”

என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.

முன்வரிசையில் இருந்த நான் திருப்பிக்கொண்டேன் என்று "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூலில் (பக்கம் 40-42) அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் குறிப் பிட்டுள்ளார்.

மனித உயிர்களாகவே மதிக்கப்படாத மக்கள் மத்தியில் எழுச்சியை வங்காளத்தில் ஏற்படுத்தியவர் அரிச்சந்த் தாக்கூர் (1812-1887)

அவரது மகன் குருச்சந்த் தாக்கூர். இவர்கள் மூட்டிய எழுச்சித் தீ சண்டாளர் மக்கள் மத்தியிலே நன்கு பற்றிக் கொண்டு விட்டது. கொதி நிலையை அடைந்தது. 8.4.1973இல் ஓர் அறிவிப்புக் கொடுக்கப்பட்டது. உயர் ஜாதிப் பண்ணை யாளர்களுக்கு அடி பணிய மாட்டோம் எந்த வேலையையும் செய்து கொடுக்க மாட்டோம் என்று சாத்வீக முறையில் முழக்கமும், கிளர்ச்சியும் மூன்று மாதங்கள் முதல் 5 மாதங்கள் வரை கூடத் தொடர்ந்தது என்பது எங்கும் கேள்விப்படாத ஒரு தகவல் ஆகும்.

தங்களுக்குரிய ஒரு புது மதத்தை உண்டாக்கிக் கொண் டார்கள். மத்துவா என்ற ஒரு புது மதத்தை, வழிபாட்டை உண்டாக்கிக் கொண்டார்கள். மத விழாவில் ஒன்று சேர்ந்தனர்.

சண்டாளர்கள் என்பதை 'நாம சூத்திரர்கள்' என்று அழைத்துக் கொண்டனர். 1881ஆம் ஆண்டில் மிகப் பெரியதோர் மாநாட்டை நடத்தினார்கள். எல்லோரும் சந்தா செலுத்தினர் கல்வி உரிமை தேவை - பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அந்தக் கால கட்டத்தில் மிண்டோ மார்லி கமிஷன் வந்தது. காங்கிரசும், பார்ப்பனர்களும் அதனைப் பகிஷ் கரித்தனர். ஆனால் "நாம சூத்திரர்களோ" வரவேற்றனர். ஏராள மனுக்களைக் கொடுத்தனர். மனு மட்டும் ஏழு டன் இருந்ததாம்.

சண்டாளர் என்ற பெயர் வேண்டாம்,  நாம சூத்திரர்கள் என்று நாங்கள் அழைக்கப்பட வேண்டும். உயர்ஜாதி பண்ணையாளர்களிடம் இனியும் அடிமையாக எங்களால் இருக்க முடியாது.

கீழ்த்தரமான அவமானங்களைச் சுமந்தது போதும் போதும்! - பார்ப்பனர்கள் எங்களைத் தங்கள் கட்டுப்பாட் டுக்குள் அழுத்தி வைத்திருந்தனர். முழு அறியாமையில் வைத்திருந்தனர். கொத்தடிமைகளாக நுகத்தடியில் பூட்டப் பட்டோம் அவர்கள் கூறும் மதத்தை ஏற்க மாட்டோம் - புதுமதம் கண்டு விட்டோம். முஸ்லிம்கள் போல எங்களுக்கும் தனி உரிமைகள், வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சைமன் கமிஷன் வந்தபோது - சென்னை மாநிலத்தில் காங்கிரசும் பார்ப்பனர்களும் அதனைப் பகிஷ்கரித்ததையும் அதே நேரத்தில் நீதிக்கட்சியும் தந்தை பெரியாரும் அதனை வரவேற்றதையும் இந்த நேரத்தில்  ஒப்பிட்டுப் பார்த்தால், ஒடுக்கப்பட்டவர்களின் மனநிலை எங்கும் ஒன்றாக இருப்பதும் அதே போல உயர் ஜாதி ஆதிக்கக்காரர்களின் மனப்பாங்கும் அவர்களுக்குள் எங்கும் ஒன்றாக இருப் பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் சுட்டிக் காட்டியது மிகவும் பொருத்தமானதும் முக்கிய மானதுமாகும்.

ஒடுக்கப்பட்ட மக்களிடையே விழிப்புணர்ச்சியை உண்டாக்கி நாடகங்களை நடத்தினர். வாரப் பத்திரிக்கை நடத்தியுள்ளனர். அதற்குச் சந்தாக்கள் சேர்க்கப்பட்டன.

நாம சூத்திரர் தலைவர் வர வேண்டும் என்றால், அந்த ஊரில் ஒரு பள்ளி திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை வைக்கும் அளவுக்கு எழுச்சி பிறந்தது. நியாயமான இம்மக்களின் கோரிக்கைகளை வெள்ளைக்கார அரசாங்கம் காருண்யத்துடன் பரிசீலித்து ஏற்றுக் கொண்டது.

தந்தை பெரியாரானாலும், அண்ணல் அம்பேத்கரானாலும் நாம சூத்திரர்களானாலும் இந்தப் பார்ப்பனக் கொள்ளைக் காரர்களைவிட வெள்ளைக் காரர்கள் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர்கள் என்று கருதியதையும் இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

கிழக்கு வங்காளத்தில் ஒரு புதிய அத்தியாயம் பிறந்தது. அதற்குக் காரணமாக இருந்தவர் ஜோகேந்திர பாபு - மண்டல் எனும் வழக்குரைஞர்.

இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அம்பேத்கர் பிறந்த மகாராட்டிரத்தில் காங்கிரசும், அன்றைக்கு இருந்த பார்ப்பனத் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பாக இருந்தனர்.

படேல் போன்றவர்கள் அரசியல் நிர்ண சபைக்குள் அம்பேத்கரை நுழைய விடக் கூடாது, கதவுகளை மட்டுமல்ல ஜன்னல்களையும் சாத்துங்கள் என்று கூறினார் என்றால் நிலைமையைப் பார்த்துக் கொள்ளலாம்.

அத்தகைய தருணத்தில்தான் ஜோகேந்திரபாபு மண்டல் அம்பேத்கர் எப்படியும் அரசியல் நிர்ணய சபைக்குச் செல்ல வேண்டும் என்று கருதினார். அம்பேத்கரைச் சந்தித்தார். 'நீங்கள் பிறந்த பம்பாய் உங்களை உதறித் தள்ளினாலும், எங்கள் வங்காளத்துக்கு வந்து போட்டியிடுங்கள் - நாங்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம், என்று கூறினார். அதன்படி அண்ணல் அம்பேத்கர் வங்காளத்தில் போட்டி யிட்டார் காங்கிரஸ் பார்ப்பனர்கள் சும்மா இருப்பார்களா? அவரை எதிர்த்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் அண்ணன் சரத்சந்திரபோஸ் அவர்களைப் போட்டி வேட்பாளராக நிறுத்தினார். ஆனாலும் அம்பேத்கர் வெற்றி பெற்று, இந்திய அரசியல் நிர்ணய சபைக்குள் நுழைந்தார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிற்பிக்கு, தொடக்கத்தில், அரசியல் நிர்ணய சபைக்குள்ளே நுழைய விடாமல் தடுத் ததை கொடுமை என்பதா? விசித்திரம் என்று நகைப்பதா?

கிழக்குப் பாகிஸ்தான் பிரிந்தபோது ஜோகேந்திரபாபு மண்டல் அந்தப் பகுதிக்கு உரியவரானார் - பாகிஸ்தான் அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராகவும், அதன் பின் அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினருக்கான கால அளவு மூன்று ஆண்டுகள் (1946-1949) முடிந்த நிலையில், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பதவி முடிவு அடைகிறது.

மீண்டும் அவர் தொடர வேண்டும் என்ற நிலை ஏற் பட்டது. எம்.ஆர். ஜெயகர் இருந்த இடத்தில் ஓர் இடம் காலியாக இருந்தது.

அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் இடம் பெற வேண்டிய அவசியத்தை உணர்ந்த நிலையில் மீண்டும் அந்த சபைக்குத் தேர்வானார்.

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி வரலாறு இந்தநாட்டில் இருட்டடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வங்காளத்தில் வரலாறு வெளிச்சத்துக்கே வரவேயில்லை.

வங்காளம் என்றால் தாகூர், விவேகானந்தர், வித்யா சாகர், ராஜாராம், பங்கிம் சாட்டர்ஜி பற்றித்தான் வெளி உலகத்துக்குத் தெரியும். (விழிப்புணர்வு ஏற்பட்ட இந்தக் கால கட்டத்திலேயே கலாச்சார வரலாற்று ஆய்வுக்குழுவுக்கு நியமனம் செய்யப்படும் 16 பேர்களும் யார் என்பதிலிருந்தே - கடந்த கால வரலாறு மறைக்கப்பட்ட பின்னணி புரியுமே!)

கழகத் தலைவரின் இந்தவுரை புதிய தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. திருச்சி சிவா எம்.பி. அமெரிக்காவிலிருந்து சோம. வேலாயுதம், சோம இளங்கோவன் போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

திருச்சி சிவா அவர்கள் குறிப்பிடும்போது - திராவிட இயக்கத்திற்குக் கருவூலம் நீங்கள் தானே - அதனால்தான் இதில் பங்கு கொண்டோம் என்று பெருமிதத்துடன் குறிப் பிட்டார். கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்  நன்றி கூறிட காணொலி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.