ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
முப்பது ஆண்டுக்கால மண்டல் கமிஷன் பிரச்சினை!
August 25, 2020 • Viduthalai • மற்றவை

(முடிவடையாத “மவுனப் புரட்சி”)

இந்துத்வா அரசியலும், இதர பிற்படுத்தப்பட்ட (OBC) வகுப்பினருக்கிடையிலேயே காணப்படும் சில முரண்படும் கருத்துகளும், பரிமாணங்களும் அரசியல் களத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த மவுனப் புரட் சியை பாதித்துள்ளன.

வேலைவாய்ப்புகள் சார்ந்த பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் இந்த “மவுனப் புரட்சி” மீண்டும் புத் துயிர் பெறக்கூடும் என்கிறார் பேராசிரியர் கிறிஸ்ட்ஃப் ஜாஃப்ரிலா (Christophe Jaffrelot). பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் CERI (Center for Educational Research and innovation) துறையில் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடு பட்டுள்ள இவர் லண்டனில் உள்ள King's India Institute  என்ற கல்வி நிலையத்திலும் அரசியல் மற்றும் சமூகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வரு கிறார். ‘தி இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இதழின் ஆகஸ்ட் 22, 2020 டில்லி பதிப்பில் மண்டல் கமிஷன் விவகாரம் குறித்து அவர் எழுதிய கட்டுரை பிரசுரமாகி யுள்ளது. அதன் சுருக்கம் பின் வருமாறு!

‘மவுனப் புரட்சி’

‘மவுனப் புரட்சி’ என்று நான் குறிப்பிடும் மண்டல் கமிஷன் அறிக்கையை முப்பது ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தியவர் அன்றைய இந்தியப் பிரதமர் வி.பி. சிங் அவர்கள். சமூகம், அரசியல் ஆகிய களங்களில் பல கட்டங்களில், பல நிகழ்வுகளுக்கு அந்தப் புரட்சி வழிவகுத்தது. இதன் விளைவாக சாமானிய மக்கள் பலரின் மீட்சிக்கும் வழிபிறந்தது. எளிய மக்கள் பலர் அரசியல் களத்திலும் அதிகாரம் பெறமுடிந்தது. நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்ஜாதி வகுப் பினரையும் மீறி சாதாரண மக்கள் சற்று முன்னேற அந்தப் புரட்சி துணைபுரிந்தது என்றே கூறலாம்.

மண்டல் கமிஷன் விவகாரம் ஆரம்பத்தில் முக்கிய மான அரசியல் பிரச்சினையாகவே இருந்தது. உயர் பதவிகளுக்கு ளிஙிசி எனும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினருக்கு வழங்கப்பட்டிருந்த 27% சதவீத ஒதுக்கீடு தொடருமா என்ற அச்சமும் நிலவியது.

பொதுத்துறை நிறுவனங்களில் தங்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய் விடுமோ என்று அஞ்சிய உயர் ஜாதி வகுப்பினர் ஒன்றிணைந்து சீர்திருத்தங்களை எதிர்த்த னர். தடுக்க முயன்றனர். அவசர அவசரமாகத் திட்டம் தீட்டத் துவங்கினர். பொரு ளாதாரம் சார்ந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 1991 ஆம் ஆண்டிற்கு முன்,  மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்பட்ட உயர் பதவிகளை இழக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்களுடைய இந்த உடனடி எதிர்ப்பு உயர்ஜாதிகள் அல்லாத மற்ற வகுப்பினரை வெகுண்டெழச் செய்தது. இதன் விளை வாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஒன்றிணைந் தனர். உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை பல OBC குழுக் கள் தவிர்த்தன. தங்கள் வகுப்புகளிலிருந்தே வேட்பா ளர்களைத் தேர்வு செய்து நாடாளுமன்றத்தில் இடம் பெறச் செய்வதில் எல்லோரும் உறுதியான தீர்மானத் துடன் செயலில் இறங்கினர்.

இந்தி மொழிப் பிரதேசங்கள்

இந்தி மொழிப் பிரதேசங்கள் என கருதப்பட்ட பகுதிகளில் இருந்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 1984 ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது. இது இரு மடங்காகி 1990 காலக்கட்டத்தில் 20 சதவீதமாக உயர்ந் தது. அதே சமயம், 1984இல் 47 சதவீதமாக இருந்த உயர் ஜாதி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 1990 ஆம் ஆண்டு வாக்கில் 40 சதவீதத்திற்கும் கீழே குறைந்துவிட்டனர்.

2004ஆம் ஆண்டு காலத்தில் மக்களவையில் உயர் ஜாதியினரின் எண்ணிக்கை 33 சதவீதமாக சரிந்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த உறுப் பினர்கள் 25 சதவீதம் இருந்தனர். இத்தகைய மாற்றங் களுக்கெல்லாம் முதலில் ஜனதா தளத்திற்கே நன்றி கூற வேண்டும். பிறகு அதிலிருந்து முளைத்த நிலப்பரப்புகள் சார்ந்த அமைப்புகளுக்கும் நன்றி கூறலாம் - உத்தரப் பிரதேசத்து சமாஜ்வாதி கட்சி மற்றும் பீகாரின் ராஷ்ட் ரிய ஜனதா தளம் (SP and RJD) உட்பட. 1990 ஆம் ஆண்டு காலத்தில் ஜனதா தளம் பிளவுபட்ட போதிலும் ஜனநாயகமயமாக்குதலில் அவர்கள் காட்டிய வேகமும் அவர்களுடைய செயல்களின் வலிமையும் அதனால் பாதிக்கப்படவில்லை. பொதுமக்களை வாடிக்கையாளர் கள் போல் கருதி, பண்டமாற்று முறையில் நடந்து கொண்டு உயர்ஜாதி வகுப்பினரைத் தேர்வு செய்து மற்ற வர்களை வஞ்சிக்கும் பொறிமுறைகளை இனி நம்பிப் பயனில்லை என்பது காங்கிரஸ் உட்பட எல்லா கட்சி களுக்கும் புரிந்துவிட்டது. எனவே பல்வேறு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு வேட்பாளர்களை களத்தில் இறக்கவேண்டிய கட்டாயம் அவற்றுக்கு ஏற்பட்டன.

மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC). எனவே கிடைக்கக்கூடிய புதிய OBC வகுப்பினரின் வாக்குகளை இழந்து விட எந்த அமைப்பும் தயாராக இல்லை. அவற்றை அலட்சியப்படுத்திவிட எவருக்கும் மன மில்லை.

இரண்டாவது அனுகூலமான விஷயம் புதிய பொதுநலத் திட்டங்களும் கொள்கைகளும் OBC பிரி வினருக்கு பலனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்த கட்சிகளுள் காங்கிரஸும் இருந்ததுதான். புதிய பொதுநலத் திட்டங் களை OBC பிரிவினரின் நலனுக்காக நடைமுறை படுத்துவதில் மற்ற அமைப்புகளுடன் காங்கிரஸும் சேர்ந்து கொண்டது.

2004 ஆம் ஆண்டு நாடாளும் அதிகாரம் கிடைத் ததும் பொதுப் பல்கலைக்கழகங்களில் OBC பிரிவி னருக்கு காங்கிரஸ் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கிற்று. இந்த முடிவு “மண்டல்-2” (இரண்டாவது காலகட்டம்) என்று குறிப்பிடப்படுகிறது (Mandal II). இது உயர் ஜாதி வகுப்பினரின் ஆத்திரத்தை மறுபடியும் கிளறிவிட்டது. இப்போது மண்டல் கமிஷன் அறிக்கை விவகாரத்தில், அரசியல் கண்ணோட்டத்திலும் சமுதாயப் பார்வை யிலும் எதுதான் இறுதி நிலையாக மிஞ்சியுள்ளது என்ற கேள்வி எழுகிறது.

உயர்ஜாதியினர் தங்கள் போராட்டத்தைத் துவக்கிவிட்டனர்

மேட்டுக்குடி உயர்ஜாதி வகுப்பினரின் தலைமை மய்யமாகவும் வழிகாட்டியாகவும் பி.ஜே.பி. (BJP) இருந்தது. அவர்களுடைய ஆதரவுடன் நான் குறிப் பிட்ட அந்த மவுனப் புரட்சிக்கு எதிராக உயர்ஜாதியினர் தங்கள் போராட்டத்தைத் துவக்கிவிட்டனர்.

ஜாதிபாகுபாட்டு எல்லைகளையும் கடந்து இந்துக் களின் ஒற்றுமை என்ற பெயரில் பி.ஜே.பி. (BJP) செயல்படத் துவங்கியது. இஸ்லாமியர்களின் அச்சுறுத் தலை எதிர்கொள்ள இந்துக்களுக்கு துணைநிற்பது போல் செயலாற்றி தன் இந்து தேசப்பற்றை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது பி.ஜே.பி. அமைப்பு. இந்த திடீர் எதிர் தாக்குதல் 2014 ஆம் ஆண்டு உச்சத்தை அடைந்தது.

நரேந்திரமோடியின் ரசவாதக் கலையால் தேசப் பற்று என்ற பெயரில் வலம் வந்த “இந்துத்வா” வடி வத்திற்கு OBC பிரிவினரின் இணக்கம் 2014 ஆம் ஆண்டு கிடைத்தது. OBC பிரிவைச் சேர்ந்த மோடி, ஆர்.எஸ்.எஸ்ஸால் (RSS) உருவாக்கப்பட்ட முதல் பி.ஜே.பி. தலைவர் என்பது வெட்ட வெளிச்சமாயிற்று. மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தயாரிப்பு என்பது தெளிவாயிற்று. OBC பிரிவினர் சிலருக்குள் மோடியின் ரசவாதத் திறமை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட மனிதராக, சுயமுயற்சிகளாலும் உழைப்பாலும் தன்னைச் செதுக் கிக் கொண்டவராக தன்னைக் காண்பித்துக் கொண்ட மோடி, ஆரம்பக் காலத்தில் ஒரு தேநீர் வியாபாரியாக இருந்தவர். ஆரோக்கியமான பாகுபாடுகளை அவர் ஒருநாளும் ஆதரிக்கவில்லை. நடுத்தர வர்க்க உயர் ஜாதி வகுப்பினர், மண்டல் ஆணைய அறிக்கையை நஞ்சு போல் வெறுத்தனர். மிகச் சரியான விஷ முறிவு மருந்தாக அவர்களுக்கு மோடி காட்சியளித்தார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தயவில் உயர் ஜாதியினர் மக்களவையில் ஒன்றுபட்டு தங்களை பலப் படுத்திக் கொண்டனர் என்றே அரசியல் பிரமுகர்கள் கூறினர். பி.ஜே.பி. கட்சிக்கு முதல் தேர்தல் வெற்றியைப் பெற்றுத் தந்த மோடி மேட்டுக்குடி உயர்ஜாதியினரின் வலிமையை அதிகரித்துவிட்டார்.

2014 ஆம் ஆண்டில் உயர்ஜாதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் சதவீதம் 44.5% என உயர்ந்தது. இது 1980 இல் நிலவிய சதவீதத்திற்குச் சமமா கவே இருந்தது எனலாம். ஆனால் இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் பங்கு நாடாளுமன்றத்தில் சரிந்தது. 20 சதவீத OBC பிரிவினர் மட்டுமே இடம் பெற்றனர். (இதற்கு ஆதாரம் SPINPER (Social Profile of India's National and Provincial Elected Representatives)  எனும் தனியார் அமைப்பு சேகரித்து வலைதளங்களில் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் என்று தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் கிறிஸ்ட்ஃப்.

OBC பிரிவினரின் வாக்குகளைக் கவர மோடிக்குப் பயன்பட்டது அவருடைய சாமானியன் எனும் பின் புலமோ அவருடைய இந்துத்வா கோட்பாடோ மட்டு மல்ல. சமுதாயப் பிரிவுகளின் நலனும் வளர்ச்சியும் என்ற பெயரில் அவர் நீர்மூழ்கிக் கப்பலைப் போல் மறைத்து வைத்தது ஜாதிகள் சார்ந்த அரசியலைத்தான்.

மண்டல் ஒதுக்கீட்டாலும் பொருளாதார வளர்ச்சி யாலும் 2000 ஆம் ஆண்டு வாக்கில் OBC பிரிவினரின் நிலை சற்றே உயர்ந்தது. அதை “புதிய நடுத்தர வர்க்கம்” என்று குறிப்பிட்டு அதன் பாதுகாவலர் போல் தன்னைக் காண்பித்துக் கொண்டார் மோடி. வேலை வாய்ப்பு களால் கவரப்பட்டு OBC பிரிவைச் சேர்ந்த பல இளைஞர்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறி நகரங்களில் தஞ்சமடைந்தனர். நிலையான வேலை களாக இல்லாவிட்டாலும் ஊதியம் மிகவும் குறைவாக இருந்தாலும் ஒரு காலத்தில் கிராமப்புறங்களில் அவதிப் பட்ட OBC இளைஞர்கள் உயிர் வாழ அந்த வேலைகள் உதவின. சற்றேனும் நிம்மதியாக வாழ அவை போது மானதாக இருந்தன.

சமூகநீதிக் காவலர்

“புதிய நடுத்தர வர்க்க நலன்” என்றெல்லாம் மோடி முழங்கியது ஜாதிபாகுபாடு சார்ந்த வெற்றுக் கூச்சலா கவே இருந்ததே தவிர பொதுவுடமைக் கோட்பாடு என்றெல்லாம் அதில் எதுவும் உண்மையில் இருந்ததே இல்லை. அதிக சமத்துவமும் பாரபட்சமற்ற விநியோக மும், ஒதுக்கீடும் புறக்கணிக்கப்பட்டன. சமூகநீதியின் அடிப்படை தகுதி மட்டுமே என்று வாதிட்டார். 1991 ஆம் ஆண்டின் சீர்திருத்தங்களுக்குப் பின் யுக்திகளும், கலைகளும், ஒரு பிரிவின் மீது இன்னொரு பிரிவு செலுத்தும் ஆளுமை, தலைமை வேட்கை என் பது தெளிவாயிற்று. ஆனால் UPA ஆட்சி திறமையோடு சமாளித்து, சமுதாய ஜனநாயகக் கொள்கைகள் மூலம் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டது. பல்கலைக் கழகங்களில் OBC பிரிவினருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத “மண்டல்-2” ஓர் உதாரணம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி (United Progressive Alliance) இதைச் செய்து காட்டியது.

ஒதுக்கீட்டு அரசியல் மோடியால் அடியோடு ஒழிக்கப்பட்டிருந்தால் மண்டல் ஆணைய விவகாரம் பல வருடங்களுக்கு முன்பே முடிந்துப் போயிருக்கும். OBC கொள்கைகளின் வெற்றியால் இரண்டு வகை களில் OBC அரசியல் பலியாயிற்று எனலாம். மத்திய அரசும் மாநில அரசுகளும் 27 சதவீத ஒதுக்கீட்டை OBC பிரிவினருக்காக வழங்கியபோது, ஒதுக்கீட்டின் மொத்த அளவு 49 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று காரணம் கூறி நீதியரசர்கள் அதை நிராகரித்தனர். இதற்குமேல் தாங்காது என்பது போன்ற ஒரு சலிப்புணர்வு பரவியது. OBC பிரிவின ருக்கு பிரதிநிதித்துவம் அளித்து வந்த கட்சிகளால் அதன் பிறகு - “எங்களுக்கு வாக்களியுங்கள். அதிகமான ஒதுக்கீடு உங்களுக்கு கிடைக்கும்” என்று சொல்ல முடியவில்லை. OBC அரசியல் பலியிடப்பட்டது இந்த முதல் வகையில்.

இரண்டாவது இடையூறு - OBC பிரிவு எனும் பல்வேறு பரிமாண வட்டத்திற்குள்ளேயே சில உட்பிரிவுகளுக்கும் குழுக்களுக்கும், மற்ற OBC பிரிவினரைக் காட்டிலும் அதிகமான ஒதுக்கீடு கிடைத்ததுதான் எனலாம். யாதவர் பிரிவு ஒரு உதாரணம். மற்றவர்களை விட அதிக ஒதுக்கீடு அவர்களுக்குக் கிடைத்ததாக இந்திய மக்கள் சமுதாய வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நடத்திய ஆய்வு கூறுகிறது. (Indian Human Development Survey).

ஆய்வின் இறுதிச் சுற்றின்படி உத்தரப் பிரதேசத்தில் 14.5 சதவீத யாதவர்கள் மாதச் சம்பளம் வழங்கப்படும் வேலை வாய்ப்புகள் பெற்றனர். அதற்கு நேர் எதிராக, குர்மிஸ் (Kurmis) எனும் OBC பிரிவினருக்கு 5.8 சதவீத வேலை வாய்ப்புகள் மட்டுமே கிடைத்தன. தெலிஸ் (Telis) எனும் ளிஙிசி பிரிவினருக்கு 5.7 சதவீதம்; குஷ் வாக்கள் (Kushwah) என்ற OBC பிரிவினருக்கு 6.7 சத வீதம்; லோதிகள் (Lodhis) எனும் OBC பிரிவினருக்கு 3.5 சதவீதம் மட்டுமே கிடைத்தது.

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் நடந்த சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தள ஆட்சிகளின் போது பரவலாக நிகழ்ந்த யாதவ மயமாக்கல் OBC பிரிவினரை கூறு போட்டுவிட்டன என்றே கூறலாம். பீகாரில் நிதிஷ் குமாரின் ஆட்சியில் அவரை ஆதரித்து வரும் குர்மிக் கள் எனும் OBC பிரிவினர் இதற்கு வெகுகாலம் முன்பே 1994இல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் யாதவர் அல்லாதோர் பிரிவு களிலிருந்து வேட்பாளர்களைத் தந்திரமாக தேர்வு செய்தது பா.ஜ.க. (BJP).  அவர்களுக்கிருந்த பல எதிர்ப் புகளைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு யாதவரல் லாத OBC பிரிவினரின் வாக்குகளைப் பெற பா.ஜ.க. (BJP) வலை விரித்தது. யாதவர்களுக்கும் யாதவரல்லா தோருக்குமிடையே இருந்து வந்த பகை உணர்வை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது.

பா.ஜ.க.வின் தந்திரம் புரிந்து கொள்ளப்பட்டது

2019 தேர்தலில் OBC பிரிவைச் சேர்ந்த ஏழை வாக்காளர்கள் பகுஜன் சமாஜ் / சமாஜ்வாதி கூட்டணி களைக் காட்டிலும் பா.ஜ.க.வுக்கு அதிக அளவில் வாக்களித்திருந்தனர். இதன் மூலம் பா.ஜ.க.வின் தந் திரம் புரிந்து கொள்ளப்பட்டது. பா.ஜ.க.வின் மேட்டுக் குடி மாயைத் தோற்றம் கவனிக்கப் படவேயில்லை. OBC பிரிவினருள் 59 சதவீத ஏழை எளிய மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்தனர். 33.5 சதவீத வாக்காளர்கள் மட்டுமே பி.எஸ்.பி. / எஸ்.பி. கூட்டணிக்கு வாக்களித் திருந்தனர்.

வசதிகள் நிறைந்த, பணம் படைத்த நடுத்தர OBC பிரிவினர் BSP/SP கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களித்ததற்கும் ஏழை எளிய OBC பிரிவினரின் வாக்குகள் குறைந்ததற்கும் காரணம் கவனிக்கப்பட வேண்டும்.

சமாஜ்வாதி கட்சி யாதவர்களின் கட்சியாகவே அடையாளம் பெற்றுள்ளது. யாதவர்கள் மற்ற பிரிவினர்களான கடாரியாக்கள், குஷ்வாக்கள், தெலிஸ் (Telis), லோதிகள் (Lodhis) ஆகியோரைவிட வசதி படைத்த செல்வந்தர்கள். யாதவர்கள் மிக அதிக அளவில் ஒதுக்கீடு பெற்றிருப்பதும் அவர்களுடைய அதிகார ஆணவப்போக்கும் மற்ற OBC பிரிவினருக்கு அவர்கள் மீது வெறுப்பும் பகையுணர்வும் ஏற்பட வைத்துவிட்டன. உட்பூசல்களும் அதிகரித்தன.

OBC பிரிவினருக்குள் நிலவும் ஒற்றுமையின்மை உ.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்களின் அவலநிலைக்கு நிகரானது எனலாம். இதெல்லாம் போதாதென்று (Jatav) ‘ஜாதவ்’ எனும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் ஜாதவரல்லா தோருக்குமிடையே நிலவும் பகையும் OBC பிரச்சினைகளுள் ஒன்று. ஜாதவ் (Jatav) என்பது Chamar எனப்படும் தாழ்த்தப்பட்டவரின் உட்பிரிவாம். ஜாதவ்களும் பட்டிய லினத்தவர் என்கிறார்கள். BSP கட்சியை ஜாதவ் கட்சியாகவே பார்க்கும் ஜாதவரல்லா தோர், BSP கட்சியை எதிர்க்கின்றனர். (யாதவ்-ஜாதவ் இரண்டும் வெவ்வேறு பிரிவுகள்).

ஜாதவரல்லாத பட்டியலினத்தினர் பா.ஜ.க.வை ஆதரித்து வாக்களித்து வருகின்றனர். இந்துத்வா சக்தி களை ஆதரிப்பதன் மூலம் கீழ்த்தட்டு OBC பிரிவினரும் கீழ்த்தட்டு பட்டியலின மக்களும் தங்களை சமஸ்கிருத மயமாக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘உயர்ந்த இந்து கலாச்சாரம்’ எங்களை அரவணைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்களாம் அவர்கள். இந்துத் வாவை மேற்கண்ட பிரிவினர் தீவிரமாக ஆதரித்து வருகின்றனர்.

மண்டல் கமிஷன் அரசியலின் விளையாட்டு முடிந்து விட்டதாக கூறமுடியுமா? அப்படி சொல்வதற் கில்லை. OBC பிரிவினருக்கு பெயரளவில் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளனவே தவிர நடைமுறைப்படுத்தப் படவில்லை. OBC பிரிவினருக்கு ஒதுக்கீடுகளின் பலன் இதுவரை கிடைக்காத பட்சத்தில் "game over" - ஆட்டம் முடிந்து விட்டதாக எப்படிச் சொல்ல முடியும் என்று கேட்கிறார் கட்டுரையாளர் கிறிஸ்டஃப்.

மத்திய அரசுப் பணிகளில்...

1990 இல், மத்திய அரசுப் பணிகளில் OBC பிரிவி னர்களுக்கு மொத்த வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் மொத்தப் பணியிடங்களில் 18 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் செயல்படுத்தப்படவில்லை.

மத்திய அரசுப் பணியிடங்களையும் A-B-C என்று மூன்றாக தரம் பிரித்துள்ளனர். அய்.ஏ.எஸ்./அய்.பி.எஸ். போன்ற உயர் பதவிகள் ‘ஏ’ பிரிவு. 2015 ஆம் ஆண்டில் 12 சதவீத OBC பிரிவினர்களுக்கு இதில் ஒதுக்கீடு கிடைத்தது. தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இந்த வகை அதிகாரிகளுக்கு இருக்குமாம்.

Class-B  வகையில் நிர்வாகம் சார்ந்த பணிகள் புரி யும் அதிகாரிகள் அடங்குவார்கள். Class A அதிகாரி களின் உத்தரவுகளின்படி இவர்கள் செயலாற்ற வேண் டுமாம். இந்த B வகையில் OBC பிரிவினருக்கு 12.5 சதவீத ஒதுக்கீடு தீர்மானிக்கப்பட்டது.

மண்டல் ஆணைய விவகார விளையாட்டு

Class-C என்பதில் கடைநிலை ஊழியர்கள், கைத் தொழிலாளர்கள் போன்றவர்கள் அடக்கம். இந்த வகை வேலை வாய்ப்புகள் 19 சதவீத OBC பிரிவினர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 1990 ஆண்டு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் படி அமை யாமல் 10 சதவீத புள்ளிகள் குறைத்தே ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதுவும் நடைமுறைப் படுத்தப்படவில்லை இதுவரை. எனவே இந்த பிரதிநிதித்துவ குறைபாட்டுக்கு எதிராக இனி போராடுவதில் நியாயம் உள்ளதாகவே OBC எனும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இப்படி இன்னும் முழுமையாக இடஒதுக்கீடு கிடைக்காததாலும் OBCக்குள்ளேயே இருக்கும் ஏராளமான உட்பிரிவுகளுக்கு அதிகாரம் போய்ச் சேர வேண்டியிருப்பதாலும் மண்டல் கமிஷன் பிரச்சினை முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்னும் தொடர்கிறது என்கிறார் கட்டுரையாளர்.

நன்றி: ‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’

டில்லி பதிப்பு - 22.08.2020

மொழியாக்கம்: எம்.ஆர்.மனோகர்