ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் - சமூகநீதிக் கருத்தரங்க நிகழ்ச்சி
August 8, 2020 • Viduthalai • கழகம்

தலைவர்கள் ஏற்ற கொள்கைச் சூளுரை!

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்  (ஆகஸ்டு 7) நாடு தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணியில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசாணை பிறப்பித்த நாள் (ஆகஸ்டு 7)   30 ஆண்டுகள் நிறைவாக சமூகநீதிக் கருத்தரங்கத்தை திராவிடர் கழகம் நடத்தியது.

7.8.2020 அன்று மாலை காணொலி வாயிலாக நடைபெற்ற கலைஞரின் நினைவுநாள் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியின் நிறைவுரையினை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. வழங்கினார்.

தலைவர் கலைஞரின் நினைவுகளைப் போற்றி அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் உரையாற்றினர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. ,  தமிழ்நாடு காங்கிரசுக் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா. முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் முனைவர் து.ரவிக்குமார் எம்.பி. மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்  செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகிய தலைவர்கள் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றோரை வரவேற்று திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி உரை யாற்றினார். நிறைவாக கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி நன்றி கூறினார்.

தலைவர் கலைஞரின் நினைவு நாள் - சமூக நீதி கருத்தரங்க நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்.

காணொலி நிகழ்ச்சியில் அதிகபட்ச பார்வையாளர் எண்ணிக்கையினையும் கடந்து பேஸ்புக், யுடியூப் இணையதளங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கில் தோழர்கள்  தமிழ்நாடு, பிற மாநிலங்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் - பங்கேற்று தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டனர். முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவுகளைப் போற்றினர்.

நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற தமிழர் தலைவர் ஆற்றிய உரை இன்றைய 'விடுதலை' ஏட்டின் முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது. மற்ற தலைவர்கள் ஆற்றிய உரையின் முக்கியப் பகுதிகள் மற்றும் தொடக்கவுரை, நிறைவுரையின் சுருக்கத்தை காண்போம்.

தொடக்கவுரை : "நாலாந்தர மக்களின் ஆட்சி" எனஆட்சியைக் கொண்டாடிய  கலைஞர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

திராவிடர் கழகம்

தன்னை 'சுயமரியாதைக்காரன்' என அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான அரசாணை பிறப் பித்த நாளும், கலைஞர் நினைவு நாளும் ஒன்றே  (ஆகஸ்டு 7). சமூக நீதிக்குக் குரல் கொடுத்து ஆட்சி அதிகாரத்துடன் ஆணைகளை பிறப்பித்தவர்கள் அந்தத் தலைவர்கள். தலைவர் கலைஞர் சமூகநீதியின் பக்கம் ஆழ்ந்த பற்றுறுதி கொண்டவர். தந்தை பெரியாரின் மாணவர்.

ஒரு சமயம் முதல்வர் பொறுப்பில் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்ற கலைஞரைப் பார்த்து ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் "உங்களது ஆட்சி மூன்றாம் தர ஆட்சி" எனக் கேலிப்படக் கூறினார். சற்றும் தாமதிக்காமல் முதல்வர் கலைஞர் எழுந்து "ஒரு சிறு திருத்தம் எதிர்கட்சி உறுப்பினர் குறிப்பிட்டதில்; எங்களது ஆட்சி நாலாந்தர ஆட்சி; வர்ணாசிரமப்படி உடல் உழைப்பே தொழில் என  விதிக்கப்பட்ட சூத்திரர் ஆட்சி இது; சூத்திரர்களுக்கான ஆட்சி எங்களது ஆட்சி" என ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு சமத்துவத்திற்கு - சமூக நீதி அடை யாளத்தை தமக்கு, தனது ஆட்சிக்கு பெயரிட்டுக் கொண்டு, கொண்டாடிய பெருமைக்குரியவர் கலைஞர், அவரது புகழ் வாழ்க!

நிறைவுரை : 'கரோனாவைவிட கொடியது இந்தி, சமஸ்கிருதத்தை திணித்திடும் தேசியக் கல்விக் கொள்கை'

வைகோ எம்.பி.,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

பா.ஜ.க. கொண்டு வந்துள்ள தேசியக் கல்விக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டியது. இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பையே முக்கியமாகக் கருதி கலாச்சார மாற்றத்தை ஒற்றை கலாச்சாரத்தை உருவாக்க நினைக்கிறது. மொழி என்பது கலாச்சாரக் கூறுகளுள் முக்கியமானது. பன்முகத் தன்மை கொண்ட நம் நாடு பன்மொழி பேசக் கூடிய மக்கள் வாழ்கின்ற நாடு. ஒருமைப்படுத்தலாம்; ஓர்மைப்படுத்துவது கூடாது. இந்த நாட்டிற்கு பன்முகத் தன்மை பறைசாற்றுகின்ற வகையில் அய்க்கிய இந்திய நாடுகள் (United States of India) எனத்தான் பெயரிட வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினேன். ஆனால் மதவாத அடிப்படையில் இந்திய நாட்டிற்கு 'பாரத்' என்ற பெயர் மட்டும் போதும் என மதவாத  பா.ஜ.க. ஆட்சி கருதுகிறது. இத்தகைய நடவடிக் கைகளை எதிர்த்து மதசார்பற்ற ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்த்திட மதவாத சக்திகளை முறியடிக்க தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

தேசிய ஒருமைப்பாடு கருதி  'திராவிட நாடு' கோரிக்கையை அறிஞர் அண்ணா திரும்பப் பெற்றுக் கொண்டார். கோரிக்கையை திரும்பப் பெறும் பொழுது அண்ணா கூறினார். "கோரிக்கைதான் திரும்பப் பெறப் பட்டது. கோரிக்கை வைத்ததற்கான காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன" என்றார். அண்ணா மறைந்த பிறகு அண்ணா கூறிய கருத்தை வழிமொழிந்து அதற்கு ஆக்கம் கூட்டுகின்ற வகையில் 'மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்ற முழக்கத்தைமுன் வைத்து நாட்டு ஒருமைப்பாட்டிற்கு வலு சேர்த்த தலைவர் கலைஞர்.

இப்பொழுது மாநில உரிமைகள் படிப்படியாகத் தட்டிப் பறிக்கப்படுகின்றன. மத்திய அரசே மாநில அதிகாரத்தை கையில் எடுத்து எதேச்சதிகாரமாக செயல்படுகிறது. இதைத் தட்டிக் கேட்கும் துணிவு இங்கு மாநிலத்தை ஆளுகின்ற ஆட்சிக்கு அறவே இல்லை. கலைஞர் இருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. கலைஞர் இல்லாத நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்கும். இதுவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் களுக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையாகும். இந்திப் போராட்டத்தை பல்வேறு கட்டங்களில் நடத்தியவர் கலைஞர். இந்தித் திணிப்பை எதிர்ப்பது  அவரது உயிர் மூச்சு போன்றது. மறுபடியும் ஒரு மொழிப் போராட்டத்திற்கு வித்திடும் தேசியக் கல்விக் கொள்கையை முறியடிப்போம்! கரோனாவைவிட கொடியது தேசிய கல்விக் கொள்கை. மதவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதில்தான் உண்மை யான ஜனநாயக ஆட்சி, மதச்சார்பற்ற ஆட்சி ஏற்படும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியாக ஒற்றுமை காத்து வழி வகுப்போம். உறுதி பூணுவோம்.

வாக்கு அரசியலைப் பெரிதுபடுத்தாமல்

தந்தை பெரியார் வழியில் சாதனை புரிந்த கலைஞர்

ஆ.ராசா எம்.பி.,

திராவிட முன்னேற்றக் கழகம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர், தந்தை பெரியாரின் குரு குலத்தில் பயின்றவர். அறிஞர் அண்ணாவிடம் பயிற்சி பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகமான அரசியல் அமைப்பின் தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக வழி நடத்தியவர்; அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியவர். அரசியல் கட்சி, அரசியல் கட்சியின் தலைவர்கள் தாம் செய்யக் கூடிய செயல்களால், ஆட்சி அதிகாரத்துடன் கூடிய நடவடிக்கைகளால் தங்களுக்கு வாக்கு அளிக்கும் மக்களின் நிலைப்பாட்டில் ஏதேனும் பாதிப்பு வருமா என எச்சரிக் கையுடன், ஒரு வித தயக்கத்துடன் செயல்படுவது இயல்வே. ஆனால் கலைஞரைப் பொறுத்த அளவில் அதற்கு விதி விலக்கானவர். காரணம் வாக்கு வங்கியைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்ட தந்தை பெரியார் வழி வந்தவராயிற்றே.

வாக்கு வங்கியின் ஆதரவு கிடைக்காத முற்போக்குத் திட்டங்களை வெளிப்படையாக தேர்தல் நேரத்தில் பேசி பக்குவப்படாத மக்களிடம் வாக்கு இழப்பை  மேற்கொள் ளாமல், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவுடன் முற்போக்குத் திட்டங்களுக்கான அரசாணை பிறப்பித்தவர் கலைஞர். இதை ஓர் அரசியல் அணுகுமுறையாகக் கடைப்பிடித்தார் கலைஞர். கலைஞரின் பெயரிலேயே அடையாளப்படுத்தப் பட வேண்டிய அரசியல் அணுகுமுறை அது. அந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்துதான், 1989ஆம் ஆண்டு பெண்களுக்கும் தகப்பன் சொத்தில் உரிமை பெறும் நிலை கொண்டு வந்தார். 1929ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற சென்னை மாகாண முதலாவது சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியாரால் தீர்மானமாக நிறைவேற்றப் பட்டது; அண்ணல் அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த பொழுது சட்டமாக வடித்திட முனைந்து ஆதிக்கவாதிகளால் தடைப்படுத்தப்பட்ட பெண்களுக்கான சம உரிமையை தமிழக முதல்வராக இருக்கும் பொழுது சட்டமாக ஆக்கினார்.

அதேபோல அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் ஆணையினை அய்ந்தாம் முறை முதல்வராக பொறுப்பேற்றவுடன் முதல் ஆணையாகப் பிறப்பித்தார். இதை கூட்டங்களில் பேசி அதற்கு மக்கள் ஆதரவை பெறுவது சற்று தாமதமாகும். நியாயமான காரியங்களுக்கு, சட்டமும், ஆணையும் கொண்டு வந்தால்,  அவசிய நடை முறை ஏற்பட்டு விடும். அதன்  நியாயத்தை நாளடைவில் மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள். இப்படிப்பட்ட அரசியல் அணுகுமுறையை ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது சரியாகத் தக்க தருணத்தில் கடைப்பிடித்து தாம், தனது கட்சி ஏற்றுக் கொண்ட கொள்கைகளை நடை முறைப்படுத்திட   அரசாட்சியில் நிபுணத்துவம் மிக்க தலை வராக, கலைஞர் விளங்கினார்.  முற்போக்குக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திட நினைக்கும் அரசியல் ஆட்சி யாளர்களுக்கு கலைஞரே முன் உதாரணமாகத் திகழுகிறார். பெரியார் வழியையும், அண்ணா வழியையும் இணைத்து ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றி கண்டவர் கலைஞர். அவரது புகழ் வாழ்க! அவரது அரசியல் ஆட்சி அதிகார வழி முறை இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் வழிகாட்டும்!

"மாநில உரிமைகளுக்குப் போராடி வெற்றி கண்டவர் கலைஞர்"

கே.எஸ். அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

மாற்றுக் கருத்துக் கொண்டவர்களையும் மதித்தவர் கலைஞர். அத்தகையவர்களால் மதிக்கப்பட்டவர் கலைஞர். தனது கட்சி, பிற கட்சி என்ற பாகுபாடு காட்டாமல், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது நட்பு பாராட்டி, மதிப்புக் கொடுத்து நல்ல உறவில் இருந்தவர் கலைஞர். சுறுசுறுப்பின் மொத்த வடிவம் கலைஞர். ஓய்வு என்பதை அறியாத தலைவர் கலைஞர்.

ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்திடும் சமூக நீதிக் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர் கலைஞர். ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தியவர் கலைஞர். 'வைக்கோலே தலையணை; வயல் வரப்பே பஞ்சு மெத்தை' என்ற தமது நிலை, மேம்பட வேண்டும் என்ற நினைப்பே இல்லாத விவசாயிகளுக்கு மேம்பாட்டு திட்டங்களைத் தீட்டி  நடத்திக் காட்டியவர் கலைஞர்.

மாநில உரிமைக்காகப் போராடி வெற்றி கண்டதில் கலைஞருக்குப் பெரும் பங்குஉண்டு. அந்நாளில் மாநில உரிமைகளின்மீது உண்மையான அக்கறை கொண்டவர் மூவர். ஒருவர் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, அடுத்து மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு, மூன்றாவது தலைவர் கலைஞர். முதல் இருவரும் வெளிநாடு சென்று உயர் கல்விப் பெற்று பட்டம் பெற்றவர்கள். ஆனால் கலைஞரோ உயர் கல்வி பெறும் வாய்ப்பினைப் பெறாதவர். ஆனால் அரசு நிர்வாகம் சார்ந்த நுணுக்கமான விவரங்கள் மீது சரியான கருத்து, அணுகுமுறையைக் கொண்டு செயல் பட்டவர் கலைஞர்.மாநில உரிமைக்குக் குரல் கொடுத்து அதில் கணிசமான வெற்றியைப்  பெற்றவர் கலைஞர்.

கல்வி வள்ளல் காமராசர் தொடங்கிய கல்வித் திட்டங்களை மேம்படுத்தி, செழுமைப்படுத்தி, தொடர்ந்து நடத்தியவர் கலைஞர். கல்வி கற்பதன் அருமையை உணர்ந்து காரியம் ஆற்றிட ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியவர் கலைஞர். அப்படிப்பட்ட கல்வி உரிமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலை மாற்றி அமைப்போம். அதற்கான முயற்சிகளை எடுப்போம். கலைஞரைப் போற்றுவோம்.

'அரசியல் ஜனநாயக மாண்பாளர் கலைஞர்'

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தலைவர் கலைஞர் அவர்களின் நினைவு நாளில் சமூகநீதிக் கருத்தரங்கம் நடைபெறுகிறது, மிகவும் பொருத்த மான நிகழ்ச்சி. சமூகநீதியில் உண்மையான அக்கறை கொண்டு. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது அவருக்கு வரும் கோரிக்கைகளை, ஆளும் தரப்பா, எதிர் தரப்பா என பாகுபாடு காட்டாமல் கோரிக்கையின் பால் உள்ள நியாயத்தை உணர்ந்து கொண்டு அதனை நிறை வேற்றிடும் ஜனநாயக மாண்பாளராகத் திகழ்ந்தவர் கலைஞர். தாழ்த்தப்பட்ட மக்களிலும், அடித்தட்டு மக்களான அருந்ததியரின் சமூகநீதி உரிமைக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிப் போராட்டம் நடத்தி கலைஞரிடம் கோரிக்கை வைத்த பொழுது அதன் நியாயத்தை உணர்ந்து அருந்ததியர் சமூகத் திற்கு உள் ஒதுக்கிடு அளித்திட உத்தரவிட்டார். அத்தகைய அரசியல் ஜனநாயக மாண்பாளராகத் திகழ்ந்தார் கலைஞர்.

தற்சமயம் மத்தியில் இருக்கிற பா.ஜ.க. அரசு ஜனநாயக மாண்புகளுக்கு மதிப்பளிக்காமல் ஏகபோக அதிகாரம் உள்ளதாக நினைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. எப்பொழுதெல்லாம் பா.ஜ. கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் 'கல்வியில்' கை வைத்து, கல்விக் கொள்கையில்  மாறுதல்களை ஏற்படுத்தி கல்வி மறுப்பிற்கு மறைமுகமான நடவடிக்கை களில் இறங்குவது வழக்கம். அப்படித்தான் இப்பொழுது வெளி வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையும் கல்வி  மறுக்கப்பட்ட தலைமுறையினர் முதன் முதலாகப் படிக்க முற்படும் நிலையில் அதில் 'முற்போக்கு முகமூடி'யுடன் மாறுதல்களை கொண்டுவந்து பெரும்பாலான உழைக்கும் மக்களுக்கு ஒட்டு மொத்த கல்வியை மறுக்கும் வகையில் கல்விக் கொள்கையை வகுத்துள்ளது. பா.ஜ.க. அரசு. அனைத்துத் தரப்பினராலும் ஒட்டு மொத்தமாக எதிர்க்கப்பட வேண்டியது. தேசியக் கல்விக் கொள்கையே! கல்வி நிலையங்களில் பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் வகையில் மொழித்திணிப்பை கட்டாயமாக்கும் கல்விக் கொள்கை நமக்குத் தேவையில்லை. சமூகநீதியை மறுக்கும் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்போம். அணி திரள்வோம். ஆட்சி அதிகார மாற்றத்தால்தான் அது சாத்தி யப்படும். அதற்கும் ஆயத்தமாவோம்.

மதச்சார்பற்ற ஆட்சி அதிகாரத்திற்கு

 வலு சேர்த்தவர் கலைஞர்

இரா. முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

ஆகஸ்டு 5, 2020 - நாட்டின் மதச் சார்பின்மை மரியாதை இழந்த நாள். ஒரு மத வழிபாட்டுத் தலத்தை இடித்து விட்டு இன்னொரு மத வழிபாட்டுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு நாட்டின் பிரதமரும், மாநில முதலமைச்சரும், ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரமும் பங்கேற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான மதச் சார்பின்மையை மறுத்து, புறம்பாக  நடந்துள்ளனர்.

முன்னர்  வழிபாட்டுத்தல இடிப்பு கிரிமினல் செயல் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மதச் சார்பின்மைக் கோட்பாடு ஆட்சியாளர்களால் மிதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இரயில்வே நிலையத் திறப்பு விழாவில் மத்திய அரசு நிகழ்ச்சியில் காஞ்சி மட சங்கராச் சாரியும் இடம் பெற்று, மாநில அமைச்சரும், கலந்துகொண்ட நிகழ்வு முதல்வர் கலைஞர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட பொழுது, கருத்துத் தெரிவித்த கலைஞர், "பிற மதத் தலைவர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்திருக்க வேண்டும்" என பகிரங்கமாகச் சட்டசபையில் தெரிவித்தார். இன்றைய பா.ஜ.க. ஆட்சியில் மதச் சார் பின்மையை கேலிக் கூத்தாக்கி வருகின்றனர்.

இந்த மதவெறிக் கும்பலை அகற்றுகின்ற, மாநில அளவில் அதற்கு துணை போகின்ற   அதிமுக ஆட்சியை அகற்றிட, நமது அரசியல் கூட்டணி திமுக தலைமையில் ஒருங் கிணைந்து பாடுபடும். மக்களின் அங்கீகாரத்தைத் தேர்தலில் பெற்று ஆட்சிக்கு வந்து மதவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.

அதற்கான உறுதிமொழியைத் தலைவர் கலைஞரின் நினைவு நாளில் மேற்கொள்ளுவோம்.

நுழைவுத் தேர்வை ஒழித்துக்கட்டிய கலைஞர்

பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா

 மனிதநேய மக்கள் கட்சி

'கல்வி அனைவருக்கும் பொது' என்று ஆட்சி செய்தவர் கலைஞர். தமிழ்நாட்டு உயர் கல்வியை மேம்படுத்தியவர் கலைஞர். பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி பெருகிட அந்தக் கல்வி அதிகமானவர்களுக்கு - ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவர்களுக்கு கிடைத்திட திட்டம் தீட்டி செயல் படுத்தியவர். தொழிற் கல்வியை கிராமப்புற மக்களுக்கு மறுக்கின்ற நுழைவுத் தேர்வினை சட்டம் இயற்றி ஒழித்துக் காட்டியவர் கலைஞர். மருத்துவக் கல்விக்கு 'நீட்' தேர்வு வந்த பொழுது மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தாலும் முதல் எதிர்ப்புக் குரல் கொடுத்து நீதிமன்றம் சென்று தடையாணை வாங்கியவர் கலைஞர்.

இன்றோ மருத்துவக் கல்விக்கு மட்டுமல்ல, அனைத்து உயர் கல்விக்கும் நுழைவுத் தேர்வு அவசியம் எனகல்வி கற்பதை பெரும்பான்மை மக்களுக்கு மறுக்கின்ற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்வு நடத்துவதற்காகவே ஒரு நிறுவனத்தை தேசிய தேர்வு நிறுவனம் (National Testing Agency)  ஏற்படுத்தி உயர்கல்வி, பெறுவதை மட்டுப்படுத்து கிறது; மறுக்கிறது மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு.

சமூகநீதிக்குப் பாடுபட்டு பதவி இழந்த அன்றைய பிரதமர் வி.பி. சிங் அவர்களை இந்த சமூகநீதி மண்ணிலிருந்து தமிழர் தலைவர் டெல்லி சென்று பாராட்டினார். அப்பொழுது முதல்வராக இருந்த கலைஞர் பிரதமர் பதவி இழந்த வி.பி.சிங் அவர்களை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து மாநிலம் முழுவதும் உடன் சென்று பாராட்டு தெரிவித்து சமூகநீதிக்கு வலு சேர்த்தார். சமூகநீதியை நோக்கிய பயணம் இன்றைய மத்திய, மாநில ஆட்சியாளர்களால் பின்னோக்கி செல்லும் நிலைமைகள்  தொடங்கியுள்ளன. தலைவர் கலைஞரின் ஆளும் பணி தொடர்ந்திட, சமூகநீதிக் கொடி வலுவாகப்படுத்திட ஆட்சி மாற்றம்தான் அடிப்படையானது. அதற்கான முயற்சிகள் உறுதிப்படுத்திட சூளுரைப்போம் கலைஞரது நினைவு நாளில்!

கலைஞரின் 'சமச்சீர் கல்வியை' புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை புறக்கணிப்போம்!

முனைவர் து. ரவிக்குமார் எம்.பி.,

 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தேசிய கல்விக் கொள்கை என்பதாக ஒரு கருத்துத் திணிப்பினை அறிவித்து உள்ளது. தமிழகத்தை மீண்டும் ஒரு மொழிப் போ£ரட்டத்திற்கு ஆயத்தப்படுத்திடும் வகையில் அந்தக் கல்விக் கொள்கை வெளிவந்துள்ளது. மும்மொழித்திட்டம் சார்பாக இந்தியும், சமஸ்கிருதமும் கல்வி கற்பதில் திணிக்கப்படும் நிலைமை உருவாகி உள்ளது. இந்த கல்விக் கொள்கையின் சாராம்சமே, படிப்பறிவில்லாத மக்களை - மறுக்கப்பட்ட மக்களை, படிக்க  விடக் கூடாது என்பதே! வர்ணாசிரமம் வலியுறுத்தியதை ஆட்சிஅதிகாரத்தைக் கொண்டு நடைமுறைப்படுத்திட ஆதிக்க சக்திகள் முயற்சி செய்கின்றன.

அனைவருக்கும் கல்வி கற்பதில் உறுதியான நம்பிக்கை வைத்து ஆட்சி செய்தார் தலைவர் கலைஞர் தனது ஆட்சி காலத்தில் (2006-2011) கல்வியாளர் முத்துக்குமரன் தலைமையில் குழு அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரைப்படி சமச்சீர் கல்வியினை நடைமுறைக்கு கொண்டு வந்தவர் கலைஞர். அப்படி அனைவருக்குமான கல்வி, சமத்துவக் கல்வி என்பது இன்றைய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையினால், கல்வி கற்பதை நேரடியாக மறுக்காமல், கல்வி கற்பவர்களே கல்வி கற்பதை தொடர முடியாதநிலைமை ஏற்படும்.

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கனவைநனவாக்கியவர் கலைஞர். தமிழநாட்டில் கல்வி வளர்ச்சிக்காக பல பெரிய நிறுவனங்களை அமைத்திடப் பாடுபட்டவர் கலைஞர். அத்தகைய கலைஞரின் நினைவு நாளில் கல்வி கற்பது பெரும்பான்மை மக்களுக்கு கிடைக்காமல் தடுக்கின்ற தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து குரல் கொடுத்து, போராட இந்த சமூகநீதி நாளில் உறுதி ஏற்பபோம்.

சமூகநீதி வலுப்பட ஆட்சி அதிகாரத்தை மீட்போம்

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிட இயக்கத் தமிழர்  பேரவை

கலைஞரின் நினைவு நாளான ஆகஸ்டு 7 (2018) மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகநீதிக்கான தனது வாழ்நாள் முழவதும் பாடுபட்டவர் கலைஞர். ஒடுக்கப்பட்ட மக்களில் ஒரு பிரிவினருக்கு நாடு தழுவிய இடஒதுக்கீடு வழங்கிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அரசு ஆணை பிறப்பித்தநாள் ஆகஸ்டு 7 (1990) இந்த நாளை 'சமூகநீதி நாளாக' திராவிடர் கழகம் நம்மை, தமிழக அரசியல் கட்சிகளை ஒன்றாக, ஒரே தளத்தில் இணைத்திருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்களும், சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபொழுது கொண்டு வந்த சமூகநீதி வழிமுறைகள் தொடர வேண்டும். இன்றைக்கு ஆட்சியில் இருப்போர் அதற்கு நேரெதிரான நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். சமூகநீதியில் நம்பிக்கையுள்ளவர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நிலைகள் வர வேண்டும். வர இருக்கின்ற தேர்தலில் அத்தகைய நிலைமைகளை உருவாக்கப் பாடுபடுவோம். இது தந்தை பெரியார் மண், அண்ணல் அம்பேத்கர் மண், அத்தகைய தலைவர்கள் கட்டிக் காத்த சமூகநீதிக் கொள்கைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்திற்கான திட்டங்கள் உருவாவது, தொடர்ந்து நீடிப்பது. ஆட்சி அதிகாரம் நமது கைகளுக்கு வரும் பொழுதுதான் சாத்தியப்படும். மதச் சார்பின்மை பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது. மதவாத சிந்தனைகளுக்கு, ஆதிக்கத்திற்கு ஆதரவாக ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள். மதச் சார்பின்மை உறுதிப்பட, பெண்ணுரிமை வலுப்பட 'சமூகநீதி நாளான' இன்று - இந்த கலைஞர் நினைவுநாள் சமூகநீதிக் கருத்தரங்க நிகழ்வில் உறுதி ஏற்போம்.