ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது பெண் பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு
October 10, 2020 • Viduthalai • ஆசிரியர் அறிக்கை

* குற்றவாளியே ஒப்புக்கொண்ட பின் விடுதலை செய்தது எப்படி?

* காவல்துறையும் - நீதிமன்றமும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை நல்லதல்ல!

மேல்முறையீடு செய்து தண்டனையைப் பெற்றுத் தருக!

திண்டுக்கல்லையடுத்த குறும்பட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் சமூகத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்த வழக்கில் குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், விடுதலை செய்யப்பட்டதால் - நீதிமன்றம், காவல்துறை மீதான மக்களின் நம்பிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது - இது நல்லதல்ல - இவ்வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் 12 வயது சிறுமியை கடந்த ஆண்டு பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கி, மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 19 வயது குற்றவாளியை (கிருபானந்தன்) போதிய ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

35 சாட்சிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர்.  ஒருவர் - சம்பந்தப்பட்ட குற்றவாளி அந்தச் சிறுமியின் வீட்டிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்ததாகவும் சாட்சியாகச் சொல்லியுள்ளார்.

குற்றவாளியை கைது செய்யவே, மக்கள் போராட்டம் நடத்திய பிறகே குற்றவாளியை காவல் துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

குற்றவாளியே குற்றத்தை

ஒப்புக்கொண்டு விட்டாரே!

குற்றவாளி, தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் பிறகும் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்திருப்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரிய ஒன்று!

பாதிக்கப்பட்டு உயிர் இழந்த அந்த அபலைப் பெண் சிறுமி - முடிதிருத்தும் தொழிலாளர் சமூகத் தைச் சேர்ந்தவர் என்பதால், நீதிக்குக்கூட அவர் போன்றோரிடம் மிகவும் இளக்காரமா?

அரசு தரப்பில் வழக்கு சரியாக நடத்தப்பட வில்லையா?

நீதிப் போக்கு இப்படி பட்டாங்கமான அநீதியாக தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிக்கலாமா? என்று மனம் நொந்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடித்திருத்தும் தொழிலாளர் தோழர்கள் தங்களது சலூன்களை (முடி திருத்தகங்களை) நேற்று நாடு தழுவிய அளவில் மூடி (சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன) தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு மருத்துவ நலச் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது.

இந்த வழக்கில் மேல்முறையீடு (அப்பீல்) செய்து தவறான நீதிப் போக்கைத் தடுத்து நிறுத்தி, குற்றம் இழைத்தோரை சட்டத்தின்முன் நிறுத்தி, சரியான முறையில் தண்டனை வழங்கிட தமிழ்நாடு அரசு உடனடியாக ஆவன செய்யவேண்டும். அவசரமான அவசியம் இது!

முடிதிருத்தும் தொழிலாளர்கள் உரிமை என்ன நாதியற்றதா? அவர்களும் மனிதர்கள் அல்லவா? ஏழை பாழைகளுக்கு நீதி என்ன எட்டாக் கனியா? குமுறுகிறது நம் நெஞ்சம்.

அண்மைக் காலத்தில் நீதிப்போக்கு மேலிருந்து கீழ்வரை, மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலையிலேயே உள்ளது!

பாபர் மசூதி வழக்கில் சாட்சியங்கள்

சரியில்லை என்ற நிலை!

‘‘பாபர் மசூதியை நான்தான் இடித்தேன்'' என்று பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தி, தொலைக்காட்சிப் பேட்டிகளில் கூறியவர்கள் - ஒட்டுமொத்தமாக விடுதலை; காரணம், போதிய சாட்சியங்கள் இல்லை என்ற கூற்று!

மகாவேதனையும், வெட்கமும் இல்லையா?

அதுபோலவே, உயர்நீதிமன்றத்தில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ‘‘போதிய சாட்சியங்களை பிராசி கியூசன் தரப்பு சரியாக விடுக்காததால், குற்றவாளியை - கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்கிறோம்'' என்று கூறியது தமிழக அரசின் காவல்துறைக்குப் பெருமை அளிப்பதா?

இதுபோன்ற சமூக விரோதிகளின் கொடுமை பளிச்சிடும் பாலின வன்கொடுமை வழக்குகளில் போதிய தனி கவனத்தைக் காவல்துறை செலுத்தி யிருக்க வேண்டாமா?

நீதிப் போக்கு இப்படி வெகுமக்களின் நம்பிக் கையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்படலாமா?

நீதிமன்றங்கள்தானே ஒரே கடைசி நம் பிக்கை நம் மக்களுக்கு? அங்கேயே நீதி கிடைக்க வில்லையானால், எங்கு போய் முட்டிக் கொள்வது?

கூடுதல் கவனம் தேவை!

எனவே, தமிழ்நாடு அரசும், காவல்துறையும் இதுபோன்ற வழக்குகளில் தீவிர கூடுதல் கவனம் செலுத்தி, ஓர்ந்து கண்ணோடாது தேர்ந்து நீதி கிட்டும் வண்ணம் தங்கள் கடமையை ஆற்றிடவேண்டும்.

நீதி வழங்க உடனடியாக ஏற்பாடுகள் தேவை!

 

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

10.10.2020