ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மிரட்டுகிறதா 'விஜயபாரதம்'
August 21, 2020 • Viduthalai • தலையங்கம்

மிரட்டுகிறதா 'விஜயபாரதம்?'

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' (19.8.2020) அ.தி.மு.க. அரசை மிகவும் மிரட்டியுள்ளது. அதன் தலையங்கம் வருமாறு:

"வணக்கம் எடப்பாடியாரின் சிந்தனைக்கு...!

தி.மு.க ஹிந்து விரோதக் கட்சி என்று தெளிவாகத் தெரிகிறது. கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கயவர்களுக்கு ஆதரவு கொடுத்த தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில்தான் ஹிந்துக்கள் உள்ளனர். இது வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கவே செய்யும்.

அ.தி.மு.க.வின் தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ நெற்றியில் பளிச்சென்று விபூதி, குங்குமம் வைத்துள்ளனர். அ.தி.மு.க ஹிந்து விரோத கட்சி இல்லை.

இருந்தாலும் தேவையில்லாமல் அ.தி.மு.க அரசு பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு தடை விதித்து ஹிந்துக்களின் விரோதத்தை சம்பாதித்துள்ளது. ஒரிஸாவில் பிரம்மாண்டமான பூரி ஜெகந்தாதர் ஆலய தேரோட்டத்திற்கே நீதிமன்றம் அனுமதி அளித்து சிறப்பாக நடைபெற்றதைப் பார்த்தோம்.

அதுமட்டுமல்ல. டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்துவிட்டு விநாயகர் பூஜையை தடுத்திருப்பது ஹிந்துக்களின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் பனிமயமாதா திருவிழா நடைபெற அனுமதி கொடுத்த தமிழக அரசு விநாயகர் பூஜையை மட்டும் தடுப்பது ஏன்?

அ.தி.மு.க அவ்வளவு சுலபத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது. கடந்த தேர்தலில் 'ஜெ' இருந்தார். அவரது ஆளுமை இருக்கும்போதே தி.மு.க கூட்டணி 98 இடங்கள் வரை பிடித்தது என்பதை எடப்பாடியார் நினைவு வைத்துக் கொள்ளட்டும். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பூஜையை தடை செய்வதன் மூலம்

ஹிந்துக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்."

இதுதான் விஜயபாரதத்தின் தலையங்கம்.

திமுக ஹிந்து விரோத கட்சியாம். கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி யவர்களுக்கு திமுக ஆதரவு கொடுத்ததன் மூலம் இதனை நிரூபித்து விட்டதாம்.

(கந்தசஷ்டி கவசம், கந்தசஷ்டி கவசம் என்று தொடர்ந்து ஒப்பாரி வைக்கிறார்களே அந்தப் பாடல் வரிகளை 'விஜயபாரதமோ' 'துக்ளக்'கோ, 'தினமலரோ' ஏன் வெளியிடவில்லை? இனி மேலாவது வெளியிடுவார்களா? ஏன் தயக்கம்? அங்கேதான் இருக்கிறது இரகசியம்!)

Ôகந்தசஷ்டி கவசம் பற்றி வெளியிட்டவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லைÕ என திமுக தலைமை திட்டவட்டமாக கருத்துச் சொன்ன பிறகும், அதையே திருப்பித் திருப்பி கீறல் விழுந்த கிராமபோன் தட்டு மாதிரி கூறுவது - இந்தக் கூட்டத்தின் அறிவு நாயணத்துக்கு அசல் சான்று.

அதிமுகவின் முதல்வரோ, துணை முதல்வரோ, அமைச்சர்களோ நெற்றியில் பளிச் சென்று விபூதி, குங்குமம் வைத்துள்ளனர். அதிமுக ஹிந்து விரோத கட்சி இல்லை என்று அதிமுகவுக்கு Ôநற்சான்று' பத்திரம் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். வார இதழ் (அண்ணாவின் பெயரில் உள்ள கட்சியின் பொறுப்பாளர்கள் அண்ணாவின் 'ஆரிய மாயைÕயை ஒருமுறை படிப்பது நல்லது. நாம் ஏன் ஹிந்து இல்லை என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களும், வினாக்களும் அதில் நிரம்பி வழியும் - ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி., சங்பரிவார், விஜயபாரத வாசகர்களான பார்ப்பனர் அல்லாதார்கூட ஒரு முறை அதனைப் படிப்பது நல்லது - விளக்கம் கிடைக்கும் விவேகம் பிறக்கும்).

தேவையில்லாமல் அதிமுக அரசு பொது இடங்களில் விநாயக சதுர்த்தி பூஜைக்கு தடை விதித்து ஹிந்துக்களின் விரோதத்தைச் சம்பாதித்து கொள்கிறதாம்.

தேவையில்லாத ஒரு வேலையைச் செய்யும்போது ஓர் அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது எப்படி தேவையில்லாதது ஆகிவிடும்?

கடந்த ஆண்டில் இதற்கும் அனுமதி அளித்த அரசு  - இவ்வாண்டு ஏன் அனுமதியளிக்கவில்லை? என்ற விவரம் Ôவிஜயபாரதங்களுக்கு'த் தெரியாதா?

மக்கள் கூடுவதும், ஊர்வலம் போவதும் - இந்தக் கரோனா காலத்தில் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்ற பொது அறிவுகூட இல்லாமல் தலையங்கம் தீட்டலாமா?

பிள்ளையார் பொம்மைகளைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போனால் கரோனாவிலிருந்து, பிள்ளையார் காப்பாற்றி விடுவாரா?

ராமஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் பங்கேற்றபோது, அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவருக்குக் கரோனா தொற்றிக் கொண்டு விட்டதே - அதுவும் வயது முதிர்ந்தவருக்கு இந்தப் பரிதாப நிலை! ராம நாமம் ஜெபித்தால் கரோனா அண்டாது என்று பிஜேபி பரிவாரங்கள் சொல்லவில்லையா? ராம ஜென்ம பூமி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அறக்கட்டளையின் தலைவரையே ராமன் காப்பாற்றவில்லையே!

பூரிஜெகந்நாதர் தேரோட்டத்துக்கு அம்மாநில அரசு அனுமதி கொடுத்ததுபற்றி Ôவிஜயபாரதம்' சிலாகிக்கிறது.

அந்தத் தேரோட்டத்தைத் தொடர்ந்து, பெரும் அளவுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டதே அந்தச் செய்திகளை எல்லாம் படிக்காமல், Ôவிஜயபாரதங்கள்' கண்களை இறுக மூடிக் கொண்டு விடுமா?

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்கிறார்களே - அந்த ஏழுமலையான் கோயில் மூத்த முக்கிய அர்ச்சகரே கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவினாரே! சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதரும் கரோனாவால் உயிர் இழக்க நேர்ந்ததே - கொஞ்சம்கூட  மனிதாபிமானம் இல்லையா - ஹிந்துத்துவாவாதிகளுக்கு?

மனித உயிர் முக்கியமல்ல - மத உணர்வுதான் முக்கியம் என்று அடித்துச் சொல்லப் போகிறார்களா?

ஓர் அரசு என்பது மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு, பிரச்சினைகளை அணுகி, செயல்பட வேண்டுமே தவிர, 'விஜயபாரதம்' போன்ற மதவாதக் கூட்டத்தின் அச்சுறுத்தலுக்கு இணங்கி விடக் கூடாது.

விநாயக ஊர்வலத்தால் மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால், அதற்கு அந்தக் கூட்டம் பொறுப்பு ஏற்குமா? அப்பொழுதுகூட இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய யாகம் நடத்துங்கள்; பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்யுங்கள் என்று கூறி, அர்ச்சகர் பிழைப்புக்கும்,  சுரண்டலுக்கும்தான் வழி செய்வார்கள். தமிழ்நாடு அரசு இப்பொழுது எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மற்றவற்றிற்கெல்லாம் நீதிமன்றம் சொல்லி விட்டது என்று கூறும் கூட்டம், இந்தப் பிரச்சினையில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காதது ஏன்? ஏன்? மக்கள் உயிரோடு விளையாடிப் பார்க்க ஆசைப்பட வேண்டாம்!