ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மின்சாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, சுற்றுச் சூழல் மதிப்பீடு வரைவை ஏற்க முடியாது
August 16, 2020 • Viduthalai • தமிழகம்

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு

இரா.நல்லக்கண்ணு கண்டனம்

சென்னை,ஆக.16, சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் அலுவல கத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (15.8.2020) மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணு கூறியதாவது,

விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சாரக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை மூலம் குலக் கல்வி முறையை பாஜக புகுத்த நினைக்கிறது. இந்த திட்டத்தை ஏற்க முடியாது. இதே போல சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு எந்த வகையிலும் ஏற்புடையதாக அமையவில்லை. மக்களின் கருத்துகளை கேட்டுதான் ஒரு திட்டத்தை கொண்டுவர முடியும் என்ற ஒரு சாராம்சமே  நீக்கப்பட்டு இருப்பது எப்படி பயனுள்ளதாக இருக்கும்? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு உள்ளிட்ட மக்கள் விரோதமானவற்றை ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ளது. கடந்த 5 மாதங்களில் அரசியல் அமைப்புக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் ஆலோசனை களை பெறாமல் இவ்வாறு சட்டங்களை இயற்றவும் திருத்தவும் செய்தது மிகவும் ஆபத்தானது. மாநில சுயாட்சி, கூட்டாட்சி முறைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை முறி யடிப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

 

எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக்கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு

ப.சிதம்பரம் கருத்து

புதுடில்லி, ஆக.16 முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர்  பதிவில் குறிப்பிட்டிருப்ப தாவது, "எந்த நாட்டில் மக்கள் சுதந்திர மனிதர்களாக இருக் கிறார்களோ அந்த நாடே சுதந்திர நாடு. சுதந்திரம் அல்லது விடுதலை என்பது அச்சத்திலிருந்து விடுதலை, வறுமையிலிருந்து விடுதலை, அடக்குமுறையிலிருந்து விடுதலை. எல்லோருக்கும் என் சுதந்திர நாள் வாழ்த் துக்கள்". இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அணைகள் நிரம்புவதால்

மின் உற்பத்தி அதிகரிப்பு

சென்னை, ஆக.16 அதிக மழை பொழிவால், கோவை, நீலகிரி மாவட்டங்களில், மின் வாரியத்தின் கட்டுப் பாட்டில் உள்ள அணைகள் முழுவதுமாக நிரம்பும் நிலையை எட்டியுள்ளன.

அதனால், நீர் மின் நிலையங்களில், அதிகஅளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.நீலகிரி மாவட்டம், குந்தா; கோவை, காடம்பாறை; ஈரோடு, நெல்லையில், மின் வாரியத்திற்கு, நீர் மின் உற்பத்தி வட்டங்கள் உள்ளன. அவற்றில், 2,307 மெகா வாட் திறனில், நீர் மின் நிலையங்களும்; 38 அணைகளும் உள்ளன. மழைக் காலங்களில், அணைகளில் தண்ணீர் தேக்கப்பட்டு, நீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்.

ஒரு யூனிட் நீர் மின் உற்பத்தி செலவு சராசரியாக, 50 காசு அல்லது,- 60 காசு என்றளவில் உள்ளது. இதனால், காலை, மாலையில் ஏற்படும் உச்ச மின் தேவையை சமாளிக்க, நீர் மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்த மின்சாரம், சுற்றுச்சூழலையும் பாதிப்பதில்லை. தற்போது, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், தென்மேற்கு பருவ மழை நன்கு பெய்துள்ளது.

இதனால், மின் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள, குந்தா, காடம்பாறை வட்டங்களில், பெரும்பாலான அணைகளில், நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டி உள்ளது. மேலும், நெல்லையில் உள்ள அணைகளிலும், நீர் வரத்து அதிகம் உள்ளது. இதையடுத்து, நீர் மின் நிலையங்களில், மாலையில், 1,600 மெகா வாட் அளவிற் கும்; மற்ற சமயங்களில், 900 மெகா வாட், 1,000 மெகா வாட் அளவிற்கும் மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகிறது.