ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மாட்டுக்குத்தான் மரியாதை - மகளிர்க்கு அல்ல!
October 5, 2020 • Viduthalai • தலையங்கம்

'பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தாற்போல்' பா.ஜ.க. ஆளும் உ.பி. மாநிலத்தில் நாளும் நடந்தேறும் பெண்களுக்கு எதிரான காட்டு விலங்காண்டித்தனமான பாலியல் வன்புணர்வு களையும், படுகொலைகளையும் கண்டித்து இந்தியா முழுமையும் உள்ள மக்கள் குமுறும் எரிமலையாகக் கிளர்ந்து எழுந்துள்ளனர்.

இப்பொழுது இது ஓர் அகில இந்திய பிரச்சினை என்பதையும் கடந்து, உலகமே பரிகசிக்கும் கேவலத்தின் எல்லைக்கே சென்று விட்டது.

பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று கூறும் கீதையைத் தங்களின் தெய்வ வாக்காகக் கருதும் பா.ஜ.க. - இந்துத்துவா சக்திகள் - பெண்கள் மீதான இத்தகு கேவலமான வன் முறைகளை ஒரு பிரச்சினையாகக்கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பது வெட்கப்படத்தக்கது.

எது எதற்கெல்லாமோ குரலை ஏற்றி இறக்கி சங்கநாதம் செய்யும் பிரதமர், இந்த அதி முக்கிய பிரச்சினை குறித்து உதட்டை அசைத்தாரா? பெண் மத்திய அமைச்சர்கள் வாய் மூடி மவுனம் சாதிப்பது ஏன் - ஏன்?

இதில் என்ன வேடிக்கை என்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பா.ஜ.க.வினர் இதோபதேசம் செய்ய ஆரம்பித்துள்ள வெட்கக் கேட்டை என் சொல்ல!

தங்களது தாயும், மகளும், சகோதரிகளும் பெண்களாக இருக்கிறார்களே என்ற சிந்தனைகூட இல்லாமலா இந்து மதவெறி இவர்களின் கருத்தையும், கண்களையும் குருடாக்கும்?

உத்தரப் பிரதேச மாநிலம், பல்யா தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேந்திர சிங். ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இவரிடம் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, “இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில் பெண்களுக்கு நல்லது சொல்லி வளர்ப்பது மட்டுமே இந்த விவகாரத்தில் உதவும். உங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளுக்கு நல்லவற்றை சொல்லிக் கொடுத்து வளருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் பக்கம் கண்டனம் என்பதிலிருந்து விலகி, மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுபவர்களுக்கே போதனை சொல்வது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினையில் மேலும் எண்ணெய் ஊற்றும் யோக்கியமற்ற தனம் அல்லவா அது! இவர் மட்டுமல்ல, கோவையில் அரசு இடங்களை மடக்கி ஆசிரமம் நடத்தும் ஜக்கி வாசுதேவ் என்ற கார்ப்பரேட் சாமியார் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாலியல் வன்கொடுமை செய்திகள் வெளிவந்து, மக்கள் போராட்டம் வெடிக்கும் போது, பெண்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால் குற்றங்கள் நடக்க வாய்ப்பில்லை என்று விளக்கம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள்.. இம்முறையும் அப்படியே விளக்கம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணையே நடத்தை கெட்டவராக மாற்றும் தந்திரத்தை கையாண்டு வருகின்றனர்

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், 'எங்கள் வீட்டுக் காளை பொல்லாதது - உங்கள் வீட்டுக் கிடேரியைக் கொஞ்சம் அடக்கி வை!' என்பார்கள்.  அந்தப் போக்கிரித்தன பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

இதில் என்ன கொடுமை என்றால் பிஜேபியில் உள்ள பெண் கள்கூட, பெண்கள்மீதான பாதிப்பைப்பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான்.

காரணம் அவர்கள் மூளையில் குடியேறிய இந்து மதத்தின் பெண்ணடிமைக் கொள்கையும் போக்கும்தான்.

உ.பி.யில் பிரச்சினை முற்றியவுடன் சி.பி.அய்.க்கு வழக்கை மாற்றியுள்ளதாக ஒரு நாடகம்.

பிஜேபி மத்தியில் அதிகாரத்துக்கு வந்தபிறகு தன்னாட்சி அதிகாரம் கொண்ட நிறுவனங்கள் எல்லாம் காயடிக்கப்பட்டு விட்டன. சி.பி.அய். மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து வருகிறது என்பது கவலைக்குரியது. பாபர் மசூதி வழக்கில் சி.பி.அய். நடந்து கொண்டவிதம்பற்றி மேனாள் சி.பி.அய். அதிகாரி ரகோத்தமன் தன் கடுமையான அதிருப்தியையும் தெரிவித்துள்ளார்.

ஆட்சிமுறை - சட்ட அமல் என்பது எல்லாம் இந்தியாவில் ஒற்றை மனிதரின் கட்டை விரலுக்கும் கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.

தலையே இப்படி என்றால் மாநிலங்களின் அதிகாரப் பீடங்களில் இருக்கும் பி.ஜே.பி. தொண்டரடிப் பொடியாழ்வார்கள் எல்லாம் தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறு அடிபாயும் வேகத்தில், சட்டத்தின் போக்கை தேவைக்கு ஏற்ப வளைத்து விளையாடும் விபரீத போக்கை மேற்கொண்டுள்ளனர்.

உ.பி.முதல்வர் சாமியார் ஆதித்யநாத் தெரிவித்த ஒரு கருத்தை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது மிகவும் அவசியம்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற உன்னாவ் பாலியல் வன் கொடுமை குறித்து செய்தியாளர்கள் ஒரு வினாவைத் தொடுத்தனர்.

'பசுவுக்கு இவ்வளவு முக்கியத்துவத்தை உங்கள் ஆட்சியில் கொடுக்கிறீர்களே, பெண்கள் அதிகமாகப் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்படுகிறார்களே, அதுபற்றி அக்கறையில்லையா' என்பது செய்தியாளர்களின் கேள்வி. அதற்கு முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெண்களைப் பாதுகாக்க நிர்வாக வீடு, காவல்துறை இருக்கிறது; ஆனால் பசுக்களைப் பாதுகாக்க யார் இருக்கிறார்கள்?" என்பதுதான் முதல் அமைச்சர் சாமியார் உதிர்த்த 'முத்துக்கள்'!

மனிதனைவிட மாடுதான் இவர்களுக்கு முக்கியம். இதில்கூட முதல் அமைச்சர் சொல்லுவது உண்மையில்லையே! பெண்களைப் பாதுகாக்க காவல்துறை இருக்கிறது என்கிறாரே அதாவது உண்மையா?

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணை அப்பெண்ணின் பெற்றோர்களையே கூடப் பார்க்கவிடாமல் இரவோடு இரவாக வயல்வெளியில் கொண்டு சென்று எரித்தது யார்? பெண்களுக்குப் பாதுகாப்பு என்று நற்சான்று கொடுக்கும் அந்தக் காவல்துறைதானே!

ஜனநாயக நாட்டில் தான் நாம் வாழ்கிறோமா? உடலைக் கிள்ளிப்பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. என்று தொலையும் இந்தப் பாசிச பா.ஜ.க. என்ற எண்ணமும், மக்கள் உணர்வும் நாளும் வளர்ந்துதான் வருகிறது. அந்த நாளை எதிர்பார்ப்போம்!