ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு சமூகத்தில் முன்னேறவேண்டும் என்பதற்காக அபராதம் விதிப்பதா
July 14, 2020 • Viduthalai • மற்றவை

மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு சமூகத்தில் முன்னேறவேண்டும் என்பதற்காக அபராதம் விதிப்பதா?

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியும், சட்ட நிபுணருமான டாக்டர் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் L.L.D. அவர்கள் ‘Penalty for Progress’ என்ற தலைப்பில்,All India Quota in Medical Colleges என்ற புதிய ஆங்கில நூல் ஒன்றை எழுதியுள்ளார்.  அந்நூலில் உள்ள அறிமுக உரையின் தமிழாக்கம் வருமாறு:

நீதிபதி ஏ.கே. ராஜன்

பெரும்பாலான 90 விழுக்காடு உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெருவிருப்பம் தாங்கள் மருத்துவராக வேண்டும் என்பதுதான். அத்தகைய பெரு விருப்பத்திற்கான காரணம்  சமூகத்தின் மரியாதையையும், அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் மருத்துவர்கள் பெறுகிறார்கள் என்பதுதான். அது மட்டுமன்றி, தங்களைச் சுற்றி வாழும்  தங்களின் அன்பிற்கும் நெருக்கத்திற்கும் உரிய  மக்கள் உள் ளிட்ட அனைத்து மக்களுக்கும் அவர்களது தேவைக்குத் தகுந்த மருத்துவச் சேவையை அளிப்பதற்கான வாய்ப்பையும் அது அவர்களுக்கு அளிக்கிறது. நகர்ப் புறங்களில் வாழும் மக்களுக்குக் கிடைப்பது போன்ற, தேவையான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு  கிராமப்புறப் பகுதிக ளிலும், மூலை முடுக்குகளிலும் வாழும் மக்களால் இயலுவதில்லை. 1950களின் தொடக்கத்திலும் கூட சென்னையில் இருந்த மருத்துவர்களில் பெரும் பாலானோர் ஆர்.எம்.பி., எல்.எம்.பி. போன்ற பட்டய மருத்துவப் படிப்பு படித்தவர்களாகத்தான் இருந்தனர்.

எம்.பி.,பி.எஸ். மருத்துவப் பட்டதாரிகள் மிக அரிதாகவே இருந்தனர். 1952 ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த சென்னை மாகாணத்தில் தற்போதைய தமிழ்நாட்டுப் பகுதியில் சென்னையில் மட்டுமே இரண்டு மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. அவை சென்னை மருத்துவக் கல்லூரியும்,  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியுமே. அதற்குப் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் கூடுதலான மருத்துவக் கல்லூரி களின் தேவையை உணர்ந்து மாகாணம் முழுவதி லும் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கத் தொடங்கினர். அந்த வரிசையில் முதலில் 1954இல் தொடங்கப்பட்டது மதுரை மருத்துவக் கல்லூரி. அதனை அடுத்து 1958 இல் தொடங்கப்பட்டது தஞ்சாவூர்  மருத்துவக் கல்லூரி.

அதனையடுத்து கீழ்ப்பாக்கத்தில் இருந்த இந்திய மருந்தியல் கல்லூரி 1960ஆம் ஆண்டில் மருத் துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. அதையடுத்து 1965 இல் திருநெல்வேலியிலும்,  1966 இல் கோயம் புத்தூரிலும், 1997 இல் திருச்சியிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 2005 ஆம் ஆண் டில் வேலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப் பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு தீவிரமான முயற் சிகளை தொடர்ந்து மேற்கொண்டு பல மருத்துவக் கல்லூரி களைத் தொடங்கியது. குறைந்தது ஒவ் வொரு மாவட்டத்திலும் மருத்துவக் கல்லூரியையாவது ஏற்படுத்த வேண்டும் என்பதே அரசின் கொள்கை யாக இருந்ததாகத் தோன்றுகிறது.

புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கியதுடன் நின்றுவிடாமல், பேருந்து வசதிகளோ நல்ல சாலை வசதிகளோ அற்ற மூலை முடுக்குப் பகுதிகளில் எல்லாம்  மாநிலம் முழுவதிலும் எண்ணற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களை தமிழக அரசு துவக்கியது. இதனால் மகப்பேறு காலத்திற்கு முன்னதாகவும், மகப்பேறு காலத்திலும்  கருவுற்றிருந்த பெண்கள்  அதிக அளவில் இறந்து போவதும், ஊட்டச் சத்து இல்லாத காரணத்தால், மகப்பேறு  காலத்தில் தாய், சேய்கள் அதிக அளவில் இறந்து போவதும் பெரு மளவில் தடுக்கப்பட்டுள்ளன. அதனாலேயே முது கலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க் கைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது, இத்தகைய பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் ஏழைகளுக்கு மருத்துவச் சேவை செய்தவர்களுக்கு ஊக்கப் பரிசாக நேர்காணலுக்கான மதிப் பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டன.

அகில இந்திய இட ஒதுக்கீடு என்ற நடைமுறையினால், கிராமப்புற மக்கள் இதுவரை அனுபவித்து வந்த இது போன்ற வசதிகளை நிரந்தரமாகவே இழந்து விட நேரிடும். இவ்வாறு கிராமப்புறப் பகுதி களில் வாழும் மக்கள் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்ததைப் போன்றே, மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்க இயலாத காலத்திற்கே செல்ல நேரிடும். ஆனால் மற்ற சில மாநிலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் துவங்குவதற்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டது போன்ற முயற்சிகளை மேற்கொள்ளாததால், அந்த மாநிலங்களில் மிகச் சில மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. வடஇந்தியாவில் தாங்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக் காத மாணவர்கள் நீதிமன்றங்களை அணுகத் தொடங்கினர்.  1983 இல் டாக்டர் பிரதீப் ஜெயின் என்பவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் அரச மைப்பு சட்ட 32 ஆவது பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தார்.  இவ்வளவுக்கும் அந்த ரிட் மனுவின் கோரிக்கை எந்த ஒரு அடிப்படை உரிமையையும் கோருவதாக இருக்கவில்லை. ஆனலும் உச்ச நீதி மன்றம் அந்த மனுவை ஏற்றுக் கொண்டது மட்டு மன்றி,  அந்த மனுவிற்கு பதிலளிக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் தாக்கீதுகளையும் பிறப்பித்தது.

வழக்கின் முடிவில் மருத்துவக் கல்லூரிகளில் தேவைக்கு ஏற்ப போதுமான இடங்கள் இல்லை என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்தது. நாடு சுதந் திரம் பெற்று பல பத்தாண்டு காலம் கடந்த பிறகும், தங்கள் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரி களைத் துவங்குவதற்கு எந்தவித நடவடிக்கைக ளையும் மேற்கொள்ளாத  மாநில அரசுகள் அவர் களுடைய மாநில மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வழங்குவதற்குத் தேவையான  போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொள் ளும்படி அந்த மாநிலங்களுக்கு அறிவுரைகள் வழங் குவதற்கு மாறாக, விந்தையான ஓர் ஆணையை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. தங்கள் மாநிலங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க் கைக்காக இருக்கும் இடங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களை மாநில அரசுகள் மத்திய அரசின் தொகுப்புக்கு வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு தொகுப்பின் மூலம் பெறப்பட்ட இடங்களை மத்திய அரசு ஒதுக்கீடு முறையில் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த வழக்கில் தொடர்பே இல்லாத தனிப்பட்டவர்களிட மிருந்து பெறப்பட்ட இந்த தீர்ப்பு பற்றி விளக்கம் கேட்கும் மனுக்களை 1984 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டு அவ்வப்போது விளக்கங்களை அளித்து வந்துள்ளது. இந்த நடைமுறையில், மத்திய அரசுத் தொகுப்புக்கு மாநில அரசுகள்  வழங்க வேண்டிய முதுநிலை மருத்துவக் கல்விக்கான இடங்களின் எண்ணிக்கை 25 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டது.

இந்த ஆணைகள் அனைத்தும் அரசமைப்புச் சட்ட 142 ஆவது பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதி காரத்தைப் பயன்படுத்தி பிறப்பிக்கப்பட்டவையே ஆகும். இந்த 142 ஆவது பிரிவின் கீழ் பிறப்பிக்கப் படும் எந்த ஓர் ஆணையும், தீர்ப்பும் அந்த

பொருள் பற்றிய சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படும் வரை தற்காலிகமானதாக இருப் பவையே ஆகும். இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தைத் திருத்தி மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை  நாடாளுமன்றம் நிர்ணயம் செய்தது. அதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஒன்றும் நாடாளுமன்றத் தால் நிறைவேற்றப் பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைப் பணிகளை மேற்கொள்வதற்கு நான்கு குழுக்களை இந்த ஆணையச் சட்டம் உருவாக்கியது. அதனால் மத்தியத் தொகுப்பிற்கு  மருத்துவக் கல்லூரி மாண வர் இடங்களை மாநிலங்கள் வழங்க வேண்டியதன் பின்னணியில் உள்ள நியாயத் தன்மையும்,  அவற்றை மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீடாக வழங்க வேண்டியதன் தேவையும் முடிவுக்கு வந்துவிடுகிறது.

ஆனால்,  மத்திய அரசு இந்த மத்தியத் தொகுப்பு நடைமுறையைத் தொடர்ந்து கடைபிடித்து, மாநிலங் களில் இருந்து சரண் செய்யப்படும் மருத்துவக் கல்லூரி மாணவர் இடங்களைப் பெற்று வருகிறது. இந்த மத்தியத் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு இடங்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும்போது, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவு மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது. அதே போல பொருளாதார நிலையில் பின்தங்கி யுள்ள உயர்ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக் கீட்டு நடைமுறைக்கும் வகை செய்யப் பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக் களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் கொள்கை மத்திய அரசால் கடைப்பிடித்து வரப்பட்டபோதிலும், மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும் இடங் களில் இதர பிற் படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யப்பட்டிருக் கவில்லை. இதன் மூலம் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற  தங்களது உரிமை பறிக்கப்பட்டது பற்றி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் அரச மைப்புச் சட்ட 32 ஆவது பிரிவின்கீழ் உச்சநீதிமன் றத்தை அணு கினர்.

இட ஒதுக்கீடு என்பது ஓர் அடிப்படை உரிமை அல்ல என்று கூறி அவர்களது மனுக்களை நிரா கரித்த உச்சநீதிமன்ற அமர்வு இது தொடர்பாக, அர சமைப்புச் சட்ட 226 ஆவது பிரிவின்படி சம்பந்தப் பட்ட உயர்நீதிமன்றங்களை அணுகும்படி மனுதாரர் களுக்கு அறிவுரை வழங்கி, தனது பொறுப்பை முடித் துக் கொண்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீடு என்னும் கோட்பாட்டைப் பற்றி வெகு சிலரே அறிந்துள்ளனர். எனவே அகில இந்திய அளவிலான தொகுப்பில் இருந்து மாநிலங் களுக்கு ஒதுக்கீடு செய்யும் கோட்பாட்டைப் பற்றி யும் அதன் வரலாறு பற்றியும் எளிதில் புரிந்து கொள் வதற்காக இந்தக் கையேடு எழுதி வெளியிடப் பட்டுள்ளது. அவற்றைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளவும் குறிப்பு எடுக்கவும்,  சம்பந்தப்பட்ட அரசமைப்புச் சட்டப் பிரிவுகளும், நீதிமன்றத் தீர்ப்பு களும் இணைப்பில் அளிக்கப்பட்டுள்ளன. நுணுக்க மாக ஆய்ந்து, ஆழமாகப் பகுத்தாய்வு செய்து பார்த்தால், இந்த அகில இந்திய ஒதுக்கீடு என்பதே அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றே தோன்றுகிறது. குறிப்பாக அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ ஆணையம் ஆகியவை உருவாக்கப்பட்ட பிறகு இந்த மத்திய அரசுக்கான அகில இந்தியத் தொகுப்பு என்பதே சட்டப்படி இல்லாததாக ஆகிவிடுகிறது.

மேலும் அரசமைப்பு சட்ட 142 (1) ஆவது பிரிவின் கீழ் ஆணை பிறப்பித்து தீர்ப்பளிக்கும்போது, அரச மைப்பு சட்டத்தின் எந்த ஒரு பிரிவையும் மீறும் எந்தவோர் ஆணையையும் உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்க இயலாது. இந்திய மக்கள் உயர் அமைப்பு நீதிமன்றங்கள் தவறே செய்யாதவை என்று கருதி, உச்ச நீதிமன்றத்தின் மீது மிகப் பெரிய மரியாதையை வைத்துள்ளனர். மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய தொகுப்பு ஒதுக்கீட்டு நடைமுறை அரசமைப்புச் சட்டப்படி செல்லத் தக்கதா என்பதைப் பற்றியும், அதன் பின்விளைவுகள் பற்றியும் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கும் காவலர்களான கல்வியாளர்களும், வழக்கறிஞர் களும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய தங்களது கடமையில் இருந்து தவறிவிட்டனர். 1967 ஆம் ஆண்டில் வெளியான கோலக்நாத் வழக்கின் தீர்ப்பை எதிர்த்து பொங்கி எழுந்த, விழிப்புணர்வு கொண்டிருந்த சமூகத்தை 1971 ஆம் ஆண்டில் வெளியான  கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பிற் குப் பிறகு பார்க்க இயலவில்லை. இதற்கான கார ணங்கள் எவை என்பதும் தெரியவில்லை.

இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகும். இந்திய அரசமைப்பு சட்டம் இயல்பிலேயே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையிலானது. கூட்டாட்சித் தத்துவ நடைமுறையை, மாறாமல் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு,  இந்திய அரசமைப் புச் சட்டத்தை அதன் எழுத்து மற்றும் உணர்வு பூர்வமாக  முழுமையாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே வழியாகும்.

இந்த நூலை வெளியிடுவதன் நோக்கமே சட்டத் தின் ஆட்சியைப் பற்றி மக்களைக் கற்றறியச் செய்வ தும் அவர்களுக்கு நினைவுபடுத்துவதுமேயாகும்.

சென்னை      நீதிபதி ஏ.கே. ராஜன்

04-07-2020