ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மத்தியில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு பா.ஜ.க. அரசு இந்தியைத் திணிப்பதா
August 23, 2020 • Viduthalai • தமிழகம்

மத்தியில் உள்ள அதிகாரிகளைக் கொண்டு பா.ஜ.க. அரசு இந்தியைத் திணிப்பதா?

தலைவர்கள் கண்டனம்

தளபதி மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர்

சென்னை, ஆக. 23-  தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்காக நடை பெற்ற ‘ஆன்லைன்’ பயிற்சி யில் பங்கேற்ற 37 மருத்து வர்களிடம் “இந்தி தெரிய வில்லை என்றால் ஆன்லைன் வகுப்பிலிருந்து வெளியே றுங்கள்'' என்று மத்திய பா.ஜ.க. அரசின் 'ஆயுஷ்' செயலாளர் திரு. ராஜேஷ் கோட்சே என்பவர் ஆணவத்துடனும், இந்தி மொழி வெறியுடனும், மிரட்டல் விடுத் திருக்கும் அட்டூழியத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓர் அரசு அதிகாரி - அதுவும் மத்திய அரசின் செயலாளராக உள்ள ஓர் உயரதிகாரி,  இப்படி அநாகரிகமாகவும் பண்பாடற்ற முறை யிலும் 'மொழிவெறி' தலைக்கேறி, பேயாட்டம்  போட்டி ருப்பது  வெட்கக்கேடானது.

இவருக்கு ஆயுஷ் துறை செயலாளராக இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்புக் கொடுத்திருப்பது, ஆவே சத்துடன் இந்திப் பிரச்சாரம் செய்வதற்கும் நம் அன்னைத் தமிழ் மொழியை அவமதிப்பதற்குமா என்ற கோபம் கலந்த கேள்வி தமிழக மக்கள் மனதில் இயல்பாகவே எழுந்துள்ளது.

இயற்கை மருத்துவம் குறித்தும் ஆன்லைன் பயிற்சி என்று அறிவித்து விட்டு - யோகாவைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்துள்ளார் அந்த அரசு செயலாளர். அதைச் சுட்டிக் காட்டி ஆங்கிலத்தில் பயிற்சி கொடுங் கள் என்று கூறிய தமிழகத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர்கள் மீது எரிந்து விழுந்துள்ள ஆயுஷ் செயலா ளர் - தன்னை எதிர்த்துப் பேசிய தமி ழக இயற்கை மருத்துவர்களின் பெயர்களைக் கேட்டு அச்சுறுத்தியிருப்பது -- அவர் வகிக்கும் உயர்ந்த பதவிக் கும், முதுநிலைக்கும் சிறிதும் பொருத்தமானதல்ல!

ஓர் உயரதிகாரிக்கு இலக்கணமான கண்ணியத் திற்கும், நியாய உணர் வுக்கும், சமநிலை மனப்பான் மைக்கும், தனக்கும் தொடர்பே இல்லை என் றெண்ணி அவர் எல்லை மீறி நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது.

“2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு வரைவு விதி” தொடர்பான வழக்கில், “மத்திய அரசின் அறிவிப்புகளை அரசியல் சட்டத்தில் உள்ள 22 மொழி களிலும் ஏன் வெளியிடக் கூடாது? நவீனத் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள இன்றைய நிலையில் அதில் உங்களுக்கு என்ன சிரமம்? அலுவல் மொழிச் சட்டத்தை அதற்கு ஏற்றாற் போல் திருத்துங்கள்” என்று மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றமே சமீபத்தில் அறிவுரை வழங் கியிருக்கிறது . மாநில மொழிகளில் - குறிப்பாக அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள அலுவல் மொழிகளில், உச்சநீதிமன்றத்திற்கு உள்ள அக்கறை - மத்திய பா.ஜ.க. அரசுக்கு இல்லாமல் போனது மிகுந்த வருத்தத்திற்குரியது.

மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு இந்தித் திணிப்பு ஒன்றே தங்களின் ‘முதல் அஜெண்டா’ என்ற அடிப் படையில் தொடர்ந்து செயல்பட்டு, அனைத்து மாநில மொழிகளுக்கும் - குறிப்பாகத் தமிழ்ச் செம்மொழிக்குக் கிடைக்க வேண்டிய பெருமையைத் திட்டமிட்டு சீர்குலைத்து வருகிறது.

ஏற்கெனவே சென்னை விமான நிலையத்தில் “இந்தி தெரிந்தால்தான் இந்தியர்” என்பது போல் கழக நாடாளுமன்றக் குழு துணைத் தலை வரும், கழக மகளிரணிச் செயலா ளருமான தங்கை கனிமொழி அவர்களிடம் வீண் வம்பு செய்த அதிகாரிமீது அப்போதே மத்திய பா.ஜ.க. அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந் தால் - நேற்றைக்கு ஆயுஷ் செயலாளர் திரு. ராஜேஷ் கோட்சே இப்படி மொழி வெறி பிடித்துப் பேசியிருக்க மாட்டார்.

ஒவ்வொரு அதிகாரியாக இப்படிப் பேசுவதை மத்திய அரசு அனுமதித்து வேடிக்கை பார்ப்பது - ‘மத்தியில் உள்ள அதிகாரிகளை வைத்து இந்தியைத் திணிப்பதுதான் எங்களின் திட்டம்’ என்ற பா.ஜ.க. அரசின் எண்ணத்தை வெளிப்படுத்து கிறது. ‘இந்தியை யார் மீதும் திணிக்க மாட்டோம்’ என்ற தேசிய கல்விக் கொள்கை அறிவிப்பில் சொன்னதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ஆகவே, தமிழக யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களிடம் அநாக ரிகமாக நடந்து கொண்ட ஆயுஷ் துறை செயலாளர் திரு. ராஜேஷ் கோட்சே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இனி இப்படி ஒரு நிகழ்வு எங்கும் நேர்ந்து விடாமல் உறுதி செய்திட வேண்டும்; என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர் களைக் கேட்டுக் கொள்கிறேன்.

டில்லியில் நடைபெறும் கூட்டங்கள், இதுபோன்ற ‘ஆன்லைன்’ பயிற்சிகள் போன்றவற்றில் தமிழகத்திலிருந்து பங்கேற்போரை அவமதிக் கும் இத்தகைய  தரக்குறைவான போக்கு கைவிடப்படவேண்டும் என் றும் - அதுபோன்ற பயிற்சிகள், கூட்டங்கள் அனைத் தும் இந்தி பேசாத மாநில மக்களின் இணைப்பு மொழி யாக இருக்கும் ஆங்கிலத்தில்தான் நடைபெற வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் திரு. பழனிசாமி உடனடியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

 

வைகோ எம்.பி.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் 

ம.தி.மு.க. பொதுச் செயலாளர்வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆன்லைன் பயிற்சி வகுப் பில் கலந்துகொண்ட தமிழக யோகா மருத்துவர் களை “இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள். மேலும் கேள்வி கேட்டால் தலைமைச் செயலாளர் மூலம் நடவடிக்கை எடுக் கப்படும்'' எனத் திமிரோ டும், மமதையோடும், ஆண வத்தோடும் மத்திய ஆயுஷ் அமைச் சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே மிரட்டி யுள்ளார். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் யோகாவைப் பரப்புவதற்காக, யோகா படிப்பு முடித்த 1.25 இலட்சம் பேரை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நியமிக்கத் திட்டமிட்டு உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து 38 மருத்துவர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. பயிற்சி வகுப்புகளின் கடைசி நாளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் ராஜேஷ் கோட்சே கலந்துகொண்டு இந்தியில் பேசியுள்ளார். அப்பொழுது தமிழகத்திலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், “எங் களுக்கு இந்தி தெரியாது. நீங்கள் பேசுவது புரிய வில்லை. யோகாமற்றும் இயற்கை மருத்துவமுறை என்று இருக்கும்போது, நீங்கள் யோகாவை மட்டும் கூறுகிறீர்கள். இயற்கை மருத்துவத்தை எதிர்க் கிறீர்களா?''  என்று ஆன்லைனில் பதிவிட்டுள்ளனர். “ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கூறியுள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த ராஜேஷ் கோட்சே, “எனக்கு ஆங்கிலம் தெரியாது. இந்தி தெரியவில்லை என் றால், ஆன்லைன் வகுப்பிலிருந்து விலகுங்கள்” என்று கோபமாகப் பேசியதோடு, பயிற்சி வகுப்பையே உடனடியாக இரத்து செய்து, இணைப்பைத் துண்டித்து விட்டார்.

தனக்கு எதிராகப் பேசியவர்கள் பெயர் பட்டி யலைத் தயார் செய்து, “மாநிலத் தலைமைச் செய லாளர்களுக்கு அனுப்பி வைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்'' என்று மிரட் டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் உள்ளவர்களுக்கு இவர் வேண்டிவர் என்பதால், ஓய்வு பெற்றதற்குப் பின்னரும் பணி நீட்டிப்புச் செய்யப்பட்டிருக் கிறார்.

மத்திய ஆயுஷ் அமைச்சகத் தில் இருந்த ஒரு சித்த மருத்துவ ஆலோசகர் பதவியையும் இப்போது நீக்கிவிட்டார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக 75 பாரம்பரிய சித்த மருத்துவ மூல நூல்களை அரசு மருந்துச் சட்ட நூலில் இணைக்கப் போராடி வருகின்றது. இன்று வரை நடக்கவில்லை.

உலகம் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோக்கிப் பயணிக்கிறது. இந்தியாவின் வலிமையே அதன் பன்முகத் தன்மையும், ஒருமைப்பாடுத் தான். மரபு மருத்துவத் துறை யில் சித்தா, ஆயுர்வேதம், யோகா, யுனானி, ஓமியோபதி என அனைத்திலும் தனித்து வங்களும், பயனும் ஏராள மாய் உள்ளன. இவை ஒருங் கிணைந்து பணியாற்றினால் மிகுந்த பயன் கிடைக்கும். ஆனால் பாரபட்சமான முறையில் சித்தா போன்ற துறைகளை ஓரவஞ்சனை யாய் நடத்துவதும் மிகவும் தவறான போக்காகும்.

இந்த அமைச்சகத்தின் பெயரே ஆயுஷ் என்று வைத்திருக்கிறார்கள். அதற்கு பொருள் தரும் ஆங்கில வார்த்தை கிடையாது. மத்திய அரசால் இந்தித் திணிப்பு உச்சகட்டத்தில் நடத்தப்படுகிறது என்ப தற்கு நடந்த சம்ப வம் சரியான சாட்சியமாகும்.

மத்திய அரசு இத்தகைய போக்கைக் கைவிட வேண்டும். கோட்சேயை அந்தப் பதவிலிருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

ஆயுஷ் அமைச்சகத்தின் இணைய வழி கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து 38 அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் தங்களது கருத்துகளை ஆங்கிலத்தில் தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டி ருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்றவர்கள் அனைவரும் ஆங்கில மொழி அறிந்திருந்தாலும் இந்தியில் மட்டும்தான் பேசுவோம் என்று பிடிவாதம் காட்டியது அரசமைப்பு சட்டத் திற்கு எதிரானது.

இதற்கு தீர்வு காணுகின்ற வகையில் இத்தகைய மத்திய அரசின் கூட்டங்களில் இந்தியும், ஆங்கிலமும் கட்டாயம் பயன்படுத்துகிற வகையில் உரிய ஆணையை பிறப்பிப்பதற்கு பிரதமர் மோடி உட னடியாக முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்படி முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனில், இந்தி பேசாத மக்களுக்கு நேரு வழங்கிய உறுதி மொழியை பாதுகாக்கிற வகையில் தீவிரமான போராட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகின்றேன்.

 

இரா.முத்தரசன்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசின் ஆயுஷ் துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தொடர்பான இணைய தள  பயிற்சி வகுப்பு களை நடத்தத் தொடங்கியுள் ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட தமிழக மருத்துவர்கள், பயிற்சி குறித்த விபரங்களையும், பயிற்சியினையும் இந்தி மொழியில் மட்டுமே நடத்துவது சரி யல்ல. இந்தி பேசாத மாநிலங்களை சார்ந்த எங்களைப் போன்ற வர்களுக்கு அதனை புரிந்து கொள்ள இயலாது என்று கூறியுள்ளனர். இதனைக் கேட்டவுடன், ஆயுஷ்துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே என்ற இந்தி வெறி அதிகாரி கொந்தளித்து. இந்தி தெரியாதவர்கள் எல்லாம் வகுப்பில் இருந்து வெளி யேறலாம் எனக் கட்டளையிட்டுள்ளார். யாரெல்லாம் அப்படிச் சொன்னவர்கள் என்ற பட்டியலை கொடுங் கள், அவர்கள் மீது  தலைமைச் செயலாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியுள்ளார்.

இந்தி மொழியை தீவிரமாக திணிப்பதற்காகவே, ராஜேஷ் கோட்சே போன்ற இந்தி வெறியர்களுக்கு, ஓய்வு வயது தாண்டியும் மத்திய அரசுபணி நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

ஆயுஷ் துறையின் செயலா ளரின் தேச ஒற்றுமையை சீர் குலைக்கும், தமிழ் மொழியை அவமதிக்கும் நட வடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில செயற் குழு வன்மையாகக் கண்டிக் கிறது.

இது போன்ற மொழி வெறியர்களின் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை மத்திய அரசு  நடத்தும் பயிற்சி வகுப்புக ளிலும், மத்திய அரசு நடத்தும் கூட்டங்களிலும் தமிழக அதிகாரிகள் பங்கேற்க மாட் டார்கள் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன்  வெளியிட்ட அறிக்கை:

“புதுடில்லியில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் நடை பெற்ற பயிற்சி வகுப்பில் தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவர்கள் பங்கேற்றுள் ளனர். ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், ஓமியோபதி, யுனானி உட்பட அலோபதி அல்லாத மருத்துவர்கள் 37 பேர் இந்தி பேசாத மாநிலங்களி லிருந்து பங்கேற்றுள்ளனர். ஆனால், இந்த முகாமில் மொத்த பயிற்சியும் இந்தி மொழியிலேயே நடை பெற்றுள்ளது.

பயிற்சி முகாமில் பங்கேற்ற இந்தி பேசும் மாநிலங்கள் அல்லாத மருத்துவர்கள் கேள்வி யெழுப்பியபோது, ஆயுஷ் அமைச்சகத்தின் செய லாளர் வைத்தியா ராஜேஷ் கொடேசா ‘எனக்கு ஆங்கிலம் சரளமாக பேசவராது, நான் இந்தியில்தான் பேசுவேன். ஆங்கிலம்தான் வேண்டுமென விரும்பு பவர்கள் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறலாம்’ என்று ஆணவமாக கூறியுள்ளார். ஆயுஷ் அமைச்சக செயலாளரின் இந்தப் போக்கு வன்மையாக கண்டிக் கத்தக்கது.

இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சி வகுப்பை நடத்தியிருந்தால் இந்தி தெரியாத மருத்துவர்களுக்கு வசதியாக இருந்திருக்கும். ஆனால், ஒரு மொழியில் மட்டுமே பயிற்சி நடத்துவோம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என்று கூறுவது பயிற்சியின் நோக்கத்தையே சிதைப்பதாகும்.

எனவே, மத்திய அரசு இந்தப் போக்கைக் கைவிட்டு இனிவரும் காலங்களில் அகில இந்திய அளவிலான பயிற்சி வகுப்புகளில் இந்தி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் பயிற்சியளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். தமிழகம் உள்ளிட்ட பிற மாநில மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறோம்''

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.