ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மத்தியப் பிரதேசமும் - தமிழ்நாடும்!
August 24, 2020 • Viduthalai • தலையங்கம்

மத்தியப் பிரதேசத்தில் 10, 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத காரணத்தால் பள்ளிக் கல்வியில் இடை நிறுத்தல் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்கானது இது - வரவேற்கத்தக்கதே!

ஷோபாராம் - பழங்குடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி. அவருடைய மகன் 10ஆம் வகுப்பு மறுதேர்வு எழுத வேண்டிய நிலை; தேர்வு மய்யங்களோ மாவட்டத் தலைநகரங்களில் மட்டும்தான். பேருந்து வசதியும் கிடையாது. அதனால், பழங்குடியைச் சேர்ந்த ஷோபாராம் என்னும் கூலி தொழிலாளி என்ன செய்தார்?

பையனை சைக்கிளில் உட்கார வைத்து மாவட்டத் தலைநகரத்தில் உள்ள தேர்வு மய்யத்துக்கு அழைத்துச் சென்றார். வழியில் சமைத்துச் சாப்பிட தேவையான உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றார். 106 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு ஒரு வழியாக தேர்வு மய்யத்திற்குக் கொண்டு சேர்த்தார்.

15 ஆண்டுக் காலத்திற்குமேல் பிஜேபி ஆட்சி செய்யும் ஒரு மாநிலத்தின் நிலைப்பாடு இதுதான். (ஆட்சிக்கவிழ்ப்பில் மட்டும் குறைச்சலில்லை)

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பச் சூழலும் இந்த நிலைதான். 106 கிலோ மீட்டர் சைக்கிள் கேரியரில் உட்கார்ந்து  பயணம் செய்யும் மாணவனின் உடல் நிலை - மனோ நிலை எந்த அளவு பாதிக்கப்பட்டிருக்கும் என்பது மிகவும் கவலையுடன் கவனிக்கத்தக்கதாகும். (எத்தனை நாட்கள் தேர்வோ, அத்தனை நாட்களும் இத்தகைய இடர்ப்பாடுதான்)

இந்தச் சூழ்நிலையில் கல்வி பயிலும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கூலித் தொழிலாளியின் மகன் தேர்வில் பெறும் மதிப்பெண்களும், பல தலைமுறைகளாகக் கல்வி பயின்ற வசதி வாய்ப்புள்ள குடும்பத்தைச் சார்ந்த உயர் தட்டு மாணவனின்  மதிப்பெண்களும் சம பார்வையில், சம நிலையில் வைத்துப் பார்ப்பதைவிட கேடுகெட்ட குரூரப் புத்தி வேறு ஒன்று இருக்க முடியுமா?

ஆம், சமநிலையில்தான் பார்ப்போம் என்று ஆணவ மாகப் பேசுகிறவர்களின் உள்நோக்கம் என்ன? எந்த வகையிலும் 'கீழே கிடந்தவன் மேலே' தட்டுத் தடுமாறிக் கூட மேலே வந்துவிடக் கூடாது என்னும் ஜாதிவெறித் திமிர்த்தனமும் வன்மமும் இதில் இருக்கிறதா - இல்லையா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முன்னுரையில் நீதி என்று (Justice) தொடரும் பாராவில் முதல் இடத்தில் இருப்பது சமூகநீதி (Social Justice) என்பதாகும். மேற்கண்ட நிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அரசமைப்புக் சட்டத்தில் முகவுரை கூறும் இந்த வாசகங்களுக்கு ஏதாவது மரியாதை உண்டா? யாரை ஏமாற்றிட இந்த வாசகங்கள்?

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தையும், உயிரையும் காப்பாற்றக் கடப்பாடு உள்ள நீதிமன்றம் முதலில் தன் கடமையைச் செய்கிறதா என்பது ஆழ்ந்த அர்த்தமுள்ள வினாவாகும்.

இப்படி ஆட்சியும், நிர்வாகமும், நீதித்துறையும், ஊடகத் துறையும் உயர்ஜாதி ஆதிக்கத்தின் கையிருப்பில் இருந்தால், சமூகநீதி எந்த வகையில் பாதுகாக்கப்படும்? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்கு என்ன உத்தரவாதம்?

இந்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள்தான் பழங்குடியினரும், தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட் டோரும்; அவர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்ற ஒரே துணிவில், நம்பிக்கையில் எது வேண்டு மானாலும் செய்யலாம் என்ற இறுமாப்பு நீண்ட காலம் நீடிக்காது. உயர்ஜாதி ஆதிக்க வர்க்கம், ஒரு கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் எரிமலையாக வெடிக்கும் நிலை ஏற்படும் போது - இருந்த இடம் தெரியாமல் அடையாளம் தெரியாமல் போகும் என்பதுதானே யதார்த்தமும், வரலாறும் ஆகும்.

இதுகுறித்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் போன்ற சமூக நீதித் தலைவர்கள் கூறியதுண்டே!

இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான ஆட்சி, சமூகநீதியை ஒடுக்க ஒடுக்க தன் அழிவுக்குத் தனக்குத்தானே குழி தோண்டிக் கொள்கிறது - தற்கொலையை நோக்கி வேகவேகமாக பறக்கிறது என்று பொருள்.

ஒரு தேர்வு எழுத 106 கி.மீ. சைக்கிளில் பயணிக்கும் நிலைதான் - பிஜேபி ஆளும் மாநிலத்தில்; தமிழ்நாட்டில் இந்த நிலை உண்டா? காரணம் திராவிடம் - பெரியார் இயக்கம் என்பது கல்வெட்டுச் சாசனம்.