ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
மதவாத எழுச்சியும் பொருளாதார வீழ்ச்சியும்!
August 13, 2020 • Viduthalai • தலையங்கம்

பாரதிய ஜன சங் கட்சி 1951இல் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக 1980களில் பாரதிய ஜனதா கட்சி என்ற பாஜக ஒரு மதவாத வலதுசாரி இயக்கமாக உருவெடுத்து இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு அனைத்து அரசியல் கட்சியிலும் ஆட்கள் இருந்தாலும், அவர்கள் தலைமைக்கு கீழ்ப்படிய வேண்டிய நிலையில் ஓர் அரசியல் பிரிவு தேவை என்ற நிலை ஏற்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு 1925 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அனைத்துத் தளங்களிலும் மறைமுகமான பல அமைப்புகளை உருவாக்கி அதற்கான கட்டளைப் பீடமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் அரசியலிலும் தங்களின் வலுவைக் காட்ட, அரசியல் பிரிவை துவக்க நினைத்தது. அதேபோல் ஜனதா கட்சியிலிருந்த தீவிர இந்துத்துவ செயற்பாட்டாளர்களை நாக்பூர் அழைத்து ஆலோசனை நடத்தியதன் விளைவாக பா.ஜ.க. உருவானது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அனைத்துக் கொள்கை களையும் தலைமேல் இட்ட கட்டளையாக முன்னெடுத்துச் செல்லும் இக்கட்சி இந்த மண்ணில் காலூன்றிட கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் காத்திருந்தது. ஆம். இந்தக் கட்சியின் வரலாறு அப்படி.

சுதந்திரத்திற்குப் போராடவில்லை. போராடிய வேறு கட்சித் தலைவர்களை தத்தெடுத்துக்கொண்டு காவிச்சாயம் பூசும் வேலையை மட்டும் சரியாகச் செய்து, அவர்களை தங்கள் கொள்கைக்கான நாயகர்களாக மக்கள்முன் நிறுத்துவது; எடுத்துக்காட்டு சர்தார் வல்லபாய் பட்டேல். இன்று அவரை காங்கிரஸ்காரர் என்பதைவிட பா.ஜ.க.காரர் என்று மறைமுகமாகக் கூறி வருகின்றனர்.

மாற்று மதத்தினரை எதிரிகளாகக் கருதும் மதவெறி கொண்ட கட்சியாக அது நிற்கிறது.

மக்களை மதவாதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தி, மக்களைப் பிரித்து அதன் மூலம் ஆதாயம்பெறும் சூழ்ச்சியை பா.ஜ.க. செய்துவருகிறது. 57 விழுக்காட்டிற்கும்மேல் உள்ள கல்வி வாசனையில்லாத மக்களை, இன்றைய தேதிவரை 'கடவுளை கும்பிடு, நல்லது நடக்கும்' எனக்கூறி, அவனை ஒரு தாழ்நிலை உழைப்பாளியாகவே வைப்பதில் குறிப்பாக உள்ளனர்.

இவர்களின் வர்ணாசிரமச் சித்தாந்தங்களின் அடிப் படையில் புரியாத சமஸ்கிருத மொழியில் கடவுளை பூஜித்து, சூத்திர மக்களை, "இது தங்களுக்கான பூஜை களே, தங்களுக்கான கடவுள் அனுக்கிரகமே" என நம்பவைத்து ஏமாற்றும் யுக்தியில் இவர்கள் ஓரளவு வெற்றியடைந்துள்ளார்கள்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற புரட்டு இதிகாசங்களில் வரும் சம்பவங்கள், வெல்லக்கூடிய வாய்ப்புகள் நேரடியாக இருக்காது, அது சூழ்ச்சி கலந்த சூழல்களில்தான் வல்லவர்களாக வெற்றி பெறுவர். அந்தச் சித்தாந்தங்களை அப்படியே இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் இதர எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைப் பிடிக்கும் சூழ்ச்சியில் இவர்கள் வெற்றி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்குப் பார்ப்பனர்களைப் பற்றித்தான் கவலை, மற்றவர்குறித்து இவர்களின் செயல்பாடு பூஜ்ஜியம்தான்.

சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பொருளாதாரம் 2020-21ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில் மோசமான நிலையை அடையும் என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார். இப்போது இந்த மோசமான நிலை காலனி ஆதிக்க இந்தியாவோடு ஒப்பிடத்தக்கது என்றும் கூறுகிறார். இத்தோடு நிறுத்தவில்லை; மதவாத அரசியலின் ஆபத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தத் திட்டமும், முன்னேற்பாடும் இல்லாத இந்தச் சூழல், நாட்டில் முதலீடு மற்றும் வேலை உருவாக்கத்தை கடுமையாகப் பாதிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவற்றை எல்லாம் திசை திருப்பத்தான் - ராமன் கோயில் - மதவாதப் பிரச்சாரம் எல்லாம்.

மதச்சார்பற்ற சக்திகள் சமத்துவச் சிந்தனையாளர்கள், இடதுசாரிகள் இணைந்து  இவற்றையெல்லாம் மக்கள் மத்தியில் கொண்டு செலுத்தி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது - காலத்தின் கட்டாயமாகும்.